துருவஜோதிடம்

பிரயாகை வாங்க

வெண்முரசு நூல்கள் வாங்க

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன்  அவர்களுக்கு ,

வெண்முரசு நாவலை நான்  மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டு இருக்கிறேன். வெண்முரசு  நாவலை ஒரு வாழ்வியல் கலைக்களஞ்சியம் என்றே கருதுகிறேன் இந்து/இந்திய  தத்துவ , புராண, வாழ்வியல் தகவல்களின் தொகுப்பு. இந்த ஒரு நாவலிலேயே ஒரு மனிதனின் வாழ்வியல் தேடல்களுக்கான அனைத்து  தகவல்களும் உள்ளன என கருதுகிறேன்.

எனக்கு சிறு வயது  முதல் ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளது. என்  தாய் மாமா  மூலமாகவும் தமிழ்  ஜோதிட நூல்களில் இருந்தும் ஜோதிடம்  கற்கிறேன்.

வெண்முரசில் நிமித்திகத்தை பற்றி குறிப்பிட்டுள்ள  சில தகவல்கள்  நான் தமிழ் ஜோதிட நூல்களிலும் படித்ததில்லை. வெண்முரசில் நிமித்திகம் ஒரு உபவேதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சூரியர் தன்  மாணாக்கர்களின்  துணையுடன் வானில்  நிலை மாறா நட்சத்திரமான  துருவ  நட்சத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு நிமித்திக  கலை உருவானதாகவும் சூரியதேவரின் பிரஹதாங்கப் பிரதீபம் அதன் முதல் நூலாகவும்  குறிப்பிட்டு உள்ளது.   சகாதேவன்  மற்றும் சுகோத்ரன்  மூலமாக நிமித்திகத்தின் நுண்ணிய தகவல்கள் பல இடங்களில் குறிப்பாக நீர்ச்சுடர் நாவலில் உள்ளது. அக்கால நிமித்திகர்கள் ஜோதிட நூல்களை எழுத பயன்படுத்திய மொழியாக துருவம் எனும் மொழி பயன்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தவிர பாண்டவர்கள், அஸ்வத்தாமா, திரௌபதி மற்றும்   கௌரவர்களின்  பிறப்பு, சத்தியபாமா துவாரகை நுழையும் நேரம், குருஷேத்திர போர் நிகழ்வுகள்  என பல இடங்களில் ஜாதக மற்றும் வானியல் தகவல்கள் வெண்முரசில்  உள்ளது.

ஒரு பிரபல ஜோதிடர் துருவ கணிதம் பற்றி குறிப்பிட்டது :ஒரு குழந்தை பிறக்கும் போது  அதைப்பற்றிய  தகவல்கள் (தாய், தந்தை , உடன் பிறந்தவர்கள் ) ஜோதிடர்கள் மட்டும் அறியும் படி  சங்கேத குறியீடாக குறிப்பிடும். ஒவ்வொரு முறை ஜாதகம் பார்க்கும் போதும் இது மாற்றப்படும். எனவே ஜோதிடர், எந்த  கணிப்பும் இல்லாமல்  எளிதாக ஒரு ஜாதகரின் கடந்த கால சம்பவங்கள்  மற்றும் தனிப்பட்ட தகவல்களை தெரிவிக்கலாம். ஆகவே துருவ கணிதம் முக்கியத்தும் அற்றதென்றும் அதை  நிராகரிக்குமாறும் கூறினார்.

இன்று கணிப்பொறியில் ஜாதகம் கணிக்கப்படுவதால் துருவ கணித முறை கிட்டத்தட்ட அழிந்து விட்டது .  நான் அறிந்த வரை அடிப்படை ஜோதிட தகவல்கள் பராசரரின் பிருஹத் பராசர ஹோரா போன்ற சில நூல்கள் மூலம் கற்பிக்கப்பட்டு ஜோதிடரின் அனுபவம் மற்றும் குரு மரபின் மூலமும் பலன் சொல்ல படுகிறது. இன்று ஜோதிட  கலை  ஒரு உப வேதம் என்னும் நிலையில் இருந்து எளிய பரிகாரம் சொல்லும் கலையாகவே மாறிவிட்டது.

நீங்கள் வெண்முரசில் குறிப்பிட்டுள்ள துருவ மொழி என்பது வேறு என நினைக்கிறேன். துருவ மொழி மற்றும் பிரஹதாங்கப் பிரதீபம் போன்ற அக்கால நூல்களை பற்றி உங்கள்  அறிதல்களை விளக்கினால் இன்றைய ஜோதிடர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

அன்புடன்

அருண்

நாலப்பாட்டு நாராயண மேனன்

அன்புள்ள அருண்

எனக்கு குடும்ப முறையிலேயே சோதிடம் உண்டு என்றாலும் அதைப்பயில ஆர்வமிருக்கவில்லை. தெரியாது என்பதைவிட தெரியாது என்னும் நிலைபாட்டை வலுவாக எடுத்துள்ளேன் என்பதே சரி. அது வேறொரு உலகம், அங்கே நுழையக்கூடாது.

வெண்முரசிலுள்ள துருவசோதிடத் தகவல்கள் முதற்கட்டமாக நாலப்பாட்டு நாராயணமேனன் எழுதிய ஆர்ஷஞானம் என்னும் பெருநூலில் உள்ள ஜ்யோதிஷம் என்னும் நீண்ட அத்தியாயத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அதிலுள்ள செய்திகளுடன் கணக்குகளையும் கொஞ்சம் விரிவாக்கிப் பயன்படுத்திக் கொண்டேன்.

அந்த அத்தியாயம் பழைய காலத்தில் உபவேதமாகக் கருதப்பட்ட ஜோதிடம் என்ன என்பதை விவாதிப்பது. தென்னக வேதம்சார் அறிவுத்துறைகளில் ஜோதிடம் ஓர் உபவேதமாக திட்டவட்டமாகவே சொல்லப்பட்டுள்ளது. நாராயண மேனன் பல தொல்நூல்களின்  சுட்டிகளையும் அளித்துள்ளார். கணிசமானவை பழைய சம்ஸ்கிருத மலையாளத்தில் எழுதப்பட்டவை. பழைய ஆங்கில நூல்கள் சிலவற்றையும் மேற்கோள் காட்டுகிறார். புனைவுக்கு ஓர் அறிஞரின் சான்றளிப்பு போதும், ஆகவே நான் மேலதிக ஆய்வுக்கு முயலவில்லை.

இந்த கணிப்பு முறையைப் பற்றி நாராயணமேனன் சொல்லும் செய்திகள் இவை. துருவனை மையப்புள்ளியாகக் கொண்ட இந்த ஜோதிடமுறை ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அழியத்தொடங்கிவிட்டது. இதன் பிறப்பிடம் தென்னகமாக இருக்கலாம். இதை வடக்கே கௌடநாடு (வங்கம்) பகுதியிலிருந்து வந்த கணிப்புமுறைகள் பின்தள்ளிவிட்டன.

தென்னகத்திலுள்ள பல சோதிடமுறைகளில் துருவ ஜோதிடத்தின் செல்வாக்கு உண்டு என்று நாராயணமேனன் உள்ளிட்ட அறிஞர்கள் சொல்கிறார்கள். எந்தெந்த பகுதிகளில் என்றெல்லாம் கூட எழுதியிருக்கிறார்கள்.ஜோதிடமறிந்தவர்கள் தான் அதை ஆராயவேண்டும். பல ஜோதிடமரபுகள் பொய்யாகவும் பிழையாகவும்கூட துருவஜோதிடம் என்கின்றனர் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். பொதுவாகத் தேடிப்பார்த்தால் ஏராளமான துருவஜோதிட முறைகள் பற்றிய விளம்பரங்களும் நூல்களும் கண்ணுக்குப்படுகின்றன. எவை எவ்வகையில் முக்கியமானவை என தெரியவில்லை.

துருவஜோதிடம் ஒரு தனி மொழியை, எழுத்துருவை பயன்படுத்தியது என்று சொல்கிறார்கள். அந்த எழுத்துருக்கள் மட்டும் இன்றும் எஞ்சுவதாகவும் அவற்றை சில சோதிடர்கள் பயன்படுத்தி ஜாதகங்களிலேயே சில குறிப்புகளை எழுதிவிடுவதாகவும் அந்த எழுத்துரு தெரிந்த சோதிடர்கள் அதை மேலும் வாசித்து முந்தைய கணிப்புகளுடன் இணைத்து தன் கணிப்புகளைச் சொல்வதாகவும் ஒரு பேச்சு உண்டு.

என்னைப் பொறுத்தவரை துருவஜோதிடம் பற்றிய செய்திகளில் ‘நிலைத்தன்மை’ என்னும் அரிய படிமம் ஒன்று கிடைத்தது. அது புனைவை ஒரு பெரிய தரிசனமாக விரிக்க உதவியது. அதை பயன்படுத்திக்கொண்டேன்.

வெண்முரசில் வரும் நிமித்திகர் கணிப்புகள் பற்றி பலரும் கேட்பதுண்டு. ஏறத்தாழ எல்லாமே அங்கே நிமித்திகர்களால் முன்னுணரப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். மகாபாரதத்திலும் அவ்வாறே உள்ளது. எல்லாமே முன்னுணரப்பட்டாலும் எதுவுமே மாற்றப்பட இயலவில்லை என்பது மகாபாரதத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று. ஊழ் என்பதைப்பற்றிய மகாபாரத தரிசனம் அது.

வெண்முரசில் அதை உருவகமாக, கவித்துவமாகப் பயன்படுத்திக்கொண்டேன். நிமித்திகர் முன்னுணர்ந்து சொல்கிறார்கள், ஆனால் முழுமையாக அல்ல. ஊழின் நுனி மட்டுமே தெரிகிறது. அது ஓர் உணர்வெழுச்சியை மட்டுமே உருவாக்குகிறது. அப்படித் தெரிந்தமையால் செய்யக்கூடுவனவற்றை எவரும் செய்யாமல் இருப்பதில்லை. செல்லநினைத்த இடங்களுக்குச் செல்லாமலும் இருப்பதில்லை. உண்மையில் அந்த நிமித்திகங்களால் பெரிய பயன் ஏதுமில்லை. மானுடனின் அச்சம் தூண்டப்படுகிறது. விளைவாக ஐயம் பெருகி கூடுதலான வஞ்சங்களும் காழ்ப்புகளும் உருவாகின்றன.

முன்னுணர்ந்தவை அவ்வாறே மேலும் விரிவாகவும் துல்லியமாகவும் நிகழ்கின்றன என்பதற்கு இலக்கியப்பொருள் ஒன்றே. இவையனைத்தும் வெறும் தற்செயல்கள் அல்ல. கோடானுகோடி மானுட உறவுகள், இயற்கைவலைப்பின்னல்கள் ஆகியவற்றாலான இந்த பரப்பு ஒரு பெருந்திட்டம் கொண்டது. அது மகாபாரத தரிசனம், வேதாந்த தரிசனமும்கூட. அதன்பொருட்டே வெண்முரசில் சோதிடம் கையாளப்பட்டுள்ளது.

வெண்முரசில் அந்தக் கணிப்புகள் பெரும்பாலும் பரம்பரையாக நிமித்திகம் செய்பவர்களின் உள்ளுணர்வு சார்ந்தவையாகவே உள்ளன. நாவல் தொடங்கும்போதே, முதற்கனலிலேயே மொத்த வெண்முரசின் அமைப்பும் இலக்கும் நிமித்திகரால் சொல்லப்பட்டுவிடுகின்றன. அது எவ்வண்ணம் நிகழ்கிறதென்பதன் சித்திரமே எஞ்சிய இருபத்தைந்தாயிரம் பக்கங்களும்.

இந்த வகையான கட்டமைப்புதான் மேலைச்செவ்வியல் இலக்கியங்களிலும் உள்ளது. கிரேக்கநாடகங்கள் முதல் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் வரை இந்த முன்னுரைத்தல் எப்படியெல்லாம் கையாளப்பட்டுள்ளது என்பது ஆய்வுக்குரிய ஒன்று. சோஃபாக்ளிஸின் விதி முன்னுரைக்கப்படுகிறது.அதிலிருந்து தப்ப அவன் முயன்றும் அவ்வாறே நிகழ்ந்து முடிகிறது. மாக்பெத்தின் விதி முன்னுரைக்கப்பட அவன் அதைநோக்கி தானே சென்று அதை நிகழ்த்திக்கொள்கிறான்.

எனக்கு ஒன்று தோன்றுகிறது, எல்லாமே தற்செயல் என்னும் நிலைபாட்டை எடுத்தால் இலக்கியமே பொருளற்றுப்போய்விடும். இலக்கியத்தின் நோக்கமே வாழ்க்கைக்கு அர்த்தபூர்வமான ஓர் இணைப்புவலையை உருவாக்குவதுதான். நிமித்திகம், சோதிடம் எல்லாம் அதைத்தான் செய்கின்றன. ஆகவே இலக்கியம் நிமித்திகத்தையும் சோதிடத்தையும் புனைவு உத்தியாகப் பயன்படுத்திக்கொள்கிறது. சோதிடத்திலும் இலக்கியத்தின் நுண்ணுணர்வுகளுக்கு முக்கியத்துவமுண்டு. மரபான சோதிடங்களிலும் புராணம் ஓரு முக்கியமான அம்சம்.

நிமித்திகத்தைப் பற்றி நான் மேலும் பேசமுடியாது. ஆனால் ஒன்றைச் சொல்லமுடியும். உள்ளுணர்வு சார்ந்த ஆழ்நிலையில் நமக்கு பல விஷயங்கள் முன்னரே தெரியும் என நாம் அறிவதுண்டு. அவ்வகை நுண்ணறிதல் சற்றேனும் நிகழாத எவருமே இருக்கமுடியாது. அந்த நுண்ணிய முன்னறிதல் உண்மையில் என்ன என்பதே கேள்வி. ஒரு புனைகதை சோதிடவியலில் இருந்து எடுத்துக்கொள்ளவேண்டியது அவ்வளவு மட்டுமே.

ஜெ

முந்தைய கட்டுரைஅரிசங்கர்
அடுத்த கட்டுரைஆதிவிஷத்தின் தடங்கள்