காலம் தமிழ் விக்கி
செல்வம் அருளானந்தம் தமிழ் விக்கி
சிறு பத்திரிகைக்கான விகடன் விருது 2014இல் காலம் சஞ்சிகைக்கு கிடைத்தது. 1990 ஜூலை மாதத்தில் உலகின் இரண்டாவது பெரிய நிலப்பரப்புக் கொண்ட வளர்ச்சியடைந்த கனடா நாட்டிலுள்ள ரொறண்டோ நகரிலிருந்து வெளிவரத் தொடங்கிய புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் முனைப்புப் பெற்ற ஆர்வத்தினால் வெளிவந்த சிற்றிதழே “காலம்” . தமிழ் மொழியிலான சிற்றிதழ்களின் முக்கியமான விளைநிலமான தமிழகத்தின் மூத்த ஆனந்த விகடன் சஞ்சிகை நிறுவனம் கால் நூற்றாண்டு கால காலத்தின் வளர்ச்சியை அங்கீகரித்திருப்பது முக்கியமானது.
முப்பது ஆண்டுகள் என்பது ஒரு தலைமுறைக்காலம் . காலம் சஞ்சிகை முப்பத்தி மூன்று ஆண்டுகள் இயங்கி வருகின்றது; இலக்கிய மணம் பரப்புகின்றது. பல பெரும் வணிக நிறுவனங்கள் கூட இலக்கிய சஞ்சிகைகள் வெளியிடும் முயற்சியில் தோல்வியடைந்த வரலாறுகள் பல உள்ளன. காலம் தன் அர்ப்பணிப்பான உழைப்பு, உண்மை, ஒற்றுமையுணர்வு காரணமாக கால்பதித்து நடக்கிறது. இலக்கிய வரலாற்றில் இதற்கென தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
1990 ஜூலை மாதத்தில் முப்பது பக்கங்களுடன் , எவ்வித விளம்பர உதவியுமில்லாமல், விலை ஏதும் குறிக்கப்படாமல் ஒரு இளந்தளிர் போல துளிர்த்தது காலம்.கனடா, இலங்கை, (தமிழகம்) இந்தியா என்ற மூன்று நாடுகளுடனான தொடர்புகளுடன் வெளிவந்தது. இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், இலத்தீன் அமெரிக்கா, கனடா வாழ் படைப்பாளர்களின் ஆக்கங்கள் நிறைந்திருந்தன;. பதினைந்து கவிதைகளும், ஒரு கட்டுரையும், இரண்டு சிறுகதைகளும் ஒரு திரைப்படத்தயாரிப்பாளர் பேட்டியும், சிறு குறிப்புரையும் காலத்தின் உள்ளடக்கங்களாகியிருந்தன. செல்வம் என்ற ஆசிரியர் கனடாவில் வாழ்கின்ற இளைஞர்களின் ஆர்வத்தால் சஞ்சிகை வெளி வருவதாக ஒற்றை வசனத்தில் ஆசிரிய தலையங்கத்தை பதிவு செய்திருந்தார். அப்போது செல்வத்துக்கு ஒரு முப்பது வயதே இருக்கலாம்; ஆனால் அவரது பார்வை வீச்சு ஒரு நூற்றாண்டுக்குரியதாயிருந்தோ!
இலக்கிய மேதை சுந்தர ராமசாமியின் மகன் காலச்சுவடு கண்ணன் பத்தாண்டுகளுக்கு முன்பு காலம் பற்றியும் அதன் ஆசிரியர் செல்வம் பற்றியும் கூறியவை இங்கு மனங் கொள்ளத்தக்கன.
“காலம் புலம் பெயர் தமிழர்களின் பதற்றங்கள் பிரச்சினைகள் இலங்கையில் தமிழரின் எதிர்காலம் போன்ற எல்லாவற்றையும் தீவிரமாக விவாதிக்கிறது”.
பலதரப்பட்ட அரசியல் பண்பாட்டு பின்னணிகளிலிருந்து உருவான பல இதழ்களிடையே சில பொதுப்பண்புகள் இருந்தன.
- புலிகளின் அரசியலை விமர்சிப்பவையாக இருந்தன.
- தமிழக அறிவுலகை கூர்ந்து கவனிப்பவையாகவுமிருந்தன.
- புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் தீவிர இலக்கியம், சிந்தனைகளுக்கான அடித்தளத்தை இவை ஏற்படுத்தின.
விரைவிலேயே இத்தகைய இதழ்கள் பலவும் நின்று போயின.
காலம் மேற்படி பின்னணியிலிருந்து உருவான இதழ். பிற இதழ்கள் பலவும் நின்று விட்ட பின்னரும் காலம் வெளிவந்து கொண்டிருக்கிறது.
புலம்பெயர் சமூகத்தில் பல பண்பாட்டுக் குழுக்கள் துடிப்புடன் இயங்கி வரும் சொற்கள் டோவிலிருந்து பிரசுரிக்கப்படுகிறது. இன்று யாழ்பாணத்தை விடவும் அதிகளவு தமிழர்கள் வாழும் நகரம் ரொறண்டோ தமிழ் அங்கு ஒரு முனிசிப்பல் மொழி.
காலம் செல்வத்தின் விடாத முயற்சியின் விளைவு. அதே நேரம் ரொறண்டோவின் அரசியல் பண்பாட்டு சமூகவியல் பின்புவமும் காலம் வெளிவருவதற்குக் காரணம்.
வெளிப்படையாகத் தெரியும் (செல்வத்தின்) செயல்பாடுகளுக்குப் பின்னால் தெளிவான நோக்கமும், பிடிவாதமும், மன உறுதியும் அவரிடம் இருக்கின்றன. (காலம் 42, பக்கம் 55, 2013).
காலத்தின் நோக்கம் பற்றி செல்வம் “ காலத்தின் முக்கிய நோக்கம் இலக்கியமாகவும், எல்லைகளைக் கடந்தும் தமிழ் எழுத்தை அடையாளம் காணுவது என்பதாகும். கனடா இதழாகவோ, புலம் பெயர்ந்தோரின் இதழாகவோ இல்லாமல் போனதற்கு அதுவே காரணம் (காலம் 50, பக்கம் 4, 2917). காலத்தின் அசல் விரிவான அணுகுமுறைக்கு இந்த தெளிவான நோக்கமே காரணமாகும்.
துலங்கல்:
“நான் ஒரு இலக்கிய சஞ்சிகை ஆரம்பிக்க விரும்புகிறேன். கூட வருவீர்களா “ செல்வத்தின் கேள்வி இது, “உங்களுடன் கூட நம்மோட செல்வம் அண்ணை ” இது செழியனின் பதில் (காலம் 53, பக்கம் 01, 2019). காலம் என்ற நந்தவனத்துக்கு விதை நடவும் நீரூற்றவும்; வேலி போடவும் நல்லதோர் சான்றோர் கூட்டத்தை கட்டியணைக்கிறார் செல்வம்.
குமார் மூர்த்தி, செழியன் அருண்மொழிவர்மன், NKமகாலிங்கம், ஆனந்த பிரசாத், மு. புஷ்பராஜன், ஹம்சத்வனி போன்ற துடிப்புமிகு இளைஞர்கள் கை கொடுக்கிறார்கள். மிகு கல்வியும் மேலான இலக்கிய படைப்பாற்றளும் கொண்ட அ. முத்துலிங்கம், நுஃமான், சேரன், மணிவேலுப்பிள்ளை, அமுது ஜோசப் சந்திர காந்தன், செல்வா கதை நாடகம் போன்றோரும் வலக்கரம் நீட்டுகின்றனர். நீட்டிக் கரங்களை கோர்த்தபடியே மூன்று தசாப்தங்கள் பலம் சேர்க்கின்றனர். புதியன புனையும் பேராற்றலும், பன்முகப்பட்ட பார்வையும் கொண்ட ஜெயமோகன், ஷோபா சக்தி, சிவத்தம்பி, கதைசபாபதி, வெங்கட் சாமிநாதன், வெங்கட் ரமணன், ஏஜே கனகாட்னா, நாஞ்சில் நாடன் போன்றோரின் பங்களிப்பு பற்றிப் படர்கிறது.
இலக்கிய மேதைகள் சுந்தரராமசாமி, அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, எஸ். ராமகிருஷ்ணன், அ.இராமசாமி போன்ற பலரின் இடையறாத பங்களிப்பும் கிட்டுகின்றது. காலம் நிமிர்கிறது.
பல நல்ல நண்பர்களின் உழைப்பே காலம் என்கிறார் செல்வம். (இதழ்40, பக்கம் 5). காலம் சஞ்சிகை மனித மேம்பாட்டுக்குரிய இலக்கிய சமூக, பண்பாட்டு அசைவுகளுக்குரிய தளம் (இதழ்25, பக்கம் 2) என்கின்ற ஆசிரியர் செல்வம், மேலும்:
கலாசார விசயங்களில் ஈடுபடுவதும் பைத்தியக்காரத்தனம் வாழத் தெரியாதவர்களின் கூட்டம் என்று வாழத் தெரிந்தவர்கள் இகழும் சூழலில் காலத்தை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறோம் என்று மனம் கலங்குகிறார்.
கட்டிடக் காடுகள் கவிதை வழியாக இலக்கிய எழுத்துலகில் பிரவேசித்த செல்வம், பல நாடுகளின் கலை, இலக்கிய படைப்பாளர்களையும், படைப்புக்களையும் இணைக்கும் இலக்கியச் சிலந்தியாகிறார். அவரது வலை பின்னும் முனைப்புக்குள் கனடா, இலங்கை, இந்தியா, ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே, டென்மார்க், மலேசியா, பின்லாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற பலநாடுகளின் தமிழ் புலமையுள்ள நம் கலைஞர்களும் மனம் விரும்பி அகப்படுகின்றனர்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பாக சிற்றிதழ் இலக்கிய வரலாற்றில் காலத்தை நிலை நிறுத்துவதில் செல்வத்தின் பங்களிப்பு முக்கியமானது. புலம் பெயர் தமிழ் சிற்றிலக்கிய வளர்ச்சியில் காலத்தை அவர் நிலை நிறுத்திவிட்டார். பெரிய நிறுவன பின்புலம் எதுவுமேயில்லாது நல்ல நண்பர்கள் துணையுடன் காலத்தை நிமிர்ந்து நிற்கச் செய்து விட்டார். முனைவர் பட்ட ஆய்வாளர் கவனத்தை அது ஈர்த்து விட்டது.
அதேபோலவே காலமும் செல்வத்தை இலக்கிய உலகில் இலக்கிய வரலாற்றில் தனிப்புகழோடு நிலை பெறச் செய்கிறது “தீபம்” பார்த்தசாரதி போல, “கலைமகள்” கி.வா.ஜ போல, “மல்லிகை” ஜீவா போல இவரும் காலம் செல்வமாகி நிலைபெறுகிறார். காலம் என்ற சொல் ஒட்டு செல்வத்துடன் சேர்ந்தே நிலை பெறும்; ஊடக உரையாடல்களின் அவர் காலம் செல்வம்தான்.
“காலம்” செல்வத்தின் நிழல் போல அவருக்கு முன்னும் அவருக்கு பின்னும் நீங்காத நிழல் போல நீண்டு பரவுகின்றது; அவருடன் அது ஒன்றிணைகின்றது பூவில் மணமாகின்றது.
ஆதரவுக்கரங்கள்
அறுபது இதழ்கள் வெளி வந்திருக்கின்றன. அதன் அமைப்பிலும் உள்ளடக்கத்திலும், வாசகர் பரப்பிலும், அறிவுலக பார்வையிலும் விமர்சன உலகின் சிந்தனைப் புலத்திலும் காலம் தவிர்க்க முடியாத தமிழிலக்கிய சிற்றிலக்கிய இதழாக உயர்ந்து நிற்கிறது. தனி வெளிச்சம் பரப்புகின்றது.
காலம் வெளிவரத்தொடங்கிய 1990கல் புலம் பெயர் அரசியலில் மிகவும் பரபரப்பான காலகட்டம். காலம் இயன்றளவு அரசியலைத் தவிர்த்து இலக்கியத்தை மையப்படுத்தி இயங்கி வந்தமை ஒரு புறம் அதன் சிறப்புத்தான். ஆனால் அதற்காக விமர்சிக்கப்பட்டும் வந்திருக்கிறது.
இலங்கை, தமிழகம், மலேஷியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சலாந்து, நோர்வே, சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகளிலும் தமிழ் உயிர்ப்புடன் செயல்படுகின்றது. காலம் சஞ்சிகைக்கு தம் படைப்புகளை வழங்குபவர்களும், ரசனைகள் நிறைந்த வாசகர் கூட்டமும் இந்த சூழல்களில் நிறைந்துள்ளனர். தமிழர் பண்பாட்டுச் சூழலும், மொழிப்பயன்பாடும் எல்லா நாடுகளிலும் வளர்ந்து வருவதால் அத்துடன் இணைந்து காலமும் வளர்கிறது.
தமிழ் மொழிக்கான உலகளாவிய அங்கீகாரம் விரிவடைந்தே வருகின்றது.
“இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே உலகமொழி; இந்தியாவிலும், இலங்கையிலும், சிங்கப்பூரிலும், மலேஷியாவிலும் அரச அங்கீகாரம் பெற்ற மொழி. இருப்பினும் முப்பதாண்டு (2013இல்) முன்பு அது தெற்காசிய மொழிதான். 1980களிலும் 1990களிலும் புலம் பெயர் தமிழர்களால் பதிப்பிக்கப்பட்ட இதழ்களும் நூல்களும் பிரசுரதளத்தில் தமிழை ஓர் உலகமொழியாக்கின” (கண்ணன் 2013, பக்.35) இதில் காலத்தின் பங்களிப்பும், வளர்ச்சியும் முக்கியமாகின்றது. தமிழையும் வளர்த்து தானும் வளர்ந்து நிற்கிறது காலம்.
காலம் சஞ்சிகை தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், அதன் தொன்மை. படைப்புலகம், தொழில்நுட்ப பிரசுரவியல், தமிழர் அரசியல், போரிலக்கியம், புலம் பெயர் வாழ்வு, கூத்து, சங்கீதம், நடனம், நாடகம், சினிமா பற்றியெல்லாம் பல படப் பேசுகிறது; விவாதிக்கின்றது; இலக்கிய உலகின் பார்வையை அகலப்படுத்துகிறது.
புனைவுகள், அபுனைவுகள் பற்றிய பரந்துபட்ட வளர்ச்சியிலும், பன்முகவாக்கத்திலும் கவனம் கொள்கிறது. பல்வேறு கலை மற்றும் இலக்கிய வடிவங்களை ஊக்குவிக்கின்றது. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடக பிரதியாக்கம், மொழிபெயர்ப்பு, விமர்சனம், செய்தி, குறிப்புரை, தொடர்பான கருத்துப் பரவலாக்கத்துக்கு அரங்கு அமைத்துக் கொடுக்கின்றது. வாசகர் தம் பிரதிபலிப்புகளுக்கு மதிப்பளிக்கின்றது; அவர்களது விமர்சன கடிதங்களை தாமதமின்றி பிரசுருக்கின்றது. வாசகர்களுக்கு உண்மையாயிருப்பதில் அதீத நம்பிக்கை கொள்கிறது.
இலக்கிய மேதைகள், மொழி வல்லுனர்கள், கலைஞர்கள், மொழிகளின் வேர் தேடும் ஆய்வாளர்கள், ஆகியோரது எண்ணங்கள் உணர்வுகள், நுண்மான்நுளை புலன்களுக்கு உயரிய இடம் கொடுக்கிறது. உயர்தரத்தில் நேர் காணல்களை பிரசுரிக்கின்றது. பல்பண்பாட்டு பிரதிபலிப்புகளை மொழி பெயர்த்து வாசிப்புலகத்துக்கு வழங்குகிறது.
பலர் முன்னிலைப்படுத்த தயங்குகின்ற கருத்தாடல்களுக்கும் விவாதங்களுக்கும்தான் கதவுகளை அகலத்திறக்கின்றது. பெண்ணியம், தலித்தியம், பின்நவீனத்துவம், மாக்சியம் சார்ந்த கருத்தியல் மைய புனைவுகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்குகின்றது. இவற்றுக்கு மேலதிகமாக, உடல்நலம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், மற்றும் அழகியல் சார்ந்த கட்டுரைகளுக்கும் கெளரவமளித்து பிரசுரிக்கின்றது.
இதழ் ஆசிரியர்கள் எல்லோரும் தொலை நோக்கும், ஆர்வமும் பிடிவாதமும், அதீத நம்பிக்கைகளும், முடிவில்லா தன்னூக்கமும் கொண்டவர்களாயிருப்பது அவசியம். காலம் ஆசிரியரும் தன் இளம் பிராயத்திலிருந்தே பல நாடுகளுக்கும் பயணம் செய்து பட்டறிவை தேடிப் பெற்றவர். தனிமனித – சமூக உராய்வுகளை எதிர்கொண்டவர், சூழலிலிருந்து கற்றுக் கொள்ளும் வேட்கை கொண்டவர்; நட்புக்கும் நண்பர்களுக்கும் முன்னுரிமை வழங்குபவர். மாற்றுக்கருத்துக்களை மறு பரீசீலனை செய்யும் திறன் கொண்டவர். இந்த இயல்புகள் எல்லாம் அவரது இலக்கிய வாழ்வுக்கு வளம் சேர்க்கின்றன. இதனாலேயே காலம் புலம் பெயர் தேசத்தில் சஞ்சிகையின் அறுபது இதழ்களை வெற்றிகரமாக வெளிக்கொண்டுவர முடிந்துள்ளது.
காலம் கால்பதிக்கத் தொடங்கிய முதல் பத்தாண்டுகளில், பதின்மூன்று இதழ்களைப் பிரசவித்தது. முப்பது பக்கங்கள் நூற்றுப்பண்ணிரண்டு பக்கங்களாகின. இருபத்தி ஐந்து சிறுகதைகளும், ஐம்பத்தியேழு கட்டுரைகளும் வெளிவந்தன.எண்பத்தியேழு கவிதைகள் பிரசுரமாகின; கவிதைகளுக்கு முன்னுரிமையளிப்பதான தோற்றப்பாடு வெளிப்பட்டது. முதலாவது புகைப்படமாக மஹாகவின் படம் பிரசுரமாகிறது; மஹாகவியின் சிறப்பிதழும் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து கனடா இலக்கிய தோட்டத்துடனான உறவும் இலக்கிய மேதைகள், மற்றும் கலைஞர்களின் கனடாவுக்கான வருகையும் பகைப்புலத்தை செழுமைப்படுத்தின. நாகர்கோவில் சுந்தர ராமசாமி, மலையகத்தை தெளிவத்தை யோசேப், யாழ்பாணத்து தாசீசியல் ஆகியோரது கனடாவுக்கான வருகையும் காலம் பரபரப்பான இலக்கிய கலை உரையாடல்களின் நிகழ்த்துவதற்கு துணை செய்தன.
காலம் நகர்கின்றது; அரசியல் அதிர்வுகள் நிகழ்கின்றன; இலக்கிய செழுமைகள் மலர்கின்றன, காலம் தனது முப்பத்தி மூன்று வருட அயராத உழைப்பின் அடையாளமாக , அறுபதாவது இதழை வெளியிடுகின்றது. அது கடந்து வந்திருக்கும் சாதனைட்டடிகள் கவன ஈர்ப்புக்குரியன.
இதுவரை ஈழத்து இலக்கிய படைப்பாளர்கள் இருநூற்று மூன்றூ பேர்களதும், உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் எழுபத்தியிரண்டு படைப்பாளர்களது, படைப்புகளையும் வெளியிட்டு அச்சுலகில் அங்கீகாரம் அளித்துள்ளது.
தமிழ் இலக்கிய பரப்பை செழுமைப்படுத்தி வரும் ஏனைய சிற்றிதழ்களுடன் இணைந்தும், தனித்தும் ஏராளமான கலைஞர்களையும் இலக்கியவாதிகளையும் ஊக்குவித்து வருகின்றது. சர்வதேச தமிழிலக்கிய அரங்கை செழுமைப்படுத்துவதிலான காலத்தின் பங்கு பாராட்டத்தக்கதாகும்.
இலக்கிய, சமூக, அரசியல், பண்பாட்டு இதழ் என்ற வகையில் மாத்திரம் காலத்தை வளர்ப்பதுஅதன் இலக்கல்ல; அது மாத்திரமே அதன் பணியுமல்ல. மேலதிகமாகவும் தன் பணியை பல திசைகளிலும் விரிவுபடுத்திவருகிறது; அவை:
- கனடா, ஒன்றாரியோ பல்கலைக்கழகம் கனடா தமிழ் இலக்கிய தோட்டம் என்பன இணைந்து வருடாந்தம் வழங்கி வரும் உலகளாவிய இயல் விருது பெறும் சாதனையாளர்களுக்கு முதன்மையளித்து பெருமைப்படுத்தும் வண்ணம் தொடர்ச்சியாக சிறப்பிதழ்களை வெளியிட்டு வருகின்றது.உரியவாறு அட்டைப்படங்களையும் வெளியிட்டு கெளரவப்படுத்தி வருகின்றது.
- கனடிய தமிழ் இலக்கிய தோட்டத்துடன் இணைந்து சிறுகதைப்போட்டிகளை சர்வதேச ரீதியில் நடாத்தி வெகுமதி வழங்கி வருகிறது. உலக ரீதியில் சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிக்கின்றது.
- வாழும் தமிழ் என்ற பெயரில் புலம் பெயர்ந்து தமிழும் வாழும் நாட்டில் தமிழ் நூல்களையும், இலக்கிய சஞ்சிகைகளையும் பற்றிய அறிமுகத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் குறிக்கோளுடன் புத்தக கண்காட்சிகளை தொய்வின்றி நடாத்தி வருகின்றது. பன்மொழிப்பயன்பாடுள்ள கனடாவில் பதினாறாவது நிலையில் உள்ள தமிழ் மொழியை உயிர்ப்பு மிக்கதாக்க விளைகின்றது காலம்.
- சிகரம் தொட்டு நிற்கும் சிந்தனையாளர்கள், மொழிச்சிற்பிகள், மற்றும் இலக்கியவாதிகளுடனான சந்திப்புகளையும் சிறப்பு உரையாடல்களையும் ஒழுங்கு செய்கிறது; செழுமைமிக்க உரையாடல்கள் மூலம் தாய்த்தமிழை தலை நிமிரச் செய்கிறது.
- காலத்துக்கு காலம் பலதுறை சார் சிறப்பு சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து இலக்கியம், சமூகவியல், அழகியல், அரசியல், சார்பான பண்பாட்டுக் கல்வியை பரப்புகின்றது; மேம்படுத்துகிறது.
- சிறுகதைகள் மற்றும் கவிதைகளில் உள் உறங்கும் காட்சிகலை மனத்திரையில் மலரச்செய்யும் ஓவியங்களை வரைகின்ற மருது போன்ற பத்தொன்பது ஓவியர்களது திறன்களுக்கு ஒளிவீச்சு பரப்புகின்றது.
இவ்வாறு பூமிப்பந்தில் ஏறக்குறைய இருபத்தியேழு நாடுகளில் குவிந்ததும், சிதறியும் வாழும் தமிழர்களது கற்பனை வளம், எழுத்தாற்றல், தொன்மை, தனித்துவம், நிலைபேறு என்பவற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையில் காலம் செயல்பட்டு வருகின்றது. பெரிய நிறுவன கட்டமைப்பு ஏதுமின்றி, விளம்பர பெரும்பலம் ஏதுமின்றி காலம் வளர்ந்து வருகின்றது. தமிழ் சிற்றிலக்கிய வளர்ச்சி வரலாறு இதனைப் பதிவு செய்து கொள்ளும். அறுபது இதழ்கள் வெளிவருவது பெருமை கொள்ளும் சாதனைதான்.
பன்முக படைப்பாக்கம்
- காலத்தின் படைப்புகளில் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. கீதா சுகுமாரன், தமிழ் நதி, பத்மா அரவிந்த், சுமதி ரூபன், தான்யா, பிரதீமா.தி. பெண்ணியா போன்றவர்களது ஆக்கங்கள் முக்கியமானவை. அதேபோல அஜிதா நிவேதா, சோலைக்கிளி, கெளசல்யா, மதி, ரஞ்சினி, திரேசா, ஆழியாள், நஜீபா, யமுனா, ரஞ்சனி, மிஸ்ரா, தமயந்தி, தர்மினி, கறுப்பி கனிமொழி, ரிஸ்மினி, மைதிலி,ஊர்வசி, தேவாஅபிதா போன்றவர்களது பங்களிப்பும் கவனத்தில் கொள்ளத்தக்கன.
- உயர்கல்வியிலும், மொழியாற்றலும், உயர்புலமையும் வெளிநாட்டு வாழ்க்கையும் கொண்ட பலர் மொழிபெயர்ப்பு, ஆய்வு , மதிப்பீடுகள் தொடர்பான படைப்புக்களை ஆக்கியுள்ளனர். அம்பை, லட்சுமி, ஹோம்ஸ்ரோம், கெளசல்யா, அவ்வை, மீனாள், நித்தி, லீனா மணிமேகலை, கமலா ராமசாமி, லஷ்மி மணிவண்ணன், போன்றோரது பங்களிப்பு பெருமை கொள்ளத்தக்கன.
- உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கற்பித்தலிலும், ஆய்விலும் ஈடுபடும் அறிஞர்கள் பல உன்னதமான இலக்கிய மேதைகள் பற்றியும், படைப்புக்கள் பற்றியும் காலத்தில் எழுதியவை அதிக கவன ஈர்ப்புக்குரியன. கா.சிவத்தம்பி, செல்வா கனக நாயகம், ஜோசப் சந்திரகாந்தன், மு. நித்தியானந்தன், மணி வேலுப்பிள்ளை, சேரன், வீ. அரசு, தயா. சோமசுந்தரம், குழந்தை சண்முகலிங்கம், அ. ராமசாமி, தர்மராஜன், வெங்கட் சுவாமிநாதன், வெங்கட் ரமணன், போன்றவர்களது, கருத்தாடல்கள், மதிப்புரைகள், விவாதங்கள், அதிகளவில் காலத்தில் பிரசுரமாகின. கனடா, இலங்கை, தமிழ்நாடு, அமெரிக்கா, போன்ற பல நாடுகளில் வாழ்வர்களது இலக்கிய, பண்நாட்டு கொள்கைகளும், விவாதங்களும் அறிவுலக எழுத்துகளாக காலம் முன்னிலைப்படுத்தியுள்ளமை கவனத்திற்குரியதாகும்.
- முற்போக்கு இலக்கியம், மார்க்சியம், பின்நவீனத்துவம் பற்றிய படைப்புக்கள் அதிக முக்கியத்துவத்தை பெற்றன. இவை தொடர்பாக நேர்மறையான, எதிர்மறையான கருத்துருவாக்கங்களை காலம் ஊக்குவித்து வந்திருக்கிறது. மு. தளைய சிங்கம்: மு.பொன்னம்பலம்; சிவத்தம்பி, ஏ.ஜே. கனகாட்னா போன்றவர்களது கருத்துகளுக்கு காலம் களம் அமைத்துக் கொடுத்துள்ளது.
- தமிழ்மொழியின் மூல வேர்களை தேடியறியும் ஆய்வுகளுக்கும், ஆய்வாளர்களுக்கும் தமிழ் பண்பாட்டு வரலாற்றில் மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு.
தமிழ் மொழியின் மூலவேர்களை தேடியறியும் ஆய்வுகளுக்கும், ஆய்வாளர்களுக்கும் தமிழ் பண்பாட்டு வரலாற்றின் மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு.
தஞ்சாவூர் ஐராவதி மகாதேவன், பின்லாந்து, ஹெல்சிங்கி, அஸ்கோபார்பொலோ, நெடுந்தீவு தனிநாயகம் அடிகள், உ.வே.சாமிநாத ஐயர், பதுளை மு. நித்தியானந்தன், பத்மநாப ஐயர், செல்வா கனக நாயகம் ஈழத்துப் பூராடனார், சோமேஸ்வரி கிருஷ்ணகுமார், கா. சிவத்தம்பி போன்றவர்களது முயற்சிகளும்; கண்டறிதல்களும், ஆவணப்படுத்துதல்களும் தமிழர் பண்பாட்டு வரலாற்றிலக்கியங்களில் முக்கியமானவை. காலம் இவற்றையெல்லாம் முன்னுரிமை தந்து மதிப்பளித்துள்ளது. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களது புகலிட வாழ்வு, அதன் சமகால கண்ணோட்டங்கள், தலைமுறைகளிடையிலான முரண்நிலைகள் பற்றிய உரையாடல்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. கனடாவில் பிறந்து வளர்ந்து வரும் இரண்டாம் தலைமுறையனா, கனடிய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்று வருகின்றன, முதலாவது தலைமுறையினர் ஈழத்தமிழர்களது தாய் நிலத்திலான வாழ்வு, அது சார்ந்த அரசியல் பண்பாட்டு விழுமியங்கள் பற்றிய உணர்வுகளையும் ; உண்மைகளையும் அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்கவே வேண்டும்: அவற்றைக் கையகப்படுத்துகின்ற புதியவர்கள் – இளையவர்கள் ஆங்கில மொழியில் எழுதிய கட்டுரைகள் மொழிபெயர்க்கப்படாமல் – அதன் ஈரம் காயாமல் அப்படியே தரப்பட்டுள்ளன.இவற்றுக்கு ஒரு தனித்துவமுண்டு. நேந்திரா, ரொட்ரிகோ, அலினா ரொபாரஸ், செகனாதி ராமச்சந்திரன், மிரா ரகுநாதன், ஏஞ்சலா பிறிந்நோ போன்றவர்களது பரிசு பெற்ற கட்டுரைகளை தொலைநோக்குடன் காலம் பதிவு செய்திருக்கிறது.
காலத்தின் தனித்தன்மைகளில் முக்கியமானது இலக்கிய மேதை அ. முத்துலிங்கம் அவர்களுடனான தொடர்புகளை முப்பதாண்டுகளுக்கு மேலாக உலர்ந்து போகாது பராமரித்து வருவதாகும். தொடக்கத்திலிருந்தே காலத்தில் அவர் எழுதிவருகிறார்; இப்போதும் எழுதுகிறார்; இனியும் எழுதுவார்.
அவரது தொழில்வாண்மை சார் உயர்கல்வி, மேன்மையான பணி நிலை பல நாடுகளில் பணியாற்றி, பண்பாடுகளையும், சூழலையும் கூர்மையான அவதானித்துப் பெற்ற அனுபவங்கள், அவரே சொல்வது போல் வியப்பூட்டுகின்ற கதைக்கரு தேர்வுகள், சந்தித்து உரையாடிய உன்னதமான மனிதர்களது நேர்முகங்களில் கற்றவை எல்லாம் சேர்ந்து உலக இலக்கிய வாசகர் கவனத்தை ஈர்த்துள்ளார். அச்சுலகிலும், மின்னியல் இலக்கிய உலகிலும் , அவரது படைப்புகள் தவிர்க்க முடியாத தனிப் பெருமிடத்தை வகித்து வருகின்றன. உலகம் முழுவதும் பறந்து பறந்து பட்டிமன்றமேடைகளில் பேசுவர்களது பேச்சுகள் எல்லாமே அவரது பெயரையும், படைப்புக்களின் தனித்தன்மைகளையும் சிறப்பித்து பேசாமல் கடந்து போவதில்லை; அது சாத்தியமில்லை.
காலம் சஞ்சிகை, கனடா இலக்கியத் தோட்டம், இயல் விருது, ரொறண்டோ பல்கலைக்கழக தமிழ்மொழி இருக்கை போன்ற எல்லாவகை தமிழ்ப்பணிகளிலும் கை கோர்த்து பயணிக்கிறது; முத்துலிங்கம் அவர்களுடன் இசைந்தும், இணைந்தும் நடக்கின்றது. அவது எழுத்துகளைப் பிரசுரிப்பதில் செழுமையும்; பெருமையும் கொள்கிறது. காலம் தனது முகப்பு அட்டைகளையும், சிறப்பிதழ்களையும் பிரசுரிக்கும் போது உலகின் உன்னதமான இலக்கிய ஆளுமைகளுக்கு முன்னுரிமை வழங்குகிறது; அதே போல காலத்தை தொடர்ந்து கொண்டுவருவதற்கு தோள்கொடுத்து துணை நின்ற நண்பர்களையும், தற்போதும் துணிவூக்கம் தருகின்ற உத்தமர்களையும் அது மறப்பதேயில்லை.
குமார் மூர்த்தி, செழியன், முத்துலிங்கம், மஹாகவி தாசீயஸ் ,சுந்தர ராமசாமி, மு.புஸ்பராஜன், ஜெயமோகன், அசோகமித்திரன் போன்ற பலரையும் சிறப்பித்து இதழ்களை பிரசுரித்துள்ளது. இந்த உணர்வும், பணியும் எதிர்காலத்திலும் நீட்சியுறும்.
இலக்கியம் ஒரு பண்பாட்டின், மொழியின் வற்றாது ஓடும் நதி;எப்போதும் பொங்கிப் புரண்டோடும் புதுப்புனல், தனிப்போக்கில் தீமைகளைக் கரைக்கும்; நன்மைகளை வளர்க்கும், காலத்தின் நோக்கும், போக்கும் அதுதான்.
சமூகத்தில் மனித தர்மம் நிலைக்க வேண்டும்; சமத்துவம் பேணப்பட வேண்டும். மனிதருள் வேறுபாடா? ஏற்றத்தாழ்வா? மனித குலத்தில் வளங்களும், வாய்ப்பும் வளர்ச்சியும் எல்லோருக்கும் சமமாக பகிரப்படவேண்டும். காலம் இந்த இலக்குடனேயே பயணிக்கிறது. ஆசிரியர் செல்வத்தின் ஆழ்மனதில் அது அடங்காத அனலாக கனன்று கொண்டே இருக்கிறது.
ஒடுக்கப்படுகின்ற மக்களது குரலாக, வாய்ப்புகள் மறுக்கப்படுகின்ற சமூகங்களின் ஆத்மாவாக எழுச்சியுறும் தலித் இலக்கிய படைப்புக்களுக்கு காலம் எப்போதும் முன்னுரிமை வழங்கி வந்துள்ளது.
டானியல், எஸ். பொன்னுத்துரை, நீர்வை பொன்னையன், தெணியான், டொமினி ஜீவா, போன்றவர்களது படைப்புக்கள் பற்றிய உரையாடல்கள், மதிப்பீட்டுக் கட்டுரைகள் அதிகளவில் காலத்தில் வெளிவந்திருப்பது சிறப்பாகும்.
தமிழ் இலக்கிய உலகின் சமகால சிறுகதை, நாவல் இலக்கிய மேதைகளின் படைப்புக்கு எப்போதும் தனியிடம் வழங்குவதில் காலம் மகிழ்வடைகின்றது. அசோகமித்திரன், ஜெயமோகன், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன், மெளனி, புதுமைப்பித்தன், எஸ். ராமகிருஷ்ணன், அவ்வை, வாஸந்தி, நாகராஜன் போன்ற பலது படைப்புக்களும், விமர்சனங்களும் காலத்தில் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளன.
ஈழத்தமிழர், அவர்தம் அரசியல், போராட்டம் ; புலம்பெயர்வு, அகதி வாழ்வு எல்லாவற்றினதும் மையச்சரடு ஈழத்து இளைஞர்கள், இயக்கங்கள், போர், என்பனதான்.
காலம் சஞ்சிகையின் தோற்றத்தை இவற்றிலிருந்து பிரித்துப் பார்க்கவே முடியாது; அது சாத்தியமல்ல; உண்மை பேதமல்ல.
மு.புஸ்பராஜனது எழுத்துக்கள், சேரன், செழியன், வ.ஐ.ச ஜெயபாலனின் கவிதைகள், ஷோபா சக்தி தமிழ்நதி கதைகள் எல்லாமே பேரிலக்கியங்கள்தான். ஈழ இலக்கியத்தின் புறநானூறு இவைதான்.
மனிதனின் ஓய்வுப் பொழுதுகளின் பிரசவங்கள்தான் கலையும்; கடவுளும்; தாம் வாழும் சூழலின் வழியாக, உணர்வுகளின் வழியாக ஒழுங்கு ஏதுமின்றி உருவாகி, வளர்ச்சிப்பாதையில் ஒழுங்குபடுத்தி வளர்ந்தவைதான் கலைகள்.
கூத்து நாட்டியம், நாடகம்,சினிமா, சிற்பம், ஓவியம், எல்லாமே ஒன்றையொன்று சார்ந்தும், பிரிந்தும் வளர்ந்த கலைகள்தான், இவையின்றி பண்பாட்டுக்கு எங்கிருந்து வரும் அழகியல்?
காலம் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் இடம் வழங்கி இன்புற்றிருக்கிறது. ஓவியர் மார்க்கு, கலாநிதி மரியசேவியர் அடிகளார், அன்ரன் ராஜ்குமார் போன்றவர்களது பங்களிப்பு பற்றி காலம் நிறையவே பதிவு செய்து வந்திருக்கிறது; ஸ்ரீஸ்கந்தன், கருணா ஆகியோரது எழுத்தும் ஊக்கமும் நினைவு கூரத்தக்கன.
திகில் தரும் பயண அனுபவங்கள், அவை சார்ந்த நெருக்கடிகள் பற்றிய சச்சிதானந்தன் சுகிர்தராஜா, கருணாகரன், சுகுமாரன், ஜயகரன், போன்றோரது கட்டுரைகளில் காலம் குதூகலம் கொள்கிறது; புதிய பாடங்களை அவை போதிக்கின்றன. வாழ்வில் பிரிக்க முடியாதவை விஞ்ஞானமும், தொழில் நுட்பமும், மருத்துவமும்; உலக அரசியலும்தான். இவை பற்றியெல்லாம் தேவை கருதி உரைத்துப் பார்க்கிறது காலம்; அவை சார்ந்து கட்டுரைகளையும் விமர்சனக்களையும் முன் வைக்கிறது; நிறைவு கொள்கிறது.
நிறைவுரை
தனது இரண்டாவது தாயகத்தில், செல்வம், காலம் சிற்றிதழை முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதிக ஆவலுடனும், தெளிவான இலக்குகளுடனும் தொடங்கினார். இப்படி பலர் சிற்றிதழ்களைத் தொடங்கினர்; அவர்கள் மனதிலும் நல்ல ஆசைகள் இருந்திருக்கும்.
தக்கனவே பிழைத்துக் கொள்ளும் என்றார் விஞ்ஞானி டார்வின். புலம் பெயர் தேசத்து ஹரிகேனில் பல அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. காலம் நிலைத்து நிற்கிறது. இதழ் ஆசிரியர் தனது தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, தொழில் வாழ்வு என்பவற்றுக்குரிய நேரத்தில் ஒரு பகுதியை பறித்தெடுத்து காலத்திற்காக ஒதுக்கினார். இந்த நாட்டின் சூழலையும் மனிதர்களையும் நிதானமாக இனங்கண்டுகொண்டார். “ஊர்கூடி தேர் இழுத்தல்” தத்துவத்தை புரிந்து கொண்டனர். நல்ல, உண்மைத் தோழர்களை கண்டறிந்தார். “பிழைப்புக்காக இலக்கியம்” என்பதிலிருந்து விலகி நின்றார். காலம் கால் ஊன்றியது.
உலகின் பல நாடுகளிலுமுள்ள இலக்கிய படைப்பாளர்களுடனான நல்ல தொடர்புகளை, ஏற்படுத்தி; விரிவுபடுத்துவதனூடாகவும் காலத்துக்குரிய படைப்புகளையும், வாசகர்களையும் நிலைபெறச் செய்துகொண்டது.
கனடாவில் தமிழ் பதினாறாவது நிலையில் உள்ள மொழிதான்; தமிழ்மொழி பேசும் பல நாட்டவர்கள் வாழ்கின்றனர். “தளரா வளர்தெங்கு தாழ் உண்ட நீரை தலையாலே” தருதல் போல எதைப் பெற்றாலும் சமூகத்துக்கு வழங்கும்போது நல்லதை மாத்திரம் வழங்குவது; நடுநிலையை பேணுவது; நன்றியுணர்வு தேய்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது; ஒடுக்கப்படும் மக்களுக்கு கரம் கொடுப்பது; புதுமைகளையும் உள்வாங்குவது போன்ற தெளிவான நோக்கங்களோடு வளர்ந்து வருகின்றது காலம்.
பெண் படைப்பாளர்கள், புதிதாக எழுத முனையும் கவிஞர்கள் பல மதம் சார்ந்த சமூக நீதியாளர்கள், கூர்மையான ஆய்வாளர்கள், செயற்கை மதி நுட்பம் (AI) சார்ந்த கருத்துருவாக்க திறன்மிக்கவர்கள் போன்ற பலரதும் படைப்புக்களுக்கும் கெளரவமளித்து பிரசுரித்து மகிழ்கிறது.
காலத்துக்கு ஆக்கம் தேடுவது எந்த வேளையிலும் சிரமமாய் இருந்ததில்லை. இதழ் தயாரிப்புக்கான காசைத் தேடுவதுதான் சிரமம் என்கிறார். செல்வம் அருளானந்தம் (இதழ் 59, பக்கம் 02, 2023)
அதன் வேரென நாம் இருப்போம்; அது வீழ்ந்து விடாதிருக்கும், புதிய உற்சாகங்களுடன், புதிய திசைகளில் எல்லோரையும் அரவணைத்து காலம் வளரட்டும்; நூறாவது இதழையும் வெளியிட வேண்டும். கிழக்கு வெளுக்கிறது; முடிவில்லா வெளிச்சம் பரவுகின்றது.
தமிழர் தம் அரசியல்
காலம் சஞ்சிகை முழுமையாக ஈழத்தமிரது அரசியலை மையப்படுத்திய இலக்கியம் பற்றியும் சமூகவியல் பற்றியுமே பேசுகின்றது. உலக அளவில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஈழத்தவர் பற்றிய இரண்டு ஆய்வுகள் முக்கியமானவை; அவை மிகவும் கவனமாக மொழிபெயர்க்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- நோர்வே நாட்டின் மானிடவியலாளர் ஒல்வின் பிக்லருட்டினுடையது; இது லண்டன், நோர்வே தமிழ் அகதிகளை மையப்படுத்தி எழுதப்பட்டது.
- அமெரிக்காவில் வாழ்கின்ற இலங்கையரும்; இரண்டு பெரிய இனத்துல சமூகங்களுடன் தொடர்பு கொண்டவருமான வலன்ரைன் இ.டானியலால் எழுதப்பட்ட ஆய்வு;
தமிழ்த் தேசியவாதம், புலம் பெயர்ந்து வாழ்தலின் சமூகவியல் மாறுதல்கள் பற்றியதாக இவை அமைந்துள்ளன. (காலம் 13, 2000) காலம் இதழில் இவற்றை மொழிபெயர்த்து, தமது மதிப்புரையையும் பேராசிரியர் சேரனும்; ரவீந்திரனும் எழுதியுள்ளனர். அகதிகள் குடியேறிய நாடுகளுக்குள் எவ்வாறு பொருந்துகின்றனர். அகதிகள் குடியேறிய நாடுகளுக்குள் எவ்வாறு பொருந்துகின்றனர் என்பதாக இது அமைகின்றது. தமிழுக்கு மொழிபெயர்த்தல் என்பதும் முக்கியமான அறிவுப் பணிதான். இக்கட்டுரைகள் அதிக கவன ஈர்ப்புக்குரியன. மணிவேலுப்பிள்ளை, மு. நித்தியானந்தன், அ. முத்துலிங்கம், ஆகியோரது எழுத்துக்களும் இந்த வகையில் முதன்மைப்படுத்தப்படத்தக்கவை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
தமிழர்களது இன முரண்பாடு தழுவிய போராட்டம், யுத்தம், புலம்பெயர்வு, அகதி வாழ்வு போன்ற எல்லாமே, ஈழத்தமிழர்களது கல்வியின் அரசியல்தான்.
சமூகங்களிலான மாற்றங்கள், கல்விக்கானவையாக அல்லது கல்வியினால் தூண்டப்பட்டனவாகவேயுள்ளன. கல்வி எழுத்தறிவு என்பதிலிருந்து விரிவுபடுகிறது; தேடுதல், தேக்கி வைத்தல், தொகுத்தல், பகுப்பாய்வு செய்தல், முடிவுகளை பெறுதல், அதனை பரப்புதல் என்றவாறு அறிவின் தொழிற்பாடுகளை பல நிலைகளுக்கும் நகர்த்துவதே கல்வியின் பணி.
கல்வி ஒழுங்காக சிந்திக்கும் சமுதாயப் பலத்தை வளர்க்கிறது; சுயமுடிவுகளை எடுக்கும் ஆற்றலை வலிமைபெறச் செய்கிறது. சமூகத்தின் ஒட்டு மொத்த சிந்தனைப் பலத்தைக் கல்வியே நிர்ணயம் செய்கிறது. காலத்தில் கல்விமான்கள் பலராலும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளும், ஆய்வுகளும் மொழிபெயர்ப்புக்களும்; விமர்சனங்களும் இந்த வகையில் முக்கியமானவை.
உரிய காலத்தில் யார் கல்வியைப் பெறுவது? பலமான கல்வியை யாருக்கு அதிகம் வழங்குவது? அதற்கான வழிகளையும் வளங்களையும் யாருக்கு திறந்து விடுவது என்பதை தீர்மானிக்கும் சக்தியே கல்வியின் அரசியலாகும்.
இவை தொடர்பான முரண்பாடுகளே ஈழத்தமிழர்களின் 1980- 2010 வரையிலான அரசியலாகிறது; சமூகவியல் முரண்பாடுகளாகியது; எத்தகைய கல்வியை யார் கையகப்படுத்துவது என்பது தழுவிய அரசியல்தான், அவற்றின் தவறுகள்தான் தமிழர்களின் துயரங்களாகின. கோபங்களாகின; புலம்பெயர் அரசியலாகியது.
காலத்தில் வெளிவந்த ஏராளமான படைப்புக்கள் இவை பற்றியனவாகவே காணப்படுகின்றன. இதனாலே காலம் சமூக, பண்பாட்டு, அரசியல்: இலக்கிய இதழாக செழுமை பெற முடிந்தது. மொழி சார்பு கல்விக் கொள்கைகளின் தீய சமூக விளைவுகள் பற்றிய பொ. வேல்சாமியின் கட்டுரை (காலம் 39, 2012) முக்கியமானது; அதே போல மாக்சின் நேர்காணல் (காலம் 57,58, 2021) வெளிப்படுத்தும் பல அம்சங்களும் கவனத்துக்குரியன.
இலங்கையில் 1970களில் மருத்துவ, பொறியியல் பீடங்களை உள்ளடக்கிய நான்கு பல்கலைக்கழங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிறுவியிருந்தால், முப்பதாண்டு யுத்தத்துக்குரிய செலவுகளையும், கடன் பொறியையும் தவிர்த்திருக்கலாம்; சர்வதேச நெருக்கடிகளிலிருந்து விலகியிருக்கலாம்.
தெளிவற்ற இலங்கையின் கல்வி அரசியலால் பாதுகாக்கப்பட்டவர்கள் இன்று தமது நவீன உயர்கல்விக்காகவும்; செல்வந்த நாடுகளின் குடியுரிமைக்காகவும் புலம் பெயர்கின்றனர்: அதேபோல் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்ப்பாதுகாப்புக்காகவும், தலைமுறை நலன்களுக்காகவும் 1980களிலிருந்தே புலம் பெயரத் தொடங்கி விட்டனர். இவற்றை மையப்படுத்திய ஏராளமான கட்டுரைகளும், உரையாடல்களும் காலத்தில் நிறையவே இடம் பெற்றுள்ளன.
தமிழ் மொழியின் இலக்கியச் சந்தை
இந்திய தமிழ்வாசகனின் பார்வையில் ஈழத்துச் சிறுகதை பற்றிய எம். வேதசகாய குமாரின் இருபது பக்க கட்டுரை (காலம்14, 2001) பல சிந்தனைகளை கிளர்ந்தெழச் செய்கிறது.
தமிழ்த் திரைப்படங்களை அமேசான், பிறைமில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை பார்க்கலாம்; எழுத்தாளர் டானியலின் இறுதிச் சடங்கு தஞ்சையில் மார்க்ஸின் வீட்டில் நடைபெற்றது; பேராசிரியர். கா. சிவத்தம்பி உலக தமிழாய்வு மகாநாட்டுக்கு தலைமை வகிக்கிறார். நாகர்கோவில் சுந்தர ராமசாமிக்கு கனடா இலக்கியதோட்டம் ஆயுள் சாதனையாளர் இயல் விருது வழங்கி மகிழ்கிறது. சிறுப்பிட்டி சி.வை தாமோதரப்பிள்ளை உ.வே.சாவுடன் சேர்ந்து தமிழகத்தில் பழந்தமிழ் இலக்கிய ஏடுகளை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
லெமூரியா கண்டமே உடைந்து ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை, தமிழகம் என்றாகியது என்கிறது. புவிசரிதவியல் கனடாவில் நான்கு லட்சம் தமிழர்கள் உள்ளனர்; தமிழகத்தில் ஏழரைக்கோடி தமிழர்கள் வாழ்கின்றனர்.இந்த யதார்த்த நிலைமைகளை மனங் கொள்ளவேண்டும்; தமிழக தமிழ்த் தொலைக்காட்சிகள் எல்லாம் தமிழகத்தை மையப்படுத்தி இயங்குகின்றன?
எழுத்தும்; படைப்புக்களும் பலமான வாசகர் சந்தையை கொண்டிருக்க வேண்டும்; பரவலான மக்கள் கூட்டத்தை சென்றடைய வேண்டும். அப்போதுதான் அவை நின்று நிலைக்கும் இலக்கியத்தை வணிகமயப்படுத்த வேண்டும் என்பதை சிலர் மறுதலிக்கக் கூடும்.
கனடாவில் மூன்று தசாப்தங்களாக எத்தனை சிற்றிதழ்கள் முனைப்புடன் தொடங்கப்பட்டன. எத்தனை சிற்றிதழ்கள் முனைப்புடன் தொடங்கப்பட்டன. எத்தனை நின்று விட்டன. பென்குவின் வெளியீடுகளும், லோங்மன்ஸ் பிரசுரங்களும் எத்தனை இலட்சங்கள் அச்சிடப்படுகின்றன. ஒவ்வொன்றிலும் எத்தனை மறு பிரசுரங்கள் வெளியிடப்படுகின்றன.
எமக்குரிய தனித்துவ படைப்பாற்றலையும், சிந்தனைகளையும் வலிமைபெறச் செய்ய இலக்கிய சந்தையை விரிவுபடுத்த வேண்டும்.