சில்லறை [கன்னடச் சிறுகதை]

மூலம் :விவேக் ஷன்பேக்

தமிழாக்கம்: கனகா

 

-1-

இப்போது அவர்களின் பேச்சு புதிய திறந்த பொருளாதாரம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. வாணிபம் செய்ய இந்தியாவில் நுழைந்திருக்கும் அயல்நாட்டு நிறுவனங்கள், அதன் மூலம் கிடைக்கும் வருமானம், ஆதாயம் குறித்துப் பேசிகொண்டிருந்தவர்களிடையே இனி திறக்கவிருக்கும் புதிய உலகின் அச்சங்கள் படராமல் இல்லை. இதற்கிடையே நுழைந்த சதீஷ், வியப்புடன் உதிர்த்த வார்த்தைகள்-

“நம்பி பெங்களூரூக்கு வர்றான்… இன்னும் ஆறு மாசத்துல இங்க குடும்பத்தோட தங்கிடுவான்”

இன்னும் அவர்கள் கிளப்பில் அமர்ந்து குடித்துக் கொண்டேயிருந்தார்கள். நம்பியினுடைய வருகை அவர்கள் பேச்சின் உயிர்ப்பை இன்னும் கூட்டியிருந்தது. சதீஷுடன், பிரவீண் சுக்லா மற்றும் ஜனார்தன ராவ் இருவரும் இணைந்து கொண்டனர். மூவரும் பன்னாட்டு நிறுவனத்தின் மூத்த மேலாளர் பதவியிலும், நாற்பதின் மத்தியிலும் இருக்கிறார்கள். முன்பொரு காலத்தில் நம்பி இந்த மூவரின் கீழும், பின்பு இந்த மூவருடனும் வேலை பார்த்தவன். கொழுத்த சம்பளத்தில் வேலை கிடைத்தவுடன் துபாய் கிளம்பிய நம்பியைப் பார்க்கையில்…. பொறாமை, ஆசை, கர்வம் என மூவருக்கும் பீறிட்டெழுந்த உணர்வுக் கலவையை,  இந்த உயரம் அவர்களுக்கும் வசப்படும் தூரத்தில் தான் இருக்கிறது என்ற உள்மனஆறுதல் மட்டுமே அமிழ்த்தியிருந்தது.

இந்தியாவில் இருந்திருந்தால் இந்த உயர்வு நம்பிக்கு நிச்சயம் சாத்தியப்பட்டிருக்காது, வெளிநாட்டு வேலைதான் அவன் அசுரவேக வளர்ச்சியின் ரிஷிமூலம் என்பது அவர்களின் எண்ணம்.  இப்போது சதீஷ் விலக்கியிருக்கும் திரையை எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரியாமல், ஒரு கெட்ட செய்தியாகவே இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மற்ற இருவரும் முன்னிறுத்திய கேள்விகள்… ” அவன் ஏன் ஊர் திரும்பறான்” “எதனாலயாவது அவன் கம்பெனி நஷ்டமடைஞ்சிட்டதா….?”  “ஒரு வேளை அவனை வேலையிலிருந்து தூக்கியிருப்பாங்களோ…?’’

மற்றுமொரு உறிஞ்சலுடன், சதீஷ் கைகளை வான் நோக்கி உயர்த்திக் காட்டியவாறே தொடர்ந்தான் “திரு. நம்பியார் இப்போது இன்னும் உயர்ந்துவிட்டார்..கிட்டத்தட்டக் கடவுள் அளவுக்கு…. அவன் நிறுவனம் இந்தியால அலுவலகம் திறக்கறாங்க அதுக்கு நம்பிதான் தலைவர். சம்பளம் வெளிநாட்டு டாலர்லன்னு பேச்சு”

“உனக்கு எப்படிடா தெரியும்…” என்று வினவினான் பிரவீண்.

“என் பிரண்டு துபாய் போயிருந்தப்போ நம்பியப் பார்த்திருக்கான். இந்த விஷயத்தை ஒரு நம்பகமான இடத்துல இருந்து கேட்டிருக்கான்… பூசாரிக்குப் பகவானே சொன்ன மாதிரி”

நம்பியின் இந்த வெற்றிக்குப் பின் தன் பயிற்சிதான் காரணம் என்று பறைசாற்றிக் கொள்ள விரும்பிய பிரவீன் பேச்சை இடைமறித்தான் ’’நம்பவே முடியல நம்பியா இது….? அவன் ரொம்ப ரகசியமான ஆள் ஆச்சே… ஆறு மாசத்துக்கு அப்பறம் வரபோறத இவ்ளோ சீக்கிரம் சொல்லிட்டானே”

சதீஷ் தன் நண்பன் துபாயில் இருக்கும் நம்பியின் வீட்டிற்குச் சென்றபோது அந்த வீடு எத்தனை பிரம்மாண்டமாகவும் நவீனமாகவும் இருந்தது என்று உற்சாகத்துடன் சொன்னான். அவன் சென்ற அதே நாள் நம்பி சீனாவில் இருந்து வரவழைத்த இரண்டு பறவைப் படங்கள் ஒவ்வொன்றும் லட்சம் மதிப்பாம்.

’நீ அதே நம்பியாரைப் பத்திதான் சொல்றீயா…?’ இன்னும் வியப்பு மறையாமல், மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான் பிரவீண். நம்பிக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பையும் அந்த வெற்றிக்குக் காரணமான அவனுடைய ஆற்றல்களையும் பற்றி சிரிப்பும், பேச்சுமாய் மூவரும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார்கள்.

-2-

திருவனந்தபுரத்தின் அருகிலிருக்கும் ஒரு சிறு நகரத்தைச் சேர்ந்தவன் நம்பி . நடுத்தரக் குடும்பத்தின் ஒரே மகன். சிறுநிறுவனம் ஒன்றில் சேரும் முன் பள்ளி, கல்லூரிப் படிப்பைத் திருவனந்தபுரத்திலும், முதுநிலைப் படிப்பை பம்பாயிலும் முடித்திருந்தான். பெங்களூரில் இருக்கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியமர இரண்டாண்டுக்கால அனுபவம் அவனுக்கு உதவியது. பணிமாற்றத்திற்கிடையே திருமணமும் அரங்கேறியது. வெகு நேர்த்தியாய், அவன் துறையின் வணிக ரகசியங்களைக் காப்பாற்றிய விதம், அவன் நேர்மையை அழகாய்ப் பிரதிபலித்ததோடு வெகு குறுகிய காலத்தில் நற்பெயரையும் பெற்றுத் தந்திருந்தது. தலைமை அதிகாரியின் தனிப்பட்ட அன்பு நம்பிக்குத்தான். பிரவீன் சுக்லா, துறையில் மற்ற யாரிடமும் இல்லாத அளவில், தனிப்பட்ட முறையிலேயே நம்பியை நடத்தினான். நம்பியின் வருகை, பிரவீணின் வேலையை மேலும் மிருதுவாக்கியிருந்தது. வெகு விரைவில் நம்பி, நிறுவனத்தின் ஏணியாகவே ஆகிவிட்டிருந்தான். எப்போது நேரம் தாழ்ந்து வேலை செய்வதும் வீட்டிற்க்கு உறங்க மட்டுமே செல்வதும் அவன் வழக்கமாகிவிட்டிருந்தது. அவன் மனைவி வரிணி, இவை அனைத்தையும் உதறிவிட்டிருந்தாள். அவனோடு பணிபுரிபவர்களின் மனைவிகளை விருந்துகளில் சந்திக்கும் போதும் கூட் எந்தப் புகார்களும் வரிணியிடம் இருந்ததேஇல்லை. பார்க்கிறவர்களைப் பொறாமைக்குள்ளாக்குகிற திருமண தம்பதிகளாய் இருந்தனர் நம்பி தம்பிகள்.

இப்போது பிரவீணால், நம்பி ஏதோ ஒரு விஷயத்தை அடைகாத்துத் திரிவதை உணரமுடிந்தது. இரண்டு மாதங்களாகவே, நம்பியின் எண்ணம் சிதறியிருப்பதைப் பார்க்க முடிந்தது. அவன் வேலையில் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க இயலாத போதும் அவன் மனம் வேறு எதிலோ புதைந்திருப்பது பிரவீணுக்குத் தெரிந்தேயிருந்தது. அதனால் ஒரு சனிக்கிழமை மதியம், பிரவீண் நம்பியை உணவுக்கு அழைத்துச் சென்றான். பீரோடு சேர்ந்து உணர்ச்சிகளும் பொங்கின.

” நம்பி… உன்னஏதோ ஒண்ணு தொந்தரவு செய்றது எனக்குத் தெரியுது…. எங்கிட்ட என்ன தயக்கம் என்னன்னு சொன்னா என்னால உதவ முடியுமான்னு பார்பேன்.” நம்பி யாரிடமும் அவன் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுவதேயில்லை. பேசுவதற்கும் அவனுக்கு யாரும் பெங்களூரில் நண்பர்கள் என்று இருந்ததில்லை. பிரவீன் தன்னிடம் இருக்கும் மாற்றத்தை உணர்ந்துவிட்டான் என்ற விழிப்பால் நம்பியின் சோகம் வார்த்தைகளாய்த் தெறித்துவந்தது.

“பணம் தான் என்னுடைய பிரச்சனை பிரவீண்”

“உன்னால கட்ட முடியாம போன கடனா…? உன்னப் பத்தி எனக்குத் தெரிஞ்சளவுல பெரிய கடனல்ல மாட்டிக்கிறவன் நீ இல்லை. உன் அப்பாம்மாவும் உன் பணத்த நம்பி இல்ல. எல்லாமே தலகீழா இருக்கு சொல்லு நம்பி உனக்கு என்ன பிரச்சனை” பிரவீணின் கேள்விகளில் இறுக்கம் கூடிக்கொண்டே போனது.

“அது அப்படியில்ல… பணம் கஷ்டம்ன்னும் எதுவும் இல்லை. என் கணக்கு எங்கேயோ இடிக்குது. அது எல்லா விஷயத்தையும் கோணல்மாணலா ஆக்குது. ம்ம்ம்ம்….. அத நான் விளக்கமா சொல்ல ரொம்ப நேரம் வேணும். இதத் தீக்க யாராலேயும் உதவ முடியாது” என்று உதவியற்றவனாய்ப் பார்த்தான் நம்பி.

“எவ்வளோ பணம்?”

“பன்னிரண்டு ரூபாய்.”

பிரவீண் பின்வாங்கினான். அவனுக்கு என்ன சொல்வது என்றும் தெரியவில்லை. மெளனமாக பீரை மட்டும் மெல்ல உறிஞ்சினான். அவனால் நம்பியை அளக்கவே முடியவில்லை, எப்படி ஒரு மனிதன் ஐந்து இலக்க சம்பளம் வாங்கிக் கொண்டு இரண்டு மாதங்களாக வெறும் பன்னிரண்டு ரூபாய்க்காய் இவ்வளவு மனமுடைந்து போக முடியும்?? இந்தக் கஞ்சத்தனம், நம்பியின் புதிய பரிமாணமாகப் பிரதிபலித்தது. ஒரு வேளை இப்பொது அவன் தொண்டையை நனைத்துக் கொண்டிருக்கும் பீரின் ஒவ்வொரு துளிக்கான விலையையும் கணக்குப் போட்டுகொண்டிருக்க கூடும் என்று கூடத் தோன்றியது பிரவீனுக்கு. ஆனால் எத்தனை முயன்றும், நம்பி அளவுக்கு அதிகமாய்ச் சிக்கனமாக இருந்த எந்த ஒரு நிகழ்ச்சியையும் நினைவு கூரவே முடியவில்லை அவனால்.

இன்னும் பிரவீணின் எண்ணம் விரிந்து கொண்டேயிருந்தது. “எதுவானலும் சரி, கஞ்சத்தனத்திற்கும் ஒரு அளவு உண்டு… ஏன் இந்தத் துக்கினியூண்டுப் பணம் உன்னை இவ்ளோ தொந்தரவு பண்ணுது? நீ இவ்வளவு தூரம் போகும் போது உன் மனைவியாவது உனக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா..?”நம்பிக்கு அவன் நிலையை விளக்க முழு அரை மணிநேரம் தேவையாயிருந்தது. “பிரவீண்… அது வெறும் பன்னிரண்டு ரூபாய் இல்லை.”

நம்பியின் குடும்பத்திற்குச் செலவுகளைக் கணக்கில்  வைக்கும் பழக்கம் உண்டு. இது அவன் அப்பாவின் அப்பாவிடமிருந்து வந்தது. குடும்பம் செலவிடும் ஒவ்வொறு அணாவும் கணக்கில் வைக்கப்படும். அந்த நாளின் இறுதியில் மீதமிருக்கும் பணத்தை மிக எச்சரிக்கையாகக் கணக்கில் கொள்வார்கள். கணக்கின் இறுதியில் எந்த வித வித்தியாசமும் வரவே கூடாது. இந்த உன்னிப்பான கணக்குப் பார்க்கும் முறை மூன்று தலைமுறைகளாய்ப் பழக்கத்தில் இருக்கிறது. வடக்கில் இருந்த ஒரு பிரிட்டிஷ் அதிகாரியிடமிருந்து இந்தப் பழக்கத்தை நம்பியின் தாத்தா எடுத்துக் கொண்டார். நம்பி கல்லூரி செல்லத் துவங்கிய நாள் முதல், அவன் செலவுக்குக் கொடுத்த பணத்தோடு சேர்த்து ஒரு கணக்குப் புத்தகத்தையும் கொடுத்தார் அவன் அப்பா. அந்தப் புத்தகமும் அவன் கல்லூரி முடிக்கும் வரை சரியாகவே வந்திருக்கிறது.

நம்பிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அவன் தந்தை தினமும் இரவு அமர்ந்து,  குடும்பச்செலவுகளைக் கணக்கில் எழுதுவதை நினைவில் திரட்ட முடிகிறது. அவன் தந்தை எப்படிப் புத்தகத்தைத் திறப்பார், செலவாகாத பணத்தை, ரூபாய் நோட்டுகளாகவும், நாணயங்களாகவும் பிறகு நாணயங்களை எண்ணுவதற்கு லாகவமாய்க் குவித்து வைப்பதையும் கூட நினைவில் மீட்க முடிகிறது. அவர் பெரிய தாள்கள் நிறைந்த நோட்டுப் புத்தகத்தை உருவாக்குவதும் அதில் அளவுகோல் கொண்டு கோடு வரைவதும், பின்பு நடுப்பக்கத்தை மடித்து அதைத்தடிமனான நூலில் தைத்து,அடர்த்தியான அட்டையை மடித்த காகித அளவிற்குக் கத்தரித்து இணைப்பது வரை அனைத்தும் நினைவில் உண்டு. ஒவ்வொறு புத்தகமும் ஆறு மாதத்திற்க்குப் போதுமானதாய் இருக்கும். இப்போது நம்பி உபயோகிக்கும் ஒரு புத்தகம் கூட அவன் அப்பா கொடுத்தது தான். பலவருடங்களாய்த் தொகுக்கபட்ட குடும்பக் கணக்குகள்,  அவன் மூதாதையர் வீட்டின் உப்பரிகையில் குவிந்து கிடக்கிறது.

அவர்கள் செலவு செய்த ஒவ்வொரு பைசாவும், கணக்கில் இடம்பிடித்தாலும், நம்பியின் தந்தையோ அல்லது தாத்தாவோ கஞ்சர்களாக இருந்ததில்லை.  “அதிகம் செலவழிப்பது ஒரு விஷயமே அல்ல. …அந்தக் கணங்கள் கழிந்த பிறகு இந்தப் புத்தகம் சொல்லும், நாம் நம் எல்லையில் இருந்தோமோ, சரியகத்தான் செலவு செய்தோமா என்று’. நம்பியின் தாத்தா ஒரு முறை அவர் மகனிடம் கூறியது பின்னால் நம்பிக்கும் வந்து சேர்ந்தது. அவர் தாத்தா உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் செலவுகளைக் கணக்கு வைக்கச் சொல்லி ஊக்க்குவிப்பார். சிலர் இதை ஊக்கத்துடன் துவங்கினாலும் அதன் பதற்றத்தைத் தாங்கமுடியாமலும் இடையிலேயே பலரும் கைவிட்டுவிடுவார்கள். ஒவ்வொரு நாளும் கணக்கைத் தவறவிடுவதும், சிறிய சிறிய பணத்தைக் கணக்கில் வைக்க மறப்பதும் பின்னாளில் ஒரு பிரமாண்டமான தொகையை வித்தியாசப்படுத்திக் காட்டும். ஒரு சிலர் செலவுகளை எழுதினார்களே தவிர சரியாக மீதத் தொகையைக் கணக்குப் பார்க்கவில்லை இன்னும் சிலர் இரண்டு ரூபாய்க்கு மேற்பட்ட செலவுகளுக்கு மட்டும் கணக்கு எழுதினார்கள். இவர்களைப் பெரும்பாலானவர்கள் கேலியும் செய்தார்கள்.  பின்னாளில் இவர்கள் குடும்பத்திற்குச் “சித்திரகுப்தர் குடும்பம்” என்ற பட்டப்பெயரும் கிடைத்தது.

யார் எதைச் சொன்னாலும் நம்பியார் குடும்பம், இன்று கணக்கில் வர மறுக்கும் அந்தப் பன்னிரண்டு ரூபாய் உட்பட அனைத்துக் குடும்பச் செலவுகளைக் கச்சிதமாகக் கணக்கு வைத்திருந்தார்கள். நம்பி எல்லாச் செலவுகளையும் எல்லா நாளும் எழுதி வந்தாலும் கொஞ்சம் நாகரீகமாக இருந்ததால் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கணக்குப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.  இந்தப் பழக்கம் தான் இப்போது கணக்கில் வராமல் போன பன்னிரண்டு ரூபாய்க்குக் காரணமாக இருக்கும் என்றும் நினைத்தான். வரிணி அவன் மாமன் மகள். அவளுக்கும் இந்த விநோதப் பழக்கம் பற்றித் தெரிந்திருந்தது. அவள் வீட்டிலேயே கூட இந்தப் பழக்கத்தை சில காலம் செய்து வந்து பின்பு உதறிவிட்டிருந்தார்கள். திருமணமான நாள் முதல் இதை சரியான விதத்தில் எடுத்து கொண்ட வரிணி, தன்னைத் தகுதியான மருமகளாய் நிரூபித்துக் கொண்டாள். இப்போது இடிபடும் இந்தக் கணக்கு அவளையும் கஷ்டப்படுத்தியிருந்தது. காலம்காலமாய் இருந்து வந்த பழக்கம் இந்தச் சின்ன வித்யாசத்தில் தவறிப்போனதில் அவளுக்கும் மனவருத்தம்.

நம்பி அடிக்கடி “ரூனானுபந்தா” என்னும் “சந்தாமாமா”வில் படித்த கதையை நினைவுகூர்வதுண்டு. ஒரு தம்பதியருக்கு  இரண்டு குழந்தைகள். இரண்டுமே நீண்ட காலம் வாழாமல் போனதைக் குறித்த கதை.  ஒரு நாள்  புதிதாகப் பிறந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஒரு துறவியிடம் சென்றனர். “ஒவ்வொரு படைப்பும் ஏதோ ஒரு வேண்டுகோளுடனேயே வருகிறது. அது நிறைவு பெற்றதும் இந்த உலகத்தை விட்டுச் செல்கிறது. உங்கள் குழந்தைக்கு சிறிய வேண்டுகோள் இருந்திருக்கக் கூடும் அதனால் நீண்ட காலம் வாழாமலும் போயிருக்கும். இப்போது இந்தக் குழந்தைக்கு ஒரு பாத்திரம் நிறைய எண்ணெயைப் பெற்றோரிடம் கொடுக்க வேண்டும் என்பது வேண்டுகோள். இந்த எண்ணெய்ப் பாத்திரத்தைக் குழந்தையிடம் இருந்து பெற்றோர் வாங்காத வரை இந்தக் குழந்தை உயிரோடு இருக்கும்.” என்றார் துறவி. அந்த தம்பதியர் அந்தக் குழந்தையை மிகுந்த அக்கறையுடனும் எச்சரிக்கையுடனும் வளர்த்தனர். அவன் 18 வயதை நெருங்கும்  இடைவெளியில்,  ஒரு மதியம், அடுப்படியில் வேலையாய் இருந்த அவன் தாயிடம் ” அம்மா இதை எடுத்துக் கொள்” என்று கூறி அவளுக்குப் பின்னால் ஒரு பாத்திரம் நிறைய எண்ணெயை வைத்தான். இதைக் கவனிக்காத தாய், “அந்தப் பக்கம் வைத்து விடு, பிறகு எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறினாள். சிறிது நேரம் கழித்து இந்தப் பாத்திரம் இங்கு எப்படி வந்தது என்ற வியப்பில் அதை அள்ளி எடுத்தாள். அவள் மகன் மரணமடைந்தான்.

எப்போதெல்லாம் இந்தக் கதை நினைவில் வருகிறதோ அப்போதெல்லாம் எங்கோ யாரோ ஒரு கணக்குப் புத்தகத்தில் உலகத்தில் நடக்கும் எல்லா பரிவர்த்தனைகளையும் கணக்கு வைத்துள்ளார் என்பது அவன் மனதில் மின்னிப்போகும். இந்தக் கதை எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லாதது என்றும் இந்தக் கணக்கு வைக்கும் பழக்கத்தால்தான் அது அடிக்கடி நினைவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்றும் தெரிந்தும் நம்பி சற்று தவிப்புடன் பிரவீணிடம் இந்தக் கதையைச் சொன்னான்.

 

-3-

அனைத்து வார்த்தைகளையும் இழந்து, வெறும் பொறுமையுடன் மட்டுமே அமர்ந்திருந்த பிரவீணுக்குத் தோன்றியது இதுதான். இது முட்டாள்தனங்களின் உச்சம்.

“இங்க பாரு நான் உனக்குப் பன்னிரெண்டு ரூபா தரேன். உன் கணக்க சரி பண்ணிக்க.’’

“அது எப்படி முடியும்? அதையும் நான் கணக்குப் புத்தகத்துல எழுதணும் எப்படிக் கணக்கு சரியாகும். இது வேலைக்காகாது”

இப்போது பொறுமை இழந்தவனாய், மீண்டும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு. ” நாளைக்கு உன் வீட்டுக்கு வரேன் உன் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன். ”

நம்பியின் கிறுக்குக்கு ஒரு நல்ல சிகிச்சையை யோசித்துக்கொண்டு அடுத்த நாள், நம்பியின் வீட்டிற்குச் சென்றான் பிரவீண்.  கணவனுக்கும் மனைவிக்கும் பேசுவதற்கான வாய்ப்பைக் கடுகளவும் கொடுக்காமல், அவர்களை அமரச் செய்து உரக்கக் கத்தினான்.

“முதல்ல இது போலக் கணக்கு வைக்கிறத நிறுத்துங்க… இதுக்கும் மூட நம்பிக்கைக்கும் எந்த வித்யாசமும் இல்லை. ஏதோவொரு காலத்துல, கொஞ்சமும் கவலையும் உசிதமும் இல்லாம உங்க தாத்தா பழக்கிய பழக்கத்துனால, இரண்டு மாசமா பன்னிரண்டு ரூபாய்க்காக கவலைப் படுறது கொஞ்சமும் நியாயம் இல்லை. போதாத குறைக்கு, சின்ன பிள்ளைய இருக்கையில் படிச்ச கதையால பெருசா ஞானம் வந்துட்டதா நினைக்குற… இதனால உன்னோடு அறிவிலும், முடிவெடுக்கற தன்மையிலும் சுதந்திரமே இருக்கலைன்னு தெரியுது. நம்பி… நீ இந்த நடுத்தரக் குடும்ப வாழ்க்கையின்ற ஓட்டை ஒடச்சுக்கிட்டு வெளிய வரணும்.இது போல அற்பக் காரணங்களுக்காக வருத்தப் படக்கூடாது. நீ வீட்டிலயும் வெளியலயும் வெவ்வேறு மனிதனா இருக்க முடியாதுங்கிறத இந்த நிமிஷத்துல உணரணும். இப்ப உன் வேலையில தெரியிற ஒவ்வொரு வளர்ச்சியும் நீ வருங்காலத்திலே ஒரு நிறுவனத்துக்குத் தலைவரா வருவேன்னு சொல்லுது. இப்போ ஒரே மனசோட உன் இலக்கை மட்டுமே நோக்கிப் போ.”

நம்பிக்கு , பிரவீண் போதித்தான். மிரட்டினான், வார்த்தைகளால் வசீகரிக்கவும் செய்தான். நம்பியிடம் எந்த வார்த்தைகளும் இல்லை. நம்பியின் நாவு அடங்கியிருந்தற்கு அவன் பிரவீணுக்குக் கீழ் வேலை செய்வதும், அவனுடைய போதனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதும் மட்டும் காரணமாக இருக்க முடியாது. பிரவீண் பேசப்பேச அவர்கள் முகத்தின் உணர்வுகளை மிகுந்த எச்சரிக்கையோடு உள்வாங்கிக் கொண்டிருந்தான். குறிப்பாக வரிணி அவன் கூறிய அனைத்திற்கும் ஒத்துப் போவது போல் கூடத் தோன்றியது.  இரண்டு மணி நேர அறிவுரைக்குப் பிறகு பிரவீண் மேலும் தொடர்ந்தான். ” நீ கணக்கு எழுதுவதை நிறுத்துவேன்னு சத்தியம் செய்”

இந்த நிலைக்கு வரும் என்று அறியாதவனாய்த் திடுக்கென்று விழித்தான் நம்பி. பிரவீணிடம் அவன் சொல்ல வந்த அனைத்து வார்த்தைகளும் தீர்ந்துவிட்டிருந்தது. ” உன்ன இரண்டு நாளுக்கு அப்பறம் சந்திக்கிறேன்… என்ன முடிவு பண்ணியிருக்க சொல்லு” என்று கூறி மீண்டும் ஒரு முறை, வரிணியின் கண்களை நினைவில் இருந்து உருவினான்… ஒவ்வொரு முறை பிரவீண் நம்பியின் வளர்ச்சியைப் பற்றிச் சொல்லும் போதும் அந்தக் கண்கள் சுடர்ந்ததை உணர்ந்தவனாய்… அவள் அவனின் எண்ணத்தை மாற்றக்கூடும் என்று நம்பினான்.

பின்பு இதைப் பற்றி அலுவலகத்தில் கூட நம்பியிடம் எதையும் பேசவில்லை பிரவீண். சொன்னதைப் போல இரண்டு நாட்கள் கழித்து, மாலையில் நம்பியின் வீட்டுக்குச் சென்றான். பிரவீண் வீட்டினுள் நுழையும் முன்னமே, நம்பியின் நீண்ட நாள் கணக்கு எழுதும் பழக்கத்திற்குப் பிரியாவிடை கொடுத்ததற்கான அறிவிப்பு அவனை எட்டியிருந்தது. இது இத்தனை விரைவில் நடந்ததை பிரவீண் சற்றும் எதிர்பார்க்காமல் உறைந்து நின்றான். அடுத்த ஆயுதத் தாக்குதலுக்கு அவன் தயார் செய்திருந்த வெடிப்பொருள்கள் அனைத்தும் வீணாகிப்போனது. “பன்னிரண்டு ரூபாய் என்னாச்சு”என்று கேலியாய்க் கேட்க “எந்தப் பன்னிரண்டு ரூபாய் ஞாபகம் இல்லையே” என்று நம்பி சொன்னதும். தான் ஒரு சிறப்பான அறிவுரையை வழங்கியிருப்பதாய்ப் பெருமையில் சிலிர்த்துப் போனான் பிரவீண்.

-4-

பிரவீண் சென்றுவிட்ட சிறிது நேரத்திற்கெல்லாம், நம்பியும் வரிணியும் உறங்கச் சென்றனர், இத்தனை காலம் பழகிப் போயிருந்த கணக்குகளைப் பார்க்காமலேயே. வரிணி அவனை உற்றுப் பார்த்தாள் “நான் அதை எல்லாம் கட்டி ஒரு பெட்டியில போட்டிடறேன்” என்றான் அவன். திருமணமான வருடத்திலிருந்து அவன் எழுதி வந்த கணக்குகள் அவை.

லால்பாக் செல்ல ஆட்டோவிற்குக் கொடுத்த பணம், தின்பண்டமும் பாப்கார்னும் வாங்கியது என அனைத்தும் அந்தப் புத்தகத்தில் உண்டு. உண்மையில் எப்படியோ அவர்கள் திரும்ப வந்த போது கொடுத்த ஆட்டோ கட்டணம் கணக்கில் இருந்து தவறிப்போயிருந்தது. அந்தக் கட்டணத்தை அவள் தான் கொடுத்தாள், நிச்சயம் அவள் கணக்குப் புத்தகத்தில் இருக்க வேண்டும். அவன் பக்கங்களைப் புரட்ட, சட்டை, ஜட்டி, பிரா என அனைத்துக் கணக்குகளும் புரண்டன. அவர்கள் கருத்தடை மருந்து வாங்கியதை “ஹெல்மட்” என்று குறிப்பால் எழுதியிருந்ததும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. பக்கங்கள் புரளப்புரள மிகவும் தளர்ந்து போனான் நம்பி. புகைபிடிப்பதற்கும் புகையிலைக்கு அடிமையாய் இருப்பதற்கும் இந்தப் பழக்கத்திற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. ஒவ்வொரு நாள் கணக்குப் பார்க்கும் நேரத்திலும் நம்பி உற்சாகம் ஆகிப் போனான். ஒவ்வொரு முறை கணக்கை முடிக்கிற போதும் ஒரு விநோதமான நிறைவு அவனை நிரப்பியிருக்கும். யோசித்துப் பார்க்கையில் இந்தப் பழக்கம் தான் அவன் வெற்றிக்கு இத்தனை நாளும் உடன் வந்திருக்கிறது.  மாணவப் பருவத்தில பல நாட்கள் தேநீரைத் தவிர்த்து எச்சரிக்கையோடு இருக்க உதவிய கணக்கு. சினிமாவுக்கு அதிகம் செலவு செய்யாமல் குறிப்பாகப் பரீட்சை நெருங்குகிற நேரத்தில், விழிப்புடன் செயல்பட வைத்த கணக்கு. வாரம் ஒரு முறை வீட்டிற்குக் கடிதம் மூலம் பேசும் போதெல்லாம், “இந்த வாரக் கணக்கு சரியா இருந்தது” என்று எழுத வைத்த கணக்கு. இன்னும் அவன் நினைவுகள், ஏராளமானவைகளை அவனுக்குத் தந்து கொண்டேயிருந்தது.

பல்வேறு நிலையில் தேர்வில் வெற்றி பெற்றது, பெற்றோரின் ஆசைகளை அவன் நிறைவேற்றிய கணம், அவன் தொழில் முறையில் வளர சந்தித்த சவால்கள், தாண்டிய தடைகள், என அனைத்திலும் இந்தக் கணக்குப் புத்தகம் உணர்வு பூர்வமாய்ப் பங்கேற்றிருந்ததை அவனால் உணரமுடிந்தது. இவன் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பிரவீண் கூறிய வார்த்தகள் நம்பியைத் தொந்தரவுக்குள்ளாக்காமல் இல்லை. இப்போது அந்த வார்த்தைகள் அவன் மனைதை முழுவதுமாக நிரப்பிவிட்டிருந்தன.  இனி ஒருபோதும் அவன் கணக்கு எழுதத் தேவையேயில்லை என்ற அந்த நிமிடத்தின் எண்ணம், அவனுள் அடங்காத ஒரு சுதந்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. பீர் புட்டிகள், முந்திரிக் கொட்டைகள், செருப்பு என இன்று அவன் வாங்கிய அனைத்தும் நினைவில் வந்தது. அந்த அனைத்துப் பொருட்களின் விலையையையும்  குறித்துக் கொள்ளும் மனோபாவத்தால் இன்னும் அவன் மனம் நிரம்பியிருந்தது. இனி எந்தக் கணக்குகளையும் வரவு வைக்கவோ குற்ற உணர்வோடு இருக்கவோ தேவையில்லைதான். யாரிடமும் இந்தக் கணக்கை சமர்ப்பிக்கவேண்டியதும் இல்லை தான். இந்தஎண்ணம், அவனைப் பாவத்திற்கும் நல்லொழுக்கத்திற்கும் இடையே ஒரு விதமாய் உணரச் செய்திருந்தது. இப்போது மிக மென்மையாகவும், அந்த மென்மையோடு கூடிய வலியையும் அவனால் உணர முடிந்தது.

இந்தக் குமிழை எப்படி உடைப்பது? வழக்கம்போலப் புது வருடத்திற்காகச் சில நாட்கள் தன்னோடு தங்க வரும் பெற்றோர்களிடம் இந்தப் பழக்கத்தைத் துறந்து விட்டேன் என்று எப்படிச் சொல்வது என்று அமர்ந்து ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். இது அவர்களுக்கு இயல்பை மீறிய கோபத்தைக் கொடுக்கலாம், அளவிட முடியாத வலியைக் கூடக் கொடுக்கலாம். அதே நேரம் இந்தக் குற்ற உணர்ச்சியைத் தாண்டி விட்டால் மீண்டுவிடலாம் என்பதை உணர்ந்தேயிருந்தான். பெற்றோர் வந்ததும் இதைச் சொல்லிவிடுவதற்காகக் காத்திருப்பதா வேண்டாமா என்று தனக்குள் முட்டிக்கொண்டபின் நேரடியாக அவர்களுக்கு எழுதியேவிடலாமென முடிவெடுத்தான்.

[கன்னடமூலம் சஸேஷா. ஆங்கில மொழியாக்கம் சரத் அனந்தமூர்த்தி. தமிழாக்கம் கனகா]

[மொழிபெயர்ப்பாளர் கனகலட்சுமி பட்டிமன்றப்பேச்சாளர். எழுத்தாளர்.  கோவையில் வசிக்கிறார். கால்செண்டர் ஊழியர்களின் வாழ்க்கையைப்பின்னணியாகக் கொண்டு ’ இருள் தின்னும் இரவுகள்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார்]

முந்தைய கட்டுரைஎன் சரித்திரம் இணையத்தில்
அடுத்த கட்டுரைதிருவிதாங்கூர் வரலாறு பற்றிய குறிப்புகள்