(அ.வெண்ணிலாவின் நீரதிகாரம் முன்னுரை)
1988ல் நான் ஒரு கதை எழுதினேன், தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணைக்கட்டும், அன்றைய திருவிதாங்கூரின் முதன்மையான அணைக்கட்டுமான பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளர் மிஞ்சின் (Minchin) பற்றி. ஆனால் அது யதார்த்தக் கதை அல்ல, மிஞ்சின் செம்பன் துரை என்றபேரில் மக்களின் தொன்மக்கதைகளில் ஒரு தேவனாக வாழ்பவர். அதை நவீனக் கதைசொல்லல் முறை வழியாக சித்தரித்த படுகை என் கதைகளில் முக்கியமானது, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
நவீனத் தமிழகத்தின் உருவாக்கத்தில் மிஞ்சினைப் போல பெரும் பங்களிப்பாற்றிய அன்னியநாட்டவர் ஏராளமனவர்களுண்டு. உதாரணமாக கர்னல் மன்றோ. (Thomas Munro)இன்றைய தமிழகத்தின் கருவூலமாகத் திகழும் கொங்குநாடு கர்னல் மன்றோவின் பணிகளால் மெல்ல உருவாகி வந்தது. கொங்குநாட்டில் மில் தொழிலை உருவாக்கிய ஸ்டேன்ஸ் (Robert Stanes.), தமிழகத்தின் மருத்துமமறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்த ஐடா ஸ்கடர் (Ida scudder) நெய்யூர் மருத்துவமனையை உருவாக்கிய சாமர்வெல் ( Dr. Somervell )தமிழகக் கல்விக்குப் பங்களிப்பாற்றியவரும் மதுரை அமெரிக்கன் கல்லூரி நிறுவனருமான டேனியல் பூர் (Daniel Poor) , தமிழக நவீன இலக்கியத்திற்கே வழிகாட்டியாக அமைந்தவரும் சென்னை கிறிஸ்தவக்கல்லூரி நிறுவனருமான வில்லியம் மில்லர் (William Miller)என பலர் உள்ளனர்.
இந்த அன்னியநாட்டவர் பற்றி பொதுவாக நல்ல வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டதில்லை. அவர்கள் புனைகதையில் இடம்பெறுவது அரிதினும் அரிது. இது நம் வரலாற்றுணர்வின்மையை காட்டுவதோடு ஒருவகையில் நம் நன்றியுணர்வின்மைக்கும் சான்றாகிறது. உண்மையில் நிகழ்வது நேர் எதிர்த்திசைப் பயணம். ஈரோடு நகரை உருவாக்கியவர் என்று சொல்லத்தக்க பிரப் (A.W. Brough) பேரில் அமைந்த ஒரே ஒரு சாலை அங்கிருந்தது, அதன் பெயர் மாற்றப்பட்டது. குமரிமாவட்டத்தில் மார்த்தாண்டம் நகரின் சிற்பி என்று சொல்லத்தக்க ஜேம்ஸ் எம்லின் (J. Emlyn ) பெயர் அவர் உருவாக்கிய கல்விக்கூடத்துக்குக்கூட போடப்படவில்லை. (என் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான சாமர்வெல், டதி அம்மையார், கால்டுவெல் போன்றவர்களைப் பற்றி நான் சில கதைகள் எழுதியுள்ளேன். பலரை விரிவாக ஆவணப்படுத்தியுமுள்ளேன்)
இப்பின்புலத்தை வைத்துப் பார்த்தால் முல்லைப்பெரியார் அணையை உருவாக்கிய பொறியாளர் பென்னி குயிக் மீது அந்நீரால் பயன்பெற்ற மக்கள் தலைமுறை தலைமுறையாகக் காட்டிவரும் பெரும் பக்தி மிக விதிவிலக்கானது, போற்றத்தக்கது. இன்று, முதன்மையான ஒரு வரலாற்றுநூல் வழியாக அவருடைய பங்களிப்பு தமிழ்ச்சிந்தனையில் அழுத்தமாக நிறுவப்பட்டுள்ளது. ஓர் வரலாற்றுநூல் என்பதற்கும் மேலாக பெருங்காவியங்களைப்போல ஒரு பண்பாட்டு வெளிப்பாடாகவே கருத்தில்கொள்ளவேண்டிய பெருநூல் அ.வெண்ணிலாவின் நீரதிகாரம். காவியச்சாயல் கொண்ட நீரதிகாரம் என்னும் தலைப்பு அவ்வகையில் மிகப்பொருத்தமானதேயாகும்.
விரிவான தரவுகள் கொண்ட வரலாற்றுச் சித்திரத்தை புனைகதைக்குரிய மொழிநடையுடனும் சித்தரிப்புடனும் அளிப்பது மேலைநாட்டில் ஓர் எழுத்துமுறையாக நிலைகொண்டுவிட்ட ஒன்று. மக்களிடையே வரலாற்றை கொண்டுசெல்ல மிக சிறந்த வழி அது. தமிழில் கிடைக்கும் மிகச்சிறந்த உதாரணம் லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாப்பியர் எழுதிய ‘நள்ளிரவில் சுதந்திரம் (Freedom at Midnight -Larry Collins and Dominique Lapierre) பலவகையிலும் அந்நூலை ஒத்திருக்கிறது அ.வெண்ணிலாவின் நீரதிகாரத்தின் நடையும் அமைப்பும். சென்னை ஆட்சியாளர் கர்னல் ஹானிங்டனின் ஒருநாளில் நாவல்போலவே ஆரம்பிக்கிறது இந்நூல். இந்தியாவை சூறையாடிய பெரும்பஞ்சங்கள் பற்றிய செய்திகளை வாசித்து உளச்சோர்வடைந்திருக்கும் அவர் முன் பழைய திருவிதாங்கூர்- கொச்சி அரசுக்கும் பிரிட்டிஷ் மாகாணத்திற்கும் பொதுவாக ஓர் அணைக்கட்டை கட்டும் திட்டம் முன்வைக்கப்படுகிறது. திருவிதாங்கூரின் நிலம் 999 ஆண்டுகளுக்கு அதன்பொருட்டு குத்தகைக்கு எடுக்கப்படுகிறது.
நுண்ணிய விவரணைகளுடன் அந்த பெருங்கனவின் தொடக்கம் கூறப்படுகிறது.அணைகட்டப்படும் காடு, அங்குள்ள நீரின் இயல்புகள் அனைத்தையும் அறிந்தவராக காப்டன் பென்னி குக் அறிமுகமாகிறார். தொடக்கமே எதிர்மறைச் சூசனைகளுடன் அமைகிறது. திட்டம் தொடங்கும்போதே திருவிதாங்கூர் மகாராஜா உயிர்துறக்கிறார். புதிய அரசருடன் ஒப்பந்தம் போடப்படவேண்டியிருக்கிறது. மூன்று தளங்களில் சிக்கல்கள். ஒன்று , நிதி. அப்போது போர்களாலும், போர்களுக்காக விதிக்கப்பட்ட வரிகளால் உருவான பொருளியல்தேக்கத்தாலும்,பஞ்சங்களாலும் பிரிட்டிஷ் அரசின் நிதிநிலை மோசமாக உள்ளது. அதுவே முதன்மைச்சிக்கல். இரண்டு அரசுகளிடையே புரிந்துணர்வு அடிப்படையில் கட்டப்படவேண்டிய அணை. கூடவே பூஞ்ஞாறு போன்ற சிற்றரசுகளின் உரிமைகளும் இதில் அடங்கியுள்ளன. அதன் முடிவே இல்லாத நிர்வாகப்பிரச்சினைகள். அது இரண்டாவது சிக்கல். மூன்றாவது, அணை கட்டப்படவேண்டிய இடம் உருவாக்கும் இடர். அணுகமுடியாத மலைக்காட்டில், மலைச்சரிவில் அணை கட்டப்பட வேண்டியிருக்கிறது
இச்சிக்கல்களை அ.வெண்ணிலாவின் நூல் ஒரு பெரிய மானுடநாடகமாக புனைந்து காட்டுகிறது. ஆகவே நாம் அந்த செய்திகளை தெரிந்துகொள்வதில்லை, மாறாக அந்தச்சூழலுக்குள் சென்று வாழ்கிறோம். அச்சிக்கல்களை நாமும் எதிர்கொண்டு, நாமும் உழன்று, நாமும் சலிப்பும் உறுதியும் மாறி மாறி அடைந்து அந்த வரலாற்றின் ஒரு பகுதியென திகழ்கிறோம். புனைவின் ஆற்றல் இது.இதில் வரும் வரலாற்று மாந்தர்களான திருவிதாங்கூர் அரசர், அன்னை மகாராணி ஆகியோர் புனைவின் சாத்தியங்களைக்கொண்டு நேருக்குநேர் நாம் சந்திக்கும் ஆளுமைகளாக திரண்டு வந்து நின்றிருக்கிறார்கள்.
வெண்ணிலாவின் புனைவு தமிழகத்தில் பிரிட்டிஷ் அரசின் சித்திரங்களைப்போலவே அன்றைய கேரளத்தின் அரசகுடிச் சித்திரங்களையும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் புனைந்து காட்டுகிறது. பொதுவாக தமிழ் எழுத்தாளர்கள் கேரளத்துச் சூழலை எழுதும்போது ஆற்றும் பண்பாட்டுப்பிழைகள் எவையும் கண்களுக்குப் படவில்லை. அன்றைய திருவிதாங்கூர் அரசில் அரசியருக்கு இருந்த அதிகாரம் இந்நூலில் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. கேரளப்பண்பாட்டின் இரண்டு அடிதளக் கற்களாக உள்ள கண்ணகி (பகவதி) வழிபாடு, சபரிமலை ஐயப்பன் வழிபாடு ஆகிய இரண்டையும் தொட்டுக்கொண்டு செல்லும் கதையோட்டம் அவையிரண்டும் அந்த அணைக்கட்டால் என்னவாகப் போகின்றன என்பதையும் காட்டுகிறது.
இந்நூல் அணைக்கட்டின் பெருமை பேசுவது, பென்னி குக்கின் தியாகத்தின் சிறப்பை முன்வைப்பது என்பதில் ஐயமில்லை. ஆனால் அணைக்கட்டு என்பது அடிப்படையில் இயற்கையில் ஊடுருவுவது, காடழிவுக்கு தொடக்கம் அமைப்பது என்பதையும் கூறத்தவறவில்லை. சபரிமலை மேல்சாந்தி பூஞ்ஞார் நாடுவாழியிடம் ஐயனின் காடு அழியப்போகிறது என்கிறார். கண்ணகி நின்ற மலையுச்சிக்காட்டின் அழிவை தேவந்தி முன்னுணர்கிறாள். கண்ணகியின் பெருந்தோழி தேவந்தியின் கொடிவழியினள். இந்த முழுமைச்சித்திரம் இந்நூலுக்கு பண்டைக்கால யதார்த்தவாதச் செவ்வியல்நாவல்களுக்குரிய ஒட்டுமொத்தப்பார்வையை அளித்து இதன் காவியத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.
இந்நூலின் சிறப்பாக நான் காண்பது ஒன்று உண்டு பென்னி குக்குடன் அன்றைய பிரிட்டிஷ் அதிகாரிகளான லோகன், டெய்லர் ஆகியோரின் அர்ப்பணிப்பை விவரிக்கிறார்.வெறுமே விதந்தோதுதலாக அன்றி பிரிட்டிஷாரின் பணியாற்றல் முறையை நுணுக்கமான செய்திகள் வழியாக விரிவாகச் சொல்லிச் செல்கிறார். அவர்கள் ஒவ்வொன்றுக்கும் தரவுகள் சேகரிக்கிறார்கள், அறிக்கைகளாக ஆக்குகிறார்கள். விளைவாக எண்ணங்கள் எல்லாமே புறவயமாக ஆகிவிடுகின்றன. அந்த புறவயமான களத்தில் அனைவருக்கும் பொதுவான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஒவ்வொருவரும் அவரவருக்குரிய பணியை முழுமூச்சாகச் செய்கிறார்கள். இன்னொருவரை மட்டம்தட்டுவதில்லை, அதிகாரம் செய்வதில்லை. நபர்கள் அல்ல, பணியே முக்கியம். கிட்டத்தட்ட ‘காமம் கருதா கடமை’தான் அவர்களின் வழி. அன்று நிலவுடைமைச் சமூகமாக, வலுவான சாதிய அடுக்கதிகாரம் கொண்டதாக இருந்த இந்தியாவில் காணக்கிடைக்காத ஒரு பணிச்சூழல் இது. ஆகவேதான் அன்றைய பிரிட்டிஷார்கீழே பணியாற்றிய இந்தியர்கள் மிக எளிதாக அவர்கள்மேல் மிகுந்த வழிபாட்டுணர்வு கொண்டவர்களாக ஆனார்கள்
பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டல் இந்நூலில் மறைக்கப்படவில்லை. அதன் விளைவான பஞ்சமும், அது தென்தமிழகக் கிராமப்புறங்களில் உருவாக்கிய அழிவும் சொல்லப்படுகின்றன. மேற்கு மதுரைப்பகுதி கிராமங்களின் போர்க்குடி மக்களின் வாழ்க்கைச்சித்திரங்கள் இதில் உள்ளன. ஆனால் பஞ்சத்தால் உருவான குற்றவுணர்ச்சி முல்லைப்பெரியார் போன்ற நன்னோக்க திட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்தது என இந்நூல் கூறுகிறது. நூலின் தொடக்கமே அதுதான். உண்மையில் பிரிட்டிஷாரை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். சுரண்டல்காரர்கள், அந்த சுரண்டலமைப்பின் பகுதியாக இருந்தபோதேகூட நல்லெண்ணமும் மனிதாபிமானமும் கொண்டவர்கள். இந்நூல் அச்சித்திரத்தை வலுவாக நிறுவுகிறது.
அ.வெண்ணிலா பென்னி குக்கின் ஆளுமையை ஒரு காவியத்தலைவனுக்குரிய வகையில் விரித்துரைக்கிறார். அத்தனை சோதனைகளையும் ஒரு தவம் போல எதிர்கொள்கிறார். திரும்பத்திரும்பச் சோர்வூட்டும் தோல்விகள். புதிய நிலம். பெருகிவரும் வெள்ளம். பொறியியலின் புதிய கொள்கைகளை உருவாக்காமல் வெல்லமுடியாத அறைகூவல். ஒவ்வொரு தடைகளாகத் தாண்டி . எடுத்த கடமையை பென்னி குக் முடிக்கிறார். ராமன் அல்லது யுலிஸஸ் போல ஒரு காவிர மாவீரனாகவே அவரை காணமுடிகிறது.
இத்தகைய நூலுக்கு தேவையான மிகப்பெரிய களப்பணியை வெண்ணிலா செய்திருக்கிறார். நுணுக்கமான செய்திகள் அத்தியாயம் தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. காட்டில் வாழ்வதன் நுட்பங்களைச் சொல்லும் பகுதிகள் மேற்குமலைக் காடுகளில் வாழ்ந்த அனுபவம் கொண்ட எனக்கும் புதியவையாக இருந்தன. கரும்பு ஆய்வில் சாதனை புரிந்த இந்திய அறிவியலாளர் ஜானகியம்மாளின் மூதாதையாக குருவாயி என்னும் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பதுபோன்ற புனைவுச்சுதந்திரமும் இந்நூலில் உள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்நூலை வாசித்து முடிக்கையில் யானைவிரும்பியாக எனக்கு ஓரு தனிப்பட்ட சித்திரம் எஞ்சியிருந்தது. நூல் முழுக்க யானைகள் வந்துகொண்டிருக்கின்றன. பூஞ்ஞாறு அரசரை எச்சரிக்க வந்த ஒற்றையானை முதல் வாரிக்குழிகளில் பிடிக்கப்படும் யானைகள், மிரண்ட வளர்ப்பு யானைகள் வரை… அந்த யானைச்சித்திரங்கள் வழியாக இந்நூலை நான் பிறிதொரு முறையில் கோத்துக் கொண்டேன். மேற்குமலையையே ஒரு மாபெரும் யானை என்று சொல்லும் வழக்கமுண்டு. சஹ்யன்றே மகன் என வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் யானையைப்பற்றி ஒரு புகழ்பெற்ற நீள்கவிதை எழுதியுள்ளார். அடிப்படையில் இந்நூல் சஹ்யன் என்னும் மாமதக் களிற்றை அங்குசமும் சங்கிலியும் கொண்டு தளைத்து, அடிமைப்படுத்தி, பழக்கப்படுத்தி, நமக்கெனப் பணியாற்றச்செய்த மானுட முயற்சியின் கதைதானே?
ஜெ