செயல் எழல், கடிதம்

.

அன்பிற்குரிய ஆசிரியருக்கு,

செயல் எழல், என்று ஜெ. கலந்து கொள்ளும் ஒரு நாள் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெறுகிறது, நீங்க வரிங்களா?” என்ற நண்பர் வேலாயுதம் பெரியசாமி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார், நீங்கள் கலந்து கொள்ளும் எந்த கூட்டத்தையும் தவற விடக்கூடாது என்பதால் உடனே “வருகிறேன்” என்று ஒப்புக்கொண்டேன். பின் உங்கள் தளத்தின் மூலம் தான் தெரிந்தது அது களப்பணியாளர்களுக்கான கூட்டம் என்று, அதற்கு “நா வரலாமா?” என்று நண்பரிடம் கேட்டேன், “அதெலாம் வரலாம், நா மட்டும் என்ன களப்பணியாளரா” என்று நண்பர் கொடுத்த உற்சாகத்தில் கலந்து கொள்ள தயாரானேன்.

நானும் நண்பர் ராஜேஷும் பெங்களூரிலிருந்து கிளம்பி நிகழ்விடமான SKP கல்லூரிக்கு வெள்ளி இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் உள்ளே வரும் பொழுது கூக்கூ சிவராஜ் அண்ணா மற்றும் சிவகுருநாதன் அவர்கள் எதிர்பட்டனர், எங்களைப் பார்த்து புன்னகைத்து  “சாப்டாச்சா?” என்று கேட்டார், அவருடன் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தோம் சட்டென தன் தோளில் இருந்த போர்வையை எடுத்து எனக்கு கொடுத்து “அங்கு குளிரும் இத வச்சுக்கோங்க” என்று கொடுத்தார், “உங்களுக்கு” என்று கேட்டேன் “அதெல்லாம் நான் பாத்துக்கிறேன், நீங்க வச்சுக்கோங்க” என்று கொடுத்து விட்டு சென்றார். அவரை நான் இப்பொழுதுதான் முதன் முதலில் பார்க்கிறேன் இந்த அக்கறையால் சட்டென அவரிடம் அணுகமாய் உணர்ந்தேன். இரவு வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு ஒன்றாக சேர்ந்து ஒரு வகுப்பறையில் உறங்கினோம்

மறுநாள் காலை குளித்து உடை மாற்றிவிட்டு நேராக உங்களைப் பார்ப்பதற்காக நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து நீங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தோம், கதவு மூடப்பட்டிருந்தது. சிவகுருநாதன் அவர்கள் உங்களுக்கான நூற்பாடையை வழங்க வந்திருந்தார், அந்த சாக்கில் நாங்களும் உங்கள் அறையில் நுழைந்து விட்டோம் அப்பொழுது நீங்கள் மிக தீவிரமாக மடிக்கணினியில் இயங்கிக் கொண்டிருந்தீர்கள்(அது ‘தமிழ் விக்கி’ பணி என்று பின்னர் உரையில் நீங்கள் குறிப்பிட்டீர்கள்), சட்டேன முகம் தூக்கி எங்களை நோக்கி புன்னகைத்தீர்கள், நாங்கள் உங்களிடம் கைகுலுக்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

அதன் பின் சரியாக 10:30 மணி அளவில் தாமரை அவர்களின் பாடலுடன் நிகழ்வு துவங்கியது. களப்பணியாளர்கள் தங்கள் பணியில் தொடர்ந்து செயல்படவும் சமூகத்தாலும் சில சமயம் தங்களால் தங்களுக்கே ஏற்படும் குழப்பத்திலிருந்தும் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொண்டு களப்பணியை சிறப்புற செய்வது என நீங்கள் ஐந்து விஷயங்களை குறிப்பிட்டு, அதற்கு தக்க எடுத்துக்காட்டுடன் உங்கள் உரையை நிகழ்த்தினீர்கள். நான் உங்களது எல்லா உரைகளையும் யூடுப்பில் பார்த்திருக்கிறேன், இந்த உரையே நீங்கள் ஆற்றியதில் தலை சிறந்த உரை என கூற முடியும்.என்னைப் போன்றவர்களுக்கே உங்களது உரை மிகுந்த உற்சாகத்தை அளித்ததேன்றால் அங்கிருந்து உரையை கேட்ட களப்பணியாளர்களுக்கு அது எத்தகைய நம்பிக்கையும் உத்வேகத்தையும் அளித்திருக்கும் என்று கற்பனை செய்ய முடிகிறது.

உணவு இடைவெளிக்கு பிறகு மூன்றரை மணி நேரம் நடந்த கேள்வி பதில் நிகழ்வு இந்த நாளின் உச்சமான ஒன்று, நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் விரிவாகவும் நகைச்சுவையாகவும் அளித்த பதிலை கேட்டு அரங்கே வெடித்து சிரித்துக் கொண்டிருந்தது. நிகழ்வில் நீங்கள் உங்கள் நண்பர்கள் அரங்கசாமி,சக்தி கிருஷ்ணன், ஈரோடு கிருஷ்ணன் ஆகியோருக்கும் களப்பணியாளர்கள் மதுமஞ்சரி,அன்புராஜ் மற்றும் குக்கூ நண்பர்களுக்கும் பொன்னாடை போற்றி கௌரவித்தீர்கள்.

இவர்கள் அனைவரையும் நான் இப்பொழுதுதான் முதன் முதலில் பார்க்கிறேன். மாலையில் புனேவிலிருந்து வந்திருந்த பவுல் இசைக்கலைஞர் ஸ்ரீவித்யா அவர்களின் தேவ குரலை கேட்டு மிகுந்த பரவசத்திற்கு உள்ளானேன். இந்த நாள் இதற்கு மேல் சிறப்புற முடியாது என்ற நினைத்திருந்த வேளையில் இரவு உணவிற்கு பின் உங்களது அறையில் அமர்ந்து நீங்கள் காந்தியின் வாரிசுகளை குறித்து எங்களிடம் ஒரு மணி நேரத்திற்கு மேல் உரையாடினீர்கள். காலையிலிருந்து தொடர்ந்து ஆறு மணி நேரமாக பேசிய பின்னும் இரவிலும் அமர்ந்து இவ்வளவு நேரம் எங்களுக்காக பேசினீர்கள்.

அன்று இரவு தூங்கவிடாமல் கிருஷ்ணன் சார் உங்களை திருவண்ணாமலைக்கு கூட்டிச்சென்று,நீங்கள் துறவியாக இருந்த பொழுது அலைந்த இடங்களை காட்ட சொல்லி வற்புறுத்தியதாக காலையில் கேள்வி பட்டோம். மறுநாள் காலையிலும் கிளாசிக் நாவல்கள் வாசிப்பு நீங்கள் பேசியவற்றை ஒன்றரை மணி நேரம் கேட்டு விட்டு தான் அங்கிருந்து நாங்கள் 11 பேராக கிளம்பி கிருஷ்ணன் சார் கூறிய திருநாதர் குன்றுக்கும் செஞ்சிக்கு அருகே இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டாபிராமன் கோயிலுக்கும் சென்று வந்தோம்.

ஊர் திரும்பும் முன்பாக வரும் வருடம் தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் உள்ள கிளாசிக் நாவல்களை வாசிக்க வேண்டும் எனவும் அதை குறித்து இரு மாதத்திற்கு ஒரு முறை நேரில் சந்தித்து விவாதித்துக் கொள்ள வேண்டும் எனவும் முடிவெடுத்து, அதற்கான புத்தக அட்டவணையும் சூமில் சந்தித்து உருவாக்க வேண்டும் என ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்துள்ளோம், “செயல் எழும்” எனும் நம்பிக்கையுடன்.

இப்படிக்கு

லால்குடி தினேஷ்

முந்தைய கட்டுரைநிகழ்வில்…
அடுத்த கட்டுரைநூல்கொடைகளின் பயன்