அரசியும் அன்னையுமான ஒருத்தி

 

கொற்றவை வாங்க

கொற்றவை மின்னூல் வாங்க 

2003ல் கொற்றவையின் முதல் பதிப்பு வெளியாகியது. தமிழினி வசந்தகுமார் அதன் ஒவ்வொரு பத்தி எழுதப்படும்போதும் உணர்வுரீதியாக உடனிருந்தார். இத்தருணத்தில் அவரை நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த உடனிருப்பு இல்லையேல் ஒருவேளை அன்று அதை எழுதி முடிக்க என்னால் முடிந்திருக்காது.

புனைவு உருவாக்கும் விரைவான எழுத்துமுறை கொற்றவைக்கு இயல்வதாக இல்லை. ஏனென்றால் அது கற்பனையின் பாய்ச்சல் மட்டுமல்ல. கவிதைபோல ஒருவகை தூய மொழிவெளிப்பாடும்கூட. ஒவ்வொரு வரியாக எழுதப்பட்ட ஒரு நூல் என்று அதைச் சொல்லலாம். மொழிநடையிலும் கவித்துவத்திலும் கொற்றவையுடன் ஒப்பிடத்தக்க நூலாகிய நீலம் பதிமூன்று ஆண்டுகளுக்குப்பின் என்னால் எழுதப்பட்ட போது  அதை ஒரே விசையில் ஒரே உணர்வு நிலையில் ஏறத்தாழ ஒரு மாதகாலம் இருந்து எழுதி முடித்தேன். அது எப்படி நிகழ்ந்ததென்றே தெரியாமல் திரண்டு வந்தது. ஆனால் கொற்றவை ஒவ்வொரு நாளும் ஓர் உச்சத்தை அளித்தது. அது முடிந்தவுடன் அதே அளவு உணர்வு கீழிறங்கும் துயரையும் சலிப்பையும் தனிமையும் அளித்தது. அந்நாட்களில் இளையராஜாவின் இசை எனக்கு உடனிருந்தது என்னுடைய அன்றைய வெற்றியை அப்போதே உணர்ந்து அதை ஊக்குவித்த வசந்தகுமாரும் உடனிருந்தார்.

கொற்றவையை நான் ஓர் எதார்த்தவாத நாவலாக முதலில் உருவகித்திருந்தேன். அன்று என்னிடமிருந்த மையக்கருத்து இதுதான். ’வண்ணச்சேவடி மண்மகள் அறிந்திலள்’ என்று இளங்கோ சொல்லும் சிறுமியாகிய கண்ணகி எப்படி ’கொற்றவை அல்லள்’ என்று வாயிற்காவலனால் சுட்டப்படும் அந்தப் பேருருவை அடைந்தாள், அந்த மாற்றம் எவ்வண்ணம் நிகழ்ந்தது என்பதுதான். தமிழகத்தின் ஐவகை நிலங்கள் வழியாகவும் அவள் கடந்துவந்தாள். அந்த வாழ்க்கைப் பெருஞ்சித்திரமே அவளை மாற்றியது என்பது என்னுடைய கருத்து. அன்றைய மொத்த தமிழ் வாழ்வையும் அதனூடாக எழுதிவிடலாம் என்றொரு கனவு எனக்கிருந்தது.

அதன் ஒரு வடிவை நாவலாக எழுதும்போது அந்த யதார்த்த சித்திரம் பொருந்தவில்லை என்றே தோன்றியது. ஒரு நீள் நாடகமாக எழுதிப்பார்த்தேன். கோவை ஞானி அது சரியாக வரவில்லை என்று நிராகரித்தார். ஷேக்ஸ்பியர் போல கவிதை நாடகமாக ஒரு வடிவை எழுதிப்பார்த்தேன். நானே அதை தூக்கி வீசிவிட்டேன். சரியாக வரவில்லை என்று எனக்குத் தோன்றும்போது உடனடியாக மிச்சமில்லாமல் அழித்துவிடுவது என்னுடைய பாணி. அப்போதுதான் எது தவிர்க்கப்பட முடியாதோ அது உள்ளிருந்து துடிதுடிக்கும். தன் வழியை கண்டடையும். அதன்பின் நீண்ட இடைவெளி. கொற்றவையின் முதல் வரி ஒரு தரிசனம்போல் எனக்கு வந்தமைந்தது. முடிவின்மையின் நிறம் நீலம்.  அங்கிருந்து தொடங்கியது இந்த பெருநாவல்.

உண்மையில் இந்த படைப்பின் ஊற்றுக்கண் என்பது மிக இளமையில் என்னிலிருந்த ஒரு கனவு. நீருக்குள் ஒரு மீன்போல நான் நீந்திச்செல்ல மிகப்பிரம்மாண்டமான ஒரு கற்சிலை நீருக்குள் மூழ்கி பாதி புதைந்து அடித்தட்டில் கிடப்பது அடிக்கடி என் உள்ளிருந்து எழுந்து வந்துகொண்டிருந்தது. குறிப்பாக காய்ச்சலின்போது. அச்சிலையின் உதடுகளிலிருந்து கண்களுக்குச் செல்லவே நான் நெடுந்தூரம் நீந்த வேண்டியிருக்கும். பொருளற்ற ஒரு கனவு அது. என்னுள் உறங்கிய அனைத்துத் தாய்த் தெய்வங்களும் அப்பேருருவை கொண்டன என்று சொல்லலாம்  தாய்த்தெய்வங்களின் மண்ணில் பிறந்து வளர்ந்தவன் நான் ’பெண்மலையாள’த்தை பிறப்பிடமாகக் கொண்டவன். பின்னர் அதை கண்ணகியென மாற்றிக்கொண்டேன். கொற்றவையென விரித்துக்கொண்டேன். அன்னை, அரசி, கன்னி.

இதை எழுதி முடித்தபின் வசந்தகுமார் என்னிடம் இது ஒரு நாவல் அல்ல, இது ஒரு நவீனக் காப்பியம் என்று சொன்னார். மொத்த தமிழ்நவீனக்கவிதையிலும் இருக்குமளவுக்கே இதில் கவிதை உண்டு, கவித்துவம் அல்ல, கவிதையேதான். இதன் வரிகளை உடைத்து புதுக்கவிதை வடிவில் எழுதிவிடலாம். பல இடங்களில் மரபுக்கவிதைக்கான வடிவும் சந்தமும் கூட அமைந்திருக்கிறது. ஆகவே புதுக்காப்பியமாகவே இது வெளியாகியது.

நவீன நாவலின் வடிவ இலக்கணங்கள் மிக விரிவானவை நெகிழ்வானவை. அவ்வகையில் இதை ஒரு நவீன நாவல் என்றும் சொல்ல முடியும். பல பதிப்புகளாக வெளிவந்த இந்த நாவல் இப்போது விஷ்ணுபுர பதிப்பக வெளியீடாக வரவிருக்கிறது. மெய்ப்பு நோக்கி வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பாளர்க்ளுக்கு நன்றி. மீண்டும் வசந்தகுமாருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெயமோகன்

கொற்றவை வாங்க

கொற்றவை விவாதங்கள் இணையப்பக்கம்

முந்தைய கட்டுரைஆனந்த் ஸ்ரீனிவாசன்
அடுத்த கட்டுரைவற்கலாவில் ஒரு பெருநிகழ்வு