விதி வழிப்படூஉம் புணை – பா.ராகவனின் யதி- சுபஸ்ரீ

பா.ராகவன்

அன்புநிறை ஜெ,

வணக்கம்.

பா.ராகவனின் ‘யதி’ – 1000 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்நாவல் துறவுப் பாதையை நாடும் நான்கு சகோதரர்களின் கதை.

பேசுபொருளின் ஈர்ப்பால் எளிதாகக் கதைக்குள் ஈடுபடுத்திக் கொண்டு மூன்று தினங்களில் நிறைவு செய்ய முடிந்தது. ஒரே வீட்டைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் அடுத்தடுத்த காலகட்டத்தில் துறவின் வெவ்வேறு பாதைகளைத் தேர்கின்றனர். அப்பாதைகளில் அவர்களை செலுத்தும் நிகழ்வுகள், திசைமாற்றிவிடும் நிமித்தங்கள், அவர்கள் சந்திக்கும் அசாதாரண நிகழ்வுகள், சித்தர்கள் என கதை விரிகிறது.

நால்வரில் இளையவனான விமலின் (விமலானந்தா) பார்வையில் கதை நகர்கிறது. நான்கு சகோதரர்கள் – நான்கு பாதைகள். கதைசொல்லி விமல் நால்வரில் இளையவன். சுதந்திரத்தை மட்டுமே தன் துறவின் இலக்காகக் கொள்பவன். சார்வாகன் போல ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கடந்து செல்பவன். அவனது பார்வையில் இங்கு மற்ற ஒவ்வொருவரின் அனுபவங்களும் விரிகின்றன. ஒவ்வொன்றையும் உற்று நோக்கும் அவனது அவதானிப்புகள் கூர்மையாக, அவனது குரு சொல்வது போல ‘மொழியின் கருவி’யான விமலால் தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றன.

சித்தர்களால் வழிநடத்தப்பட்டு யோகத்தைத் தன் பாதையாகக் கொண்ட முதலாமவன் விஜய் ஏதோ ஒரு வகையில் ஏனைய ஒவ்வொரு சகோதரனையும் துறவுக்கு இட்டுச் செல்பவனாகவோ, வழி மாற்றி விடுபவனாகவோ வருகிறான். துறவுக்கு முந்தைய இளமைப் பருவம் தவிர அந்தக் கதாபாத்திரத்தின் கட்டமைப்பு பெரும்பாலும் பிறரது வார்த்தைகளிலேயே நிகழ்கிறது.

இரண்டாமவன் வினய் தாந்த்ரீக வழிகளில் சென்று முதல் கட்ட சித்திகள் சில கைவரப் பெற்றதும் தடம்மாறி பல்வேறு தீவிர அலைக்கழிப்புகளுக்கு ஆளாகிறான்; தோல்வியின் எல்லையிலும் இறுதிவரை தீவிரமாக முன்செல்பவன். மூன்றாமவன் வினோத் குடும்பத்தில் இறுதியாகத் துறவு மேற்கொள்பவன். ஒவ்வொருவர் துறவிலும் குடும்பம் நொறுங்கி விழுவதையும் மீண்டும் சமாளித்து வாழ்வு நகர்வதையும் கண்டு துறவுக்கு எதிரான மனநிலையோடு, இல்லற வாழ்வின் பாதையில் காதல், திருமணம் என காலடி எடுத்து வைத்துவிட்டு அவனுக்கு நேரும் அதீத அனுபவத்தால் துறவில் நுழைபவன்; பக்தியைத் தன் பாதையாகத் தேர்ந்தெடுத்து ஒரு அமைப்பில் இருப்பவன்.

ஞானம், யோகம், பக்தி, தாந்தீரீக-மாந்த்ரீகம் என நான்கு வழிகள். நான்கையும் ஊடுருவிச் செல்லும் சித்தர்களின் வழிகாட்டல்கள்.

இவர்கள் ஒவ்வொருவரின் துறவையும் நிகர்செய்யும் துலாத்தட்டின் மறுபுறமென கேசவன் மாமா பாசத்தாலும் உணர்ச்சிகளாலும் கொந்தளிப்பவராக இருக்கிறார். ஒவ்வொருவரையும் மீட்டுக் கொண்டு வர மெனக்கெடுகிறார். துறவின் மீது குடும்ப அமைப்பு கொள்ளும் பயமும், விலக்கமும், பக்தியும், அவநம்பிக்கையும், வெறுப்பும், ஈர்ப்பும் இவர் மூலம் சித்தரிக்கப்படுகிறது.

நால்வரது அன்னை நிதானமும் அமைதியும் நிறைந்தவளாக வருகிறாள். மிக நேர்த்தியாக தொடங்கும் இவளது சித்திரம் பிற்பாதியில் பரபரப்புக்கான திருப்பங்களில் சரிவர உச்சம் கொள்ளாமல் சரிந்துவிடுகிறது. தாயின் இறுதி யாத்திரைக்கு நால்வரும் வந்து சேரும் பயணமாக யதி அமைகிறது. வீட்டில் தொடங்கி துறவில் அலைந்து தாயின் மரணத்தை நோக்கி பயணிக்கும் ஒவ்வொருவரின் உண்மையான துறவு அவளது இறுதி நெருப்பில் முழுமையை நோக்கி நகர்கிறது.

ஒரு நீண்ட நாவலைத் தொய்வின்றி வாசிக்க காட்சி வர்ணணைகள் உதவுகின்றன.மகாபலிபுர சாலையில் இன்று ஏறக்குறைய சென்னையோடு இணைந்துவிட்ட திருவிடந்தையின் 40 ஆண்டுகளுக்கு முந்தைய சித்திரம் கண் முன் விரிகிறது. அந்த கடற்கரையும் சவுக்குத்தோப்புகளும் கதைக்களத்தை அழகாகக் காட்டுகின்றன.

இதை வாசித்ததும், பல ஆண்டுகளுக்கு முன் திருப்பூந்துருத்தி வாசித்த அனுபவம் நினைவில் எழுந்தது. அகத்தின் அலைதல்களை அறிதல்களை அனுபவங்களை சொற்களில் பாலகுமாரன் விரித்து எழுதிய அந்நாவலை வாசித் அதனுள்ளேயே திரிந்த காலகட்டம். பொது வாசிப்புக்கு பெருமளவு சென்று சேரும் சாத்யம் உள்ள இணைய இதழில் துறவு குறித்த யதி நாவலை பா ராகவன் அவர்கள் எழுதத் தேர்ந்தது சிறப்பு.

‘யதி’யில் துறவுக்கு இட்டுச்செல்லும் அகத்தூண்டல்களோ, கேள்விகளோ, ஞானத்தேடலோ அதிகம் விவரிக்கப்படாமல் மேலோட்டமாக சம்பவங்களின் கண்ணிகளால் ஒவ்வொருவரும் துறவில் தவறி விழுகிறார்கள். ஆழமாக விரியச் சாத்தியம் காட்டும் விமலுக்கும் அவனது குருவுக்குமான பயணமும் அவ்விதமே சில வார்த்தைத் தெறிப்புகளோடு நின்று விடுகிறது. வினய் தவிர பிறரது சுயம் உடைபடும் தருணங்கள் ஏதும் இல்லாது போவதும் இதன் மையப்பொருளை முழுமையில் அணுகாது விலகுகிறது. நால்வரும் துறவிகள் எனினும் அவன்-இவன் என ஒருமையில் விளிக்கும் சுதந்திரத்தை ஆசிரியரே கதைசொல்லி விமல் வழியாக அளித்து விடுகிறார்.

துறவு குறித்து பொது மனதில் இருக்கும் எண்ணற்ற மாயைகளும், சித்தர்கள் குறித்து நிலவும் நம்பிக்கைகளும், ஐயங்களும், எதிர்மறை வினாக்களும் இணைந்த ஆர்வமும் இக்கதையை வாசிப்பவர்களுக்கு விறுவிறுப்பான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. ஆனால் தினமணியில் தொடராக வந்து நாவலாகத் தொகுக்கப்பட்டதன் தடயங்கள் நாவலில் தெரிகின்றன. குறிப்பாக இறுதிப்பகுதியும் கதையின் முடிவும் பரபரப்புக்காக வலிந்து அமைக்கப்பட்டிருப்பது போல ஒரு தொய்வை ஏற்படுத்துகிறது. சித்தர்கள் சார்ந்த நிகழ்வுகள் ஒரு எல்லைக்கு மேல் அலுப்பைத் தருகின்றன.

ஒரு புனைவில் துறவைக் கருப்பொருளாக எடுத்துக் கொண்டு, துறவின் வெவ்வேறு வழிகளும், அப்பாதையில் ஏற்பட சாத்தியமான எண்ணற்ற சரிவுகளும், தடம்புரளல்களும், வலிகளும் பேசப்பட்ட வகையில் இது ஒரு முக்கியமான ஆக்கம். ஊழின் வலிய கரம் நடத்திச் செல்லும் மானுட வாழ்வில் துறவறம் வழியாகவும் இல்லறம் வழியாகவும் நிகழும் மனித யத்தனங்களைச் சொல்கிறது யதி.

“மின்னொடுவானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல்

ஆருயிர்முறை வழிப் படூஉம்” என்ற கணியன் சொல்லை வலியுறுத்துகிறது யதி.

வணக்கத்துடன்,

சுபா

யதி தமிழ் விக்கி

யதி வாங்க


விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்

விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா

விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்

விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்

விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி

விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா

விஷ்ணுபுரம் விருந்தினர்: லதா அருணாசலம்

முந்தைய கட்டுரைகுள்ளச்சித்தனின் மறைஞானம்
அடுத்த கட்டுரைஇலக்கியம் காதல், இன்னொன்று…