சாதனைக்கவிதைபற்றி

ஒரு கவிதைச்சாதனை

ஜெ,

பகடி உங்களுக்கு இயல்பாகவே கைவருகிறதென்றாலும் சிலசமயம் ரொம்பவே நுட்பமாகப் போய்விடுகிறது. எனக்குப் பெரும்பாலும் நீங்கள் ஆரம்பிக்கும் இரண்டாவது வரியிலேயே சிக்னல் விழுந்து விடும். இம்முறை ஏமாந்துவிட்டேன். கவிதையின் தலைப்பைப்பார்த்ததும் உடனே சிரிப்புவந்தது. அலுவலகத்திலே சிரித்துக்கொண்டு பாய்ந்து எழுந்திருந்து விட்டேன். ’என்னது’என்று கேட்டார்கள். அற்புதமான கவிதை. கண்டிப்பாக ஒரு கவிதைச்சாதனைதான்.

’இதுவரை வெளிவந்த தமிழ்க்கவிதைகளின் நெடியே இல்லாமல், சொல்லப்போனால் உலகமொழிகளில் எழுதப்பட்ட எந்தக் கவிதையின் சாயலும் இல்லாமல்,  புத்தம்புதிதாக வெளிவந்திருக்கிறார்’-  அருமையான வரி. கவிதையை வாசித்தபின்னர்தான் அந்த வரிக்குப் பொருள் தெரிந்தது. ஒட்டுமொத்த மனித அறிவுடன் எந்தத்தொடர்புமே இல்லாமல் தூய்மையாக அவதரித்திருக்கிறார் ருத்ரா.

திரும்ப உங்கள் குறிப்பை வாசித்தேன். வரிவரியாக சிரித்தேன். ’அனுபவம் நேர்மையாக, அப்பட்டமாகப் பதிவாகியிருக்கிறது’ ‘தமிழ்நாட்டில் பல லட்சம்பேர் இதன் உணர்வெழுச்சியுடன் ஒன்றுவார்கள்’ ஒன்றமாட்டார்களா பின்னே?

காலையில் ஒரு நல்ல அருமையான தொடக்கம் ஜெ. நன்றி

அருண்
சென்னை

அன்புள்ள அருண்,

நகைச்சுவை என்று போட்டால் உடனே சிரித்துவிடுகிறார்கள். ஆகவேதான். இனிமேல் பின்னணியாக அஹ்ஹாஹாஹாஹாஅஹஹஹஹஹாஹஹாஆஹாஅஹஹாஹாஹா என்ற பயங்கரப்பேரொலி எழுப்பப்பட மென்பொருள் தயாராகிறது. அதன்பின் குழப்பம் இருக்காகது

ஜெ

==================================

நகைச்சுவைக் கட்டுரை எழுதும் போது அதை நகைச்சுவை என்று தெளிவாகப் பதிவு செய்வது, தமிழ் மரபுக்கு எப்போதுமே நல்லது.

(எனக்குக் கவிதை அறிவு கம்மிதான்… அது உண்மையிலே சீரியஸ் கட்டுரை இல்லையே… )

நன்றி
ரத்தன்

 

அன்புள்ள ரத்தன்,

திண்ணையில் அந்தக் கவிதைக்குப் பக்கத்திலே அப்படிப் பதிவுசெய்திருக்கவேண்டும் என்கிறீர்கள் இல்லையா? அதை நீங்கள் திண்ணைக்கு அல்லவா சொல்ல வேண்டும்?

ஜெ

==================================

 ஒரு படத்துல வரும் ஒன்னு கீழ ஒன்னு அதானே கவிதைன்னு. அப்படிப்பட்ட கவிதை இது இல்லையா?
அசோக் சாம்ராட்
அன்புள்ள அசோக்,
உரைநடை    தண்டவாளம் என்றால் கவிதை ஏணிப்படி
ஜெ
+++++++++++++++++++++++++++++++++++
அன்புள்ள ஜெயமோகன்
இதில் கவிஞர் ருத்ராவின் புதிய நடையையும், கவித்துவத்தையும் புகழ்ந்துள்ளீர்கள்.
இதே ருத்ரா ஈவேரா, பாவாணர் போன்றவர்களின் மோசமான இனவாதத்தையும் உள்வாங்கியவர்.
அவருடைய கூகிள் குருப்பில் ஒரு கவிதையில் உங்களையே ஏதோ ”தீய ஆரிய” ஆர்கிடைப்பாகச் சாடுகிறார்
இவருக்குக் கவித்திறன் இருந்தாலும், இனவாதத்திற்குத் தீனியானவர்.  “ஆரியரகள்”  ஏதோ “ திராவிடர்களை”க் களங்கப்படுத்த வந்தவர்கள் போல் எழுதுபவர்.
மதிப்புடன்
வன்பாக்கம் விஜயராகவன்

அன்புள்ள விஜயராகவன்,

அது  ஒரு பகடி என்று சொன்னால் அதையும் சீரியஸாக எடுத்துக்கொள்வீர்களா என்று பயமாக இருக்கிறது

ஜெ

=================================

ஜெயமோகன்,

நீங்கள் அற்புதம் என்றெல்லாம் சொல்லிப் பரிந்துரைத்திருந்த கவிதையை வாசித்தேன். அந்தக்கவிதையிலே [கவிதையா அது கர்மம்] என்ன இருக்கிறது என்று இப்படி சொல்கிறீர்கள்? வெட்கமாக இல்ல? அதை எழுதியது பெண் என்பதனால்தானே அதைக் கவிதை என்று தூக்கி விடுகிறீர்கள்? உங்களைப் போன்றவர்களின் நோக்கம் என்ன? வாசகர்களுக்கு ஒன்றுமே தெரியாதென்று நினைக்கிறீர்களா?

நிற்க, இது கவிதையே கிடையாது. சினிமா விமர்சனத்தைக் கீழே அடுக்கினால் கவிதையா? அப்படியென்றால் தினமலர் பொன்னையா எழுதும் சினிமாச்செய்தியும் கவிதைதானே? தெரிந்தால் பேசுங்கள். இல்லாமால் இருந்தால் வாயைமூடுங்கள்

செல்வ ஜெகதீசன்

அன்புள்ள செல்வா,

அப்படியென்றால் பொன்னையா கவிஞர் இல்லையா? யாருமே என்னிடம் சொல்லவில்லையே?

அப்படியே நிற்க, ருத்ரா என்பது பெண் கிடையாதாம். வன்பாக்கம் விஜயராகவன் சொல்கிறார். பரமசிவம் என்பவராம்.

ஜெ

+++++++++++++++++++++++++++++++++

அன்புள்ள ஜெ

நீங்கள் பரிந்துரைத்த கவிதையைக் கண்டேன். அற்புதமான கவிதை. நானும் அந்தத் திரைக் கவிதையை இப்போது பார்த்து ரசித்திருந்தேன். ஆதலினால் என்னால் கவிதையுடன் ஒன்ற முடிந்தது. அருமையான வரிகள்.  ‘மேய்ச்ச‌ல் புரியும் ம‌ந்தைக‌ளின் ச‌ந்தைக‌ளால்’ என்ற வரி சிறப்பானது

மேலும் நீங்கள் http://www.lankasripoems.com  என்ற இணையதளத்திலே வரக்கூடிய கவிதைகளை வாசிப்பீர்களா? அருமையான கவிதைகள். நான் சமீபத்திலே

உள்ளம் விறகாகி
உயிரில் தீ மூண்டது
சொல்ல முடியாத சோகம்
விழிகள் விம்மின

என்ற கவிதையை மிகவும் ரசித்தேன்

விஜயா அம்ருத்

அன்புள்ள விஜயா

’புதிய‌ புதிய‌ ப‌ரிமாண‌ங்க‌ளுக்குள் எல்லாம் பரிணாமம் செய்யும்’ என்ற வரிதான் சிறப்பான கவிதை என நினைக்கிறேன். முதல்தடவை வாசித்தபோது எனக்குப் புல்லரித்தது. பிறகு சரியாகப்போய்விட்டது.

நீங்கள்கூட  http://tamilkkavithai.blogspot.com/ என்ற இணையதளத்தை வாசிக்கலாம்.

காத்திருக்கும் கண்களுக்கு
வியர்த்துப் போனால்
அது கண்ணீர்..!
காத்திருக்கும் கண்கள்
கவிதை பாடினால்
அது காதல்..!
இந்த இரண்டையும்
ஒரு சேரக் கொடுத்தவளும் நீ..!
கொடுத்துப் பிரிந்தவளும் நீ..!

என்ற அருமையான காதல்கவிதை காதலிக்காத எல்லாருக்குமே பிடிக்கும்

ஜெ

=========================

எதுக்கு சார் கொலை வெறியைத் தூண்டறீங்க? இதை யாராவது சீரியஸாக வேறு எடுத்துக்கப் போறாங்க என்று பயமாக இருக்கிறது…

ஆர்வி

ஆர்வி,

ஏன் நல்ல கவிதைதானே? ’கலைஞரிய’ அழகியல் கொண்ட கவிதை இல்லையா?

 

ஜெ

 

 

முந்தைய கட்டுரைலயா
அடுத்த கட்டுரைகல்வி கடைசியாக…