மேட்டிமைவாதமா?
மேட்டிமைவாதம் என்னும் சொல்லை வேறுபல தமிழ்ச்சொற்களைப்போல ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்து, குத்துமதிப்பாக, எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம். ஒரு சொல் கிடைத்தால் அதைப்பற்றி மேற்கொண்டு சிந்திப்பதில்லை, அதையே எங்கும் எதற்கும் பயன்படுத்தி சூழலை மலினப்படுத்துகிறோம்.
தமிழில் அச்சொல்லை elitism என்ற ஆங்கிலச்சொல்லுக்கு மொழியாக்கமாக ஆரம்பகால இடதுசாரிகள் பயன்படுத்தினர். அச்சொல்லின் தொடக்கப் பொருள் என்பது ‘தகுதி கொண்ட உயர்வட்டத்தினரின் இயல்பு’ என்பது. அதன் பழையகால நேர்ப்பொருள் ’உயர்குடிப் பிறந்த, உயர்பதவிகொண்ட, அதன் விளைவாகவே உயர்கல்வி கொண்டவர்களின் ரசனையும், வாழ்க்கைமுறையும்’ என்பது. அது மார்க்ஸியர்கள் எதிர்த்த கருத்துநிலை. ஆகவே அதை மேட்டிமைவாதம் என மொழியாக்கம் செய்தனர்.
ஆனால் கலைகளில், இலக்கியத்தில் எலைட்டிசம் என்னும் சொல் மேலும் மேலும் விரிவடைந்து நுட்பமான பல பொருட்களைக் கொண்டதாக ஆகியது. இலக்கியத் திறனாய்வில் அது பின்னர் அதுவரையிலான மிகச்சிறந்த மரபை ஓர் அளவுகோலாக முன்வைத்தலை குறித்தது. ஒரு சூழலில் இலக்கியத்திலும் கலைகளிலும் மிகச்சிறந்த தேர்ச்சிபெற்றவர்களின் உள்வட்டத்தைக் குறிக்க பயன்பட்டது. class எனும் சொல்லுக்குச் சமானமான சொல்லாக அது மாறியது.
இலக்கியவிமர்சனத்தில், குறிப்பாக பிரிட்டிஷ் இலக்கிய விமர்சனத்தில், எலைட்டிசம் என்பது எதிர்மறைப்பண்பு கொண்டது அல்ல. அது ஒரு ஆதாரமான கருத்துநிலை மட்டுமே . எந்தச்சூழலிலும் அது அடிப்படையானது, தவிர்க்கமுடியாதது. ஒரு சூழலில் எலைட்டிசம் இல்லாமலாவது என்பது மரபும் தரமும் இல்லாமல் ஆவதுதான். கபிலனும் கம்பனும் எழுதிய மொழி தமிழ் என ஒருவன் உணர்வது மேட்டிமைவாதம் அல்ல. இன்று எழுதும் கவிஞனிடம் அவன் அந்த தொடர்ச்சியையும் அதற்குரிய தரத்தையும் எதிர்பாப்பதும் மேட்டிமைவாதம் அல்ல. அப்படி ஓர் அளவுகோல் இல்லாத இலக்கிய – பண்பாட்டுச்சூழல் இருக்க முடியாது.
எலைட்டிசம் என்பது எங்கே எதிர்மறைப் பண்பு கொண்டதாக ஆகிறது? ஜனநாயகத்தில் மக்களின் உரிமைகள் நிகர் என்பது அடிப்படை நெறி. அங்கே ஒரு வட்டத்திற்கு கூடுதல் உரிமைகள் உண்டு என்று பேசப்படுமென்றால் அங்கே எலைட்டிசம் எதிர்மறையான சொல். அதாவது, எங்கே உரிமைகள் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் எலைட்டிசம் எதிர்மறையானதே. மானுடர் அனைவரும் உரிமைகள் விஷயத்தில் சமமானவர்கள் , தகுதிகள் மற்றும் பொறுப்புகளில் அப்படி அல்ல.
ஆனால் இன்றைய உலகம் உரிமைகள் சார்ந்த அனைத்திலும் எலைட்டிசத்தை முழுமையாக ஏற்கிறது. பணமிருந்தால் நீங்கள் விமானநிலையத்தில் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. எலைட் கிளாஸ் என்றே அந்த அமைப்புக்குப் பெயர் இருக்கும். நீதிமன்றத்தில்கூட உங்களுக்கு தனி உபசரிப்புதான். செல்வத்தால், பதவியால், பிறப்புசார்ந்த பின்புலத்தால் உரிமைகளில் ஒருவர் முன்னுரிமை கோரினால் அந்த எலைட்டிசம் கண்டனத்திற்குரியது- ஆனால் அதை இங்கே நாம் இயல்பாக ஏற்க பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். நமக்கு எந்த அரசியல்வாதி மீதும், எந்த செல்வந்தர் மீதும் புகார்களே கிடையாது. நம்முடைய குறி முழுக்க நம்மில் ஒருவர் அறிவுத்திறனாலோ சாதனையாலோ சற்று மேலானவர் என்று அறியப்பட்டால் அவரை தாக்கி அழிப்பதில்தான்.
ஓர் அறிவார்ந்த சூழலில், அறிவுத் தகுதியால் மேலிடத்தில் இருப்பவர்களின் தரப்பு ஒன்று எலைட்டிசம் என்னும் சொல்லால் குறிப்பிடப்பட்டதுண்டு. இன்று அச்சொல்லை பரவலாக பயன்படுத்துவதில்லை, வேறு அரசியல் சரிநிலை கொண்ட சொற்கள் வந்துவிட்டன. உதாரணமாக, பல அறிவுத்துறைகளில் peer circle என்னும் சொல் புழக்கத்திலுள்ளது. அதை மேட்டிமைவாதம் என்று மொழியாக்கம் செய்வதைப்போல அபத்தம் வேறில்லை. ஒரு துறையில் பயிற்சியும் தேர்ச்சியும் சாதனையும் கொண்டவர்களும் பிறரும் ஒன்றல்ல. பயிற்சியும் தேர்ச்சியும் சாதனையும் கொண்டவர்களின் கருத்தும் பிறர் கருத்தும் சமானம் அல்ல.
அறிவுத்துறைகளில் அதில் பயிற்சியற்றவர்களின் எக்கருத்துக்கும் எந்த மதிப்பும் இல்லை. அப்படி ஒரு நிலை உண்டு என்றால் அங்கே அறிவுச்செயல்பாடே இல்லை என்றே பொருள். சமூகவலைத்தளங்கள் உருவான பின் எவரும் எங்கும் எதைப்பற்றியும் கருத்துசொல்லலாம் என்னும் நிலை உள்ளது. அவர்கள் ஒரு துறையின் சாதனையாளரை ஒன்றுமே தெரிந்துகொள்ளாமல் விமர்சனமும் ஏளனமும் வசையும் புரிகிறார்கள். ஆனால் அந்த பாமரரின் கருத்தை அந்த சாதனையாளர் ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்றால் அவரை மேட்டிமைவாதி என்று முத்திரை குத்துகிறார்கள். கொஞ்சம் சிந்திப்பவர்களாவது இந்த மாபெரும் அசட்டுத்தனம் பற்றிய புரிதல் கொண்டிருக்கவேண்டும்.
இலக்கியத்தில் , சிந்தனையில் எலைட்டிசம் என்பது பலசமயம் மரபு, தரமதிப்பீடு என்னும் இரண்டு அடிப்படைகளை முன்வைப்பதாகவே அமைகிறது. இன்று ஒருவர் தமிழில் சிறுகதை எழுதினால் அவர் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், ஜானகிராமன், வண்ணதாசன், நாஞ்சில்நாடன் என நீளும் ஒரு மரபின் தொடர்ச்சியாக ஆகிறார். அந்த மரபு உருவாக்கிய அளவீடுகளை அவர் முன்னெடுக்கவேண்டும், கடக்கவேண்டும். அந்த எதிர்பார்ப்பை முன்வைப்பவர் ஒரு ’எலைட்’ தான். உலகம் முழுக்க சென்ற இருநூறாண்டுகளில் சிறுகதை என்னும் கலைவடிவம் பெற்ற வெற்றிகளை அறிந்த ஒருவர் சிறுகதை எழுதுபவரில் அந்த அளவீட்டை போட்டுப்பார்க்கிறார், எதிர்பார்க்கிறார். அவரும் ’எலைட்’ தான். அந்த எதிர்பார்ப்பு வழியாகவே இலக்கிய விமர்சனம் செயல்படுகிறது. அதன் வழியாகவே மதிப்பீடுகள் உருவாக்கப்படுகின்றன.
அப்படி அல்ல என்று சொல்வோம் என்றால் எழுதப்படும் எல்லாமே இலக்கியம்தான் என ஆகும். அப்படி ஒரு பார்வை இருப்பதை சிறுகதை எழுதும் எவருமே ஏற்கப்போவதில்லை. ஒவ்வொருவரும் அவர்கள் இருக்கும் படிநிலை என ஒன்றை அவர்களே மதிப்பிட்டு வைத்திருப்பார்கள். அதற்கு கீழே என அவர் நினைக்கும் ஒருவரிடம் அவரை ஒப்பிட்டு இருவரும் ஒன்றே என்று சொல்லிப்பாருங்கள் தெரியும், கொந்தளித்துவிடுவார். ரசனை என்பதே மதிப்பீடும் ஒப்பீடும் மட்டுமே. மேலான கலையை, இலக்கியத்தை அறிந்து அதை முன்வைத்துக்கொண்டே இருப்பவர் கலையையும் இலக்கியத்தையும் முன்னெடுக்கும் சக்தி. அது வ.வே.சு.ஐயரோ, பாரதியோ, புதுமைப்பித்தனோ, க.நா.சுவோ, சி.சு செல்லப்பாவோ, வேதசகாயகுமாரோ எவராயினும்.
அவ்வாறு அறிவார்ந்த தகுதிகொண்டவர்கள் ஒரு வட்டம். ஒவ்வொரு தலைமுறையிலும் அப்படி ஒரு வட்டம் உருவாகி வந்திருக்கும். ஒவ்வொரு துறையிலும் அப்படி ஒரு வட்டம் திரண்டிருக்கும். அதற்கு ஓர் அறிவார்ந்த ஆற்றல் இருக்கும். சாதியால், செல்வத்தால் உருவாகும் வட்டம் அல்ல அது. திறனால், சாதனையால் உருவாவது. அதை எதிர்க்கவேண்டுமென்றால் அதற்கு எதிரான இன்னொரு அறிவார்ந்த வட்டத்தை உருவாக்குவது மட்டுமே ஒரே வழி. அதற்கு மாறாக அந்த அறிவார்ந்த வட்டத்தையே ஒருவர் மேட்டிமைவாதம் என சொல்வாரென்றால் அவருக்கு அறிவியக்கமே அறிமுகமில்லை என்று பொருள்.
சிந்தனைக் களத்திலும் இன்னொருவகை எலைட்டிசம் உண்டு. ஒரு சிந்தனையாளன் தன் சூழலைப்பற்றிய விமர்சனத்தில் இருந்தே தொடங்குகிறான். தான் காணும் சமகாலச் சூழலில் அவன் கொள்ளும் முரண்பாடு, ஒவ்வாமை, எதிர்ப்பு ஆகியவையே அவனை சிந்தனைசெய்ய வைக்கின்றன. சமூகவிமர்சனம் இல்லாமல் இலக்கியம் இல்லை. தத்துவம் இல்லை. சமூகப்பணியும் நிகழ்வதில்லை. முரண்பாடு, ஒவ்வாமை, எதிர்ப்பு எனும் மூன்றும் ஒருவன் சமூகத்தில் இருந்து விலகி சற்றேனும் அன்னியமாகும்போதே உருவாகின்றன. ‘மக்களோடு மக்களாக’ இருப்பவனுக்கு அவை உருவாவதில்லை. அவனுக்கு எந்தச் சிக்கலும் தென்படுவதில்லை. எந்தக்குறைபாடும் சமூகக்குறைபாடாகத் தோன்றுவதுமில்லை.
சிந்தனையாளன் சமூகத்தின் ஒரு பகுதியாக நின்றே சமூகத்தை அறிகிறான், சமூகத்தைவிட மேலெழுந்து நின்றே அதை விமர்சனம் செய்கிறான். ஆகவே எந்தச் சிந்தனையாளனுக்கும் ஒரு ’எலைட்’ தன்மை இருந்தே தீரும். அவன் சமூகத்தின் சராசரியின் ஒருபகுதியாக இருக்கமுடியாது. சமூகத்தின் பொதுச்சிந்தனைகள், பொது உணர்வுநிலைகளில் அவனும் கரைந்திருக்க முடியாது. அவன் ஒரு படி மேல்தான். அதனால்தான் அவனுக்கு அந்தப்பார்வை அமைகிறது .உரிமையால் அல்ல, அறிவால் உருவாவது அது. அந்த அறிவையே அவன் முன்வைக்கிறான்.
அந்த விமர்சனத்தால் சமூகச் சராசரியாகத் திகழ்பவர்கள் எரிச்சல் கொள்வார்கள், எதிர்ப்பார்கள். அது இயல்பு. ஆனால் அதற்காக ஓட்டுப்பிடிக்கும் அரசியல்வாதிகள் போல கலைஞன், சிந்தனையாளன், இலக்கியவாதி சமூகத்தை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியாது. அப்படி ஒருவன் விமர்சனம் செய்யாமலிருந்தால் அவன் வெறும் பசப்புவாதி. அந்த விமர்சனத்தால் விமர்சனத்துக்குள்ளாகிறவர்கள் புண்படுவது இன்றுநேற்றல்ல, சாக்ரடீஸ் காலம் முதல் நிகழ்வது. கபிலர் காலம் முதல் நிகழ்வது. சாக்ரடீஸ் நஞ்சூட்டப்பட்டார். கபிலர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார்.
அந்த விமர்சனத்தால் புண்படும் பாமரர்கள் தங்கள் பாமரத்தனத்தால் கண்டடைந்து பயன்படுத்தும் சொல்லாக இன்று ‘மேட்டிமைவாதம்’ எனும் சொல் ஆகியுள்ளது. அதாவது உரிமைகளில் மேட்டிமை பேசுபவர்களை இயல்பாக ஏற்கும் நமது பாமரர்கள் அறிவால் மேன்மை கொண்டிருப்பவர்களை ஏற்காமல் எகிறுகிறார்கள். இதுவே நம் சூழல்.
இச்சூழலில் ஓர் அறிவியக்கவாதி தன் மேல்நிலையை தானே உணர்ந்திருக்க வேண்டும். ஆம், இந்த இடத்தில் நான் ஒருபடி மேல்தான், ஆகவேதான் இதைச் சொல்கிறேன் என சொல்லும் நிமிர்வு அவனுக்குத் தேவை. அவனை மேட்டிமைவாதி என பாமரர் சொல்லும்போது அவன் கூசவேண்டியதில்லை. அது பாமரரின் புரியாமையின் விளைவான எரிச்சல் மட்டுமே என்று அவன் புரிந்துகொள்ளவேண்டும். அந்த நிமிர்வும் நம்பிக்கையும் இல்லை என்றால் அவன் காலப்போக்கில் சிந்தனையை இழப்பான். அவனுடைய விமர்சனம் மழுங்கும். அவன் இலக்கியத்தில் செயலற்றவனாக ஆவான்.
இன்னொன்றுமுண்டு, வாசகர்களாக அறிமுகமாகும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒருவகையில் நான் இதைச் சொல்கிறேன். ஓர் அறிவியக்கவாதி நினைத்தால்கூட பாமரர்களுடன் இணைந்து அவர்களில் ஒருவராக இருக்க முடியாது. நடிக்கலாம், நடிப்பு சலிப்பையே ஊட்டும். இங்கே ஒரு குடிகாரர் குடியின் பொருட்டு நாணமடைவதில்லை. ஒரு தீனிப்பைத்தியம் அதன்பொருட்டு கூச்சமடைவதில்லை. ஆனால் ஒரு புத்தகம் படிப்பவன் அதன்பொருட்டு கூச்சமடைந்து புத்தகத்தை ஒளித்து வைத்துக் கொள்ளவேண்டியுள்ளது என்றால் அது வெறுமே இந்த சூழலின் தேக்கநிலை மட்டுமல்ல. அந்த இலக்கிய வாசகனின் ஆளுமைக் குறைபாடும்கூடத்தான் . அவனுக்கு தன் செயல்பற்றி தனக்கே ஒன்றும் தெரியவில்லை. தன்மேலேயே நம்பிக்கை இல்லை. அறிவியக்கம் மீது நம்பிக்கை இல்லை.
அப்படியென்றால் எளியோரை இகழவேண்டுமா, அன்னியப்படுத்திக்கொள்ள வேண்டுமா? இதை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். பாமரர்களின் பாமரத்தனத்தைச் சுட்டிக்காட்டுவது என்பது அவர்களை மக்கள் என்றவகையில் இகழ்வதல்ல, அங்கே அந்த பாமரத்தனம்தான் இகழப்படுகிறது. பாமரத்தனம் சுட்டிக்காட்டப்படுவது என்பது மேட்டிமைத்தனத்தால் அல்ல, அதை வென்று அச்சமூகம் மேலே செல்லவேண்டும் என்னும் அறிவார்ந்த விழைவால்தான். அறியாமையையே அறிஞன் எதிர்கொள்ளவேண்டும். அறியாமையைக் கொண்டாடும் அறிஞன் இருக்கவியலாது. ஆகவே இடித்துரைத்தலும் கடிந்துரைத்தலும் இல்லாமல் சிந்தனையாளன் செயல்படவே இயலாது.
எந்தச் சிந்தனையாளனும் மக்களை வெறுப்பதில்லை. சமூகத்தை வெறுப்பதில்லை. மக்கள்மேலும் சமூகம் மேலும் கொண்ட ஈடுபாட்டல்தான் அது மேம்படவேண்டும் என அவன் தன் வாழ்க்கையை அதற்காகச் செலவிடுகிறான். தன்னலமே உருவான மக்கள் நடுவே அவன் அனைத்தையும் அதன் பொருட்டு இழக்கச் சித்தமாக இருக்கிறான். அவன் மக்ககளில் ஒருவனாக உணர்ந்துதான் அவர்களை அறிகிறான். மக்களில் இருந்து மேலே நின்று விமர்சிக்கிறான். எந்த நல்ல எழுத்தாளனையும் கவனியுங்கள், அவன் எளிய சாமானிய மனிதர்களையே மிகுந்த உயிர்ப்புடன் எழுதியிருப்பான். அது பேரன்பால்தான். ஆனால் அவன் அவர்களைக் கூர்ந்து கவனித்திருப்பான். அந்த கவனம் நிகழ்வது அவன் அவர்களை கொஞ்சம் விலகிநின்று பார்ப்பதனால்தான்.
மேட்டிமைவாதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் உண்மையில் மேட்டிமை நோக்கு கொண்டவர்கள், ஆனால் அறிவார்ந்த பாமரர்கள், அவர்களுக்கு அறிவுசார்ந்த மேல்நிலை கொண்டவர்களைக் காண்கையில் உருவாரும் எரிச்சலையே அப்படி வெளிப்படுத்துகிறார்கள். மெய்யாகவே அச்சொல்லை பயன்படுத்துபவர்கள் இடதுசாரிகள். அவர்கள் மேட்டிமைவாதம் என்னும் சொல்லை ஓர் அரசியல்சொல்லாக கையாள்கிறார்கள். ஆனால் அவர்களிடம் தாங்கள் மக்களில் ஒருவரல்ல என்னும் தெளிவு எப்போதுமிருக்கும். மக்களுக்கு தலைமைதாங்குபவர்களாக, வழிகாட்டுபவர்களாக, மக்களின் மனசாட்சியாக மட்டுமே அவர்கள் தங்களை எண்ணியிருப்பார்கள். அந்த மேட்டிமையுணர்வால்தான் அவர்கள் போராடுகிறார்கள், தியாகம் செய்கிறார்கள்.
நம் சூழல் செல்வத்தின் மேட்டிமையை, அதிகாரத்தின் மேட்டிமையை இயல்பாக ஏற்றுக்கொள்வது. அதை அடைய ஒவ்வொருவரும் முட்டிமோதுவது. ஆனால் அறிவின் மேட்டிமையை அது ஏற்பதில்லை. அறிவின் மேட்டிமையை, கலையின் மேட்டிமையை அது குனிந்து நோக்குகிறது. இன்று ஒவ்வொரு அறிவுஜீவியும் கலைஞனும் அறிவின் மேட்டிமையை அந்த பாமரப்பெருஞ்சூழலுக்கு முன் ஆணித்தரமாக முன்வைத்தாக வேண்டும்.