ஓராண்டுப் பயணம் – சரண்யா

அன்புள்ள ஆசிரியருக்கு,

சென்ற ஆண்டு ஜெ60 விழாவிற்கும் விஷ்ணுபுரம் விழாவிற்கும் செல்ல வேண்டும் என்று அம்மாவிடம் அனுமதி கேட்டேன். “எவ்வளவு திமிர் உனக்கு, முன் பின் தெரியாத ஊருக்கு போகணுங்கிற, அவருக்கு தெரிஞ்சா அவ்வளவு தா, இதோட இந்த பேச்ச விடு” என்ற பதில் தான் வந்தது. நான் எதிர்பார்த்திருந்ததுதான். ஆனால் சற்று உறுதியான குரலில் வந்தது. பெரும்பாலும் அம்மாவின் உறுதியான பதில்களுக்கு நான் மறுபேச்சு எடுப்பதில்லை. சென்னையை தாண்டி எங்களுக்கு உறவுகளும் நட்புகளும் இல்லை. அதுவரை நான் தனியாக வெகு தூரம் பயணித்ததும் இல்லை. அவர்களின் பதற்றம் புரிந்து கொள்ளக்கூடியதே.

பெண்கள் சற்று தைரியமாக  சுதந்திரமாக வெளி உலகை எதிர்கொள்ள வேண்டும் என்று ஓயாது அம்மா என்னிடம் சொல்வார்கள். “என்னை போல் வீடு உறவுகள் மட்டுமே உலகம் என்று வாழ்ந்துவிடாதே” என்ற போதனை அன்றாடம் வரும். என் அசட்டுத்தனமான துணிச்சல்களின் விதை அங்கிருந்து வந்தது தான். சென்னையைச் சுற்றி பயணிப்பதில் எனக்கு அவர்கள் மறுப்பு சொன்னதில்லை. வெளியூர் என்பதே சிக்கல். அப்பாவிடம் கேட்டாலும் இதே தான் என்று ஊகித்து நான் கேட்கவும் இல்லை. சென்ற ஆண்டு விழாவின் நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளை நோக்கி ஏக்கம் கொண்டிருந்தேன்.

ஆனால் தொடர்ந்து அம்மாவின் மனதை மாற்றும் முயற்சியில் இருந்தேன். பணி காரணமாக நான் பெங்களூரில் வசிக்க நேர்ந்தது  (உண்மையில் ஒரு மாற்றுச் சூழலுக்காக நான் எடுத்த முடிவு). வந்த ஒரு வாரத்திற்குள் உங்களை பெங்களூரில் சந்தித்தது என் அதிர்ஷ்டம். உங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் சந்திப்பு குறித்து விழிகள் விரிய வீட்டில் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தேன். அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. “பெரிய மாமா போல் இருக்கிறார்” என்றார்கள் . (அம்மாவின் பெரிய அண்ணன்). அவரோடு உங்களுக்கு உருவ ஒற்றுமை இல்லை . ஆனால் நான் குழந்தை என்று ஆவது சிலரிடம் மட்டும் தான்.

அம்மாவின் மனம் மாற்றம் கொண்டு வருவதை கவனித்தேன். இருந்தபோதிலும்,  “சரி, அவர போயி  பாத்துட்டு வந்துட்டள்ள, இனிமே இங்க போறேன் அங்க  போறேன்னு சொல்ல கூடாது” என்ற கண்டிப்பு வந்தது. ஆனால்  முதலில் இருந்த உறுதி இல்லை. அந்த அளவில் மகிழ்ச்சி கொண்டேன்.

உங்கள் அணைப்பை ஒரு முறை உணர்ந்தவர் அதில் இருந்து மீள முடியாது. அந்த நொடி அவருக்கு மட்டுமே என்று நீங்கள் உங்களை அளிக்கிறீர்கள். அடுத்து உங்களை சந்திக்கும் நாளை எதிர்நோக்கி இருந்தேன்.

கடந்த ஜனவரி மாதம், “மேடை உரை பயிற்சி” குறித்த அறிவிப்பு வந்ததும் எதையும் யோசிக்காமல் பதிவு செய்து விட்டேன். இடம் குறித்த தகவல் வந்ததும் எனக்கு தலையே சுற்றியது. எப்படி தனியாக செல்வது? வீட்டில் எப்படி அனுமதி வாங்குவது? உண்மையைச் சொல்வதா மறைப்பதா? நிச்சயம் மறுப்புதான் என்ற மன நிலையில் அப்பா வீட்டில் இல்லாத நேரம்  அம்மாவிடம் பேச்சு கொடுத்தேன். மலை தங்குமிடம் என்று எல்லாம் சொல்லவில்லை. ஈரோடு அருகில் ஒரு இடம். பேருந்தில் செல்ல வேண்டும் என்று தான் சொன்னேன். மறுப்பு தான் வந்தது. அடுத்த வாரம் நண்பர்கள் சிக்மங்களூர் செல்ல திட்டமிட்டார்கள் (பொய் இல்லை உண்மை) . அது குறித்து அனுமதி கேட்டபோது, உடனேயே, “சரி போய்ட்டு வா” என்றார்கள். எனக்கு கோவம் வந்துவிட்டது, “அது என்ன இதற்கு மட்டும் உடனேயே செல் என்கிறாய்” என்றேன்.

“உன் நண்பர்களை எனக்கு தெரியும். முன் பின் தெரியாத இடத்திற்கு செல்ல கூடாது”

“அப்போ பெங்களூரு மட்டும் தனியே தானே சென்றேன்”

“அது பணி, உன் மேலாளர் தொடர்பில் இருக்கிறார்”

“அதெல்லாம் எனக்கு தெரியாது, நான் ஈரோடு போகத்தான் வேண்டும். சீக்மங்களூர் எல்லாம் எனக்கு வேண்டாம்”

“உன் திமிர் அளவில்லாமல் போகிறது. எனக்கு தெரியாது அவரிடம் கேட்டுக்கொள்”

அப்பா கண்டிப்பாக மறுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் அம்மா சொல்லிவிட்டார். நானும் மறுப்பை தான் எதிர்பார்த்து பிடிவாதம் பிடிக்கும் மனநிலையில் இருந்தேன்.

மறுநாள் காலை அப்பா அரை விழிப்பில் இருந்த போது அவருடன் சென்று படுத்துக் கொண்டேன். அம்மா தேநீரோடு வந்து எங்கள் அருகில் அமர்ந்தார்கள். அது எங்கள் அன்றாடம்.  நான் பெங்களூரு சென்றதில் அப்பாவுக்கு உடன்பாடில்லை. அவரால் என்னை தடுக்கவும் முடியவில்லை. நான் ஒரு மதத்திற்கு பின் திருவள்ளூர் சென்றிருந்த சமயம். புதிய இடம், வேலை குறித்து பேசி விட்டு உங்களுடனான சந்திப்பு குறித்து கேட்டு கொண்டிருந்தார். மெல்ல பேச்சை எடுத்தேன். நிகழ்வு குறித்து சொல்லி விட்டு, திட்டு வாங்கும் மனநிலையில், தீர்க்கமாக சொன்னேன்,

“நான் ஈரோடு போக போறேன், நீங்க அம்மாவை திட்ட வேண்டியதில்லை”

நான் சற்றும் எதிர்பார்த்திடாத பதில்,

“நீ இந்த உலகத்துல எங்க வேணா போ, பத்திரமா இருந்துக்கோ ” என்று சொல்லி என்னை அணைத்துக் கொண்டார். மெல்லிய விசும்பலும் எங்கள் மூச்சோலிகளும் கொண்ட அமைதி. அது எங்கள் பிரிவினால் வந்த நெகிழ்வு. பல்வேறு தற்செயல்களால் ஆனா இந்த கணங்களில், அது மேலும் ஒரு இறை அருள் கூடிய கணம். அதன்பின் அவரை நான் தான் அதட்டிக் கொண்டிருக்கிறேன்.

சற்று நிமிர்ந்து அம்மாவை பார்த்தேன். பயமும் நிம்மதியும் கலந்த உணர்வு போல இருந்தது. “இவருக்கு என்ன கவலை, இனி இவளை அடக்க முடியாதே” என்ற எண்ணவோட்டம் அது. புன்னகைத்துக் கொண்டேன்.

அதன் பின் வெள்ளிமலை நிகழ்வுகள் எனக்கு ஒரு அரிய திறப்பு. இரண்டு முறை வெள்ளிமலை சென்று வந்ததும் அம்மாவுக்கு தைரியமும் நம்பிக்கையும் வந்தது. அடுத்தடுத்து சென்றேன். எங்களில் பலருக்கு  அதுவும் ஒரு வீடு போல் ஆகிவிட்டது. பல ஆளுமைகளோடு பழகும் வாய்ப்பு. அமைதியான சூழல். திருவண்ணாமலை உரையில் குழந்தை தன்னை விட பெரிய பாத்திரத்தை தூக்கி வந்து உணவு அளிக்கும் படி கோரும் என்று சொன்னீர்கள். இந்த வகுப்புகள் முன் நான் அப்படித்தான் இருப்பதாக தோன்றும். எவ்வளவு என்னுள் செல்கிறது என்பதை விட, முதலில் நான் அங்கே செல்ல வேண்டும் என்பதே என் மனநிலை. பொதுச்சூழலில் அறிவு மற்றும் கலை  செயல்பாடுகளில்  பெரும் வறட்சி உள்ளது. அந்த வறட்சியால் வந்த பசி. சற்றேனும் ஒற்றை சார்பு கொள்ளாமல், பாவனைகள் இல்லாமல் பேசுபவர்களை கண்டடைதல் சிரமம். அதிகபட்சம் அரைகுறை ஒற்றை சார்பு அரசியல், உணவகங்கள், வணிக சுற்றுலா தலங்கள் மற்றும் விளையாட்டு என எல்லா உரையாடல்களும் இதில் அடங்கும். ஆண்களுக்கே இங்கே கலை இலக்கியம் தத்துவம் என்று ஒரு வட்டத்தை அமைத்து கொள்வது சிரமம். பெண்களுக்கு பல மடங்கு கடினம். எங்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை அளிக்க நீங்கள் மிகவும் கவனமாக பல முயற்சிகள் எடுக்கிறீர்கள். அதற்கு உங்களுக்கும் நண்பர்களுக்கும் மிகுந்த நன்றிகள்.

இந்த ஒரு ஆண்டில் நான் இதுவரை செல்லாத ஊர்களுக்கெல்லாம் சென்றிருக்கிறேன். தாராசுரம், தஞ்சை, பேளூர் ஹலெபெடு, ஹம்பி, குலசை என்றொரு பட்டியல் உள்ளது. இப்போது அனுமதி எல்லாம் கேட்பதில்லை. “இந்த வாரம் எங்கே” என்ற மனநிலைக்கு, என் பெற்றோர்கள் வந்து விட்டு இருக்கின்றனர். என் அலைபேசியின் அழைப்பு பட்டியலில், இன்னார் மதுரை, இன்னார் கோவை, நாகர்கோயில் என்று தமிழக ஊர்களின் பேரெல்லாம் இடம் பெற்றுள்ளன. இந்த சந்திப்புகளினால் நண்பர்கள் வட்டம் விரிந்துள்ளது.

ஆலயக்கலை தொடர்பாக செல்லும் பயணங்கள், தனியே செல்லும் பயணங்கள் எல்லாம் அம்மாவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே ஒரு நிபந்தனை, “எந்த ஊர் சென்றாலும் அந்த ஊர் கோவிலில் விளக்கு போட்டு விட்டு வர வேண்டும்”. பல நேரம் தோன்றும் நான் அவர்களின் கனவின் துளி மட்டும் தான் என்று. நான் செல்லும் இடங்கள், என் அனுபவங்கள் எல்லாம் என் புலன்கள் வழியாக அவர்கள் அடைவது.

இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விழாவிற்கு நண்பர்கள் திருவிழா கொண்டாட்ட மனநிலையில் கிளம்புகிறார்கள். எல்லா வாட்ஸாப் குழுக்களிலும் அது குறித்த பேச்சு தான். திருவண்ணாமலையில் சந்தித்தபோது நீங்கள் என்னிடம் கேட்டீர்கள், “விஷ்ணுபுரம் விழாக்கு வரல்ல?”, “ம்ம்…நான் வராமலா?” என்ற தோரணையில் அழுத்தமாக புன்னகைத்தேன்.

அன்புடன்,

சரண்யா 

முந்தைய கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விழா தொடக்கம்…
அடுத்த கட்டுரைவெள்ளம், விழா, பிரார்த்தனை- கொள்ளு நதீம் கடிதம்