இலக்கியவாதியைக் காதலித்தல், கடிதம்

தாமரைக்கண்ணன்

அஜிதனின் காதல்

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

இந்த கடிதம் எழுத காரணமே அஜிதன் அவர்களின் காதல் தான். அஜிதனின் காதல் எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையை படித்த பிறகு மீளாத மெளனம் என்னை அடைந்தது. அழுகையை அடக்கவே முடியவில்லை. எத்தனையோ நாள் உங்கள் நாவல்களையும் சிறுகதைகளையும் படித்து கடிதங்கள் எழுத விழைவேன். ஆனால் ஒரு கடிதம் கூட எழுதவில்லை. என் அலட்சியமே அதற்கு காரணம்.

என் அப்பா ஒரு ஜவுளி கடை நடத்தும் வியாபாரி,வியாபாரத்தின் மேல்தான் உயிரையே வைத்துள்ளார் என்று சொல்லலாம். சிறுவயதிலிருந்து பெரும் கஷ்டங்களைப் பார்த்தவர், திருமணத்திற்கு பிறகும் நிம்மதியான வாழ்க்கை அமையவில்லைஅம்மாவின் உடல்நலக் குறைவு போன்று பல காரணம். நாங்கள் இரு பெண் குழந்தைகள், மிகவும் மனக் கஷ்டத்தில் தான் வளர்ந்தோம், பொருளாதார கஷ்டத்தை எங்களுக்கு அவர் தந்தது இல்லை. அமைதியான வீட்டுச் சூழலில் நாங்கள் வளரவில்லை.

 நான் 12ஆம் வகுப்பு முடிப்பதற்குள் எனக்கு திருமணம் செய்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார்கள், அம்மாவின் உடல்நலக் குறைவே காரணம். எங்களது மாமாவின் மகனுக்கு கொடுக்க முடிவு செய்தார்கள். 11 ஆம் வகுப்பு படிக்கும் போதே இது பற்றியான பேச்சுக்கள் என்னைச் சூழ, பயமும் பதட்டங்களும் சூழ்ந்தன. 11, 12ஆம் வகுப்புகளில் அதிக கவனம் செலுத்தாமல் இக்குழப்பங்களுக்கிடையே சிக்கி, மதிப்பெண்களும் குறைந்தது. பள்ளி படிப்பு முடிந்ததும் பக்கத்தில் உள்ள கலை கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்தேன். முதல் வருடம் முடிந்ததும் திருமணம், பின்பு மாப்பிள்ளையோடு டெல்லி செல்ல வேண்டும். ஒரு ஒப்புக்காக கல்லூரியில் சேர்த்தார்கள்

ஆனால் நடந்தது அனைத்துமே எதிர்மறையான நிகழ்வுகள். திருமணம் தடைபட்டது. மேலும் மனஅழுத்தம் ஆகியது. இலக்கியமே அதில் இருந்து விடுபட உதவியது. ஒவ்வொரு semester-ரிலும் என்ன novel வரும் drama வரும் என ஆவலுடன் அதைப் படிப்பேன். இளங்கலை முடித்ததும் முதுகலைக்காக பெரிய கல்லூரிகளில் வெளியூரில் படிக்க அனுமதி கிடைக்கவில்லை. மீண்டும் அருகில் உள்ள கல்லூரியிலேயே முதுகலை பயின்றேன். இரண்டாம் ஆண்டு இறுதியில் மறுபடியும் திருமணத்தின் பேச்சுக்கள், என்னுடைய மனநிலை பற்றியோ விருப்பங்கள் பற்றியோ எதுவிமே கேட்கவில்லை. இவர்களிடமிருந்து தப்பிக்கவே திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன் என சொல்லலாம்

ஒரு வருடக்காலம் முழுவதும் மாப்பிள்ளை தேடல் தொடர்ந்தது. எனக்கும் அப்பாவிற்கும் பெரும் சண்டைகள், அவரது கருத்துக்களையோ சண்டைகளையோ என்னால் தாங்க முடியவில்லை. அவர் அதை இவள் யாரோ சொல்லிக் கொடுத்துதான் இப்படி சண்டையிடுகிறாள் என்று கண்டித்தார்கள். என் மனநிலையையோ என் விருப்பங்களையோ கேட்கவில்லை,அப்பா அம்மாவின் முடிவுதான் எல்லாம் என்று வரும் மாப்பிள்ளைகளிடம் எல்லாம் சொல்வார். முதுகலை முடியும் போது பெண் பார்ப்பதற்கு தாமரைக்கண்ணனும் அவரது குடும்பமும் வந்திருத்தார்கள். பையனும் பெண்ணும் பேசிக் கட்டுமே என்று அவர்கள் சொல்ல என் அப்பா அவங்க என்ன பேச போறாங்க என்றார். நான் தயங்காமல் எழுந்துவிட்டேன். என் அப்பாவின் முறைப்பு தடையை மீறியும் நாங்கள் பேச தனி அறைக்குச் சென்றோம்.

இருவருக்குமே பதட்டம்அறிமுகம் ஆன பிறகு என்னிடம் கேட்ட அவரது முதல் கேள்வியே நீங்கள் இலக்கியம் படிப்பவர், உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார் என்று. Emily dickinson என்று கூறினேன். பின்பு அவர் தான் IT பணியில் இருப்பதாகவும் சம்பளம் 25,000, கம்பெனி சிறியது, மேலும் சம்பாதிக்க வேண்டும் என்றார். என்னுடைய ஆசான், நான் இருக்கும் இந்நிலைக்கு காரணம் ஆனவர் ஜெயமோகன் அவர்கள் , இலக்கியத்தில் நாட்டம் உண்டு என்றும் கூறினார். எனக்கு அது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. பின்பு என்னுடைய முதுகலை project பற்றி பேசிக்கொண்டு இருந்தோம், வேறு எதுவும் பேசவில்லை. உங்களது தொலைப்பேசி என் வேண்டும் என்று கேட்டார், நானும் தயங்காமல் கொடுத்துவிட்டேன். இனி இவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளே வந்தது.

என் அப்பாவிற்கு எப்பொழுதும் போல யோசனைகள் தான்,இந்த வரனிலும் பெரிதும் நாட்டம் இல்லை. என் அம்மாவிடம் முடிவாகச் சொல்லிவிட்டேன் இவரைத்தான் திருமணம் செய்வேன் இனி யாரையும் தேட வேண்டியதில்லை என்றேன். மாப்பிள்ளை வீட்டாருக்கு பதில் சொல்லாமல் காலம் கடத்தினார். ஒருவழியாக திருமணம் முடிவானது,  2018 நவம்பர் 13,14-ல் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு வந்தோம். உங்களிடன் என்னை அறிமுகம் செய்து வைத்தார், எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதுபோலவே தான் இருந்தது அஜிதன் அண்ணனின் திருமணம் நிச்சயத்தின் செய்தியும். பெரும் மகிழ்ச்சியோடு அவருக்கு வாழ்த்துக்கள் அனுப்பினேன். நீங்கள் கூறியது போலவே  ஊழ் எனும் விந்தையை பல நேரங்களில் எண்ணியது உண்டு. நம் முயற்சிக்கு அப்பால் வேறொன்று நிகழ்கிறது.

தெய்வா தாமரைக்கண்ணன் 

அன்புள்ள தெய்வா,

தாமரைக் கண்ணன் எனக்கு ஆர்வமுள்ள ஓர் இளைஞராக அறிமுகமானார். என் உரையாடல் ஒன்றில் நான் பேசிய அனைத்தையுமே அவர் சிறுகுறிப்புகளாக எடுத்திருந்தார். அதன்பின் முழு உரையாடலையும் விரிவான கட்டுரையாக எழுதிக்காட்டினார். அவர் மேல் எனக்கு பெரும் நம்பிக்கையும் ஈடுபாடும் வந்தது. இன்று ஆனந்தக் குமாரசாமியின் கட்டுரைகள் உட்பட முக்கியமான பல மொழியாக்கங்களைச் செய்துள்ளார். இன்னும் நீண்டதொலைவு செல்வார். அவருடன் நீங்களும் செல்வது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. மீண்டும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

ஜெ

சிவநடனம்- ஆனந்தகுமாரசாமி- தமிழில் தாமரைக்கண்ணன்  

புத்த வடிவத்தின் தோற்றுவாய்: ஆனந்த குமாரசாமி தமிழில் – தாமரைக்கண்ணன்

ஸ்ரீ-லக்ஷ்மி – ஆனந்த குமாரசாமி-தமிழில்: தாமரைக்கண்ணன்

ராஜபுத்திர ஓவியங்கள் – 1: ராஜஸ்தான், ஆனந்த குமாரசாமி– தமிழில் தாமரைக்கண்ணன்

இந்திய கலையின் நோக்கங்கள் ஆனந்த குமாரசாமி. தாமரைக்கண்ணன்

முந்தைய கட்டுரைமலாயில் சிகண்டி, ஒரு தொடக்கம்
அடுத்த கட்டுரையாளி நகர்