கவிதை,கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

இன்றைய சாதனைக் கவிதை பற்றிக் கடிதங்களை வாசித்த பிறகுதான் அது ஒரு நகைச்சுவை என்றே புரிந்து கொண்டேன். (ச்சே, ஒரு நிமிஷம் உங்களையே தப்பா புரிஞ்சிக்கிட்டேனே) ஆனால், இப்படி மூன்றாம் தர, நான்காம் தர வசனங்களில் எல்லாம் எதற்கு நேரத்தை வீணாக்க வேண்டும்? ஏற்கனவே, பழகிய பாவத்திற்காக வரும் மொக்கை SMS களைத் தாங்க வேண்டியிருக்கிறது (கவிதை என்ற பெயரில்) நிற்க

சுஜாதாவிற்கு கூட தேர்ந்த கவிதை ரசனை இருப்பதாய்த் தோன்றவில்லை. பல கவிதைகளை அவர் மாற்றம் செய்தோ அல்லது நல்ல கவிதைகள் என்று தரும்போதோ, அதில் அந்தளவு குறிப்பிடும்படி ஏதும் இருக்காது. பத்தில் ஒன்று தேறும். அவர் எழுதிய கவிதைகள் கூட மட்ட ரகமே. நிறையப்பேர் இலாவகமாய்ச் சிந்திக்கத் தெரிந்தாலே அழகாய்க் கவிதை எழுதலாம் என்று நினைத்து விடுகிறார்கள் (எழுதியும்). ஒரு நேர்த்தியான விலகல் பார்வை அல்லது கரைந்து போகும் தன்மையே கவிதைக்கு முக்கியம் என்று நினைக்கிறேன். யுவன் கவிதையரங்கின் பதிவுகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

பாலா
கோவில்பட்டி

*

அன்புள்ள ஜெ

குப்பைத் தொட்டியையே
குப்பைத் தொட்டி
என்று எழுதினால் தான்
புரிகிறது.
நகைச்சுவையும்
அப்படியே .
குறிப்பிடாமல் விட்டது
குற்றம் குற்றமே
அன்புடன்
Dr.ராமானுஜம்
சென்னை 600033

(எப்படி என் கவிதை?)
(பின் கோடையும் பின் நவீனத்துவக் கவிதையில் சேர்த்துக் கொள்ளலாம்)

*

அன்புள்ள ஜெ,

திண்ணையில் ஒரு கமெண்ட் பார்த்தீர்களா? நீங்க எழுதியது கவிதை என்ற வடிவத்தைப் பற்றி ஒரு கிண்டல். அதை அந்த சினிமா பற்றின கடுமையான விமர்சனமாக ஒரு வாசகர் எடுத்துக்கொண்டு கன்னா பின்னாவென்று எழுதியிருக்கிறார். இந்தமாதிரி வாசகர்களுக்கு என்ன புரிந்து விடப் போகிறது? இவர்களெல்லாம்தான் இங்கே  இணையம் வாசிக்கிறார்கள். நகைச்சுவை என்றால் கீழே நாலைந்து ஸ்மைலி போடவேண்டும் சார்…

சாம்ராஜ்

முந்தைய கட்டுரைகல்வி கடைசியாக…
அடுத்த கட்டுரையானை டாக்டர் இலவச நூல் வினியோகம்