கதைநாயகன் தப்பி ஓட்டம்!

ஆசிரியருக்கு,

நீர் வழிப் படூவும் நாவலில் ஒரு இடம் வரும். காரு மாமா உறவுகளை இழந்த ஒரு தனியன். அருகே வீட்டில் உள்ளவர் எதிரி. ஆனால் அவர் வீட்டில் ஒலிக்கும் ரேடியோ இசையை கேட்டு காலத்தை உந்திக் கொண்டு இருப்பார். பேட்டரி தீர்ந்துவிடும். சுயமரியாதை இழந்து அவர் வீடேறி இதை அறிந்து அதே தீவிரத்தில் இரவு 10 மணிக்கு பாட்டரி தேடி கிளம்பி பூட்டியுள்ள ஒவ்வொரு கடையாக சென்று நடந்தே 25 கிமீ தொலைவில் அரச்சலூர் வரை வருவார். காலை 4 மணிக்கு வாங்கி வந்து விடுவார்.

சாகித்திய அகாதெமி விருது நேற்று தேவி பாரதிக்கு அறிவிக்கப் பட்டதும் கிட்டத்தட்ட இதே நிகழ்ந்தது. அவர் படைப்புகள் பற்றி அறியாத ஊடகத்தின் கூட்டம் நெரித்த தனிமை. சம்பிரதாய கேள்விகள், சற்று தடுமாறிய பதில்கள். எங்கு செல்வது என தெரியாமல் வீட்டை விட்டு தப்பி ஓடி விட்டார். விஷ்ணுபுரம் நண்பர்களை ஐந்து பேரை சந்திக்க ஒப்புக் கொண்டார். நாங்கள் அனைவரும் அவரை படித்திருந்தோம். அவருக்கு இணக்கமான மூன்று நண்பர்களுடன் கரூர் சாலையில் உள்ள ஒரு தேநீர் விடுதியில் தலை மறைவில் இருந்தவரை நேற்று இரவு சந்தித்தோம்.

அங்கேயே அங்கு வந்த வாடிக்கையாளர் உரிமையாளர் ஊழியர் முன்னிலையில் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினோம். மெல்ல இலகுவானார், அவர் பேச்சும் சற்று கோர்வையானது. தனக்கு இவ்விருது கிடைக்கும் என நம்பவில்லை என்றார், ஆனால் எதிர்பார்ப்பில் இருந்ததாகவும் சொன்னார். முக்கிய தலைவர்களின் வாழ்த்து அவரை மகிழ்ச்சி அடையச் செய்தது. சற்று உடல் தேறியதும் அவரின் பகடி துவங்கியது சென்னையில் எனக்கு அரசு வீடு வழங்கினால் இப்போதைய நிலைக்கு மூழ்கிப் போகும் அதை யார் காப்பாற்றுவார் என்றார். சென்னை திருநெல்வேலி தவிர வேறு இடத்தில் வீடு அமைந்தால் தைரியமாக இருக்கலாம் என்றார்.

எழுதிக் கொண்டிருக்கும் ஆதியாகமம் தான் தன்னுடைய மாஸ்டர் பீஸ், அதை முடித்து விடுவேன் என்றார். முன்பு நொய்யல் எழுதும் போதும் இதையே சொன்னார். சிரித்துக் கொண்டே புகைக்க அனுமதித்தோம். தப்பி ஓடி வந்ததால் அவர் பிடிக்கும் பாரிஸ் சிகரெட் இல்லை, கோல்ட் ஃபில்டர் சிகரெட்டை வேண்டா வெறுப்பாக பிடித்தார். சென்னிமலை ராஜா உள்ளிட்ட நண்பர்கள் உடன் காரில் ஏறினார், இரவு உலா. அவர் வீடு திரும்ப வாய்ப்பு உண்டு.

நாலைந்து ஆண்டுகளாக நம் விஷ்ணுபுரம் அவருக்கு நெருக்கம், இத் தருணம் நமக்கு மகிழ்ச்சி.

கிருஷ்ணன், ஈரோடு. 

முந்தைய கட்டுரைபாலாஜி பிருத்விராஜ் உரை
அடுத்த கட்டுரையுவன் ஆவணப்படம்