அஜிதனின் காதல்

அஜிதனுக்குப் பெண்பார்க்கவேண்டும் என என் நண்பர்கள் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தனர். எனக்கு முதலில்அதென்ன பெண்பார்ப்பது?’ என்னும் குழப்பம். அதன்பின் ஒன்று தெரிந்தது, அவனுக்கு நானே பெண் பார்த்தால்தான் உண்டு, அவனே பெண் பார்க்கப்போவதில்லை.

ஏனென்றால் இருபத்துநான்கு மணிநேரமும் கலை, இலக்கியம் என ஏதேனும் ஒன்றில் முழுவெறியுடன் ஈடுபட்டிருப்பது அவன் வழக்கம். மிக இளமையில் பறவையியல், இயற்கை அவதானிப்பு, அதுசார்ந்த வாசிப்பு. அதன்பின் வெறிகொண்ட சினிமா ரசனை. அவனுடைய ஈடுபாடுகள் பல களங்களில். முதன்மையாக மேலைத்தத்துவம். அதில் குறிப்பாக ஷோப்பனோவர். அதன்பின் கீழைத்தத்துவம், அதில் பௌத்த மெய்யியல். மேலையிசை, அதில் வாக்னர். கதகளி, இந்துஸ்தானி இசை, சூஃபி மரபு….

ஒன்றில் ஈடுபட்டால் அதைத்தவிர வேறொன்றில்லாமல் வாழ்வது எனக்கும் உள்ள மன இயல்பு. பொதுப்பார்வையில் அது மனச்சிக்கல். அஜிதன் கதகளி ஆர்வலன் ஆனபோது கேரளம் முழுக்க கதகளி பார்க்க அலைந்துகொண்டே இருந்தான். கதகளி நடிகர்களுக்கெல்லாம் அவனைத் தெரியும். அவனிடமிருந்து கதகளி ஆர்வம் பற்றிக்கொண்டவர்கள் அழகியமணவாளன் போன்ற நண்பர்கள். அதுவே ஒவ்வொன்றிலும். பலர் வாக்னேரியர்களாக ஆனதும் அவன் வழியாகவே.

ஒருவகையில் தமிழ் இளம்படைப்பாளிகளில் அஜிதன் நல்லூழ் கொண்டவன். உள்ளத்துக்கு உகந்தது அன்றி எதையும் படிக்கவேண்டியிருக்கவில்லை. பயில்வது தவிர எந்த வேலையையும் செய்யவேண்டியிருக்கவில்லை. கலை, இலக்கியம் சார்ந்த கனவுகளுக்கு தடையாக எந்த உலகியல் பொறுப்பும் இருக்கவில்லை. ஏறத்தாழ பதினைந்தாண்டுக்காலம் கலையிலக்கியம், தத்துவம் சார்ந்த கல்வி மட்டுமே ஒரு தவம் என நிகழ்த்த முடிந்துள்ளது.  

தத்துவ அறிமுகம் பெறும் இளைஞர்களிடமுள்ள ஒரு முக்கியமான சிக்கல் சிந்தனைகள் சிடுக்காகி விடுவது. மிகமிக எளிய சிந்தனைகளையே சிக்கலாக்கி முன்வைப்பது. அந்தப்பாதையில் செல்லும் ஓர் இளைஞனை நான் பெரும்பாலும்கைகழுவிவிட்டுவிடுவேன். வெற்று மேட்டிமைத்தன்மையும் வெறுங்குழப்பமுமாகவே அவன் எஞ்சுவான். தத்துவம் அந்த அபாயம் கொண்ட துறை. தத்துவத்தின் நுண்பொதுத்தன்மை காரணமாகவே தத்துவமாணவர்களில் பெரும்பாலோர்  வாழ்க்கையை தத்துவத்துடன் இணைத்துக் கொள்ளுவதில்லை என்பதே காரணம். அவர்களே வாழ்வனுபவங்கள் வழியாக அந்த பாதையிலிருந்து மீண்டால் பரிசீலிக்கலாம். 

எனக்கு அஜிதன்மேல் அந்த அச்சமிருந்தது. ஆனால் அவன் எழுதிய ஆங்கில, தமிழ் கட்டுரைகள் அனைத்திலுமே தெளிவும் துல்லியமும் இருந்தன. அவன் புனைவு எழுதத் தொடங்கியபோது ஆயிரத்தி முந்நூற்றிப்பதினான்கு கப்பல்கள் போன்ற ஒரு தெளிந்த அழகிய கதை, ஆனால் தத்துவார்த்தமான ஆழம் கொண்டது, அவனால் எழுதப்பட்டபோது நிறைவடைந்தேன்.

ஆனால் இந்தத் தீவிரம் காரணமாகவே அவனால் அவனுடைய ஆர்வங்களில் பங்கெடுக்காத நண்பர்களுடன் புழங்க முடியவில்லை. ஒருகட்டத்தில் முற்றிலும் தனியனாக இருந்தான். சென்னையில் அவன் அறையில் பல ஆண்டுக்காலம் இன்னொருவருடன் பேசாமலேயே வாழ்ந்திருக்கிறான். நாகர்கோயில் வந்தால் வீட்டுக்கு வெளியே செல்லாமலேயே மாதக்கணக்கில் வாழ்ந்தான்

ஆண்டுகள் செல்ல, மெல்ல மெல்ல அவனுக்கான நண்பர்வட்டம் உருவானது. சுசித்ரா, ஜி.எஸ்.எஸ்.வி.நவீன், கிருபா, கடலூர் சீனு, அழகிய மணவாளன், அருள்,  பாரி, வேலாயுதம் பெரியசாமி, நிகிதா, பரமகுரு என அவனுக்கு இன்றிருக்கும் நண்பர்கள் அனைவருமே அவன் எழுதவும் பேசவும் தொடங்கியபின், அவனை எழுத்தாளனாக அறிந்து அதன் வழியாக வந்தமைந்தவர்கள். 

ஆகவே பெண்களுடன் அவனுக்கு அணுக்கம் உருவாக வாய்ப்பே இல்லை என தெரிந்தது. பெண் பார்க்கலாமா என்று கேட்டேன். அவன் சம்மதித்தபின் பெண் பார்க்கலானேன். தமிழ், மலையாளம் திருமண இணையதளங்களில் பதிவுசெய்தேன். நண்பர்களிடம் சொன்னேன். என் அண்ணாவும் அருண்மொழியின் அப்பாவும் பெண் பார்த்தனர். ஏறத்தாழ ஓராண்டுக்காலம் இது நிகழ்ந்தபடியே இருந்தது.

என் வாழ்க்கையில் தீவிரமான உளச்சோர்வை அடைந்த நாட்கள் அவை. பெரும்பாலும் நிகழ்ந்தவை அஜிதனுக்குத் தெரியாது. திருமணச் சந்தை என்பது வெறும் சந்தையேதான். அங்கே அஜிதனை நம் உலகியலாளர்தகவல்தொழில்நுட்பம், வங்கி ஆகிய இரண்டு துறைகளிலும் இல்லாத ஒரு சாமானியன்என்று மட்டுமே புரிந்துகொண்டனர். அது மிகப்பெரிய ஒரு தகுதியின்மை. எழுத்தாளனாக இருத்தல் மேலும் பெரிய தகுதிக்குறைவு. நம்பவே முடியாத நிராகரிப்புகள்.

நான் சாதி, பொருளியல்நிலை இரண்டையும் அளவுகோலாக முன்வைக்கவில்லை. தோற்றம், அறிவுத்திறன்ரசனை ஆகியவற்றையே முதன்மைத் தகுதிகளாகக் கொண்டேன். அவற்றையே இணையதளங்களிலும் அறிவித்தேன். உண்மையில் தானாக ஒரே ஒரு விண்ணப்பம்கூட வரவில்லை. நானே தொடர்ந்து பலரை தெரிவு செய்து விண்ணப்பித்தேன். ஆனால் மிக எளிய குடும்பத்தினர் கூடஐடி ஆள்தான் வேண்டும்என்றனர். மிகமிக எளிய நிலையினர்கூட  ‘எழுத்தாளன்னா வேண்டாம்என்று தெரிவித்தனர். பதறி ஓடியவர்கள்கூட உண்டு.

பலரிடம் நான் சொன்னேன். ‘ஒரு சராசரிக்கு மேற்பட்ட ஐடி ஊழியர் தன் வாழ்நாளெல்லாம் சம்பளமாக வாங்கும் பணம் அவனுக்கு இப்போதே கையில் இருக்கிறது.’ ஆனால் அது அவர்களுக்கு புரியவில்லை. ‘வேலையிலே செட்டில் ஆகியிருக்கணும்ங்க’ என்பதே திரும்பத் திரும்ப காதில் விழுந்த சொல். சில இடங்களில் பெற்றோருக்கு உடன்பாடு, பெண்களுக்கு விருப்பமில்லை.

அவ்வாறு மறுத்த ஒரு பெண்ணிடம் நான் பேசினேன். ”பொருளியல் பின்புலம் கொண்ட ஒரு புகழ்பெற்ற  எழுத்தாளனின் மனைவியாக இருக்கும் வாழ்க்கையை உன்னால் கற்பனை செய்யமுடியவில்லையா என்ன? அஜிதன் இன்றே அறியப்படும் படைப்பாளி. அவன் இன்னும் வெற்றிபெறக்கூடியவன். அருண்மொழி செய்த உலகப்பயணங்கள், அவளுடைய வாழ்க்கையை தமிழகத்தில் ஒரு உயர்நடுத்தரவர்க்கப் பெண்ணால்கூட கற்பனை செய்ய முடியுமா?” ஆனால் அந்தப்பெண் மீண்டும்நல்ல வேலை இருந்தா…” என்றார். “நன்றிஎன தொடர்பை முறித்துக்கொண்டேன்.

சமகாலப் பெண்கள் பற்றிய என் புரிதல் மேலும் உறுதிப்பட்ட நாட்கள் அவை. அதைத்தான் எழுதினேன். அவர்களுக்கு ரசனையும் அறிவும் ஒரு பொருட்டாகவே இல்லை. புகழ் என்றால் என்னவென்றே தெரியவில்லை. படித்த பெண்களுக்குக் கூட இலக்கியம் என ஒன்று இருப்பதே தெரியவில்லை. ‘புக்கு எழுதுறது’ என்றுதான் புரிந்துகொண்டனர். அதிலுள்ள கௌரவம்கூட புரியவில்லை. ‘புக்குபோட்டு விப்பாரா?’ என்று கேட்டனர். அஜிதனை முச்சந்தியில் புத்தகம் விற்கும் ஒருவனாக கற்பனைசெய்ய திக் என்று இருந்தது எனக்கும்.

ஒப்புக்கொண்ட சில பெண்களை அஜிதனுக்குப் பரிந்துரைத்தேன். எனக்கு நிறைவளித்த ஒரே ஒரு பெண் தவிர அனைவருமே பொருளியல், அழகு, படிப்பு என மூன்றிலுமே மிகச்சாமானியர்கள். எதிர்பார்த்தது போலவே பெரும்பாலும் எவரையும் அவன் கருத்தில் கொள்ளவில்லை. சாமானியர் என நானே அஞ்சிய ஒரே ஒரு பெண்ணை மட்டும் சந்தித்தான். அவள் பேசியது தாளாமல் ஐந்தே நிமிடத்தில் ஓடிவந்து விட்டான். இருந்தாலும் மனம் தளராமல் முயன்றுகொண்டே இருந்தேன். கூடவே அஜிதனின் எதிர்பார்ப்பைக் குறைக்க முயன்றுகொண்டும் இருந்தேன்.

ஒரு கட்டத்தில் அஜிதனின் நம்பிக்கை இல்லாமலாகியது. சென்னையில் அவனுக்காக வாங்கிய புதிய இல்லத்தைப் பற்றிப் பேசும்போது அங்கே அவன் குடும்பமாக வாழ வாய்ப்பில்லை, தகுதியான பெண்கள் எவரும் எழுத்தாளனை மணக்க மாட்டார்கள் என்று கசப்பு கலந்த சிரிப்புடன் அவன் சொன்னபோது வருத்தமாக இருந்தது. ஆனால் ஒருவகையில் அதுகூட நல்லதே என்றும் தோன்றாமலில்லை. நான் உரையாடிய பெண்களின் மனநிலைகளை வைத்துப் பார்த்தால் அஜிதனை பிடித்து புலிகளிடம் கொடுப்பதுபோலத்தான் அது. 

சென்ற நவம்பரில் தீபாவளியன்று அஜிதன் தனிமையுணர்வின் உச்சத்தில் ஒரு சோர்வு நிலையில் இயல்பாக தன் வாசகியாகிய தன்யாவிடம் அதைச் சொல்லி, மிகுந்த தயக்கத்துடன் தன் விருப்பத்தை உணர்த்தினான். அவன் இயல்புக்கு அதைச் சொன்னது ஆச்சரியம்தான். அவள் அழுகையுடன் ஒன்றரை ஆண்டுகளாக அவன் அப்படி ஒரு வரியைச் சொல்வதற்காக அவள் காத்திருந்ததாகச் சொன்னாள். அந்தப் பெருங்காதலை இரண்டு காதல்நாவல்கள் எழுதிய ஆசிரியனால் கண்டடைய முடியவில்லை என்பது உண்மையில் விந்தை அல்ல. இலக்கியவாதிகள் உலகியலில் கொஞ்சம் அசமஞ்சங்கள்தான். பெண்கள்தான் முன்முயற்சி எடுத்துச் சொல்லியிருக்கவேண்டும்.

தன்யா எனக்கு தெரிந்தவள். சென்ற கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில் அஜிதனின் நூலை வாங்கியிருக்கிறாள். அப்போது அஜிதன் இரண்டுமுறை தன் பெயரையே தவறாக எழுதி, கிறுக்கலாக கையெழுத்திட்டு அளித்தான். (அவனுக்கு இன்றும் கையால் எழுத வராது) நான் குற்றவுணர்வுடன் வேறு புத்தகம் தருகிறேன் என்று கேட்டேன். வேண்டாம் இதுவே நன்றாக இருக்கிறது என்று சிரித்துக்கொண்டு கொண்டுசென்றாள். அதன்பின் கடிதங்கள் எழுதியிருக்கிறாள். என் தளத்திலேயே கடிதம் வெளிவந்துள்ளது. அஜிதனுக்கு அது காதலென்று பிடிபடவில்லை. அவள் அவனிடம் சொல்லவில்லை. அது பெண்களின் இயல்பு. 

தன்யாவுக்கு அவள் அப்பா திருமண அறிவிப்பு வெளியிட்டு முப்பதுக்கும் மேல் விருப்பங்கள் வந்து ஏறத்தாழ முடிவாகும் நேரத்தில் அஜிதன் தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறான். அவள் பலநாட்களாக அழுது கொண்டே இருந்திருக்கிறாள். ஒரு ஐந்துநாட்கள் பிந்தியிருந்தால்  ஒருவேளை அவன் சொல்லியிருக்க முடியாது. அதை அஜிதன் சொன்னபோது ஊழ் எனும் விந்தையை எண்ணிக்கொண்டேன். நம் முயற்சிக்கு அப்பால் இங்கே வேறொன்று நிகழ்கிறது.

தன்யாவுக்கு 24 வயது. கணக்கியலில் முக்கியமான உயர்நிலை தேர்வை முடித்து முடித்து பெருநிறுவனம் ஒன்றில் நல்ல பொறுப்பில் இருக்கிறாள். அவளுக்கு ஓராண்டுக்கு முன் அந்தப் பணி கிடைத்தபோதுகூட ‘இனி அஜிதன் வேலைக்கே செல்லவேண்டியிருக்காது’ என்று நினைத்துக்கொண்டாள் என்று அஜிதன் சொன்னபோது நான் வெடித்து சிரித்துவிட்டேன்.

அஜிதன் சொன்னபின் நான் தன்யாவிடம் பேசினேன். அதன்பின் அவள் பெற்றோரிடம் பேசினேன். அவர்களுக்கு இருந்த ஐயங்களை களைந்தேன். அவர்கள் என் மேல் மதிப்பும் அன்பும் கொண்டவர்கள். 2022  விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்திருக்கிறார்கள். என் அறுபதாவது ஆண்டுவிழாவுக்கு வந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சென்ற 29 நவம்பரில் கோவையில் நாங்கள் தங்கியிருந்த விடுதியில் அவர்களைச் சந்தித்தோம். மணம் முடிவுசெய்தோம். பிப்ரவரி 18, 19 தேதிகளில் கோவையில் திருமணம். அதன்பின் தேநிலவுக்காக சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும், இந்தோனேசியா அருகே ஒரு தீவுக்கும், இந்தோனேசியாவில் யோக்யகர்த்தாவுக்கும் (பரம்பனான்) செல்வதாக இருக்கிறார்கள்.

அஜிதன் இந்தக் காதலைப் பற்றி அவனுடைய வாட்ஸப் ஸ்டேட்டஸில் ஏதோ எழுதியிருந்தான் என நினைக்கிறேன். மணிரத்னம் வாழ்த்தையும் பிரசுரித்திருந்தான். ஏனென்றால் மணிரத்னத்திற்கு தெரிவித்து, அவரிடமிருந்து வந்த வாழ்த்து என்பது அவன் வாழ்க்கையில் ஒரு பெரிய நிகழ்வு.

22 வயதில் அவன் மணி ரத்னத்தைச் சந்தித்தான். அவன் கோரியதற்கு ஏற்ப அவனை நான் அவரிடம் பரிந்துரைத்தேன். அவர் வரச்சொல்லி செய்தி அனுப்பினார். அது நானே அவனை உந்தி அனுப்புவதா, அல்லது மெய்யாகவே அவனுக்கு ஆர்வமுண்டா என அறிய விரும்பியதாகச் சொன்னார். “நான் இப்போது ஒன்றும் சொல்லமாட்டேன். உங்கள் மகன் என சலுகையும் அளிக்க மாட்டேன். அவனை சந்தித்தபின் சொல்கிறேன்” என்றார்.

முதற்சந்திப்பிலேயே “அவனைப் பற்றி நீங்கள் கவலைகொள்ளவேண்டாம். வணிக சினிமாவில் அவன் ஒன்றுவானா என்று தெரியவில்லை. ஆனால் அவன் உங்களுக்கு தெரிந்ததை விட அதிகமான நுண்ணுணர்வும் ஆழமும் கொண்டவன்” என்று என்னிடம் சொன்னார். அவனை தன் சிறகுகளுக்குள் எடுத்துக்கொண்டார். “மணி சார்” என்று அஜிதன் சொல்லும்போது உருவாகும் பூரிப்பும் மரியாதையும் நான் எப்போதுமே வியப்புடன் கவனிப்பவை. அப்படி ஓர் ஆசிரியரால் இளமையில் ஆட்கொள்ளப்படுவது ஒரு நல்லூழ்.

ஆனால் மணிரத்னம் ஒரு நல்லவார்த்தை சொல்வதில்லை. அவன்மேல் கோபம் வந்தால்  “சன் ஆஃப் எ ஃபூல், சன் ஆஃப் எ ஸோம்பி” என்று என்னைத்தான் திட்டுவார் என அவருடைய உதவியாளர்கள் சொல்லுவதுண்டு. மைத்ரி விமர்சன அரங்கில் முதல்முறையாக அவர் அவனை பாராட்டியபோது அஜிதன் கண்ணீர் மல்கினான். வாழ்நாள் சாதனை ஒன்றை நிகழ்த்தியதுபோல. அவரிடமிருந்து வந்த திருமண வாழ்த்தும் ஒரு தங்கப்பதக்கம்தான். அதை டிவிட்டரில் வெளியிட்டான்.

ஆனால் ஏராளமான வாழ்த்துக்களுடன் ஒருசில கேலிகளும் வந்ததால் அப்பதிவுகளை நீக்கிவிட்டதாகச் சொன்னான். நான் அவனிடம் சொன்னேன். “எழுத்தாளன், கலைஞன் ஒரு பொது ஆளுமை. அவன் வாழ்க்கையை அவன் ஒளித்துக்கொள்ள முடியாது, கூடாது. ஏனென்றால் அவனுடைய எழுத்து மிகப்பெரியது. அவனுடைய தனிவாழ்க்கை அந்த எழுத்தின் ஒரு மிகச்சிறு பகுதிதான். வாசகனுக்கு அந்த எழுத்தாளனின் முகமும், ஆளுமையும் தேவைப்படுகிறது. எழுத்திலிருந்து அவனால் அதை பிரித்துக்கொள்ள முடியாது. ஆகவே நீ மட்டுமல்ல தன்யா கூட ஒருவகை பொது ஆளுமையே. பாகுலேயன் பிள்ளையும், விசாலாட்சியம்மாவும், அருண்மொழியும் என் வாசகர்களுக்கு மிக அணுக்கமானவர்கள்தான்

எழுத்தாளர்கள் இருவகை. ஓர் உயர்நிலைக் கேளிக்கையாக வாசிக்கப்படுபவர்கள் பெரும்பான்மை. வாசிப்பவனின் வாழ்க்கையில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்துபவர்கள் இரண்டாம் வகை. ஓர் எழுத்தாளனின் தனிவாழ்க்கை பற்றி வாசகனுக்கு ஆர்வமே இல்லை என்றால் அந்த எழுத்தை தன் வாழ்க்கையை ஊடுருவக்கூடிய ஓர் அறிதலாக அவன் எண்ணவில்லை, வெறும் உளமகிழ்வுக்காகவே வாசிக்கிறான் என்றே பொருள். ஒரு படைப்பின் புனைவுவெளிக்கு நிகராகவே அதன் ஆசிரியனின் தரிசனமும் முக்கியமானது. அந்த தரிசனம் அவன் வாழ்ந்து அடைந்தது. அந்த வாழ்க்கையே அந்த படைப்பின் ஆதாரத்தளம். அது வாசகனுக்கு மிகமிக முக்கியம்.

இரண்டாம் வகைப் படைப்பாளிகள் வாசகனின் வாழ்க்கையை பாதிப்பவர்கள். அவர்களின் ஒவ்வொரு வாழ்க்கைத்தருணத்தையும் அறிய வாசகன் விழைவான். பஷீரின் வாழ்க்கை வேறு அவருடைய எழுத்து வேறு அல்ல. அவ்வாறு முன்வைக்கப்படும் வாழ்க்கை எல்லாவகையான எதிர்வினைகளுக்கும் உட்பட்டதே. சாமானியர்களின் சாமானிய வாழ்க்கையை அவன் வாழ்வதில்லை. ஆகவே சாமானியர்களின் புரிந்துகொள்ளாமை, பொறாமை ஆகியவற்றை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கும். அரிதாக எதிர்ப்பும், கசப்பும், காழ்ப்பும் உருவாகும். அதையும் எதிர்கொள்ளவேண்டும். உன் முன்னோடிகளான இலக்கிய மேதைகள் எல்லாம் அமைப்பின், அற்பர்களின் மிகப்பெரிய எதிர்மனநிலைகளை நேர்நின்று சந்தித்தவர்கள்தான். பஷீர் உட்பட.

ஆகவே எளிய சொற்களுக்காக அஞ்சிச் சுருங்கிக்கொள்ளுதல் தேவையில்லை. அது இலக்கியத்தின் அடிப்படையான நேர்மை, விரிதல் ஆகிய இரு பண்புகளுக்கும் எதிரானவை. நீ பொருட்படுத்தத் தக்கவர்கள் உன் வாசகர்கள் மட்டுமே. பிறருடைய உலகில் நீ இருக்கலாம், உன் உலகில் அவர்கள் இருக்கலாகாது. நீ  பொருட்படுத்தத் தகாதவை உன் உலகில் நிகழவே இல்லை என கடந்துசென்றாகவேண்டும். நீ தமிழின் முதன்மையான இலக்கியப்படைப்பாளிகளில் ஒருவன் என்பதில் ஐயமில்லை. இன்னும் நூறாண்டுக்காலம் உன் தனிவாழ்க்கையை இங்கே பேசுவார்கள். ஆராய்வார்கள். அதுவே இலக்கியத்தின் வழி”

திருமணம் முடிவானபின் அஜிதனும் தன்யாவும் சென்ற முதல் நிகழ்வு அஜிதனுக்கு மிகப்பிடித்தமான கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்ரமணியம் இசையரங்கு. அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனுப்பியிருந்தார்கள். யுவனுடைய அணுக்க நண்பர் சஞ்சய். அவனுக்கு அந்தப் படத்தை அனுப்பியிருந்தேன். நெகிழ்ந்து பதில் போட்டிருந்தான்.

அஜிதனும் பலவகையிலும் என்னைப்போலவே. வலுவான ஒரு தர்க்கம் எப்போதும் உண்டு, அதுவே தத்துவம் நோக்கி ஈர்க்கிறது. கூடவே தர்க்கத்தை மீறிய ஓர் உள்ளுணர்வும் பித்தும் உடன் இணைகிறது. இப்போது ‘நன்றிக்கடன்’ தீர்க்க தன் ‘மன்னத்’துக்காக அஜ்மீர் குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் தர்காவுக்கு இப்போது சென்றிருக்கிறான்.

இன்றைய பெண்களைப் பற்றிய என் கருத்து இப்போது மாறிவிட்டதா என்று நண்பர்கள் கேலியாகக் கேட்டனர். பெரும்பாலும் இல்லை என்றே இப்போதும் என் பதில். அனுபவங்கள் அவ்வளவு. தன்யா போன்ற பெண்கள் லட்சத்தில் ஒருவர். அவளை அவளுக்கு பொருத்தமானவர் சந்திப்பதும் பல லட்சம் இணைவுகளில் ஒரு தற்செயல் சாத்தியம் மட்டுமே. அதன்பொருட்டு காத்திருக்கவோ, வாழ்க்கையை ஒத்திப்போடவோ முடியாது என்றே தோன்றுகிறது. நான் தேடிக் கண்டடைந்திருக்கவே முடியாது.  

ஓரு பெரும் ஆறுதல். சுமை ஒன்றை நெஞ்சிலிருந்து விலக்கியதுபோல. இனி சைதன்யாவின் திருமணம். இந்த ஆண்டே நிகழவேண்டும் என நினைக்கிறேன். எங்கள் குடும்பத்திலேயே மிக விரிவான இலக்கிய வாசிப்பும், சமரசமற்ற ரசனையும் கொண்டவள் அவளே. என்னை விடவும் அஜிதனை விடவும் இலக்கியம் அறிந்தவள். இதேபோன்று பொருத்தமாக அவளுடைய திருமணமும் நிகழ்ந்துவிட்டால் நல்லது.

அருண்மொழி சொன்னாள். “அவளுக்கும் ஒரு குடும்பம் அமைஞ்சா நாம நிம்மதியா உலகம் சுத்தலாம் ஜெயன்”. நான் திடுக்கிட்டுஅப்ப இது வரை நீ சுத்தினது?” என்றேன். “நான் இதுவரை இருபது நாடுகள்தான் போயிருக்கேன்அதுவா உலகம்?” என்றாள். இந்தப் பெண்கள்! 

முந்தைய கட்டுரைசாந்தானந்த சரஸ்வதி
அடுத்த கட்டுரையுவன் நாவல்கள் – தன்யா