மலாயில் சிகண்டி, ஒரு தொடக்கம்

சிகண்டி வாங்க

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் ஈடுபடும் பலருக்கும் இருக்கும் மனக்குறை தமிழ் படைப்புகள் மலேசிய பல்லின வாசகர்களின் பரவலான பார்வைக்குச் செல்வதில்லை என்பதாகும். நமக்குள் எழுதி நமக்குள் வாசித்துக் கொள்ளும் படைப்புகளாக தமிழ் இலக்கியம் இருப்பதாக வருந்துபவர் பலர். அதிக பட்சம் போனால் தமிழகத்தில் நம் படைப்புகள் வாசிக்கப்பட வேண்டும் எனும் முயற்சிகள் நடப்பதுண்டு.

ஆனால் இந்நாட்டில் (மலேசியாவில்) எழுதப்படும் படைப்புகள் இந்நாட்டில் வாழும் பிற இன வாசகர்கள் மத்தியில் சென்று சேராமலேயே இருந்துவந்தது. மலாய் மொழியில் எழுதப்படும் படைப்புகளும் மலாய் எழுத்தாளர்களுமே அரசின் கவனத்தை பெருவதும் இலக்கிய விருதுகளைப் பெருவதும் விவாதங்களை ஏற்படுத்துவதும் உண்டு.

மலேசியாவில் தமிழ்ம் சீன படைப்புகள் தொடர்ந்து எழுதப்பட்டாலும் அவை பிற மொழி வாசகரின் கவனத்தைப் பெருவதில் பல தடைகள் உள்ளன. மலேசிய இலக்கியம் என்றால் அது மலாய் இலக்கியமே என்ற தோற்றத்தின் காரணமாக  மலாய் வாசகர்களும் பிற மொழி இலக்கியங்களில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வது கிடையாது. நேரடியாக மலாயில் எழுதும் சில இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளே மலாய் இலக்கிய இதழ்களிலும் அவ்வப்போது வெளிவருகின்றன. அவையே மலேசியத் தமிழ் மனங்களின் அடையாளம் எனவும் நம்பப்படுகின்றன. ஆனால் தமிழ் இலக்கிய செறிவையும் தனித்துவமான உளவியலையும் எடுத்துரைக்க அவை நிச்சயம் போதாது.

இச்சூழலை தகர்த்து தங்கள் படைப்பை அனைத்து மொழி வாசகருக்கும் கொண்டு செல்ல சில  தமிழ் எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பு முயற்சியில் இறங்குவதுண்டு.  மலேசியா போன்ற பலமொழி பேசும் மக்கள் வாழும் நாட்டில் மொழிபெயர்ப்பு பணி இலக்கிய செழுமைக்கு மிகப்பெரிய பங்காற்ற முடியும். ஆனால், மொழிபெயர்ப்பு பணியை எழுத்தாளர்களே சொந்த செலவிலும் முயற்சியிலும் செய்வது இலக்கிய பரப்பில் போதிய வரவேற்பைப் பெருவதில்லை. அதற்கு முதன்மையான காரணம் மொழிப்பெயர்க்கப்பட்ட புனைவுகளை எழுத்தாளர்கள் தமிழ்ச் சூழலுக்குள்ளேயே வெளியிடுகின்றனர். மலாய் வாசகர்களைச் சென்றடையும் விநியோக பாதைக்குள் அந்த நூல்கள் நுழைவதே இல்லை.

ஆகவே மலேசியாவில் ஒரு மொழிபெயர்ப்பு நூல்  பிற மொழி வாசகரை வெற்றிகரமாக சென்று சேர்வதற்கு அரசே முன்னின்று செயல்பட வேண்டியிருந்தத். அல்லது அந்த மொழியில் நன்கு அறியப்பட்ட இலக்கிய ஆளுமைகளோ தரம் வாய்ந்த பதிப்பகங்களோ முன்வரவேண்டியிருந்தது. ஆனால், கடந்த அறுபது ஆண்டுகளாக மலேசியாவில் போதுமான அளவு மொழிபெயர்ப்பு பணிகள் நடைபெறவில்லை என்பதை மொழி அளவிலான இலக்கியச் செயல்பாடுகளை வைத்தே உணர்ந்துகொள்ளலாம்.

இச்சூழலில்தான்,  உள்நாட்டு இலக்கியத்தை மேம்படுத்துவதையும் தரமான இலக்கிய நூல்களை மட்டுமே மலாயில் பதிப்பிப்பதையும் கொள்கைகளாகக் கொண்டுள்ள தனியார் பதிப்பகமான ஃபிக்ஸி அண்மையில்  ஃபிக்ஸி லிங்கோ(Fixi Lingo) எனும் கிளை பதிப்பகத்தை மொழிப்பெயர்ப்பு இலக்கியத்திற்கென உருவாக்கி அதன் வழியாக எழுத்தாளர் ம. நவீன் 2021-ஆம் ஆண்டு எழுதிய சிகண்டி நாவலை ‘SIGANDI’  என்ற தலைப்பில் மலாயில் மொழியாக்கம் செய்து மலேசிய தமிழ் இலக்கியத்தில் மிகப்பெரிய மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரவணன் சத்தியானந்தன் மொழிபெயர்த்துள்ள சிகண்டி, மலாயில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட முதல் தமிழ் நாவல் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

ம. நவீனின் சிகண்டி நாவல் ஃபிக்சி லிங்கோ(Fixi Lingo) பதிப்பகத்தாரின் பார்வைக்குச் சென்றது ஒரு சுவையான கதை. 2019 ஆம் ஆண்டு ம. நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவல் மலேசிய அரசால் 2020இல் தடை செய்யப்பட்ட தகவல் மலேசியாவில் இயங்கும் எல்லா மொழி தீவிர எழுத்தாளர்கள் வாசகர்களிடையே பேசுபொருளானது. அதன் வழி ம. நவீனின் படைப்புகளை மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டது. Eksentrika (எக்ஸன்திரிகா), டேவான் சாஸ்திரா போன்ற கலை இலக்கிய இதழ்கள் மளமளவென நவீனுடைய மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகளை வெளியிடத்துவங்கின.  மலேசியாவில் இயங்கும் ஜப்பான் அறவாரியம் ம,நவீனின் ஒரு சிறுகதையை ஜப்பான், ஆங்கிலம், சீனம், தமிழ் என நான்கு மொழிகளில் தனது தளத்தில் வெளியிட்டது. Words Whitout Borders எனும் அமெரிக்காவில் இயங்கும் ஆங்கில சஞ்சிகை அவருடைய சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டது. இதனால் ம.நவீனுடைய படைப்புகள் பிறமொழி வாசகர்களின் பார்வைக்குப் பரவலாகச் சென்றது.

ஜப்பானில் இயங்கும் ஜப்பான் அறவாரியம் ம,நவீனின் ஒரு சிறுகதையை ஜப்பான், ஆங்கிலம், சீனம், தமிழ் என நான்கு மொழிகளில் தனது தளத்தில் வெளியிட்டது. Words Whitout Borders எனும் அமெரிக்காவில் இயங்கும் ஆங்கில சஞ்சிகை அவருடைய சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டது. இதனால் ம.நவீனுடைய படைப்புகள் பிறமொழி வாசகர்களின் பார்வைக்குப் பரவலாகச் சென்றது.

தன் புனைவுகள் பிற மொழி வாசகர்களால் வாசிக்கப்படுவதை அறிந்த நவீன் தனது சொந்த முயற்சியில் மலாய் மொழியில் சிறுகதைகளை மொழிபெயர்த்து இதழ்களுக்கு அனுபத்தொடங்கினார். மலாய் மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஆசிரியர் சரவணனை சிறுகதை மொழிப்பெயர்ப்பாளராக ஊக்குவித்தார். சரவணனின் அபாரமான மலாய் மொழிப்புலமையால் ஒரே வருடத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மலாயில் மொழியாக்கம் கண்டன.

அந்தச் சிறுகதைகளைத் தொகுத்து கடந்த ஆண்டு ம. நவீன் தனது மலாய் சிறுகதை தொகுப்பை Biblio Press  பதிப்பகத்தின் வழி வெளியிட்டார். ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் எழுத்தாளரே முனைந்து செய்தவை. அதாவது இதற்கு முன்னர் மலேசியத் தமிழ் இலக்கிய முன்னோடிகள் பின்பற்றிய அதே பாதையில்தான் அவரும் பயணித்தார். கூடுதலாக தன் நூலை முறையாக விநியோகிக்க ஒரு மலாய் பதிப்பகத்தைத் தெரிவு செய்தார்.

ஆகவே, 2020 முதலே, ம.நவீன் என்கிற தமிழ் எழுத்தாளர் மலாய் இலக்கிய உலகம் அறிந்து கொள்ள விரும்பும் படைப்பாளியாக மாறியிருந்தார். இதன் அடிப்படையிலேயே  பினாங்கில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜார்ச் டவுன் இலக்கிய விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக ம. நவீன் தேர்வுசெய்யப்பட்டார். பிரபல எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான பௌலின் ஃபன் அவரை அவ்வியக்கத்தில் இணைய பரிந்துரை செய்ததோடு 2021 இல் நடந்த ஜார்ச் டவுன் இலக்கிய விழாவில் ம.நவீனுடைய புனைவுலகை விரிவாக அறியத்தரும் வகையில் அரங்கு ஒன்றையும் அவருக்காக அமைத்துக் கொடுத்தார். தொடர்ந்து 2022, 2023 ஆம் ஆண்டுகளில் ம.நவீன் ஜார்ச் டவுன் இலக்கிய விழாவின் தமிழ் இலக்கிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ம.நவீன் தன் புனைவுகள் மட்டுமல்லாது தமிழின் சிறந்த படைப்பாளிகளை ஜார்ச் டவுன் இலக்கிய விழா வழி அறிமுகம் செய்துக்கொண்டிருக்கும் பணி ஒரு புறம் நடக்க,  இவ்வாண்டு ஃபிக்ஸி  பதிப்பகம் மலேசிய பிறமொழி நாவல்களை மலாயில் பதிப்பிக்கும் தனது திட்டத்தை அறிவித்தது. அதற்காகவே ஃபிக்ஸி லிங்கோ எனும் இணை பதிப்பகத்தை உருவாக்கியது.

பதிப்பக உரிமையாளர் அமிர் முஹமட் மலாயில் மொழிபெயர்க்கத் தக்க நாவலை தேர்வு செய்யும் வாய்ப்பை வாசகரிடமே விட்டு ஊடாகங்களில் அறிவிப்பு வெளியிட்டார். வெவ்வேறு புனைவுகள் குறித்த பரிந்துரையில்  ம. நவீனின் ‘பேய்ச்சி’ நாவலை மலாயில் மொழி பெயர்க்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கை அமீரை ஈர்த்தது. அமீர் நவீனை அறிந்தவர். ஜப்பான் அறவாரியத்தின் புனைவு பிரிவில் இருந்ததால் நவீனை வாசித்திருந்தார். பேய்ச்சி நாவலை மலாயில் மொழிபெயர்க்கும் எண்ணமே முதலில் அவரிடமிருந்தது. ஆனால் சட்டச்சிக்கல் காரணமாக சிகண்டியை மொழியாக்கம் செய்யும் முடிவுக்கு அவர் வந்தார். நவீனுடைய பிற படைப்புகளை மொழிபெயர்த்த சரவணனிடமே மொழிப்பெயர்ப்புக்கான ஒப்பந்தம் செய்தார் அமீர். நவீனுடைய சிறுகதைகளை வாசித்து அதன் காத்திரத்தை அறிந்திருந்ததால் நாவலின் மாதிரி வடிவத்தை வாசிக்காமலேயே மொழிப்பெயர்ப்புக்கான ஒப்பந்தத்தை வடிவமைத்தார்.

மொழிப்பெயர்ப்பாளர் எஸ்.தி.சரவணன்

 

“நான் இதுவரை எந்த புனைவையும் வாசிக்காமல் நூலாகப் பதிப்பிக்க ஒப்புக்கொண்டதில்லை. நவீனுடைய சிறுகதைகளை வாசித்து பெற்ற நம்பிக்கையால் நாவலை பதிப்பிக்க முன்வந்தேன். முழுமையடைந்து வாசித்த போது சிகண்டி என்னை மிரட்டிவிட்டாள்!” என அதன் வெளியீட்டு விழாவில் அமீர் சொன்னது இலக்கிய வாசகர்கள் மொழியைத் தாண்டி கலைக்கு தரும் முக்கியத்துவத்துக்குச் சான்று.

அரசாங்க உதவிகளின்றி சுயமாக செயல்படும் ஃபிக்சி பதிப்பகம் முன்பதிவு திட்டத்தின் வழி சிகண்டியை வெளியிட முடிவு செய்தது. ஆச்சரியமாக எண்பதுக்கும் மேற்பட்ட பிறமொழி வாசகர்கள் சிகண்டியின் மொழிபெயர்ப்புக்கு முன்பதிவு தொகையை அனுப்பினர். இத்தொகை நூலின் வழக்கமான விற்பனைத் தொகையைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வாசகரின் மகத்தான வரவேற்பின் வழி கடந்த 26.11.2023 பினாங்கில் ஜார்ஜ்டவுன் இலக்கியவிழாவில் SIGANDI வெளியீடுகண்டது. தற்போது சிகண்டி மலாய் இலக்கிய வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற நாவலாக ஆகியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

சிகண்டியில் வரும் தீபன் இப்போது எல்லாருக்கும் உரியவனாக ஆகியிருக்கின்றான். ஊடகங்களில் அவனது அலைச்சலையும் கொதிப்புகளையும் பற்றி பேசிக்கொள்கிறார்கள்.

மலேசிய தமிழ் இலக்கியத்துக்கு ‘சிகண்டி’ நாவல் மொழிபெயர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளின் மேல் மற்ற மொழி வாசகர்களின் கவனம் விழ கிகண்டி வழி அமைத்துள்ளது. நமக்குள்ளே எழுதி நமக்குள்ளே வாசித்துக் கொள்ளும் நிலை மாறி எட்டுத்திக்கும் நம் படைப்புகள் சென்று சேருவதற்கான தொடக்கமாக இதைக் கொள்ளலாம்.

மேலும் இந்த நிகழ்வானது மலேசிய தமிழ் எழுத்தாளர்ககள் தங்கள் படைப்புகளை மேலும் தரத்துடனும் கலைநுட்பத்துடனும் படைக்க ஊக்கமூட்டுகின்றது.  மலேசிய தமிழ் இலக்கியம் இந்நாட்டில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது என்ற குறை இனி மெல்ல குறையும் என்று நம்பலாம். ஆளுமை கொண்ட இலக்கிய அமைப்பு ஒன்றின் ஆக்கபூர்வமான செயல் அரசின் பார்வையை  தமிழ் இலக்கியங்களின் பக்கம் திருப்பும் காலம் வெகுவிரைவில் வரும்.

அ.பாண்டியன்

முந்தைய கட்டுரைவேதாளம் சொல்லும் கதைகள்: கடலூர் சீனு
அடுத்த கட்டுரைஇலக்கியவாதியைக் காதலித்தல், கடிதம்