ஷாகீரின் கதைகள்: கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

மலேசிய எழுத்தாளர்  எஸ்.எம்.ஷாகீர் கதைகளை வல்லினம் இதழில் வாசித்தேன். (அதில் ஒரு குளறுபடி செய்திருக்கிறார்கள். கதைகளின் அருகே தலைப்புடன் அதை எழுதியவர் பெயர் இல்லாமல் மொழிபெயர்ப்பாளர் பெயரை அளித்திருக்கிறார்கள். எழுதியவர் பெயர் கடைசியில் சிறிதாக உள்ளது. இது மிகப்பெரிய பிழை). ஒருவேளை இதனாலேயே பலரும் இக்கதைகளை வாசிக்கவில்லை என நினைக்கிறேன்.

ஷாகீரின் கதைகளை அசாதாரணமானவை என்று சொல்ல மாட்டேன். அவை சுருக்கமான நம்பகமான வாழ்க்கைச்சித்திரங்களை அளிக்கின்றன. குறிப்பாக வளர்ந்துவரும் ஒரு தொழில்மயச் சமூகத்தில் எது மேலே செல்கிறது எது அழிகிறது என்பதைச் சொல்லும் கதையான இழிந்தவீடு . மலேசியாவில் மகாதீர் முகமது குவாலாலம்பூர் நகர் வழியாக ஓடும் கூவம் போன்ற ஒரு சாக்கடையை மாபெரும் கண்ணாடியால் மூடி அதன்மேல் ஆடம்பர விடுதிகளை அமைத்துவிட திட்டமிட்டார் என்ற செய்தியை அறிந்திருக்கிறேன். கண்ணாடிபோட்டு மூடிவிட்டால் சாக்கடை அழகான நதிதானே? இதை ஏன் அங்கிருந்தவர்கள் ஒரு நல்ல கதையாக எழுதவில்லை என்று இழிந்தவீடு கதையை வாசிக்கையில் நினைத்துக்கொண்டேன்

 ‘’எனக்கு கம்பத்தைப் பற்றிய கதைகளே வேண்டாம். ரொம்பவும் மலாய் தன்மையாக இருக்கிறது. நாம் புதிய சமூகத்தை உருவாக்கும் கொள்கை கொண்ட கதைகளைக் காட்ட வேண்டும். சமூகத்தின் எல்லா முகங்களையும் காட்டும் கதைகளாக இருக்க வேண்டும். நாட்டை வெறும் செத்துப் போன நினைவுகளையும்ரோமான்டிசமும் கொண்ட மலாய் கம்பமாக உருவகப்படுத்தாமல் நவீன உலகத் தோற்றம் கொண்டதாகக் காட்ட வேண்டும்என்று மலேசியாவின் வாழ்க்கையை நிராகரிக்கும் திரைப்படத் தயாரிப்பாளர் இன்றைய மலேசியாவின் உண்மையான ஒரு முகம். 

மரக்கிளையில் வெறி பிடித்து ஆடிய மோகினி, தென்னைமரத் தண்டளவு இருந்த பாம்பு, சம்புக்கோழிகளைத் துரத்தி வந்து வலையில் மோதிய கறுப்பு மனிதன், நடுக்காட்டில் ஒலித்த சிறுவனின் அழுகுரல், நெருப்பு போல சுடர்விட்டு எரிந்த வரையாட்டின் கண்கள், கொட்டகையைச் சுற்றிலும் உறுமிக் கொண்டு திரிந்த புலி, நள்ளிரவில் வெட்டுமர லாரியைக் கவிழ்த்த மதம் பிடித்த யானை, காட்டுப் பன்றியை விழுங்கிய மலைப்பாம்பு ஆகியவற்றாலான மலேசியா மகாதீரின் சாக்கடை ஆற்றைப்போல கண்ணாடிக்குள் மறைக்கப்பட்டுள்ளன   

ஆனால் அந்த நினைவின் ரகசியச் சாக்கடையில் இருந்து உருவாகும் ஒன்று அவர்களின் நவீன படுக்கையறைக்குள் நுழையாமல் தடுக்க எந்த தடுப்பும் இல்லை. ஷாகீர் அந்த ஆழ்நினைவை முன்வைக்கும் கதைசொல்லி (திரையில் அசையும் காட்சிகள்)

முக்கியமான ஒரு நவீன எழுத்தாளரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

ஶ்ரீனிவாஸ்

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விழாவுக்கு வருகைதரும் எஸ்.எம்.ஷாகீர் அவர்களின் கதை ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. சென்னையை பற்றிய கதை. ‘மலைக்கவைக்கும் மாயம் கொண்டஒரு பயணத்தை எதிர்பார்த்து சென்னைக்கு வரும் எழுத்தாளர் உண்மையிலேயே மலைக்கவைக்கும் தொன்மையான மகாபலிபுரம் வரை செல்கிறார். ஆனால் எல்லாமே இயல்பானவையாக இருக்கும் அந்த நிலையில் வரலாறும் சாதாரணமான ஒரு அன்றாடமாக ஆகிவிடுகிறது. அரிய கதை

செந்தில் குமார்

எஸ்.எம்.ஷாகீர்: தமிழ் விக்கி 

எஸ்.எம்.ஷாகீர் தமிழில் கதைகள்

முந்தைய கட்டுரைஅல் கிஸா – தன்யா
அடுத்த கட்டுரைஜார்ஜ் ஸ்தோஷ்