நேற்று, 11 டிசம்பர் அதிகாலை 6 மணிக்கு தேவிபாரதி அழைத்து அவருக்கு சாகித்ய அக்காதமி அறிவிக்கப்பட இருப்பதாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தார்.
அவருடன் சில ஆண்டுகளாக தொடர்பில் இருக்கிறேன். அவர் உடல்நலமின்றி இருக்கும் இத்தருணத்தில் நம் நண்பர்கள் உடனிருக்கிறார்கள். ஆகவே நிறைவுடன் வாழ்த்து சொன்னேன். முறையான அறிவிப்பு வரவில்லை, சாகித்ய அக்காதமியில் இருந்து ஒருவர் சொன்னார் என்று தேவி பாரதி சொன்னார். அறிவிப்புக்காகக் காத்திருப்போம் என்று நான் சொன்னேன். அவர் உடல்நலம் இந்த விருதால் மேம்படட்டும் என்று வாழ்த்தினேன்.
ஆனால் காலை பத்துமணி முதல் இணையத்தில் வாழ்த்துக்களைக் கண்டேன். பலர் என்னிடம் கூப்பிட்டுச் சொல்லிக்கொண்டே இருந்தனர். நான் சென்னையில் இருந்து நாகர்கோயில் கிளம்பும்போது தொலைக்காட்சியில் தமிழக முதல்வரின் வாழ்த்தை கண்டேன். அறிவித்துவிட்டார்கள் என நினைத்து நானும் வாழ்த்து அறிவித்தேன்.
ஆனால் பின்னர் சாகித்ய அக்காதமியைச் சேர்ந்தவர்களிடமிருந்து தெரிந்துகொண்டேன். முறையான அறிவிப்பு வரவில்லை என. தேவிபாரதி சொன்னதை சரியாகக் கவனிக்காமல் எவரோ வாழ்த்து சொல்ல அது அதிகாரபூர்வ அறிவிப்பா என அறியாமல் முதல்வர் உட்பட வாழ்த்து சொல்லிவிட்டனர். தேவிபாரதியிடம் பிழையேதுமில்லை. அவர் சொன்னவற்றை சரியாகக் கவனிக்காத நம் மீதே பிழை.
முன்னரும் இது நிகழ்ந்துள்ளது. நாஞ்சில்நாடன் அதைப்பற்றி எழுதியுள்ளார். இறுதிப்பட்டியலில் இருப்பவர்களிடம் ஃபோனில் கூப்பிட்டு விருது உங்களுக்கே என்று சொல்லிவிடுவார்கள். அதற்கு இரு காரணங்கள் உண்டு. விருது வருமென்றால் அதற்கு உள்ளிருந்து முயன்றவர் என்னும் இடத்தை அதை கூப்பிட்டுச் சொல்பவர் கோரமுடியும்.
சிலசமயம் விருதுக்கு இன்னொருவரை தெரிவுசெய்துவிட்டு போட்டியிலுள்ள பிறரை கூப்பிட்டு இப்படி பொய்யாக சொல்லி அவரை திசைதிருப்பிவிடுவதுமுண்டு. நான் உங்களுக்காக முயன்றேன், என்னால் முடியவில்லை என அவரிடம் சொல்லும்பொருட்டு இதைச் செய்கிறார்கள். பல மூத்த படைப்பாளிகள் பல ஆண்டுகள் ஏமாற்றமும் அவமதிப்பும் அடைந்துள்ளனர். ஆனால் அது உள்வட்டத்துக்குள் இருந்தது.
இத்தனை வாழ்த்துக்கள், குறிப்பாக அதிகாரபூர்வ வாழ்த்துக்களுக்குப்பின், விருது மாறிவிட வாய்ப்பில்லை. முதல்வரின் வாழ்த்துக்குப்பின் இன்னொரு முடிவை எடுக்கும்படி நடுவர்க்குழுவில் எவருமில்லை. ஆகவே தேவிபாரதிக்கே விருது அமையும் என நினைக்கிறேன். இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வரக்கூடும்
ஆயினும் முறையான அறிவிப்பு வரும்போது வாழ்த்தை வெளியிடுவோம் என நினைத்தேன். வாழ்த்து என்பது ஒரு சம்பிரதாயம்தானே?