விழா, பாவண்ணன் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.  நலம்தானே?  எல்லா ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் விருது விழா சிறப்புற நடந்தேறியது.  சனிக்கிழமை காலை தொடங்கியதும் தெரியவில்லை. ஞாயிறு இரவு வந்ததும் தெரியவில்லை. சீரான வேகத்தில் பறந்துபோகும் விமானத்தைப்போல காலம் பறந்துகொண்டே இருந்தது.  இளைய எழுத்தாளர்கள், மூத்த எழுத்தாளர்கள் என எந்த வேறுபாடும் இன்றி, ஒவ்வொரு அமர்வும் மனத்தைக் கவர்ந்தது. ஊருக்குத் திரும்பும் பயணத்தில் இருநாள் நிகழ்ச்சிகளையும் மனத்துக்குள்ளேயே தொகுத்துப் பார்த்துக்கொண்டு வந்தேன்.  இனிய அனுபவமாக இருந்தது.

இளவயதில் ஆடித் திரிந்த வனப்பகுதி சார்ந்த சித்திரங்களை இன்னும் நெஞ்சில் சுமந்து திரியும் கவிஞர் சந்திராவின் பதில்கள் நன்றாக இருந்தன. சொந்த முயற்சியால் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்ட அப்பா தனக்கு கதைப்புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து படிக்க வைத்து தானும் கேட்டுச் சுவைத்த பொழுதுகளை அவர் பகிர்ந்துகொண்ட போது, அப்பாவின் சித்திரம் அவர் சொற்கள் வழியாக உருப்பெற்று நின்றதை என்னால் உணரமுடிந்தது.

அன்பான தந்தையர் தம் பிள்ளைகளிடம் உருவாக்கும்  செல்வாக்கின் வலிமையை அக்கணம் உணர்த்தியது. அவர் புன்னகைத்தபடி இருந்தாலும், அவர் விழியோரத்தில் கசிந்த ஒரு துளி கண்ணீரை நான் உணர்ச்சி ததும்பப் பார்த்துக்கொண்டிருந்தேன். தீபு ஹரி தன் கவிதைகளுக்கான ஊற்றுப்புள்ளியை விவரித்த விதம் சந்திராவின் கோணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. தன்னை ஆட்கொள்ளும் மன எழுச்சிக்கு தன்னை ஒப்புக் கொடுப்பதுதான் கலைஞர்களிடம் காணும் ஒற்றுமையே தவிர, மன எழுச்சியின் தன்மை, மன எழுச்சியின் விளைவு  எல்லாமே வேறுவேறானவை என்னும் கருத்தோட்டத்துக்கு இரு அமர்வுகளும் நிகழ்சாட்சிகளாக இருந்தன.

லதா அருணாசலம், இல.சுபத்ரா இருவருமே ஆங்கிலத்திலிருக்கும் படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்களில் முக்கியமானவர்கள். ஒரு நேரடிப் படைப்புக்கு இணையான நல்ல மொழிவளம் இருவருக்குமே கைவரப் பெற்றிருக்கிறது. இருவரும் தம் அனுபவம் சார்ந்து பகிர்ந்துகொண்ட கருத்துகள் சுவையாக இருந்தன.  பார்வையாளர்களின் கேள்விகளை இருவரும் எதிர்கொண்ட விதம் நன்றாக இருந்தது.

மூத்த அகதி நாவல் வழியாக என் மனத்தில் இடம் பிடித்த நாவலாசிரியர் வாசு.முருகவேல். அரங்கிலிருந்து வந்த ஒவ்வொரு கேள்வியையும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் எதிர்கொண்டு பதில்களைச் சொன்னார் அவர்.  ‘போரும் அமைதியும்’ போல விரிவான உள்ளடக்கம் சார்ந்து அவர்  எதிர்காலத்தில்  எழுதக்கூடும் என்றே நான் நம்புகிறேன்.

ஒளிவு மறைவின்றி எல்லாக் கேள்விகளையும் எதிர்கொண்டு பதில் சொல்லிக்கொண்டே இருந்தார் நண்பர் பா.ராகவன். தனக்குள் நேர்ந்த தேக்கத்தையும் அதைத் தகர்த்து மேலெழ ஆண்டுக்கணக்கில் முயற்சி செய்து வெற்றி பெற்றதையும் மிகவும் இயல்பான தொனியில் அவர் விவரித்த விதம் என்  நெஞ்சில் பதிந்துவிட்டது. எழுத்துலகில் சாத்தியமற்றது என எந்தச் செயலும் இல்லை. ஆத்மார்த்தமான அர்ப்பணிப்புணர்வும் உழைப்பும் இருந்தால்,  எல்லாவற்றையும் சாத்தியமாக்க முடியும் என்பதற்கு அவருடைய நாவல்களே சாட்சியாக உள்ளன. அவருடைய யதி  ஒரு சாதனைப்படைப்பு என்பதில் சந்தேகமே இல்லை. அவருடைய பதில்கள் வழியாக அவருடைய தந்தையார் பற்றித் தெரிந்துகொண்ட செய்தி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு தந்தை தன் மகனை ஒரு துறையில் தேர்ச்சி பெற வைக்க முயற்சி செய்வதைத்தான் நாம் பார்த்திருப்போம். ராகவனின் வாழ்வில் இது நேர்மாறாக அமைந்திருக்கிறது. குழந்தைக்கதைகளையும் ஜனரஞ்சகமான பத்திரிகைக்கதைகளையும் இருபது முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் குவித்திருந்த தன் தந்தையின் கவனத்தைத் திசைதிருப்பி மொழிபெயர்ப்பின் பக்கம் செலுத்தியதையும் அது வெற்றியின் பயணமாக மாறியதையும் அறிந்துகொண்டபோது மனம் சிலிர்த்தது. பாபர் நாமா, மகாவம்சம், காந்திக்குப் பிறகு இந்தியா எல்லாமே ஆர்.பி.சாரதி என்னும் அவருடைய தந்தையாரின்  மொழிபெயர்ப்புச்சாதனைகள். ராகவனுக்குள் ஒளிந்திருக்கும் பத்திரிகையாளர் என்னும் முகத்துக்குரிய ஆற்றலே அப்பா என்பதையும் மறந்து அவரை மொழிபெயர்ப்புத்துறையில் ஈடுபட வைத்து வெற்றிப்பாதையில் நடையிட வைத்திருக்கிறது. தான் எதிர்கொண்ட கேள்விகளுக்கு ராகவன் அளித்த பதில்கள் அனைத்தும் அவருடைய பன்முக ஆற்றலைப் புரிந்துகொள்ள துணையாக இருந்தது.

சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த மலேசிய எழுத்தாளர் ஷாகிரின் பதில்கள்,  பல மொழிகள் புழங்கும் தன் சமூகத்தில் நிலவும் வெவ்வேறு இலக்கியப் போக்குகளை உணர்த்தும் விதமாக அமைந்திருந்தது. காந்திக்குப் பிறகான இந்தியாவில் காந்தியத்தின் செல்வாக்கும் பல்வேறு விதமான பிற பார்வைகளும்  எப்படி வேர்விட்டு வளர்ந்திருக்கின்றன என்பதை ப் புரிந்துகொள்ளும் விதமாக குஹாவின்  உரை அமைந்திருந்தது. அவருடைய அழுத்தமான குரல் அரங்கத்தை ஆட்கொண்டிருந்தது. அவர் தம் உரையை முடித்த பிறகு, அவர் குறிப்பிட்ட எல்வின், பல்வாங்கர் பாலு, கெய்த்தான் பற்றிய ஆளுமைகளைப்பற்றிய நினைவுகளில் வெகுநேரம் ஆழ்ந்திருந்தேன். ஒரு வரலாற்று ஆய்வாளன் ஆவணங்களைச் சார்ந்து செயல்படவேண்டுமே தவிர கருத்தாக்கங்களைச் சார்ந்து செயல்படக்கூடாது  என அவர் குறிப்பிட்ட வாசகத்தை நெஞ்சில் குறித்துக்கொண்டேன்.

நிகழ்ச்சியின் இறுதிக்கட்டமாக விருது விழாவில் அரங்கு நிறைந்து ஏராளாமானோர் கிடைத்த இடங்களிலெல்லாம் மணிக்கணக்கில்  நின்றுகொண்டே இருந்தனர். கவிஞர் ஆனந்தகுமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் யுவன் ஆவணப்படம் சிறப்பாக இருந்தது. காட்சிகளைக் கோர்த்திருந்த விதம் சிறப்பாக இருந்தது.  யுவனுடைய படைப்புலகத்தைப்பற்றி மற்றவர்கள் தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் காட்சிகளை ஒருபுறமாகவும்  ஒரு கணவனாக, ஒரு ரசிகனாக, ஒரு தந்தையாக, ஒரு நண்பனாக, ஒரு தாத்தாவாக தன்னை யுவன் காட்டிக்கொள்ளும் காட்சிகளை மறுபுறமாகவும் மாறிமாறி இணைத்து அழகாகத் தொகுத்திருக்கிறார்.

எம்.கோபாலகிருஷ்ணனின் உரைகள் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகின்றன. அவருடைய உரைகளில் யுவனைப்பற்றிய உரை மிகவும் சிறப்பானது. நட்பாக பழகத்தொடங்கிய குற்றாலம் பட்டறை நாளின் சித்திரத்தை நினைவூட்டியபடி தொடங்கிய உங்கள் உரையில்  யுவனின் படைப்புலகத்தை அணுகிப் புரிந்துகொள்ளும் வழிமுறைகளை சுருக்கமாக எடுத்துரைத்த விதம் அழகாக இருந்தது.  யுவனின் ஏற்புரையும் சிறப்பாக இருந்தது.

நேற்று காலையில் ஊருக்குத் திரும்பி வந்தேன். நேற்றும் இன்றும் பல்வேறு முகங்களும் குரல்களும் காட்சிகளும் கலந்து மேலெழுந்தபடியே இருக்கின்றன.

அன்புடன்

பாவண்ணன்

முந்தைய கட்டுரைதேவிபாரதிக்கு சாகித்ய அக்காதமி
அடுத்த கட்டுரைமல்லசத்திரம் கல்திட்டைகள்