எதிர்ப்பின் சலிப்பு

கேரளத்தை குழப்பி ,ஏராளமான வினாக்களை எழுப்பிக்கொண்டிருக்கும் அண்மைச் செய்தி ஒன்று உள்ளது. முனைவர் எம்.குஞ்ஞாமனின் மரணம். 2 டிசம்பர் 2023 ல் அவர் திருவனந்தபுரத்தில் தன் இல்லத்தில் மறைந்தார்.

கேரளத்தின் முதன்மையான தலித் சிந்தனையாளர்களில் ஒருவர் எம்.குஞ்ஞாமன். (மண்ணும்புத்தூர் குஞ்ஞாமன்) கேரளத்தில் தலித் ஜாதியாகக் கருதப்படும் பாணர் குலத்தைச் சேர்ந்தவர். குறவர்களைப்போல நாடோடிகளாக பாடி அலையும் சாதியினர் பாணர், புள்ளுவர் ஆகியோர். கேரள வழிபாட்டுமுறைகளிலும் அவர்களுக்கு பெரிய இடமுண்டு. ஒரு காலத்தில் அவர்கள் அரசர்களுக்கு இணையான இடம் கொண்டிருந்தனர். சங்க காலம் முதல் தொடர்ச்சியாக அவர்களின் சமூக இடம் வீழ்ச்சி அடைந்தது. எட்டாம் நூற்றாண்டு முதல் தீண்டப்படாதவர்களாக பிறரால் கருதப்படுகிறார்கள். நீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார் போன்றவர்களின் கதைகள் தமிழகத்திலும் புகழ்பெற்றவை.

1949ல் பாலக்காடு அருகே வாடானப்பள்ளி அருகே மண்ணும்புதூர் என்னும் ஊரில் ஐயப்பன்- சொறோணா இணையருக்குப் பிறந்தவர் குஞ்ஞாமன். மிகமிக வறிய குடும்பம். கடும் பட்டினியின் நடுவே பள்ளிக்கல்வி. பள்ளியில்தான் ஓரளவேனும் முழுவயிறு நிறைய உணவு. ஆரம்ப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் சாதிப்பெயர் சொல்லி வசைபாடி கஞ்சிக்கு வந்தவன் என்று சொல்லி கன்னத்தில் அறைந்தார். அழுதுகொண்டு வீட்டுக்கு வந்த குஞ்ஞாமனிடம் அன்னை சொன்னார். “நாம் செய்யும் எதிர்ப்பு என்பது படிப்பு மட்டுமே”. இனி பள்ளியில் மதியக்கஞ்சி உண்பதில்லை என குஞ்ஞாமன் முடிவுசெய்தார். கஞ்சிக்காக வரவில்லை என அனைவருக்கும் தெரியட்டும்.

அங்கிருந்து தொடங்கியது படிப்புத்தவம். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் பொருளியலில் எம்.ஏ முதல் நிலையில் நிறைவுசெய்தார். முதல்நிலையில் பொருளியல் முதுகலை முடித்த இரண்டாவது தலித் என அவர் குறிப்பிடப்படுகிறார். முதல் தலித் இந்திய குடியரசுத்தலைவராக திகழ்ந்த கே.ஆர்.நாராயணன். திருவனந்தபுரம் செண்டர் ஃபார் டெவெலமெண்ட் ஸ்டடீஸில்  இளமுனைவர் பட்டமும், கொச்சி பல்கலையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

எம்.ஏ பட்டத்தில் முதலிடம் பெற்ற குஞ்ஞாமனுக்கு தங்கப்பதக்கம் பரிசாகக் கிடைத்தது. கம்யூனிஸ்டுத்தலைவர் எம்.என்.கோவிந்தன் நாயர், காங்கிரஸ் தலைவர் கே.கே.திவாகரன் ஆகியோர் தலைமையில் பாராட்டுக்கூட்டமும் நிகழ்ந்தது. ஆனால் அந்த தங்கப்பதக்கத்தை விற்று அடுத்த ஓராண்டு உயிர்வாழநேரிட்டது. இரண்டு ஆண்டுக்காலம் வேலையில்லாமல் இருந்தார்.

திருவனந்தபுரம் பல்கலையில் பொருளியல் பேராசிரியராக 1979ல் பணியேற்றார். அந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் எல்லா நிலையிலும் முதலிடம் பெற்றவர் குஞ்ஞாமன், ஆனால் வேலை அளிக்கப்படவில்லை. அதைப்பற்றி நாளிதழில் கட்டுரைகள் வெளிவந்தபோது இட ஒதுக்கீடு உள்ள ஒரு துறையில் அவருக்கு வேலை அளிக்கப்பட்டது. 27 ஆண்டுகள் பணியாற்றி 2006ல் ஓய்வுபெற்றார். அதன்பின் டாட்டா இன்ஸ்டிடியூர் ஆப் சோஷியல் சயன்ஸ் துல்ஜாப்பூர் நிறுவனத்தில் ஆசிரியராக ஒன்பதாண்டுகள் பணியாற்றினார்.

குஞ்ஞாமன் பொருளியல் பற்றி ஆங்கிலத்தில் ஐந்து நூல்களை எழுதியிருக்கிறார். நூற்றுக்கும் மேலான பொருளியல் ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன .

டாக்டர் எம். கண்ணன் குஞ்ஞாமனுடன் உரையாடி உருவாக்கிய ‘எதிர்’ என்னும் தன்வரலாற்று நூல் குஞ்ஞாமனின் போராட்டங்களின் ஆவணம். அதற்கு 2021 ஆண்டுக்கான கேரள சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டது. அமைப்புசார்ந்த கௌரவங்களை ஏற்பதில்லை என்று அவ்விருதை குஞ்ஞாமன் நிராகரித்தார்.

குஞ்ஞாமனின் வாழ்க்கை பலவகையிலும் கே.ஆர்.நாராயணனுடன் ஒப்பிடப்படுகிறது. அரசுப்பதவி, அரசியல் இரண்டிலும் அவருக்கு ஆர்வமிருக்கவில்லை. கம்யூனிஸ்டுக் கட்சியுடன் அணுக்கமானவராக திகழ்ந்தார். இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடின் பிரியத்துக்குரியவராக இருந்தார். ஆனால் கட்சியில் சேரவோ, பதவிகள் பெறவோ விரும்பவில்லை. இ.எம்.எஸ் அளித்த வாய்ப்புகளை நிராகரித்தார். மாயாவதி அவரை ராஜ்யசபா எம்.பி ஆக்க விரும்பியபோதும் நிராகரித்தார்.

குஞ்ஞாமன் தன் எதிர் நூலில் தன் மனநிலைகளை எழுதுகிறார். எங்கும் பணியாமலிருப்பது, எதனுடனும் ஒத்துப்போகாமலிருப்பதுதான் சிறந்த நிலைபாடு என்கிறார். ‘எவர்மேலும் மதிப்பு கொள்ளாமலிருங்கள், எவரிடமும் பிரியம் கொள்ளாமலிருங்கள்’ என்கிறார். அவருடையது ஒரு அவநம்பிக்கைவாதம். ஆனால் அவருடைய வாழ்க்கை மிகப்பெரிய அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்புக்கான சான்றாகவும் திகழ்கிறது

குஞ்ஞாமன் இடதுசாரி அரசியல் கொண்டவர். ஆனால் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதலாளித்துவக் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்துவந்தார். கம்யூனிஸ்டுக்கட்சி தலித்துக்களை புறக்கணிக்கிறது என்னும் எண்ணமும் கொண்டிருந்தார். இந்தியாவில் வறுமை திட்டமிட்டு நிலைநிறுத்தப்படுகிறது என்றும், அது இந்தியத் தொழிற்சூழலின் தேவைக்காக என்றும் வாதிட்டு வந்தார்.

குஞ்ஞாமன் தன் 74 ஆம் அகவையில் மறைந்தார். ஒரு நண்பரை பார்க்கவேண்டும் என்று காலையில் இல்லத்துக்கு வரசோல்லியிருந்தார். அவர் மனைவி ரோகிணி அப்போது வீட்டில் இல்லை, அவர் சிகிச்சைக்காக பாலக்காடு சென்றிருந்தார். காலையில் வந்த நண்பர் கதவை தட்டி அது திறக்காமலானதும் போலீஸை அழைத்தார். கதவை உடைத்துத் திறந்து உள்ளே சென்றனர். குஞ்ஞாமன் சமையலறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டிருந்தார். “நெடுநாட்களாக நினைத்த விஷயம் இது. இதற்கு எவரும் பொறுப்பல்ல” என எழுதிய குறிப்பு கிடைத்தது

குஞ்ஞாமனின் சாவுக்கு பலவகையான காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அவர் அப்படி உலகியல் சார்ந்த ஏமாற்றங்களுடன் இருக்கவில்லை. உயர்பதவிகளில் இருந்திருக்கிறார். குடும்பச்சிக்கல்களே இல்லை. உடல்நலகுறைவும் இல்லை. தற்கொலைக்காக வழக்கமான காரணங்கள் எவையுமே இல்லை. வெறும் சலிப்புதான் காரணம் என ஒரு குறிப்பு அவருடைய அணுக்கநண்பரால் எழுதப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் தலைசிறந்த இதயமருத்துவரான  செறியான் தற்கொலை செய்துகொண்டபோதும் இதுவே சொல்லப்பட்டது- சலிப்பு

ஆனால் நீண்ட போராட்டமாக வாழ்க்கையை ஆக்கிக்கொண்டவர் எப்போது அந்தச் சலிப்பை அடைந்திருப்பார்?

முந்தைய கட்டுரைஜார்ஜ் ஸ்தோஷ்
அடுத்த கட்டுரைதிருவனந்தபுரத்தில் ஒரு மலையாள உரை