( யுவனின் கானல் நதி, நினைவுதிர் காலம் நாவல்களின் இசைப் பயணம்)
எழுத்தாளர் ஆர்தர் ஹக்ஸ்லி சொன்னதாக ஒரு வரியுண்டு – ‘விளக்கவியலா உணர்வுகளைச் சொல்லும் மொழி மௌனம். அடுத்தது இசை’. அந்த மௌனத்தையும், இசையையும் சொற்களால் வெளிப்படுத்துவதென்பது பெரும் சவால். மொழியின் மேல் அபாரமான தேர்ச்சியும், சாஸ்திரிய – குறிப்பாக இந்துஸ்தானி இசை நுணுக்கங்கள் பற்றிய தேர்ந்த ரசனையும் கூரிய அவதானிப்பும், தமிழ் வாசகருக்கு அறிமுகமில்லாத வடிவங்களைக் கையாளும் படைப்பாற்றலும் கொண்ட ஒரு அரிய படைப்பாளியால் மட்டுமே இது சாத்தியம். யுவனுக்கு இது அபாரமாகக் கைவந்திருக்கிறது. அதுவும் இருமுறை, ‘கானல் நதி’, ‘நினைவுதிர் காலம்’ இரண்டும் இசையும் வாழ்வும் ஒன்றை மற்றொன்று நிரப்பி நுரைத்துத் ததும்பும் தமிழின் அபூர்வமான படைப்புகள்.
இரண்டு நாவல்களிலும், இசை பின்புலத்தில் வரும் ஒரு திரைசீலையாகவோ, கதையோட்டத்துக்கு உரம் சேர்க்கும் ஒரு துணைப் பொருளாகவோ மட்டும் முடிந்து விடுவதில்லை. முழுக் கச்சேரியும் பின்னணியில் தம்பூராவின் சுருதியால் நிரம்பியிருப்பது போல், முழு நாவலும் இசையால் சூழப்பட்டிருக்கிறது. இசையும், நாவல் காட்டும் வாழ்வும், பாத்திரங்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதபடி பிணைந்திருப்பதே இந்தப் படைப்புகளின் வெற்றி.
இசையை ஆதாரமாகக் கொண்ட கலைஞர்களை, அவர்களின் வாழ்வின் சாரத்தை, அக நாடகங்களை, தனிமையை, கொந்தளிப்பை, மௌனத்தை இசையை மையமாக வைத்த தேடல் மூலம் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. அதனாலேயே ஹிந்துஸ்தானி இசையைப் பற்றிய ஆவணங்களாக மட்டும் சுருங்கி விடாமல், இசை அறிமுகமில்லாத வாசகர்களும் தவற விடாமல் படிக்க வேண்டிய படைப்புகளாக நிலை கொள்கின்றன. இசை, வாழ்க்கையையும் – வாழ்க்கை, இசையையும் நிறைத்தவண்ணம் இருக்கிறது. கலைமனம் செல்லும் திசையையும், கலைஞர்களின் அக உலகையும் நுட்பமான அவதானிப்புகளுடன் சொல்வதால் இரு நாவல்களையும் காலமும் இடமும் தாண்டிய பொதுவான தளத்திற்கு நீட்டி, ஒரு வாசகர் தனக்கானதாய் விரித்துக் கொள்ள முடியும். நாம் வியந்தோ, புதிராகவோ பார்த்த எந்தக் கலைஞனையும் இன்னும் அணுக்கமாக அறிந்து கொள்ள முடியும். தனஞ்சய் முகர்ஜியிலிருந்து வரையப்படும் கோட்டை சற்று நீட்டினால் புல்லாங்குழல் மாலியின், மைக்கேல் ஜாக்சனின் அகக் கொந்தளிப்புகளுக்கான காரணங்கள் தெரியலாம். குறைந்தது, அந்தக் கலைஞர்களின் மீது நம் அன்றாடத்தின், சாராசரி வாழ்வின் மதிப்பீடுகளை ஏற்றாமல் இன்னும் கொஞ்சம் கனிவோடு விருப்பு வெறுப்பின்றி அவர்களை ஏற்க உதவலாம். மேலதிகமாக நம் சொந்த மண் உலக இசைக்கு அளித்த கொடையான இந்துஸ்தானி இசை குறித்த ஒரு வரைபடத்தையும், மனோதர்ம அடிப்படையில் அமைந்த அதன் பல்வேறு கூறுகளின் எளிய அறிமுகத்தையும் கதையோட்டத்தோடு அறிந்து கொள்ளவும் முடியும். ஆர்வமிருக்கும் வாசகர்களுக்கு, செவ்வியல் இசை குறித்த அறிதலின் பயணத்தின் தொடக்கப் புள்ளியாகக் கூட அமையலாம்.
கலைஞனின் சூழலும், புறக்காரணிகளும் அவனுள் ஊறித் ததும்பும் இசையை என்ன செய்கின்றன என்பது கானல்நதியில் பேசுபொருள். அதன் நேரெதிர் புள்ளியிலிருந்து துவங்குகிறது நினைவுதிர் காலம். இசையால் மட்டுமே நிறைந்த கலைஞனின் அகம் அவனது உறவுகளையும், புறவாழ்க்கையையும் எப்படிக் கட்டமைக்கிறது என்பதை மையப் பாத்திரம் ஹரிஷங்கர் தீட்சித்தின் சித்தரிப்பு, உரையாடல் வழி நிகழ்த்திச் செல்கிறது நினைவுதிர் காலம்.
கானல் நதி, தனஞ்ஜய் முகர்ஜி என்ற இசைக்கலைஞனின் குழந்தைப் பருவம் முதல் அகாலமான அவன் மரணம் வரை நீளும் நாவல். இசை மொத்தக் கதையையும் நகர்த்திச் செல்கிறது.மொத்த நாவலும் ஒரு இந்துஸ்தானி இசைக் கச்சேரி போல் ஒழுகிச் செல்கிறது. யுவனுக்கேயுரிய சம்பவங்களையும் பாத்திரங்களையும் நேர்கோட்டில் அல்லாது கலைத்து அடுக்கும் வடிவம் இந்த நாவலையும் சுவாரஸ்யப் படுத்தியிருக்கிறது. நாவல் நிகழும் நிலமும், அதன் மனிதர்களும் தமிழகத்துக்கு முற்றிலும் அந்நியமான வங்காளத்தில் நிகழ்ந்தாலும், ஆதார சுருதியாக நாவல் முழுதும் விரவியிருக்கும் இசை நம்மையும் எளிதாக வங்காளத்தின் மாமூட்பூரில், காரி நதியின் கரைகளில், கடுகெண்ணெய் மணக்கும் பந்தார்தீஹியின் பலகாரக் கடைகளுக்கு, இயல்பாகக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது. பேசப்படும் மொழி அனைவருக்கும் பொதுவான இசையென்பதால் நிலமும் மனிதரும் நமக்கு அணுக்கமாகவே இருக்கின்றன.
கானல் நதி நாவலின் வடிவம், ஒரு இந்துஸ்தானி கச்சேரியின், குறிப்பாக ‘கயால்’ வடிவக் கச்சேரியை அடியொற்றி இருப்பதாகத் தோன்றும். இவ்வாறு அமைக்க வேண்டும் என்ற எந்த எந்த முயற்சியுமில்லாமல் இல்லாமல் இது தானாக நாவல் வந்தடைந்த வடிவம் என்று யுவன் ஒரு நேர்காணலில் சொல்லியிருப்பார். பொதுவாக கயால் அமைப்பிலமைந்த இந்துஸ்தானி கச்சேரிகள், இசைக் கலைஞர் மிக மெதுவாக ஒரு ராகத்தின் சாயலை ‘ஆலாப்’பை (ஆலாபனை) பாடுவதில் அல்லது இசைப்பதில் துவங்கும். ஒரு மலர் மொட்டவிழ்ந்து இதழ் விரித்து மலர்வது போல், முழுக்க முழுக்க தன் கற்பனையால் ராகத்தின் நுட்பங்களுக்குள் சென்று அது தரும் உணர்வு நிலையை விரித்து எடுத்தபடி செல்வதில் கச்சேரி தொடங்கும். இசைக் கலைஞரின் கற்பனையையும், மனோதர்மத்தையும் பொறுத்து ராகம் உயிர் பெற்று எழுந்து வரும். ஆலாப்பின் போது, தம்பூராவின் சுருதியைத் தவிர வேறு பக்க வாத்தியங்கள் எதுவும் இணைந்து கொள்வதில்லை. பாடகரின் அல்லது முதன்மையான வாத்தியக் கலைஞரின் இசை மட்டுமே மிக மெதுவாக ராகத்தின் பாவத்தை (bhavam) கட்டி எழுப்பும். கச்சேரியின் அடுத்த கட்டமாக, பக்கவாத்தியங்கள் இணைந்து கொள்ளும். இசை தாளத்துடன் இணைய, ராகம் விரியத்தொடங்கும். பொதுவாக தபலா, இந்துஸ்தானி இசைக் கச்சேரிகளில் முதன்மையான தாளவாத்தியமாக இருப்பதைப் பார்த்திருக்கலாம்.
ஆலாபைத் தொடர்ந்து ‘படா க்யால்’ பாடப்படும் போது, மிக மெதுவான தாளகதியில் – ‘விளம்பித’ காலத்தில் பாடகர் பாடுவதைத் தொடர்வார். பாடல் வரிகளுக்கு பெரிய முக்கியத்துவமிருக்காது. ஓரிரு வரிகள் கொண்ட பாடல் வரிகளின் மேலேறி ராகத்தை விரித்தெடுத்தல் தொடரும். அடுத்த கட்டமாக இசை மெல்ல மிதமான ‘மத்ய’ காலத்தில் வேகமெடுக்கத் தொடங்கும். இங்கிருந்து மேலும் வேகமெடுத்துத் தாவிச்செல்லும் புரவியென பாடகர் ‘த்ருத்’ (துரித) காலத்தில் பாட, கச்சேரியின் இந்தப் பகுதி ‘அதி த்ருத்’ தில் நிறைவடையும்.
கானல் நதியின் அமைப்பும், வடிவமும் தன்னளவில் ஒரு இந்துஸ்தானி இசைக் கச்சேரியை ஒத்திருப்பதைக் காணலாம். மிக மெதுவாய்த் துவங்கும் ஒரு ஆலாப் போல, கதைசொல்லி கேசவ் சிங் சோலங்கி நம்மை கல்கத்தாவின் ஹௌரா ரயில் நிலையத்தில் இறக்கி மெதுவாக ரயிலிலும், பேருந்திலும், நடைப் பயணமுமாக கை பற்றி வங்காளத்தின் உள்ளடுக்கில் கங்கையின் வண்டல் சேர்த்த வயல்களும், காரி நதியும், கடுகெண்ணை மணமும் நிறைந்த நிலங்களின் வழியே மாமுட்பூர் கிராமத்துக்கு அழைத்துச் செல்வார். காலத்திலும் இந்திய விடுதலைக்கு முன் நிகழும் பின்னோக்கிய பயணம். ஆலாபின் மூலம் ராகத்தினூடான பயணம் போன்ற நுண்ணிய விவரணைகளூடான வாசகர் பங்கேற்பை மட்டும் கோரும் புலன்களை தீட்டிச் செல்லும் அவசரமில்லாத பயணம். கேட்பவரையும் இழுத்துச் செல்லும் ராகத்தின் பயணம் போல சொற்கள் வழியே வாசகர் செய்யும் பயணம். பருவடிவில் நிகழும் இசை ஒவ்வொருவருள்ளும் கிளர்த்தும் உணர்வுகள் போல, புறக் காட்சிகளின் சித்தரிப்புகளின் வழி வாசகனின் அகத்தில் எழும் கற்பனைகள் வழி நிகழும் பயணம்.
இந்துஸ்தானி இசையின் அனைத்துப் பரிமாணங்களையும் நாவல் தொட்டுச் சென்றிருக்கும். குரு சீட உறவின் பல்வேறு முகங்கள். முலையூட்டும் அன்னையெனக் கனிந்திருக்கும் தனஞ்சயனின் குரு விஷ்ணுகாந்த் சாஸ்திரி, சீடனுக்கு நிலத்தை எழுதி வைக்கும் அவரின் குரு, அதே குருவிடம் பயின்றாலும் முற்றிலும் வெவ்வேறு மனநிலையிலிருக்கும் பிற சீடர்கள். குருவின் மீதான கசப்பு இறுகி நஞ்சென கக்கும் லக்ஸ்மண் கெய்க்வாட்டின் சீடர் அரிஜுன் பிங்ளே. வெல்வேறு கரானாக்களின் முறைமைகள், பயிற்று முறைகள், மனமும் மெய்யும் குவிந்து செய்யும் சாதக அமர்வுகள், இந்துஸ்தானி கச்சேரியின் பல்வேறு வடிவங்கள், ராகங்களைப் பற்றிய விரிவான விவரணைகள், அவற்றை இசைக் கலைஞர் கட்டியெழுப்பும் விதங்கள், மனோதர்மம் செய்யும் மாயம் என இந்துஸ்தானி இசை பற்றிய முழுமையான பார்வையை நாவலை வாசித்து முடிக்கையில் வாசகர் அடைய முடியும். ஒருவேளை மேற்சொன்ன அனைத்தையம் கட்டுரை வடிவில் படித்திருந்தால் வெறும் தகவல்களாகச் சுருங்கி விட வாய்ப்புண்டு. தனஞ்சயனுடன் சேர்ந்து இசையினூடாக நாமும் ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து முடிப்பதால், மெய்நிகர் அனுபவமாக இசை நம்முடன் தங்கிவிடுகிறது.
நினைவுதிர் காலத்தின் வடிவம் ஆர்வமூட்டக்கூடியது. முழு நாவலும் ஹரிசங்கர் தீட்சித் என்ற வயலினிசைக் கலைஞர், ஆஷா வைத்தியநாதன் என்ற பத்திரிக்கையாளரிடம் தன் வாழ்வனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் நேர்காணல். நாவலுக்கு மிகவும் சவாலான வடிவம். புற உலகின் வர்ணனைகளோ, நிலக்காட்சியோ, கதாப்பாத்திரங்களின் அக ஓட்டங்களையோ நேரடியாகச் சொல்லிவிட முடியாத வடிவம். அனைத்தும் ஹரிசங்கரின் வாய்மொழியாக மட்டுமே வந்தாக வேண்டும். நாற்புறமும் மதிலெழுப்பி எல்லைக்குள் நின்று சொல்லப்பட வேண்டிய கட்டாயம். ராக ஆலாப் போல் கற்பனை கட்டற்று விரிந்த வண்ணம் போக முடியாது. அதே சமயம் ஹரிசங்கர் தீட்சித்தின் வாழ்வின் உச்ச தருணங்களையும், உணர்வெழுச்சிகளையும் சொல்லிச் செல்ல வேண்டும். ஆகவே, இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் தன்னளவில் ஒரு முழுமையான சம்பவமாகவோ, இசையின் ஒரு உச்ச தருணமாகவோ காட்டப்பட்டிருக்கும். இந்துஸ்தானி இசைக் கச்சேரியில் பாடப்படும் ஒரு அழகிய பந்திஷ் போல. பந்திஷ் என்பது ஒரு ராகத்தில் தாளத்துடன் அமைந்த சிறு பாடல். பொதுவாக இரண்டு முதல் எட்டு வரிகளிருக்கலாம். பந்திஷ் பாடும் பாடகர் ராகத்தின் விரிவை பந்திஷின் வரிகளின் வழி பக்கவாத்தியத்தின் லயத்துடன் இணைந்து பாடிச் செல்வார். ஆலாப் பாடுவது கடல் மேல் செல்லும் கட்டுமரத்தின் பயணமென்றால், பந்திஷ் பாடுவது இருபுறமும் கரையெழுந்த நதி மேல் ஒழுகிச் செல்லும் படகு போல. இரண்டும் தனக்கான அழகை உள்ளடக்கியவை. ஹரிஷங்கர் வாழ்வின் தனித்தனி சம்பவங்கள் வழி நாவல் கட்டமைக்கப் பட்டிருக்கும். கட்டற்ற உணர்வெழுச்சியோ, நாடகீயமான விவரணைகளோ இல்லமால் ஹரிஷங்கரின் மெல்லிய நகைச்சுவையுடன் எண்ணிச் சொல்லப்பட்ட சொற்களுடன் ஹரிஷங்கரின் சமநிலையான மொழியில் மொத்த நாவலும் நகர்ந்து செல்லும். நடந்து முடிந்த, இசையால் நிரம்பிய நீண்ட வாழ்வின் அனுபவப் பதிவுகள். முன்னரே மெட்டமைக்கப்பட்டு பல நூறு முறை பாடித் தீட்டப்பட்ட பந்திஷ் போல. பந்திஷ் அதற்கென ஒரு தொடக்கத்தையும், எழுதலையும், உச்சத்தையும் கொண்டிருப்பது போல ஒவ்வொரு அத்தியாயமும் தன்னளவிலான முழுமையான தொடக்கமும் உச்சமும் கொண்டு பின்னப்பட்டிருக்கும்.செதுக்கப்பட்ட நுட்பத்துடன் ஒவ்வொரு அத்தியாயமும் ஹரிஷங்கரின் அனுபவங்களின் வழி நகர்த்தப் பட்டிருக்கும்.
கானல் நதி, நினைவுதிர் காலம் நாவல்கள் நெடுகிலும் இந்துஸ்தானி இசை பற்றிய வெவ்வேறு தரப்புகளின் பார்வைகளும் முன் வைக்கப்படுகின்றன. சாஸ்திரிய இசையின் நற்கூறுகளை விரிவாகப் பட்டியலிடும் அதே நேரம் மிகையாக அதைப் புனிதப் படுத்தி பீடத்தில் ஏற்றி வைப்பதில்லை. சாஸ்திரிய இசையில், சங்கீதம் பக்தியை ஒட்டித்தான் இருக்க வேண்டுமா என்ற கேள்வி முதல் ராகம் பாடுவதற்கு வரிகளோ பாடலோ அவசியமா, கரானாக்களுக்கு இடையேயான பரிமாற்றத்தின் அவசியம், நவீன கச்சேரிகளின் போதாமை, பதிவு செய்யப்படும் இசை மீதான கடந்த கால இசைக் கலைஞர்களின் பார்வை என ஒரு விரிவான உரையாடலின் அனைத்துத் தரப்புகளையும் கதையின் ஓட்டத்தோடு அறிந்து கொள்ள முடிவது வாசகர்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பே. அதையும் யுவனுக்கேயுரிய மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லிச் சென்றிருப்பார். சலாவுதீன்கான் என்னும் தொண்ணுத்தாறு வயது பாடகர் ‘ஜுகல்பந்தி’ (ஒன்றுக்கும் மேற்பட்ட, இசைக்கலைஞர்கள் இணைந்து நிகழ்த்தும் இசைக் கலவை) பற்றி இவ்வாறு சொல்வார். “மேற்கத்திய வாத்தியக்காரர்களுடன் சேர்ந்து கதம்ப சங்கீதம் செய்யலாம். இனிப்பும் உறைப்பும் ஒன்றாகக் கலந்த புது சப்ஜி. ஜுகல்பந்தி, குலாப்ஜாமூன் மாதிரி. இனிமையான பெயர் இல்லை?”
கலைஞனின் மனம் எப்பொழுதும் இழுத்துக் கட்டப்பட்ட முரசின் தோல்பரப்பென விம்மி நிற்கிறது. ஒரு சிறு கல் விழுந்தாலும், விண்ணென்று பேசைரோசை எழுப்பவெனவே அமைந்த வடிவம். ஒரு சிறு அவமதிப்போ, உதாசீனமோ, நிராகரிப்போ அவனை நிலைகுலையைச் செய்து பேரோசையெனவே வெளிப்படும். ஸரயூவின் இழப்பு தனஞ்சயனில் நிகழ்த்துவது அதையே. அவன் மனம், எப்போதும் முழு விசையில் இழுத்துக் கட்டப்பட்ட அம்பின் நாணென விம்மியபடி இருக்கிறது. அந்த விசையும், விம்மலும்தான் சராசரியிலிருந்து அவனைக் கலைஞனாக்குபவை. எந்தக் கணத்திலும் நாணிலிருந்து அம்பு விடுபடலாம். நற்பேறும், குவிதலும் உள்ள சிலருக்கு அம்பு இலக்கைச் சென்றடையும் நல்வாய்ப்பு அமைகிறது. ஹரிஷங்கர் தீட்சித்தும், சிவசங்கர் தீட்சித்தும், குருசரண் தாஸும் அத்தகைய பேறு பெற்றவர்கள். ஹரிஷங்கர் மீதான அவரது அண்ணனின் நிராகரிப்பு அவரது அம்பு சென்று தைப்பதற்கான இலக்கையும் காட்டித் தருகிறது. அர்ஜுன் பிங்ளே, தனஞ்சய் முகர்ஜியின் அம்புகள் காற்றில் பறந்தலைந்து இலக்கின்றி வீழ்கின்றன. இலக்கென்று ஒன்று இருந்தாலும், இல்லாவிட்டாலும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பின் விசையும் வேகமும் ஒன்றுதானே? தோல்வியடைந்தாலும் தனஞ்சய் ஒரு பெரும் கலைஞனாக நம்முள் நிமிர்வுடன் அமர்வது இதனாலேயே. ஒரே நாணயத்தின் இரு முகங்கள்தான் தனஞ்சயனும், ஹரிஷங்கரும். வாசகரை கலைஞனைத் தாண்டி, கலையை மட்டுமே காணும் இடத்துக்கு நகர்த்திச் சென்றிருப்பது இந்த நாவல்களின் முக்கியமான வெற்றி.
பொதுவாக யுவனின் படைப்புகள் பிரச்சனைகளுக்கான முடிவுகளையோ, தீர்வுகளையோ வழங்குவதில்லை. அவை, வாழ்க்கை நம் முன் வைக்கும் பல நூறு சாத்தியங்களில் ஏதோ ஒன்றை, அல்லது தற்செயல் என்று எல்லோரும் நம்பும் ஒன்றைப் பின்தொடர்ந்து செல்லும் பயணத்தையும், தேடலையும் மட்டுமே முதன்மையான இலக்காகக் கொண்டவை. ஒற்றைப் புள்ளியில் குவியவேண்டிய தேவையோ, தீர்வைப் பரிந்துரைக்க வேண்டிய அவசியமோ இல்லாததால் யுவனின் படைப்புகளின் சுதந்திரமும் அதிகம். ஆகவே இந்த நாவல்கள் வழி நாம் அடையும் இசை மற்றும் இசைக் கலைஞர்கள் பற்றிய அவதானிப்புள் முக்கியமானவை ஆகின்றன. இந்த இரு நாவல்களும் இந்துஸ்தானி இசையின் பெரும் பரப்பைச் சொல்லும் அதே நேரம், இசையையோ, கலைஞர்களையோ ஒரு போதும் உன்னதப் படுத்துவதில்லை. கலைஞர்களின் அக இருண்மையையும் சேர்த்தே அவர்களின் வாழ்வைக் காட்டுகிறது. அவர்களின் அகத்தின் பெருந்தனிமையைச் சொல்கிறது.
கானல் நதியில், மழலைப் பருவத்திலிருந்தே தனஞ்ஜயனின் கூரிய நுண்ணுணர்வு அவன் இசை மேதமையின் அடிநாதமாக இருக்கிறது. அதே நுண்ணுணர்வு அவனில் பெரும் கனவுகளை விதைக்கிறது. அவனை அசுர சாதகம் செய்ய வைக்கிறது. ஆனால் அதே கூரிய நுண்மை அவனை சராசரிகளிலிருந்து வெகுதூரம் விலக்கி வைக்கிறது. இரு முனைகளும் தீட்டப்பட்ட வாள்தான் அது. அவன் அகத்தின் அடியாழத்தில் துயிலும் காம, குரோத, மோக அடுக்குகளையும் அந்த வாள் கீறி எடுக்கிறது. ஸரயூவின் மீதான காதல், தோல்வியில் முடிகையில் ஆழ்ந்துறங்கும் அக மிருகம் விழித்தெழுந்து அவனை அழிக்கத் தொடங்குகிறது. அடுத்ததாக, சகோதரனுக்கும் மேலாக அவனை நேசிக்கும் குருசரண் தனஞ்சயன் மீது காட்டும் பரிவு, தனஞ்சயனில் நஞ்சாகத் திரியத் தொடங்குகிறது. அதுவரை அவனைத் தளைத்திருந்த ஒரே கயிறான இசையும் கொஞ்சம் கொஞ்சமாக அவனை விட்டு விலகிச் செல்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் தனஞ்சயனின் நுண்ணுணர்வு நின்று போகையில் இசையும் அவனிலிருந்தும் நாவலிலிருந்தும் முழுமையாக நின்று போகிறது.
இதற்கு நேரெதிர் புள்ளியாக, நினைவுதிர் காலத்தில் ஹரிஷங்கர் தீட்சித் தமையனால் கைவிடப்படும் போது, அவர் மனைவியும் அவருள் இருந்த இசையும் அவரை மீட்டெடுக்கின்றன. இசை, ஹரிஷங்கரின் அக இருளை நீக்கி ஒளிகொள்ள வைக்கிறது. தந்தையின் இடத்திலிருந்து வாஞ்சையைப் பொழிந்த சிவஷங்கரின் அகங்காரம் தம்பியை முற்றாக விலக்கி வைக்கிறது, அல்லது ஹரிஷங்கரை அவ்வாறு எண்ண வைக்கிறது. அண்ணனுக்கு செய்யும் கைமாறாக அவர் வாசிக்கும் சாரங்கியைத் தேர்ந்தெடுக்காமல், வயலினைத் தேர்ந்ததாக ஹரிஷங்கர் சொன்னாலும், அண்ணன் கற்றுத் தந்த சாரங்கியை முழுதாகக் கைவிட்டு, தனக்கான புதிய வாத்தியத்தைக் கண்டடைந்து அவரை மறு பிறப்பு கொள்ளச் செய்வது அவரது அடியாழத்தில் உறங்கும் கலைஞனின் அகங்காரமே. இந்த அகங்காரமும், கொந்தளிப்புமே அவருடைய தாயாரின் நினைவுநாளின் போது அவரைச் சந்திக்க மறுக்கும் சிவஷங்கரின் அகங்காரத்தைத் தீண்டவென மீண்டும் ஒரு முறை சாரங்கியை இசைக்க வைக்கின்றன. சகோதரர்கள் இருவரிடமும் உள்ள மூச்சடைக்க வைக்கும் அக நெருக்கமே அவர்களை விலகவும் வைக்கிறது. இருவரும் அந்த அன்பையும், விலக்கத்தையும் தத்தமது இசையால் நிரப்பிக் கொள்கிறார்கள்.
வாசகனாக இந்த இரு நாவல்களின் உச்ச அழகும் உறைந்திருப்பது, அதிகம் சொல்லாமல் கோட்டுச் சித்திரமாகப் புனையப்பட்ட குருசரண், சிவசங்கர் தீட்சித் கதாபாத்திரங்களில்தான். குருசரணே கானல் நதியின் தாள ஓட்டம். தனஞ்சயன் சுருதி என்றால் அவன் வாழ்வின் லயம் குருசரண். அவனை விட்டு விலகிச் செல்கையில் தனஞ்சயனில் வாழ்வின் லயம் பிறழ, இறுதியாக சுருதியும் அணைந்து போகிறது. நினைவுதிர் காலத்தில் சிவஷங்கர் தீட்சித் மீது ஒரு மெல்லிய எதிர்மறைச் சித்திரம் ஹரிஷங்கரால் தற்செயலாகக் கட்டப்பட்டிருக்கும். பிடிவாதமும், முன் கோபமும், விலக்கமும் கொண்டவராக. ஆனால் இறுதியில் பிற்சேர்க்கையாக இணைக்கப் பட்டிருக்கும் சிவஷங்கரால் லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நிகழ்த்தப்பட்ட உரை, மொத்த நாவலையும் திருப்பிப் போட்டுவிடுகிறது. தெறிக்கும் நகைச்சுவையும், கூரிய அவதானிப்புகளும், முன்முடிவுகளற்ற திறந்த மனதும் கொண்ட அபாரமான உரை அது. நாவல் நமக்குத் திறந்து காட்டாத முற்றிலும் புதிய சிவசங்கர் தீட்சித்தை வாசகரையே புனையக் கோரும் நுட்பம். பாடகர் பாடுவது நம் மனதிற்கினிய ராகமாகவே இருந்தாலும், அது விரிந்து, மலர்ந்து, முழுமை கொள்ளத் தொடங்குவது இசை கேட்பவர் ஒவ்வொருவரின் மனதில் தானே?
கானல் நதி தோல்வியுற்ற ஒரு கலைஞனின் இசைப் பயணத்தையும், நினைவுதிர் காலம் வெற்றி பெற்ற கலைஞனின் வாழ்க்கையையும் சொன்னாலும் இரண்டையும் இணைக்கும் சரடு இசையே. இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக வாசித்தால் ஒன்று மற்றொன்றை முழுமையாக நிறைப்பதை உணர முடியும். வாசித்து முடிக்கையில் நாவலின் சொற்களின் வழியே சொற்களற்ற இசையை கேட்க முடியும். அதையும் கடந்து இசை நம்முள் நிரப்பும் மௌனத்தையும் உணர முடியும். ஒலியும் மௌனமும் இணையும் அற்புத கணத்தில் நமக்கான சங்கீதம் நம்முள் நிறையவும் தொடங்கும்.
பழனி ஜோதி
நியூ ஜெர்ஸி