2016 ஆம் ஆண்டு மூத்த படைப்பாளி வண்ணதாசன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது கொடுத்த போது முதல் முறையாக ஒரு வாசகனாக கலந்துகொண்டேன்.
தொடர்ந்து வந்த ஆண்டுகளில் விஷ்ணுபுரம் விழா அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்று என்னால் இயன்ற சிறு உதவிகளை விழாக்குழுவிற்கு செய்வதில் பெரும் நிறைவை அடைகிறேன்.
விழாவில் தமிழின் முக்கிய படைப்பாளிகளின் அமர்வுகள் நடைபெற்றது வாசகர்கள் அவர்களை விரிவாக படித்துவிட்டு வந்து கேள்விகள் கேட்டு கலந்துரையாடியது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும்,தன்னை இத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்பதையும் கண்டடைந்த இடம் இந்த விஷ்ணுபுரம் திருவிழாதான்.
விழாநாள் அதிகாலையில் தொழுகைக்கு பள்ளிவாசல் சென்று திரும்பும்போது எழுத்தாளர்கள் யுவன்,பா.ராகவன்,கனலி விக்னேஸ்வரன் மூவரும் உற்சாகமாக காலை நடையை தொடங்கியிருந்தனர்.
மூத்தவர் யுவன் “ஷாகுல் தொழுகை முடிச்சாச்சா,வாங்க பெயிற்று வருவோம்” என்றார். நாளின் துவக்கம் விஷ்ணுபுரம் விழா நாயகனுடன் கிடைத்தது. சிரிப்பும்,கிண்டலுமாக நடக்கையில் மார்கழி முதல் நாள் கோயிலுக்கு சென்று திரும்பிய மூத்த சுக்கிரி விஜயலட்சுமி,ஆவடி தேவியும் எதிர்பட்டனர். அவர்களையும் யுவன் எங்களுடன் இணைத்துக்கொண்டு நடக்கையில் நான் சொன்னேன் “இந்த வருஷம் விருது நெருங்கிய நண்பருக்கு கிடைக்கும் உணர்வுதான் இருக்கு ஸார்”.யுவன் அவர்கள் தனது ஏற்ப்புரையிலும் அதை குறிப்பிட்டார்.
வேலன் காபி கடையில் காபி குடித்துவிட்டு சற்று முன்னால் போய் சாலை சரியில்லாமல் திரும்பி விழா அரங்குக்கு அருகில் வரும்போது ஈரோடு கிருஷ்ணன் தலைமையில் பெருங்கூட்டம் ஒன்று உங்களை சூழ்ந்து நடந்து வந்துகொண்டிருந்தது. யுவன் மற்றும் பா ராகவன் அவர்களுடன் சாலையில் நின்று உரத்த சிரிப்பொலியில் பேசிக்கொண்டிருக்கையில் பைக்கில் சென்ற ஒருவர் வண்டியை நிறுத்தி சுசித்ராவிடம் உங்களை சுட்டி “இவர் யார் எந்த கட்சியின் கூட்டம் இது” என கேட்டு சென்றார். மீண்டும் ஒரு காபி குடிப்போம் என்று பா ராகவன்,யுவன் இருவரையும் அழைத்துச்சென்றீர்கள்.
குமரகுருபரன் விருதுபெற்ற கவிஞர் ஆனந்தின் நேர்த்தியான ஆவணப்படம் திரையிடலுக்குப்பின் இறுதியாக விருது வழங்கும் நிகழ்வில் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா,மலேசியாவின் மிக முக்கிய எழுத்தாளர் ஷாகீர்,மூத்த எழுத்தாளர் நண்பர் எம் கோபாலகிருஷ்ணன்,வாசகர் பிருதிவிராஜ் மற்றும் உங்கள் வாழ்த்துரைகளுக்குப்பின் விழா நாயகன் யுவன் ஏற்புரையுடன் மிக சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த இனிய நினைவுகளை ஆகஸ்ட் மாதம் வரை தக்க வைத்துகொள்வேன். அடுத்த ஒருமாதம் விஷ்ணுபுரம் விருது அறிவிப்புக்காக காத்திருப்பேன். அறிவிப்பு வந்த நாள் முதல் விருதுநாள் வரை மிக உற்சாக மனநிலையில் இருப்பேன். இந்த விழா ஒன்று தான் எனக்கு எழுத்தாளர்கள் நாஞ்சில்,சாம்ராஜ்,எம் கோபாலகிருஷ்ணன்,போகன் மற்றும் விஷ்ணுபுரம் வட்டத்தை சேர்ந்த நண்பர்களை சந்திப்பதற்கு கிடைக்கும் நல்வாய்ப்பு.
ஆண்டிறுதியில் நடக்கும் இந்த விழாவுக்காக ஜனவரி மாதம் முதல் என் காத்திருப்பு தொடங்குகிறது. இம்முறை நவம்பர் மாதம் இறுதியில் கப்பல் அமெரிக்கா சென்று சேரும்போது விடுமுறை கோரினேன். என் துறையில் இருவர் பணியாற்றுகிறோம் இருவரையும் ஒன்றாக விடுமுறைக்கு அனுப்ப முடியாது என பதில் வந்தது.
சரி என்னை அனுப்புங்கள் என்றேன் பிப்டி/பிப்டி என்றனர். முடியாது டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நான் ஊரில் இருந்தே ஆக வேண்டும் என உறுதியாக சொன்னபோது எனக்கு விடுமுறை கிடைத்தது.
விழாவின் முதல் நாள் முதல் அமர்விலேயே 350 பேருக்கு மேல் இருந்தனர். பின்னர் வெளியிலிருந்து கூடுதலாக நாற்காலிகளை வரவழைத்து அரங்கில் போட்டோம். ஆனாலும் அனைத்து அமர்வுகளிலும் நாற்காலிகள் நிறைந்து பலர் நின்றுகொண்டே கலந்து கொண்டனர்.வருடம்தோறும் பெரிதாகிக்கொண்டே செல்வதால் அடுத்தவருட விழாவுக்கு இந்த அரங்கு தாங்காது.
மலேசிய எழுத்தாளர் ஷாகீரின் அமர்வில் மலாய் மொழி காதில் விழுந்தபோது விஷ்ணுபுரம் ஒரு சர்வதேச அரங்காக மாறியிருப்பதை உணரமுடிந்தது.
இரு தினமும் மூந்நூறு பேருக்குமேல் தங்குமிடமும்,சூழியலுக்கு தீங்கு இல்லாத வகையில் (தலை வாழை இலை,தண்ணீர் மற்றும் டீக்கு எவர்சில்வர் கப் உபயோகபடுத்தபட்டது) இரு தினம் ஆறு வேளை மூவாயிரத்துக்கு மேல் உணவு வழங்கப்பட்டது.(அறைகள் ஒருங்கிணைப்பு ஸ்ரீனிவாசன்,சுதா மாமி,உணவு – விஜய் சூரியன்)
அமெரிக்கா,சுவிட்சர்லாந்து,கத்தார்,மலேசியா,சிங்கப்பூர்,சவூதிஅரேபியா,கனடாவிலிருந்தும் வாசகர்கள் கலந்துகொண்டனர். விழாவில் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நீண்டநாள் நண்பர் பழனி ஜோதியை முதல் முறையாக சந்தித்தேன்.சிங்கை சகோதரி அழுகு நிலாவையும் பார்த்தேன்.
பாண்டி நண்பர்கள் சிவாத்மா,அரிகிருஷ்ணன்,மணிமாறன்,திருமாவளவன் ஆகியோர் விழாவுக்கு வராததால் இம்முறை சந்திக்க இயலவில்லை.
இத்தனை சிறப்பாக நடக்கும் இலக்கிய விழா வேறேங்கும் இல்லை என உறுதியாக சொல்வேன். இதற்கு நிதி பெரும் ஆதாரம். உலகெங்கிலிருந்தும் விஷ்ணுபுரம் விழாவிற்கு சிறிதும்,பெரிதுமாக பொருளுதவி தந்த அனைத்து வாசகர்களுக்கும் விழா குழுவினர் சார்பாகவும், ஆசான் ஜெயமோகன் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொளிகிறேன்.
ஷாகுல் ஹமீது,
நாகர்கோயில் .