வெண்முரசின் அடுக்குகள்

அன்புள்ள ஜெ,

இந்த வருட துவக்கத்தில் இருந்தே வெண்முரசு வாசிப்புதான். சொல்லப் போனால் நான் மீண்டும் மீண்டும் வெண்முரசை மட்டுமே வாசிக்கிறேன். மாமலர் வெளியிட்ட வருடத்தில் இருந்து.

முதலில் வாங்கியது மாமலர்.பல முறை வாசித்த பின் நீலம் வாங்கினேன்.(நீலமும் மாமலர் புத்தகமும் கிட்டத்தட்ட கந்தலாகி விட்டன) என் மகன் வயிற்றில் இருந்த போது நீலம் மட்டுமே வாசித்தேன். எத்தனை முறை என நினைவில் இல்லைசமீபமாக பிரயாகை, வெய்யோன் வாங்கினேன்.

பிரயாகையின் துவக்க வரியை ஒரு நாள் முழுக்க தூக்கித் திரிந்தேன். பின் ஒரு செறிவுடன் உள்ளே சென்று விட்டேன்.ஆனால் வெய்யோனின் துவக்க வரிகளை மூன்று நாட்கள் ஆகியும் இன்னும் என்னால் கடக்கவே இயலவில்லை ஆசானே.

பிடித்த பாடல் வரிகள் மனதிற்குள் (எனக்கு மண்டைக்குள் ஒலிக்கும்) பாடிக்கொண்டே இருக்குமே அதே போல திரும்ப திரும்ப மூன்று நாளாக அந்த வரிகள் மட்டுமே ஒலிக்கின்றன. எங்கே இருந்தாலும் என்ன செய்தாலும் என்னுடனே இருக்கின்றன.

செங்கதிர் மைந்தா, தன் நிழலால் துரத்தப்படுபவனுக்கு இருளன்றி ஒளிவிடம் ஏது? விழிமுனைகளன்றி பகையேது? ஆடியன்றி கூற்றமேது?”

புத்தகத்தின் அடுத்த வரிக்கு நகரவே முடியவில்லை.

இந்நாட்களில் நான் தங்களுக்கு கடிதம் எழுதவே இல்லைதினமும் தங்களிடம் தான் பேசிக் கொண்டே இருக்கிறேன் எனும் மனநிலையில் இருக்கிறேன்.இது வெண்முரசினால் வந்ததாக இருக்கலாம்.வெண்முரசைப் போல இனிய, பிரியமான, நிறைவான ஒன்று இப்புவியில் இல்லை என்பேன்.என் எல்லா நாட்களிலும் அது மட்டுமே….

ஆகப் பெரிய நன்றி ..

சரண்யா.

அன்புள்ள சரண்யா,

நீங்கள் வெண்முரசு வாசிக்கும் அடுக்கு வியப்பளிக்கிறது. நான் எப்போதுமே சொல்லிவரும் ஒன்றுண்டு. வெண்முரசின் எல்லா நாவல்களும் தனி நாவல்கள். நாவல்களுக்கான கட்டமைப்பும் முழுமையும் கொண்டவை. முதற்கனல் முதல் வரை எல்லா நாவல்களும் ஒரு தொடர்கதையாக வாசிக்கப்படலாம். எல்லா நாவல்களும் தனித்தனியான நாவல்களும் கூடத்தான். எந்த நாவலையும் தொடங்கி எங்கு வேண்டுமென்றாலும் செல்லமுடியும். அத்தகைய வாசிப்புகள் முற்றிலும் புதியனவாகவும் அமையும்

ஜெ

வெண்முரசு வரிசை வாங்க  

முந்தைய கட்டுரையுவன் விழா உரைகள்
அடுத்த கட்டுரைதன்னிலிருந்து விடுதலை, கடிதம்