உங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் சொல் ’மேட்டிமைவாதம்’ என்பது. அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில் என்னைப்போன்ற சாமானியர்களுக்கே இந்தப்பிரச்சினை உள்ளது. சமூகத்தையோ அல்லது சுற்றியிருக்கும் நண்பர்களையோ எதாவது குறைசொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்கிறார்கள். வரும் ஜனவரி 1 அன்று மெரினாவில் குடித்துவிட்டு பைக் ஓட்டி கூச்சல்போட திட்டம்போட்டு பட்ஜெட் போடுகிறார்கள். அது ஒரு வகை கேனத்தனம் என்று சொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதைச் சொல்பவர்கள் ஒன்றரை லட்சம் ரூ கொடுத்து ஐஃபோன் வாங்குபவர்கள். முப்பதாயிரம் ரூபாய்க்கு ஷூ வாங்குபவர்கள். ஆனால் ஒரு புத்தகத்தை கையில் வைத்திருந்தால் மேட்டிமைவாதம் என்கிறார்கள். ஆலோசனை சொல்ல வருகிறார்கள். இவர்களைப்பற்றி உங்களுக்குச் சலிப்பாக இல்லையா?
பிரதீப்ராஜ்
அன்புள்ள பிரதீப்,
அண்மையில் பலபேர் இதைச்சுட்டி ‘ஆலோசனைகள்’ ‘வழிகாட்டுதல்கள்’ எழுதியிருந்தனர். இங்கே சமூகவலைத்தளங்களில் பேசப்படும் ஒவ்வொன்றும் நான் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறேனோ அதற்கான நேரடியான சான்றுகள்.
இலக்கியம், கலை என்பது குறித்த எந்த அறிதலுமற்ற ஒரு சூழல் இங்கே இருப்பதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். அவற்றின் இடம் பற்றி, இலக்கியவாதிகள் அல்லது கலைஞர்களின் வாழ்க்கை பற்றி அடிப்படைப் புரிதல்கூட இல்லாத பாமரத்தனம். பாமரர்களாக இருக்கிறோம் என்பதுகூட தெரியாது, பாமரராக இருப்பதில் பெருமையும் உள்ளது. அந்த பாமரத்தனத்தையே எதிர்வினைகளாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நான் எதையும் நிரூபிக்கவே வேண்டியதில்லை. எழுதினால்போதும், நம் பொதுப்புத்தியினரின் எதிர்வினைகளே நான் சொன்னவற்றுக்கான நிரூபணங்களாக எழுந்து வரும்.
அண்மையில் சாகித்ய அக்காதமி விருது குறித்து ஒரு பேச்சு உருவானது. அதில் மிகப்பெரும்பாலானவர்கள் எழுதியிருப்பதைக் கவனியுங்கள். ‘வெறும் ரெண்டு லட்சம் ரூபாய். அதுக்கு இவ்ளவு சண்டை’ இதுதான் பாமரத்தனம் என்பது. இவர்களுக்கு நோபல் பரிசுகூட அதிலுள்ள தொகை மட்டுமே. இவர்களுக்கு இவ்வுலகில் தெரிந்த ஒரே ‘மதிப்பு’ என்பது பணம், அதன் விளைவான அதிகாரம் மட்டுமே. இப்படி பேசுபவர்களில் பலர் நம் சூழலில் அளிக்கப்படும் ‘உயர்’கல்வி கற்றவர்கள். பலர் பொறுப்பான பணிகளில் இருப்பவர்கள். இலக்கியம் வாசிக்கும் நாம் இவர்களைத்தான் எதிர்கொள்கிறோம். இந்தப் புரிதல் நம்மிடம் இருக்கவேண்டும்.
(சுந்தர ராமசாமி எழுதினார். மேரி க்யூரி நோபல் பரிசு பெற்றபோது ‘என்ன பிரைஸ் வாங்கினா என்ன, அறுத்துக்கட்டுற சாதிதானே?’ என்று ஓர் ஐயர் சொன்னாராம். அந்தக்கால பொதுப்புத்தி. இப்போது பேசும் விதம் மட்டுமே மாறியிருக்கிறது. மனநிலை அதேதான்)
இச்சூழலை வேறு எப்படி எதிர்கொள்ளமுடியும்? அவர்களுக்கு கலையிலக்கியம், சிந்தனை, தத்துவம் எதுவும் எளியமுறையில்கூட அறிமுகமில்லை. கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு இங்கே பிரச்சாரம் செய்யப்படும் மூன்று விஷயங்கள் மட்டுமே அவர்கள் அறிந்தவை. கட்சியரசியல், நுகர்வுப்பொருட்கள், கேளிக்கை. அவை அவர்கள் அறிந்துகொண்டவை அல்ல, அவர்களின் மூளைக்குள் திணிக்கப்பட்டவை. வேறு எதையும் அறியும் ஆர்வமோ, அறிவுத்திறனோ இல்லை.
அதேசமயம் அறியாமை அளிக்கும் அபாரமான தன்னம்பிக்கை உள்ளது. ஒரு பத்தி எழுதவோ ஒரு பக்கம் படிக்கவோ தெரியாதவர்கள் எழுத்தாளர்களுக்கு ஆலோசனை சொல்வதை, வழிகாட்டுவதை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். அந்த வெட்கமற்ற கீழ்மையை சந்திப்பது எப்படி என்பது கலையிலக்கியங்களில், அறிவியக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகப்பெரிய சவால்.
இதை என்னிடம் சொல்லாதவர்களே இல்லை. அண்மையில் ஒருவர், இசைத்துறையில் வளர்ந்து வருபவர், சொல்லிச்சொல்லி வருந்தினார். அவருடைய கனவு, முயற்சி எதுவுமே நம் சூழலுக்கு ஒரு பொருட்டல்ல. இசையென்றால் என்னவென்றே தெரியாதவர்கள் சொல்லும் ‘வாழ்க்கை ஆலோசனை’கள்தான் தன் மிகப்பெரிய பிரச்சினை என்றார்.
‘யாரைப்பாத்தாலும் பயமா இருக்கு சார்’ என்றார். ’நான் ஜனங்களை ஃபேஸ் பண்றதே இல்லை…பொழைக்கிற வழியப்பாருன்னு ஆரம்பிச்சிருவாங்க’
நான் அவரிடம் ’ஜெயகாந்தன் சொன்னதுதான் ஒரே வழி’ என்றேன். ‘அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்வது’ ஓவியர்கள், கலைஞர்கள் அனைவரும் இங்கே சந்திக்கும் சிக்கல் இது.
இதே சிக்கல் இங்கே சமூகப்பணியாளர்களுக்கும் உண்டு. அவர்களுக்கு பிரச்சினையே இரண்டுவகை ஆலோசனைகள்தான். ஒன்று, சமூகப்பணியை எல்லாம் நிறுத்திவிட்டு எப்படி நல்ல உலகியல்வாழ்க்கையை வாழ்வது என்னும் ஆலோசனை. இரண்டு, சமூகப்பணி என்றால் என்னவென்றே தெரியாத கும்பல்கள் சமூகப்பணியை எப்படிச் செய்வது என்று அளிக்கும் ஆலோசனைகள்.
ஆச்சரியமென்னவென்றால், இங்கே ஏதேனும் துறையில் ஆய்வுசெய்பவர்களுக்கேகூட இன்று இப்பிரச்சினை உள்ளது. அறிவியலிலோ பிற துறைகளொலோ முனைவர் பட்டம் பெற முப்பது வயது கடந்துவிடும். ‘தம்பி என்ன செய்றீங்க? ஏதாவது வேலைக்கு போலாம்ல? இந்தக்காலத்திலே ரிசர்ச்சுக்கெல்லாம் என்ன மதிப்பு? நம்ம பையன் இப்பவே ஒரு லெச்சம் சம்பாரிக்கிறான்’ என்ற வார்த்தைதான் நாலாபக்கமிருந்தும் வரும். அந்த ’ஒரு லட்சம் வாங்கும் வெற்றிபெற்ற இளைஞன்’ ஆப்பிள் கணிப்பொறியை நோண்டியபடி ‘லைஃப்ல ஜாலியா இருக்கணும் புரோ’ என்பான். ஆய்வுமாணவன் கூனிக்குறுகி புன்னகைக்கவேண்டும்.
சமூகப்பணியாளர் இந்த ஆலோசனைக் கும்பலை ஓர் எளிய பணிவுப்பாவனையில் கடந்து செல்வார். கூடவே மனதுக்குள் சிரித்துக் கொள்வார். “ஆமாங்ணா..அப்டியே செய்றேங்ணா’ என அவர்கள் பவ்யமாகச் சொல்வதைக் கண்டு நானும் கூட நின்றே சிரித்திருக்கிறேன். ஆய்வு செய்பவர்கூட இவ்வகையில் இவர்களை கடந்து செல்லலாம். அறிவியக்கவாதி கடந்து செல்லமுடியாது. ஏனென்றால் அவன் உரையாடியே ஆகவேண்டியவன். அவன் என்ன நிலைபாடு எடுக்கவேண்டும்?
அதைத்தான் நான் சொல்கிறேன், ’நிமிர்வு’. நிமிர்வினூடாக அன்றி இந்த கும்பலைச் சமாளிக்க முடியாது. நிமிர்வு சற்றுக் குறைந்தால்கூட உங்கள் தன்னம்பிக்கையை அழித்து , உங்களை மீளாச்சோர்வில் தள்ளி, செயலற்றவர்கள் ஆக்கிவிடுவார்கள். அல்லது உங்களை எரிச்சலூட்டி எரிச்சலூட்டி எதிர்மறை மனநிலை கொண்டவர்கள் ஆக்கிவிடுவார்கள். இரண்டுமே அறிவியக்கச் செயல்பாடுகளுக்கு எதிரான உளநிலைகள்.
இந்த அற்பர்களின் பாவனைகள் ஏராளமானவை. ‘சமூகத்துக்கு பயனுள்ள மக்கள் பிரச்சினைகளை எழுதணும் சார்’ என்பது தொடக்கம். (சமூகத்திற்கு மிகமிகப் பயனுள்ளவராக வாழ்ந்துகொண்டிருப்பவர் அவர் என்பது அவருடைய தோரணை). அந்தப்பேச்சு அப்படியே நீண்டால் ‘எழுதி என்ன ஆகப்போகுது? யார் சார் இப்பலாம் படிக்கிறாங்க? ஒரு நாலுபேருக்கு நல்லது செய்தா அதனாலே பிரயோசனம் உண்டு’ என்ற இடத்துக்கு வந்துசேரும். (அப்படி நாலுபேருக்கு அவர் என்ன செய்கிறார் என்று கேட்கக்கூடாது. அவர் செய்வது முகநூலில் அரசியல், சாதிச்சண்டை ’சவுண்டு’ விடுவதுதான்)
அடுத்தது ‘எழுதுறது எல்லாம் சரிதான், நல்ல மனுசனா இருக்கணும் சார்’ (அதாவது அதைச் சொல்பவர் ஒரு அதிதூயோன்) அதன் முதிர்வு நிலை ‘யாரும் எதுவும் செஞ்சு ஒண்ணும் ஆகப்போறதில்லை. எல்லா பேரும் திருடன் சார்” . முத்தாய்ப்பு வரி “நாம நம்ம பொழைப்பப் பாப்பம்” ஆக, என்னைப்போல நீயும் வெந்ததைத் தின்று, விடியலில் அதை கழித்து, ஊடகம் ஊட்டுவதை மூளைக்குள் தேக்கி, அவற்றை பேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் ரீல்ஸிலும் அதைக் கழித்து வைத்து வாழ் என்பது சாராம்சம்.
இந்தக் கும்பலில் இருந்து முடிந்தவரை விலகி, தனித்து நிலைகொண்டாலொழிய இங்கே எந்தத்துறையிலும் எதையும் செய்துவிடமுடியாது. அதற்கான வழி என்பது தன்னைப் பற்றிய பெருமிதம். தன் செயல்பற்றிய நம்பிக்கை. தான் காலத்தின் குழந்தை என்னும் புரிதல். சமூகப்பெருக்கில் ஒருவனல்ல, அதை நடத்திச்செல்லும் சிலரில் ஒருவன் என்னும் தற்தெளிவு. அதையே நிமிர்வு என்று சொல்கிறேன்.
அதை ஏன் மேட்டிமைவாதம் என்கிறார்கள்? ஏனென்றால் அது இந்தப் பாமரர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது அவர்களை விமர்சனமும் செய்கிறது. ஆகவே வேறு வழியே இல்லை. பாமரன் எதையேனும் சொல்லி அறிவியக்கத்தை, கலையை நிராகரித்தே ஆகவேண்டும். மூர்க்கமான நிராகரிப்பு, அல்லது கேலிதான் அவன் அறிந்த வழிகள். அதற்கு அவன் கண்டடையும் சில நிரந்தரமான வரிகள் உண்டு. பழைய ஆட்கள் ‘இதனால் பணலாபம் உண்டா’ என்பார்கள். அதே மனநிலை கொண்டவர்கள் சமூகவலைத்தளங்களில் ‘இதனாலே சமூகத்துக்கு என்ன பயன்?’ என்பார்கள். இரண்டும் ஒரே கேள்விதான்.
எந்த பாமரனுக்கும் ஒன்று உள்ளூரத் தெரியும், அவன் வாழ்க்கை சாதாரணமானது, சாதாரணமான அந்த வட்டத்தை விட்டு வெளியே செல்ல அவனுக்கு அறிவாற்றலோ துணிவோ இல்லை. ஆனால் அந்த பாமர வாழ்க்கை அவனுக்குச் சலிப்பையும் அளிக்கும். அவனுக்குத் தெரியும், அறிவியக்கத்திலோ கலையிலக்கியத்திலோ வாழ்பவர்களின் வாழ்க்கை பெரியது என்று. ஆகவேதான் அறிவியக்கவாதி அல்லது கலைஞன் பாமரனை தாழ்வுணர்ச்சி அடையச்செய்கிறான். அந்த தாழ்வுணர்ச்சியே எரிச்சலை மூட்டுகிறது பாமரனுக்கு.
அறிவியக்கவாதி அல்லது கலைஞன் ஒன்றுமே செய்யவேண்டாம், சும்மா இருந்தாலே பாமரனை அவன் கூச்சம் கொள்ளச் செய்வான். ஆகவே பாமரனால் இகழப்படுவான். அதை அறிவியக்கவாதி அல்லது கலைஞன் எதிர்கொண்டே ஆகவேண்டும். நான் சொல்வது எழுத்தாளனையோ, கலைஞனையோ, ஆய்வாளனையோ, சமூகப்பணியாளனையோ மட்டும் அல்ல. நம் சூழலில் சாதாரணமாகப் புத்தகம் படிப்பவன், ஒரு நல்ல சினிமாவை தேடிப்பார்ப்பவன் கூட இதைச் சந்தித்தே ஆகவேண்டும். அதற்கான வழியே நிமிர்வு.
ஆக, நான் மிகமிக திட்டவட்டமாகச் சொல்லிக்கொள்கிறேன். நான் முன்வைப்பது ஒருவகை மேட்டிமைவாதத்தையே. இன்று நம் சூழலில் ஓர் அறிவியக்கவாதி அல்லது கலைஞன் நிலைகொள்ள அந்த மேட்டிமையுணர்வு இன்றியமையாதது. இன்று தமிழில் எத்தனை வசைகளைப் பெற்றுக்கொண்டாலும் பாமரனை அவன் பாமரன் என்று சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். அது ஒரு சமூகக் கடமை.
அதற்குப் பதிலாக ஜனநாயகம், மனிதசமத்துவம் என்றெல்லாம் பசப்புவார்கள் அதே பாமரர். ஜனநாயகமும் மனிதசமத்துவமும் உரிமைகளில் மட்டுமே. தகுதியில் அல்ல என்று சொல்லியாகவேண்டும். ஒரு சிறுபகுதியினரேனும் தாங்கள் பாமரர்களாகவே இந்த சூழலில் வளர்க்கப்பட்டிருக்கிறோம் என உணர்ந்தால், ஏதேனும் வகையில் மெலே செல்லமுயன்றால் அதுவே நம் சாதனை.
சென்ற முப்பதாண்டுகளாக நான் திரும்பத் திரும்பச் சொல்லிவருவது கலையிலக்கியமும், சிந்தனையும் , சமூகப்பணியும்தான் ஒரு சூழலில் முதன்மையான செயல்பாடுகள் என. பிற பணிகள் அனைத்துக்கும் மேலாக அவற்றுக்கு ஓர் இடம் உண்டு என. அந்த மதிப்பும், அவற்றின் மீதான நம்பிக்கையும் கொண்ட சமூகங்களே வென்று வாழும். அந்த நம்பிக்கையும் மதிப்பும் நம் சமூகத்தில் இன்றில்லை, அவை உருவாக வேண்டும் என. நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் அதையே எழுதியிருக்கிறேன்.
இங்கே ஏதேனும் ஒரு தருணம் அமைந்தால் உடனடியாக அறிவியக்கவாதியை கும்பலாகக் கூடி வசைபாடி கும்மியடித்து மகிழ எத்தனைபேர் கூடுகிறார்கள் என்று பாருங்கள். எனக்கு எதிராக அப்படி கூடுவதற்கு என் நிமிர்வும், என் கருத்துக்களும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறீர்கள் என்றால்; மிகப்பணிவான, அரசியலே பேசாத, அன்பையே முன்வைக்கும் அறிவியக்கவாதிகள்கூட தருணம் கிடைத்தால் இதே கும்பலால் இதே போல கும்பல்கூடி வசைபாடப்பட்டிருப்பதை எப்படி விளக்குவீர்கள்? இங்கே வசைபாடப்பட அறிவியக்கச் செயல்பாடு ஒன்றே போதும், வேறொன்றும் தேவையில்லை.
நம் சூழலில் கலைஞனிடம், அல்லது அறிவியக்கவாதியிடம் ஒருபோதும் தாழ்வும் பணிவும் அமையலாகாது எனறு நான் வலியுறுத்துகிறேன். ஏனென்றால் இங்கே மிக எளிய உலகியல்வெற்றி அமைந்தவர்கள்கூட ஒருவகை மிதப்புத் தோரணையுடன் கலைஞனையும் அறிவியக்கவாதியையும் அணுகும் மனநிலை ஓங்கியுள்ளது. பரிவுடன் பார்ப்பார்கள். தட்டிக்கொடுப்பார்கள். தமிழின் தலைசிறந்த கவிஞனிடம் ‘ஏதாவது வேலைக்குப் போகலாம்ல?’ என்று கெத்தாகக் கேட்ட கார்ப்பரேட் குமாஸ்தாவை கண்டு உண்மையிலேயே குமட்டலெடுத்திருக்கிறது எனக்கு.
இவர்கள் ஓர் எழுத்தாளன் வறுமையில் இருந்தால் உள்ளூர மகிழ்வார்கள். மனதுக்குள் நல்லவேளை நானெல்லாம் வேலைக்கு வந்துவிட்டேன் என நினைத்துக்கொண்டு வெளியே அடாடா என்பார்கள். கலைஞர்களும் எழுத்தாளர்களும் உலகியலில் துன்புற்று தோல்வியுற்றால் இவர்களுக்குள் ஒரு நிறைவு உருவாகிறது. கலைஞன் இவர்களுக்கு அளிக்கும் தாழ்வுணர்ச்சியின் எரிச்சல் சற்றுக் குளிர்கிறது. அந்த கலைஞனை அவன் உலகியலில் தோல்வியடைந்து இறக்கும்போது ஆகா அடடா என்று கொண்டாடுவார்கள். அப்படியே மறந்தும் விடுவார்கள்.
எண்ணிப்பாருங்கள், பிரான்ஸிஸ் கிருபா சாவின்போது இங்கே என்னென்ன பேசப்பட்டது என்று. அவரை சுட்டிக்காட்டி பிறரை வசைபாடினார்கள். ஆனால் இன்று அவரை இவர்கள் எவராவது பேசுகிறார்களா? பிரான்ஸிஸ் கிருபா இன்றும் நமக்குத்தான் முக்கியம். நாம்தான் அவருடைய கலைவெற்றியையும் கலைச்சிதறல்களையும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு அவர் ஓர் அடையாளம். கலைஞன் எனும் நிலை ஒரு தோல்வி என்றும், தாங்கள் வென்றவர்கள் என்றும் சொல்லிக்கொள்ள ஒரு சான்று, அவ்வளவுதான். ‘அசல் கலைஞன்யா’ என்பார்கள். அடுத்த கணமே ‘குடிச்சே அழிஞ்சான்யா’ என்பார்கள். கலைஞன் என்றால் அழியவேண்டியயவன் என தங்களுக்கே சொல்லிக்கொள்ள அவன் ஒரு முகம், அதற்கப்பால் ஒன்றுமில்லை.
இந்த பாமரர்களின் மனநிலைதான் ஒரு கலைஞன் உலகியலில் கொஞ்சம் வென்றால் உடனே வசைபாடச் செய்கிறது. அவனுடைய வெற்றியையோ நிமிர்வையோ கண்டால் எரிய வைக்கிறது. ஏனென்றால் அவன் இவர்கள் தாங்கள் அடைந்துவிட்டதாக எண்ணும் ஒரே வெற்றியைக்கூட இவர்களுக்கு அளிக்காமல் இவர்களைவிட மேலே அங்கும் சென்று நின்றிருக்கிறான். அதை அவர்களால் தாள முடிவதில்லை. அவர்களுக்கு முன் கலைஞனின் வெற்றியை, அவன் வாழ்வின் தீவிரத்தை நாம் முன்வைப்பதென்பது ஓர் அறிவார்ந்த அறைகூவல். உலகியலில் நாலுகாசு சேர்த்தவனின் வெற்று மேட்டிமைத்தனம் அல்ல இது.
இங்கே ஒருவர் இன்னொருவரைச் சந்தித்ததுமே தன் பொருளியல்நிலையைத்தான் தன்னடையாளமாகச் சொல்கிறார் என்பதை கவனியுங்கள். தன் பணி, தன் தொடர்புகள் இரண்டையும் சொல்வார். அவற்றை அடைந்தவர் தன்னை ‘வெற்றியடைந்தவர்’ என நினைத்துக்கொள்கிறார். அதை வெற்றி என ஒருபோதும் கலைஞன், அறிவியக்கவாதி ஒப்புக்கொள்ளக்கூடாது. அந்தப் பாமரன் அப்படி நம்ப அனுமதிக்கக்கூடாது. அவன் முன் பணிவதென்பது அவன் அப்படி நம்ப வழியமைப்பதே. அது அறிவியக்கத்துக்கும் கலைக்கும் இழைக்கப்படும் துரோகம். ஆகவே சென்ற தலைமுறை எழுத்தாளர் சிலரின் மிகைப்பணிவு, தன்னிரக்கப் பாவனை ஆகியவற்றைக் கண்டும் எனக்கு அதே குமட்டல் உண்டு.
அந்த உலகியலாளர் முன் நிமிர்ந்து நின்று ’நான் கலைஞன், நான் அறிவியக்கவாதி’ என்று சொல்லி கூடவே ’நான் இச்சமூகத்தில் மிக வெற்றிகரமானவன், உங்களை விட தீவிரமானதும் அதேசமயம் வெற்றிகரமானதுமான வாழ்க்கையை வாழ்பவன்’ என்று சொல்பவனே இன்றைய சூழலுக்குத் தேவையானவன். அவன் இந்தச் சமூகத்திற்கான மிகமிக அடிப்படையான ஒரு செய்தியைச் சொல்கிறான். இன்றைய அற்பர்களின் எல்லா வசைகளையும் வாங்கிக்கொண்டு அவன் நாளைய தலைமுறைக்காக அந்தப்பணியைச் செய்தாகவேண்டும்
நாம் நீண்டகாலம் பஞ்சத்தில் உழன்ற ஒரு சமூகம். சென்ற தலைமுறை வரை உணவுக்கே போராடிய சமூகம். நம்மில் பெரும்பாலானவர்கள் கீழ்நடுத்தர, அடித்தளத்தில் இருந்து சென்ற ஒரு தலைமுறைக் காலத்தில் மேலெழுந்து வந்தவர்கள். இன்று நாம் அடிப்படை வறுமையை கடந்துவிட்டோம். சாப்பாட்டைப் பற்றி பதற்றப்படும் நிலையில் நம்மில் பெரும்பாலானவர்கள் இல்லை. இனி நாம் வெல்லவேண்டியது அறிவுத்தளத்தில், கலையில். இன்று தொழில், வணிகம் ஆகியவற்றுக்கு இணையாகவே கலையிலும் அறிவுத்தளத்திலும் நாம் முன்னகர்ந்தாகவேண்டும். நம் அடுத்த தலைமுறையினர் அதில் சாதித்தாகவேண்டும். அதற்கு நாம் நம் மூதாதையரின் பல உளநிலைகளை கடந்துசென்றாகவேண்டும்.
நம் மூதாதையர் நம்மிடம் அடிப்படையான ஒரு வருமானத்தில் நிலைகொள்ளும்படி கற்பித்தனர். ‘செட்டில்’ ஆவதைப்பற்றியே சொல்லிக்கொண்டிருந்தனர். நிலைகொண்டுவிட்டால் நிம்மதி அடைந்தனர். பொருளியல்நிலை தவிர எதற்குமே எந்த மதிப்பும் இல்லை என்று நமக்குக் கற்பித்தனர். பொருளியல் நிலையை அடைந்ததுமே முழுநிறைவு கொள்ள பயிற்றுவித்தனர். கலை, இலக்கியம், ஆய்வு என அறிவார்ந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்றும் அது மனிதனை தோல்வியடையச்செய்யும் என்றும் நம்பினர். இனியேனும் நாம் அந்த மனநிலையை கடந்தேயாகவேண்டும். இல்லையேல் நம் சமூகம் வெறும் நுகர்வுக்கூட்டமாகச் சுருங்கிவிடும். வெற்றுக்களியாட்டுகளில் வீணாகி அழியும். அதன் இறுதிநிலை என்பது ‘காஸினோ’க்கள்தான். இன்றே அதன் தடையங்களைக் காண்கிறோம். நீங்கள் சொல்லும் புத்தாண்டுக்கொண்டாட்டம் எல்லாம் அதன் வெளிப்பாடுகளே.
பொருளியல்செயல்பாடு முக்கியம்தான். அதுவே மைய ஓட்டம் . ஆனால் சமூகத்தின் ஒரு பகுதியினரேனும் கலை, இலக்கியம், அறிவுச்செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். மொத்தச் சமூகத்திற்கும் அச்செயல்பாடுகள் மேல் மதிப்பு உருவானாலொழிய அது நிகழாது. அந்த மதிப்பை அறிவுச்செயல்பாடுகளில், கலையிலக்கியங்களில் ஈடுபட்டுள்ள நாம் இன்று உருவாக்கவேண்டும். ஆகவே கலைஞனை, அறிவியக்கவாதியை பொதுச் சமூகம் குனிந்து பார்க்கலாகாது. நம் மேல் இரக்கமும் , ஊக்குவிப்பும் காட்டலாகாது. நம்மை நிமிர்ந்து பார்க்கவேண்டும். வியக்கவேண்டும். கலைஞனும் இலக்கியவாதியும் இரவலனாக இருந்த காலம் முடிந்துவிட்டது. அவன் கொடுப்பவனாக திகழ்ந்தாகவேண்டும்.
அவ்வாறு இலக்கியவாதி வெளிப்படும்போது உருவாகும் பொறாமை, கசப்பு, புகைச்சல், வசைபாடல் எல்லாம் நல்லதே. அவையெல்லாம்கூட பாமரர்களின் பாராட்டுதான். அவர்களின் பரிவும் கனிவும் மட்டும் உருவாகக்கூடாது. அவ்வாறு உருவானால் அடுத்த தலைமுறையில்கூட கலையிலக்கியம் மற்றும் அறிவுச்செயல்பாடுகள் மேல் சமூகமதிப்பு உருவாகாது.
நான் நன்கு அறிந்த ஒன்றுண்டு. தமிழில் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் தங்கள் இல்லத்தில் ஒரு புத்தகம்கூட வைத்துக்கொண்டதில்லை. தங்கள் குழந்தைகள் ஒரு புத்தகம்கூட வாசிக்க அனுமதித்ததில்லை. தங்கள் வாரிசுகள் முறையாகப் படித்து, ‘நல்ல வேலைக்கு’ சென்று விடவேண்டும் என்று அல்லும் பகலும் அப்படைப்பாளிகள் முயன்றனர். வாரிசுகள் அவ்வாறு வேலைக்குச் சென்றபின் அதை அப்படைப்பாளிகள் தங்கள் வெற்றியாக , வாழ்நாள் சாதனையாகச் சொல்லிக்கொண்டே இருப்பதை கண்டிருக்கிறேன். ‘நம்மைப்போல நம்ம பிள்ளை இருந்திரக்கூடாது’ என்று என்னிடம் சொன்ன பல எழுத்தாளர்களை நான் அறிவேன். அப்படியென்றால் அவர்களுக்கு உண்மையில் இலக்கியம், அறிவியக்கம் பற்றிய மதிப்புதான் என்ன? அவர்கள் சமூகத்துக்கு அளிக்கும் செய்திதான் என்ன? அவர்கள் இந்தச் சமூகத்தின் மொண்ணைத்தனத்தால் அவ்வளவு புண்பட்டார்கள் என கொள்வதா?
நான் எதை நம்பினேனோ அதையே என் குடும்பத்திற்கு அளித்தேன். இலக்கியத்தை, அறிவுச்செயல்பாட்டை. அதுதான் பெருமைக்குரியது என எண்ணினேன். அதன் பொருட்டு எனக்கு வந்து குவிந்த அறிவுரைகள், குழந்தை வளர்ப்பு வழிமுறைகள் நான் எழுதிய நூல்களின் வரிகளை விட மிகுதி. ஆனால் என் வாரிசுகள் வேறெந்நிலைக்குச் சென்றாலும் ஏமாற்றமே அடைந்திருப்பேன். என் வாரிசுகளை இளமையிலேயே அதைச் சொல்லித்தான் வளர்த்தேன். இன்று அதன் பொருட்டு பெருமிதம் கொள்கிறேன். என் குடும்பமே அறிவுச்செயல்பாட்டில் ஈடுபாடுகொண்டிருப்பதை ஓர் இழிவென கேலி செய்து எழுதப்பட்ட நாலைந்து குறிப்புகள் என் கண்ணுக்குப் பட்டன. இந்த பாமரர் நடுவே நான் நிமிர்வை மட்டுமே முன்வைக்க முடியும் இல்லையா?
அறிவியக்கச் செயல்பாடு, கலைச்செயல்பாடு உடனடியான வெற்றிகளை அளிப்பது அல்ல. அதற்கு நீண்டகாலத் தவம் தேவைப்படுகிறது. உறுதியான குறைந்தபட்ச வெற்றிக்கும் வாய்ப்பில்லை. அதில் எவ்வளவோ தற்செயல்கள் செயல்படுகின்றன. ஆய்வுகளுக்கும் இதுவே பொருந்தும். ஆனால் ஒரு சமூகத்தில் ஒரு சிறு பகுதியினரேனும் அவற்றுக்கு தங்கள் குழந்தைகளை துணிந்து அனுப்பவேண்டும். அவர்களுடன் நின்றிருக்கவேண்டும். சூழல் அளிக்கும் அழுத்தத்தை தாக்குப்பிடிக்க வேண்டும். படித்து வேலைக்குப்போய் சம்பாதிப்பது மட்டும் வெற்றி அல்ல என்றும் அறிவுச்செயல்பாடு மேலும் பெரிய வெற்றி என்று அவர்கள் நம்பவேண்டும். அவர்கள் பிறரிடம் அதைச் சொல்லவேண்டும். அந்த மனநிலையை இன்று நாம் உருவாக்கியாகவேண்டும்.
அண்மையில் மிகச்செல்வந்தரான ஓர் இளைஞரிடம் பேசினேன். அவர் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என குடும்பமும் சூழலும் சொல்வதாகச் சொன்னார். அவர் அறிவியக்க ஈடுபாடும், அதற்கான கூர்மையும் கொண்டவர். அவர் ஏன் சம்பாதிக்கவேண்டும் என்று நான் கேட்டேன். அவர் ஏன் தன் அகம் விழையும் அறிவுச்செயல்பாட்டில் ஈடுபடலாகாது? அவர் எவ்வளவு பெரும்பணிகளை ஆற்றமுடியும் . அவருக்கான நேரம் அவரிடமுள்ளது. அவருக்குத்தேவையான அடிப்படை முதலீடு கையிலுள்ளது.
ஆனால் சம்பாதிக்காவிட்டால் சமூக மதிப்பு இருக்காது என குடும்பம் நினைப்பதாகச் சொன்னார். ’சம்பாதிப்பதை மட்டுமே மதிப்பெனக் கருதும் பாமரர்கள் எல்லா வற்கத்திலுமுண்டு. அவர்களின் மதிப்பை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். ‘தாகூர் என்ன சம்பாதித்தார்?’ என்று கேட்டபோது அவர் திகைத்து அமர்ந்திருந்தார்.
உலகமெங்கும் மகத்தான அறிவியக்கவாதிகள் பலர் செல்வந்தக் குடியில் பிறந்து அதையே நல்வாய்ப்பென பயன்படுத்திக்கொண்டவர்கள். நவீன ஐரோப்பாவை உருவாக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களே. பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் அறிவியக்கமே முதன்மையான சமூகச்செயல்பாடு என்ற பொதுமனநிலை உருவானது. எந்த அளவு செல்வமும் பதவியும் இருந்தாலும் ஒரு நல்லநூலை எழுதாவிட்டால், ஓர் அறிவியல்கண்டுபிடிப்பில் ஈடுபடாவிட்டால் எங்கும் மதிப்பில்லை என்னும் சூழல் முந்நூறண்டுக்காலம் ஐரோப்பாவில் இருந்தது. அதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு வழிகோலியது. இன்றைய உலகம் ஐரோப்பிய மறுமலர்ச்சியால் உருவாகி வந்த ஒன்று.
மிகச்சிலருக்கேனும் தங்கள் வாரிசுகள் கலைஞர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாகவும் ஆவது பெருமைக்குரியதே என நம்மால் காட்டமுடிந்தால் நம் வரலாற்றுப்பணியை ஆற்றுகிறோம். கலைஞர்களை, அறிஞர்களை, ஆய்வாளர்களை மதிப்புடன் நிமிர்ந்து பார்க்கும் ஒரு சூழலை அடுத்த தலைமுறையிலேலும் நாம் உருவாக்க முடிந்தால் நாம் வென்றோம். இன்று பாமரர்கள் பொறாமையால் எரிவதுகூட அதற்கான ஒரு தொடக்கமே.
ஜெ