ஆதிகேசவனும் நாமும்

முற்றழிக!

அன்புள்ள ஆசிரியருக்கு

உங்களுடைய எழுத்துக்களில் அடிக்கடி காணப்படும் திருவட்டாறு கோவிலுக்கு சென்றதில்லை என்றாலும் உங்களை படித்ததால் மனதிற்கு மிகவும் அணுக்கமான கோவில். 

இது போன்ற செய்திகளை படிக்கும் போது வருத்தமும் கோபமும் வருகிறது. கோவில் சொத்துக்களை அபகரிக்க மனமும் துணிவும் எப்படி வருகிறது. சட்டமும் காவல்துறையும் இவர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை.

திருவட்டாறு கோவில் நகைகளை  மீட்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

https://dinamalarandroidapp.page.link/PwB1mnoUyftHWEkT9

Dinamalar

அன்புடன்

காந்தநாதன்

வயநாடு

அன்புள்ள காத்தநாதன்,

முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்றுண்டு. இச்செய்தி ஏன் மக்களை கொதிக்கச் செய்யவில்லை? ஏன் இச்செய்தியால் அரசியல்வாதிகளுக்கு மக்கள் நெருக்கடி அளிக்கவில்லை? மக்கள் ஏன் இதை எளிதாக மறந்துவிடுகிறார்கள்? உண்மையிலேயே மக்கள் கொந்தளித்திருந்தால் அரசியல்வாதிகள் இப்படி விட்டிருக்க மாட்டார்கள். இங்கே நீதி என்பது அரசியல்வாதிகளின் கட்டாயத்தின் அடிப்படையிலேயே முடிவாகிறது.

நம் நீதிமுறை இந்த வழக்கை கீழமைநீதிமன்ற அளவிலேயே 27 ஆண்டுகள் தாமதித்தது. குற்றம்சாட்டப்பட்ட பெரும்பாலும் அனைவருமே இயற்கைமரணம் அடையும் வரை வழக்கே நடக்கவில்லை. நீதிமன்றத்துக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் எந்த கட்டாயமும் அளிக்கப்படவில்லை. அரசு வழக்கறிஞர் வழக்கை தீவிரமாக நடத்தாமல் நீதிமன்றம் ஒன்றும் செய்யமுடியாது. அந்த தாமதம் என்பது நீதி மறுக்கப்பட்டதே. உயர்நீதிமன்றமோ வேறு அமைப்புகளோ எந்த கட்டாயமும் அளிக்கவில்லை.

ஆதிகேசவனின் நகைகளில் பெரும்பகுதி மீட்கப்படாமலேயே சென்றுவிட்டது என்பதே நானறிந்த உண்மை. இனி எஞ்சியிருப்பவை சம்பிரதாயங்கள் மட்டுமே. அவை மீட்கப்பட்டாலும் கூட சிறுபகுதியே

அதிதீவிர வைணவராகக் கருதப்பட்ட ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில்தான் பற்பல ஆண்டுகள் இவ்வழக்கு தூங்கியது என்பதை மறக்கலாகாது.

நாம் நம்மைத்தான் மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும். நம் அமைப்பு என்பது நாம் தான்.

ஜெ

முந்தைய கட்டுரைவி.சிவசாமி
அடுத்த கட்டுரையோக முகாம், டிசம்பர்