கனவைப் பயில்தல்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

ஆலயக் கலை நிகழ்வில் கலந்து கொள்வது குறித்து வீட்டிலும் நண்பர்களுடனும் பேசிக் கொண்டிருந்த போது உடனடியாக அனைவரும் எழுப்பிய ஐயம் ஆலயம் குறித்து அறிந்து கொள்வதற்கு ஒரு பயிற்சி வகுப்பின் தேவை என்ன என்பதே.

இன்றைய சூழலில் தன் சொந்த மரபு குறித்து அறிய விரும்பும் ஒருவர் எத்தனை தடைகளை தாண்ட வேண்டியிருக்கிறது. நவீன அறிவியலில் வைத்து தான் அத்தனை கேள்விகளுக்கும் விடைகளைஅடைய  முடியும் என ஒரு தரப்பின் மூர்க்கம் முகத்தில் ஓங்கி அறைகிறது நவீன தொழில் நுட்பத்தின் சம கால வெற்றிகள்  அந்த மூர்க்கத்துக்கு மேலும் வலு சேர்கிறது.

மேலதிகமாக அரசியல் தரப்புகள் நம் மரபைச் சீண்டியும் உதாசீனப்படுத்தியும் ஒரு வலுவான தாழ்வுணர்ச்சியை நமக்குள் உருவாக்கி விட்டன.  மரபு குறித்து அறிய விரும்பும் ஒருவர் இவற்றை கடப்பது கடினம். இவற்றை கடந்து மரபு என்னும் பெயரில் உள்ளே உலவும் போலி குருமார்களை கடப்பது மேலும் கடினம்.

இவ்வளவு இடர்களை தாண்டியும் இவற்றுக்கு அப்பால் என அறிதலுக்கான ஒரு விழைவு உள்ளிருந்து உழற்றுகிறது பல்லியின் வால் அறுபட்டு மீண்டும் மீண்டும் முளைப்பது போல.

இருண்ட ஆழத்தில் வெளிச்சம் பாய்ச்சுவது போல திரு ஜெயக்குமார் அவர்கள் ஆலய வகுப்பின் மூன்று நாட்களையும் மிக  சிறப்பாக கையாண்டார் அவருடைய ஆய்வின் ஆழமும் அகலமும் பிரமிக்க வைத்தது.

 ஆலயம் என்கிற சொல்  ஆன்மாவை லய படுத்துதல் என்கிற பொருளில் அமைகிறது  தொடர்ச்சியாக பல்வேறு சொற்கள்  ஆலயத்தை சுட்டுவதையும் அவை அனைத்தும் பல்வேறு மொழி வடிவங்களில் புழங்கி அவை வடமொழியால் தொகுக்க பட்டுள்ளதையும் விளக்கினார்.

நாம்  இறைவனை காண்பது போல் இறைவனும் நம்மை காணுதல் அவசியம் என்கிற அவரது வரி மனதில் வெகுவாக தங்கி விட்ட ஒன்று.

Tangible heritage என கோவில்களை குறிப்பிட்டதுடன் பக்தி இலக்கிய காலகட்டமான ஐந்தாம் நூற்றாண்டு முதல் கோவில்கள் அமைக்கப்பட்டதையும் ஆரம்பத்தில் உலோகம்,செங்கல், மரம் என முழு வடிவு இல்லாமல் கோவில்கள் அமைக்கப்பட்டு தொடர்ச்சியான முன்னெடுப்பால் குடைவரை கோவில்,ஒற்றைக்கல் கோவில்,கட்டப்பட்ட கோவில் என விரிவு கொள்வதையும் விளக்கினார்,இந்த கோவில்களை அமைப்பதில் பல்லவர் மற்றும் பாண்டிய மன்னர்களின் பங்கு குறித்தும் அறிய முடிந்தது.

கோவில்களை அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம், சிற்ப சாஸ்திரம் மற்றும் ஆகம சாஸ்திரம் வகிக்கும் பங்கு என்ன என்பதையும் ஒரு கோவிலின் வரைபடம் என்பது முதலாவதாக கோபுரம், பலிப்பீடம், துவஜஸ்தம்பம், முகமண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், இறுதியாக கருவறை என நீள்வதையும் விளக்கினார் கருவறை சுற்றி உள்ள கோஷ்டம் எனும் பகுதியில் சிற்பங்கள் அமைக்கப்படுவதையும்,ஆரம்ப கால கோவில்கள் மிக எளிமையான முறையில் அமைந்திருப்பதும் மெல்ல மெல்ல அவை பொலிந்து  பேரழகு கொள்வதையும் கால தொடர்ச்சியில் அறிய முடிந்தது.

அதே போல் விமான அமைப்பு குறித்தும் மேலிருந்து கீழாக அவை கொள்ளும் வடிவு அதன் பாகங்களையும் விளக்கினார், பின்னர் கோவிலில் அமைக்கப்பட்டிருக்கும் சிற்ப வடிவு குறித்து  விரிவாக பேசப்பட்டது, கோவிலின் சிற்பங்கள் அனைத்துமே நம்முடைய இந்திய தரிசன,தத்துவ ,தொன்ம கதைகளின் கலை வடிவங்களே என தோன்றும் வகையில்  ஒவ்வொரு சிற்பமாக விளக்கிக் கொண்டே இருந்தார்.

இந்த வகுப்புக்கு வருவதற்கு முன் ஆறு வழிபாட்டு முறைகள் (சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம், காணாபத்யம்) அதே போல் ஜைன,பௌத்த,சீக்கிய மரபு குறித்த சிறு அறிமுகம் ,ஆறு  தரிசன முறைகள் மற்றும் நம்முடைய தொன்ம கதைகள் குறித்து ஒரு அறிமுகம் இருக்கும் போது நம்முடைய சிற்பங்கள் மற்றும் கோவில்கள் அமைக்கப்பட்டிருப்பதன் உட் பொருளை உள்வாங்குதல் இயலும்.

எத்தனை எத்தனை தெய்வ உரு சிற்பங்கள் குறிப்பாக அவர் காட்டி தந்த வடுவூர் ராம பிரானின் திருவுரு பேரழகு, பேசும் ஒவ்வொரு தலைப்புக்கும் அதை குறித்து கொள்வதற்கான புத்தகங்களை பரிந்துரைத்து கொண்டே வந்தார்.

Iconography குறித்த வகுப்பில் நம்முடைய தெய்வ உருக்கள் அமைந்திருக்கும் நிலை குறித்து விளக்கினார் இறைவியார் வரிசையானது அஞ்சல் அருளால் முத்திரையில் திகழ்வதும் (சமஸ்க்ருதத்தில் அபயஹஸ்தம்) விரல்கள் கொள்ளும் இணைவு இப்படியாக தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம் அமைந்த கோலம் என தெய்வ உருக்களின்  அமைப்பு முறைகளை விளக்கிக் கொண்டே வந்தார்.

உட்பொருள்,தொன்மம்,மற்றும் சிற்பம் யோகத்தில்  அமர்ந்த நிலையிலிருந்து அது மாலின் சிற்பம்,சிவனின் சிற்பம்,முருகனின் சிற்பம் என  புரிந்து கொள்ள பெரிதும் உதவியது iconography குறித்த அமர்வு.ஒரு சுவர் மற்றும் எதிர் சுவருக்கு மத்தியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் intimate communication-  இனி  புரிந்து கொள்ள முடியும்.

இந்த கலை செல்வங்களை நாம் எப்படியெல்லாம் அவமதிக்கிறோம் என்பதையும் காட்டி சென்றார்.காஞ்சி, பேலூர், ஹளபீடு, தஞ்சை, தாராசுரம் என இன்னும் சொல்லி முடிக்க முடியாத பல இடங்களை சொல்லிக் கொண்டே சென்றார்.

இப்படி ஒரு ஆசிரியரும் சூழலும் அமையும் போது உள்ளுக்குள் அப்படியும் இப்படியுமாக  சேர்த்து வைத்திருந்த தகவல்கள் அறிவாக ஒரு சரியான வரிசையில்(rhythm ) அமைவதை உணர முடிந்தது.மிகவும் இளையவர்களை பார்க்க முடிந்தது, அவர்களின் வயதுக்கு அத்துணை நேரம் அவர்கள் அமர்ந்து கேட்டது மிக ஆர்வமூட்டக்கூடியதாக அமைந்தது.வேலை,குடும்பம்,சூழல் என கிட்டத்தட்ட மனம் கற்பாறையாக மாறி விட்டதாக நினைத்திருந்த நிலையில் இந்த வகுப்பு உள்ளுக்குள் ஒரு அருவி நிறைந்து வழியும் இனிமையை நிறைத்தது.

வகுப்புகள் முடிந்து உணவு இடைவேளையில் திரு ஜெயக்குமார் அவர்கள் சொல்லி கொண்டிருந்தார் இந்த எதிர்மறை  சூழலில் நீங்கள் அமைத்து தரும் இந்த வகுப்புகள் சமூக மனதில் ஏற்படுத்தும் நேர்மறையான விளைவுகள் இருபது ஆண்டுகளுக்கு பிறகு புரிந்து கொள்ள முடியும் என.

நிதர்சனமான சொற்கள் மரபை உள்வாங்க முடியாமல், இவ்வளவு கலை செல்வங்களையும் எப்படி அர்த்த படுத்தி கொள்வது என திகைத்து நிற்க்கும் நவீன மனத்துக்கு எவ்வளவு பொன்னான வாய்ப்பு இது.

சொல்லி கொண்டே போகலாம் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன், ஆசிரியர் ஜெய குமாருக்கு நன்றி.

வழக்கம் போல் உங்களுக்கு மனம் நிறைந்த அன்பும் வணக்கமும்.

அன்புடன் 

சந்தோஷ் 

அன்புள்ள சந்தோஷ்,

பயிற்சிவகுப்புகள் என்று சொல்லும்போது உடனே எழும் எதிர்வினைகள் என்னென்ன என்று பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். பாமரர்களின் முதல் எதிர்வினை ‘இதுக்கு அந்த தூரம் போகணுமா?’ என்பது. அவர்களிடம் சாமி கும்பிட திருப்பதி செல்கிறோம் என்று சொன்னால் நல்லது என்பார்கள். அது அவர்களும் செல்வது. தங்களால் செய்யப்படாத ஒன்றை இன்னொருவர் செய்தால் வரும் குழப்பம். என்ன சிக்கல் என்றால் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு பாமரரும் உண்டு. அவர் அந்த பாமரக்குரலுடன் இணைந்துகொள்வார். அவருக்குள் உள்ள கனவுகாணும் மனிதர், அறிவியக்கவாதியை சமயங்களில் அடக்கியும் விடுவார். இது அடிக்கடி நிகழ்கிறது. அந்தப் பாமரரை உள்ளும் புறமும் வெல்லாமல் உருப்படியான வாழ்க்கையை வாழவே முடியாது.

அடுத்த வினா, அரைகுறைகள் எழுப்புவது. ‘இதெல்லாம் புக்ஸ்லேயே படிச்சுக்கலாம்’ அல்லது அண்மைக்காலமாக ‘ஆன்லைன்லயே சொல்லித்தரான்’. புத்தகங்களில் படித்துத் தெரிந்துகொண்ட, ஆன்லைனில் கேட்டு அறிஞரான ஒரே ஒருவரைச் சுட்டிக்காட்டுங்கள் என்பதே அதற்கான பதில். சொல்பவருக்கு இடம் வலம் தெரிந்திருக்காது. ஆனால் அத்தனை தன்னம்பிக்கை இருக்கும். இத்தகைய கல்விகளை நேரடியாக ஓர் ஆசிரியரிடமிருந்து, இதற்கென்றே சென்று அமர்ந்து, முழுமையாக உளமளித்து கற்றாலொழிய முதல் தடையை தாண்டவே முடியாது. நூல்கள் வெறும் செய்திகளையே தரும். ஆசிரியரில்லையேல் அடிப்படையான பிழைகள் உருவாகி அவை மனதில் விரிந்து பெருகிக்கொண்டே செல்லும். முதல் தடையைக் கடந்து கற்கும் தகுதியை, கற்கும் உளநிலையை அடைந்தபின்  பயணங்களும் நூல்களும் உதவலாம். அப்போதுகூட முழுமையாக அவை போதாது. சீரான இடைவெளியில் மீண்டும் வகுப்புகள் தேவைப்படும். இல்லையேல் அந்த ஆர்வம் மெல்லமெல்ல இல்லாமலாகும். சில ஆண்டுகளில் அந்த ஞானம் உங்கள் ஆளுமையே என ஆனபின் வகுப்புகள் தேவைப்படா.

அப்போதுகூட இப்பயிற்சி வகுப்புகள் வழியாக அறிமுகமாகும் நண்பர் குழாம் மிகமிக இன்றியமையாதது. அக்குழு நீடிப்பதுதான் நாம் தொடர்ச்சியாக இவற்றைக் கற்கிறோமா என்பதற்கான அடிப்படை. பெரும்பாலான செயல்கள் கூட்டாக மட்டுமே முன்னகர முடியும். தனியாகச் செய்யப்படும் செயல்களில் ஊக்கம் படிப்படியாகத் தளரும். பொதுவாக அறிவியக்கச் செயல்பாடுகளிலிருப்பவர்களுக்கு உளச்சோர்வு, வெறுமையுணர்வும் உருவாகும். நம் சூழலில் இருக்கும் சாதாரணர்கள் அளிக்கும் அழுத்தத்தின் விளைவு அது. திரும்பத் திரும்ப ‘இதெல்லாம் பயனற்றது’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். கேலிசெய்கிறார்கள். நாம் எப்படியிருந்தாலும் நம்மையறியாமலேயே சோர்வை அடைகிறோம். இன்னொன்று, இங்கே அரசியல் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள கடுமையான எதிர்மறை மனநிலை, சமூக ஊடகங்கள் முழுக்க நிறைந்திருக்கும் வசைகளும் காழ்ப்புகளும் உருவாக்கும் கசப்பு மனநிலை. அதை வெல்ல ஒரே வழி நமக்குரிய திரளுடன் இருப்பது. நம்மைப்போன்ற நண்பர்களை அடைவது. அவர்களுடன் இணைந்திருப்பது.  இப்பயிற்சி வகுப்புகளின் நோக்கங்களில் ஒன்று  அத்தகையோரை திரட்டி ஒருவரோடொருவர் அறிமுகம் செய்வதுதான்.

நம் மரபைப் பற்றிய அவநம்பிக்கை அல்லது விலக்கம் அல்லது ஏளனம் நம் சூழலில் பல காலமாக உருவானது. அதற்கான காரணங்கள் பல. முதன்மைக் காரணம், நம் மரபில் இருக்கும் தேங்கிய தன்மை. அதன் பழமைவாதப் பார்வை. அந்த பழமைவாதப் பார்வையில் சிக்கிக் கொண்டவர்களுக்கு அக முன்னேற்றம் இருக்காது. சிந்தனையிலும் சரி, உணர்வுகளிம் சரி. அந்த பழமைவாதப் பார்வை நமக்கு குடும்பம், சாதி ஆகியவற்றால் அளிக்கப்படுகிறது. நாம் அவற்றை மீறியே நம்மை அமைத்துக் கொள்கிறோம். பழமைவாதத்துக்கு எதிரான மனநிலை காலப்போக்கில் மரபுக்கு எதிரான பார்வையாக ஆகிவிடுகிறது. நம் அரசியலியக்கங்கள் பழமைவாதத்தை எதிர்த்து உருவானவை. அவை சிந்தனைத் தேக்கமடைந்து மரபு எதிர்ப்பியக்கங்களாக திரிந்துவிட்டன.  அவற்றின் ஆழ்ந்த செல்வாக்கு நம் இளைய தலைமுறையினரிடம் வலுவாக உள்ளது.

பழமைவாதத்துடன் அகத்தே போராடி எளிய முறையில் ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ள முயன்றுகொண்டிருக்கும் பாமரர்களே மரபு எதிர்ப்பை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஐரோப்பாவையோ அமெரிக்காவையோ சுட்டிக்காட்டுவார்கள். உண்மையாகவே ஐரோப்பாவின் சிந்தனை எப்படி செயல்படுகிறது என்று தெரிந்தவர்களுக்கு  பழமைவாதம் வேறு, மரபு வேறு என்று தெரிந்திருக்கும். மரபை சரிவரப் புரிந்து கொள்வது பழமைவாதத்தை எதிர்ப்பதுதான் என்றும் தெரிந்திருக்கும். மரபிலுள்ள கலை, இலக்கியம், பண்பாட்டுக்கூறுகள், தத்துவம் ஆகியவற்றை முறையாக அறியும் ஒருவர் அதிலிருந்து மிக வலுவான முன்னகர்வை நிகழ்த்த முடியும். சமகாலக் கலை, சமகால பண்பாடு, சமகால தத்துவம் ஆகியவை மரபில் இருந்தே முளைத்து முன்னகர்ந்து உருவாகி வர முடியும். ஏனென்றால் அவை தொடர்ச்சிகள். வேரில்லாமல் அவை உருவாகா. ஐரோப்பாவில் அவ்வண்ணம்தான் அவை உருவாயின. பிளேட்டோ இல்லாமல் ஐரோப்பியச் சிந்தனை இல்லை என்றால் சங்கரர் இல்லாமல் இந்தியச் சிந்தனை இல்லைதான். மைக்கலாஞ்சலோவின் டேவிட்டை ரசிக்கத்தெரியாத ஐரோப்பியன் கலைரசிகன் அல்ல என்றால் மதுரை அகோர வீரபத்ரரை ரசிக்கத்தெரியாத இந்தியன் கலைரசிகன் அல்ல.

ஆலயக்கலைப் பயிற்சி வெறுமே கோயில்களைப் பார்ப்பது அல்ல. ஆலயப்பயிற்சி என்பது நம் மரபின் மகத்தான கலையை அறிமுகம் செய்துகொள்வது. நம் மரபு உருவாக்கிய குறியீட்டுத் தொகுப்பை அறிந்துகொள்வது. நம் மரபை உருவாக்கிய அடிப்படையான ஆழ்படிம உருவகங்களை அறிந்துகொள்வது. அதன் வழியாக நம் பண்பாட்டின் அடித்தளத்தை, நம் பண்பாட்டின் வரலாற்றை புரிந்துகொள்ளுவது. அந்தப் பயிற்சி இல்லாதவரும் அந்த பண்பாட்டில்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் வாழ்வது எதன்மேல் என்று தெரியவில்லை, அவ்வளவுதான் வேறுபாடு. இங்கே மரபை தெரிந்து கொள்ளாமலிருக்கும் எவரும் மரபுக்கு வெளியே வாழவில்லை. அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் எல்லாமே மரபில்தான் நிகழ்கின்றன. நாம் அவற்றை அறிவுபூர்வமாக முறையாக கற்றுக்கொள்ள முயல்கிறோம் அவ்வளவுதான்.

ஆலயக்கலையை அறிவதற்கு நவீன கல்விமுறைகள் இங்கில்லை என்பதும் உண்மை. அதை பழமைவாதத்துடனும் நம்பிக்கைகளுடனும் இணைத்துச் சொல்லித்தரும் இடங்களே மிகுதி. அங்கே நவீனப் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை இருக்காது. அறிவியல் நோக்கு இருக்காது. அங்கே ஒரு நவீன இளைஞன் எதையும் கற்கமுடியாது. அவனுக்கு ஒவ்வாமையே உருவாகும். ஆகவேதான் இப்பயிற்சிகள் ஜெயக்குமார் போன்ற ஒரு நவீன இலக்கியம்- நவீன சிந்தனை அறிந்த இளம் ஆசிரியரால் கற்பிக்கப்படுகின்றன. இன்று இதைப்போல் இன்னொரு வாய்ப்பு நானறிந்து தமிழகத்தில் இல்லை.

இக்கல்வி மதம்சார்ந்தது அல்ல. இந்தியாவிலுள்ள சிந்திக்கும் மனிதர் அனைவருக்குமானது. இந்துக்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர் இஸ்லாமியர் அனைவருக்கும் தேவையானது. வழிபாடு அல்லது நம்பிக்கை சார்ந்த எந்தக் கட்டாயங்களுமில்லை. ஆலயக்கலைக் கல்வியை இந்தியத் தத்துவக் கல்வியுடனும், ஓவியக்கலைக் கல்வியுடனும் இணைத்து புரிந்துகொள்பவர்களுக்கு மிகப்பெரிய ஓர் அறிவுலகம்- கலையுலகம் திறந்துகொள்கிறது. 

ஜெ

முந்தைய கட்டுரைதி.ஜ.ரங்கநாதன்
அடுத்த கட்டுரைவெண்முரசின் வழியில்…