வாசிப்புப் பயிற்சியும் வகுப்புகளும்

அன்புள்ள ஆசிரியருக்கு

இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். ஆறு மாதம் காலமாக உங்கள் கட்டுரைகளை வாசித்து வருகிறேன்.என்னுடைய இரண்டு முக்கிய சந்தேகங்களுக்காகவே இக்கடிதம் . முதலாவது, நீங்கள் நிறைய இடங்களில் உரைகளில் இலக்கியத்தின் தேவை மற்றும் பயன்களை பற்றி பேசி உள்ளீர்கள், ஆகையால் அதன் மீது ஆர்வம் அதிகமானது நண்பர்கள் அறம் புத்தகம் பரிந்துரைத்தனர் , படித்தேன் சில கதைகள் புரிந்தது, சில புரியவில்லை.உங்கள் வாசகர் கடிதங்கள் படித்தேன் அவற்றில் நீங்கள் சில கதைகளை எவ்வாறு படிக்க வேண்டும் என்று எழுதி இருந்தீர்கள், உதாரணமாக சோற்றுக்கு க்கு கதையில் நீங்கள்,  சாதாரணமாக வாசிப்பவனுக்கு எவனோ சும்மா சோறு போடுவது மாரி தான் கதை தெரியும் இலக்கிய வாசகனுக்கு அதன் நுட்பம் தெரியும் , ஏன் அவன் அத்தை மகளை திருமணம் செய்தான் என்று ( முன்னர் நான் அந்த கதையை மூன்று முறை படித்தேன் எனக்கு சோறு போடுவது மட்டும் தான் தெரிந்தது) உங்கள் கட்டுரை வாசித்து பின்புதான் அந்த கதையை உள்வாங்க முடிந்தது. இந்த மாதிரி அனைத்து கதைளையும் வாசகர் கடிதம் துணை கொண்டே இரண்டு மூன்று முறை வாசிக்கிறேன் , அப்பவும் முழுமையாக உள்வாங்கினேனா என்ற சந்தேகம் வருகிறது . இன்னும் என்னால் மயில் கழுத்தை முழுமையாக புரிந்துக் கொள்ள முடியவில்லை. உங்கள் கட்டுரை மற்றும் உரைகளில் நீங்கள் கூறியதை இணைத்து பார்க்கும் பொழுது இன்னும் அதிக சந்தேகம் வருகிறது உதாரணமாக மூன்று விஷயங்கள் கூறலாம்.

  1. நீங்கள் ஒரு உரையில் நவீன இலக்கியத்தின் அடிப்படைகளை கூறினீர்கள் ( * ஜனநாயக தன்மை * பல துறைகளுடன் தொடர்பு* உலக இலக்கியத்தில் அதன் இடம்) இந்த மூன்றையும் எவ்வாறு பொருத்தி பார்ப்பது என்று தெரியவில்லை. சோற்றுக்கணக்கு கதைக்கு பொருத்தினால் ஐனநாயக தன்மை மட்டும் இருப்பதாக தோன்றுகிறது மீதம் உள்ள இரண்டையும் பொருத்தி பார்க்க தெரியவில்லை.
  2. புதுமைப்பித்தன் பற்றிய உங்கள் கட்டுரையில் சற்று சிக்கலான கதைகள் நாம் சிந்தித்து உள்வாங்கு வதால் வெகு நாள் நினைவில் நிற்கும் என்று சொன்னீர்கள். அதனை பொருத்தி பார்க்கும் பொழுது மயில் கழுத்து மட்டும் தான் நல்ல கதையா என்று தோன்றுகின்றது ( அது மட்டும் தான் சுத்தமாக புரியவில்லை)
  3. இன்னொரு இடத்தில் அனைத்து துறையும் அனைவருக்குமானது இல்லை என்று சொன்னீர்கள். அதை படிக்கும் போது இலக்கியம் நமக்கான துறை இல்லையா என்று தோன்றுகின்றது. உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை , ஆனால் அதற்குள் உங்கள் படைப்புகளில் 20 சதவீதமாது வாசிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் சரி வர புரியாததால் என்மீதே ஒரு வெறுப்பு வருகிறது.

ஆகையால் முறையாக எவ்வாறு வாசிப்பு செய்யவேண்டும் என்று விளக்கினால் நன்றாக இருக்கும். மேலும் நீங்கள் இதற்கே பயிற்சி வகுப்புகள் நடத்துவதாக நண்பன் சொன்னான், அதுவும் எப்போது என்று கூறினால் கட்டாயம் கலந்து கொள்வேன்.

 

இரண்டாம் சந்தேகம்,

நீங்கள் விரைவு வாசிப்பு சில குறிப்புகள் கட்டுரைகளில். சில தேவை மற்றும் பயிற்சிகளை பற்றி சொன்னீர்கள். கவனம் மற்றும் ஈடுபாடு, மொழிப் பயிற்சி( தேவைகள்) இதனை மேம்படுத்த முயற்சித்து வருகிறேன்.உதாரணமாக தில்லை சார் தியானம் வகுப்பில் கலந்து கொண்டேன் , இப்போது சற்று முன்னேற்றம் தெரிகிறது. மொழிப் பயிற்சிக்காக தினமும் புதிய வார்த்தைகளை குறிப்பேட்டில் எழுதி வைத்து படிக்கிறேன். ஆனால் நீங்கள் பயிற்சியாக கூறிய இரண்டையும் ( பார்வை பயிற்சி , மனதிற்குள் சொல்லாமல் எழுத்தை மட்டும் பார்த்தல்)

எவ்வாறு practice செய்வது என்று தெரியவில்லை. இணையத்தில் தேடிப் பார்த்து பொழுது increase peripheral vision and reducing subvocalization என்று நீங்கள் சொன்னது தான் வந்தது ஆனால் எவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

நான் மிகவும் மெதுவாக வாசிப்பது போன்று தோன்றுகிறது. நீங்கள் அந்த இருபதாயிரம் கட்டுரையில் ரா முருகன் நாவலை 1184 பக்கம் 7 மணி நேரத்தில் முடித்தேன் என்றீர்கள், அதனை படித்ததில் இருந்து என்னால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. நாமும் வேகமாக வாசிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. மொழிப் பயிற்சிக்காக தினமும் படித்து கொண்டே இருக்கிறேன் , ஒரு நாள் கூட விடாமல். கவன குவிப்பிற்காக தில்லை சார் சொன்ன தியானங்களை ஒரு நாள் கூட சமரசம் இல்லாமல் செய்கிறேன். ஆனால் மிகவும் முக்கியமான பார்வை பயிற்சி மற்றும் மனதிற்குள் சொல்லாமல் வாசிப்பு எவ்வாறு பயிற்சி செய்வது என்று தெரியவில்லை.

ஆகையால் அதனையும் சற்று விளக்கினால் மிகவும் பயனாக இருக்கும்.

 

ஜனா

 

அன்புள்ள ஜனா

இத்தகைய வினாக்களுடன் வாசகர்கள் அனேகமாக தினம் இரண்டுபேராவது வருகிறார்கள். அவ்வாறு வந்தவர்கள் பலர் இன்று எழுத்தாளர்களும், தீவிர இலக்கிய வாசகர்களும் ஆகிவிட்டார்கள்.

இந்த ஐயங்கள் எல்லாமே உள்ளே நுழைந்ததுமே உருவாகின்றவை. இவற்றை உங்களுக்குள் வினவிக்கொள்வதும், இவற்றுக்கான விடைதேடி மேலும் வாசிப்பதுமே ஒரே வழி. மிக எளிதில் இவற்றை புரிந்துகொண்டு கடந்துசெல்வீர்கள்.

நீங்கள் தீவிரமாக முயல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் ஒன்று தெரிந்துகொள்ளவேண்டும். மேலைநாடுகளில் ஆறாம் வகுப்பு முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை இலக்கிய அறிமுகம், வாசிப்புப்பயிற்சி உள்ளது. இங்கே எப்படிப்பும் இல்லை. அவர்கள் ஐந்தாண்டுகளில் பெறும் அப்பயிற்சியை நீங்கள் சில மாதங்களில் பெற முயல்கிறீர்கள். ஆனால் பெற்றுவிடலாம், முயற்சி இருந்தால்போதும். சில குழப்பங்கள் தொடக்கத்தில் இருக்கும். அவை எளிதில் விலகிவிடும்.

இந்தவகையான ஐயங்களுக்கு நூல்களுக்கு அப்பால் நேரடிப்பயிற்சியும் தேவையாகிறது என உணர்ந்தபின்னரே புதியவாசகர் சந்திப்புகளை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினோம். உரையாடல்பயிற்சி, வாசிப்புப்பயிற்சி என பல வகுப்புகளை நடத்தி வருகிறோம். அங்கே 20 மணி நேரத்தில் சொல்லப்படுவனவற்றை எழுதினால் ஆயிரம் பக்கம் தேவைப்படும். அத்துடன் இணையான நண்பர்களுடனான விவாதங்களும் அங்கே நிகழ்கின்றன. ஆகவே வகுப்புகள் மிக உதவியானவை

வகுப்புகள் என் இணையதளத்தில் அறிவிக்கப்படும். அவற்றை கண்டு விண்ணப்பிக்கலாம்

 

ஜெ

முந்தைய கட்டுரைஒரு பெருங்கனவு, கடிதம்
அடுத்த கட்டுரைவிழா- இரா. மகேஷ்