மருபூமி முன்னுரை, அஜிதன்

 

மருபூமி வாங்க

மருபூமி மின்னூல் வாங்க 

சென்ற வாரம் இத்தொகுப்பின் தலைப்புக் கதையானமருபூமிஎன்ற குறுநாவலை எழுதிமுடித்தேன். வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கையில் நடந்ததாக ஒரு சம்பவத்தை புனைந்து இக்கதையை எழுதியிருக்கிறேன். இவ்வருடத்தின் முதல் நாள்வல்லினம்இதழில் என்னுடைய முதல் சிறுகதைஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்வெளியானது. ஒரே நேரத்தில் ஒரு நீதிக்கதையாகவும் அதன் பகடியாகவும் வெளிப்பட்ட அந்த கதையை எழுதி முடித்தபோது என் மனதில் எழுந்தது பஷீரின் பிம்பமே. அவரை போல வாழ்க்கை மீதான தரிசனத்தில் ஒரு புன்னகையை கண்டடைவதும் மனிதர்கள் மேல் பிரியமும், அதே நேரம் பாவம் சகஜீவிகள் என்று சற்று இரக்கமும் கொள்வதே ஒரு உயர்ந்த கலைஞனின் பார்வை, அதுவே அவன் லட்சிய எழுத்தாகவும் இருக்கும் என பல சமயங்களில் நான் உணர்வது உண்டு. அவனது அந்த பார்வையில் இருப்பது கனிவு மட்டுமல்ல, அது ஒரு மாறாத தனிமை, தூய விலகல். பஷீர் அந்த இடத்தை வந்தடைந்ததற்கான பயணம் மிகப்பெரியது. அது குறித்து இலக்கிய உலகில் எத்தனையோ பேசப்பட்டும் உள்ளது. ஆனால் அவை பெரும்பாலும் நான் வாசித்தவரையில் விதந்தோதும் சிறு குறிப்புகளாகவே நின்றுவிடுகின்றன. பஷீர் சிறு வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதும், அவரது ஜெயில் வாசமும், இந்திய நிலம் முழுக்கஅரேபியாவும், ஆப்பிரிக்காவும் வரைகூடசென்று மீண்ட அவரது நெடும் பயணங்களும், பலமுறை அவரை தீண்டிச்சென்ற பித்தும் ஒருவகை வியப்பை நமக்குள் அளித்து விலக்கி நிறுத்துகின்றன. எல்லா வகையிலும் அவர் ஆங்கிலத்தில் சொல்லப்படும்வாழ்க்கையை மீறிய ஆகிருதிகொண்டவர். 

பஷீரின் அந்த பெரும் வாழ்வே அவர் படைப்புகளை நம்முள் பரந்து விரியச்செய்வது. ஆனால் ஒரு ஞானியின் உயர் கலைஞனின் அக பயணத்தின் முன் நமக்கு எப்போதும் ஒரு அச்சம் உள்ளது. தீவிரத்தின் மீது கொண்ட அச்சம் மட்டுமல்ல அது, அத்தீவிரத்தின் நெருப்பு நம்மையும் பொசுக்கி விடுமோ என்னும் அச்சம். ஆனால் அந்த அச்சம் கலைஞர்களுக்கானதல்ல, அடுத்து வரும் கலைஞர்களும் சீடர்களும் எப்போதும் அந்த நெருப்பில் குதித்து மீளவே விரும்பியிருக்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் முன் சென்ற கலைஞனின் சிதை நெருப்பு தான் கலையை வாழ வைக்கிறது. ’மருபூமியில் நான் அந்த அச்சத்தை உடைத்து எனக்குள் எழுந்த பஷீரை படைத்திருக்கிறேன். அந்த மாபெரும் வாழ்வனுபவத்தை வார்த்தைகளில் விவரிக்க முயன்றிருக்கிறேன். அதன் மூலம் நானும் அவர் அடைந்த விரிவை சற்றேனும் அடைந்தேன். 

இக்கதை பஷீரின் வாழ்க்கை குறிப்புகளிலிருந்து, அவரது எழுத்துக்களிலிருந்து ஒரு பாலை பயணத்தை கற்பனை செய்கிறது. அவரது நீண்ட நெடும் அகப்பயணத்தின் சாரத்தை ஓரிரு நாட்களின் உக்கிரமான புற பயணத்தில் இறுக செய்து அளிப்பது இக்கதை. உலகின் மாபெரும் படைப்பாளி ஒருவரின் தீண்டலால் இது நிகழ்ந்ததாலேயே இது சந்தேகமின்றி உலகின் மிக முக்கியமான படைப்பாக அதற்குரிய வாசகர்களால் கண்டுகொள்ளப்படும். இதை சொல்வதில் எனக்கு தயக்கங்கள் எதுவும் இல்லை.

இக்கதையை எழுதும் காலங்களில் (கிட்டத்தட்ட ஒரு மாத காலம்) எனக்குள் வார்த்தைகளில் விவரிக்க முடியாத தனிமையுணர்வு ஒன்று குடியிருந்தது. புதிய அத்தியாயம் ஒன்றை எழுத அமர்ந்த போதெல்லாம், மூன்று வெவ்வேறு தருணங்களில், காய்ச்சல் பீடித்தது. உணவும், துளி நீரும் கூட இல்லாமல் இரு நாட்கள் இருந்தேன். இதற்கு முன் நான்கு நாட்கள் வரை உண்ணாமல் இருந்ததுண்டு என்றாலும் இந்த அனுபவம் மறக்கமுடியாதது. மீண்டும் மீண்டும் வாக்னரின்பார்சிஃபால்இசையில் மூழ்கியிருந்தேன். அதன் பாதிப்பு வலுவாக இக்கதையில் உண்டு. வாக்னரும் பஷீரும் சந்தித்துக்கொள்ளும் இடமும் கூட அந்த தனிமையின் கரையில்தான். எத்தனை மக்கள்கூட்டத்திற்கு நடுவிலும், சந்திப்புகளிலும், பேச்சிலும், சிரிப்பிலும் நான் அந்த தனிமையையும் கூடவே உணர்ந்தபடி இருந்தேன், உள்ளே பஷீரையும் மணல் பாலையையும் சுமந்தபடி. அந்த தனிமை பஷீரை வாசிக்கும் அனைவரும் அவரது எழுத்தின் சாரமாக உணர்வது தான். ’ஏகாந்தம்என அவர் எழுத்துக்களில் அந்த உணர்வு மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறது. அந்த உணர்வு எந்த வகையிலும் இருத்தலியலின்  சாயல் கொண்டது அல்ல, அது ஆன்மீகத்தில் வேரூன்றியது. “உள்விரியும் பாலைஎன்று மைஸ்டர் எக்ஹார்ட் அதை குறிப்பிடுகிறார், அதை ஒருவன் அடைய கற்றுக்கொள்வதே ஆன்மீகத்தின் முதலும் கடைசியும் என்கிறார்.

அந்த உணர்வை தான் நான் இப்படைப்பில் சென்று தொட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். அந்த மகத்தான தனிமையை கடந்து வந்து, இல்லை, அதை மீண்டும் உள்ளின் ஆழத்தில் கொண்டு சென்று சுமந்தபடி, இப்போது என் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு தருணத்தில் இதை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த கதைதான் அதை எனக்கு கொண்டுவந்து சேர்த்தது என நம்புகிறேன். வாழ்வை மிகத்தீவிரமாக உணரும் நாட்களாக இவை உள்ளன. அதற்கு நான் என் பஷீருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஆயிரத்திமுன்னூற்றிப் பதினான்கு கப்பல்கள்கதைக்கு பிறகு நான் எழுதிய சிறுகதைகள் எல்லாமே இயல்பாகவே அளவில் பெரிதாகின. அவை எவையுமே முடிவின் திருப்பத்தை நம்பி எழுதப்பட்டவை அல்ல, தெரிந்த, ஊகிக்கக் கூடிய ஒன்றை சொல்லாமல் விடும் யுக்தியும் அவற்றில் இல்லை. சமீபத்தில் ஒரு உரையில் தந்தை சிறுகதையின் அடிப்படை வடிவம் சார்ந்த ஒரு கேள்வியை முன்வைத்தார். அதாவது, சிறுகதை அதன் வடிவத்திலேயே திரிபு, சீர்குலைவு, எதிர்பாராமை அல்லது உடைவு ஆகியவற்றை கொண்டுள்ளதால் அது ஒரு வகையில் நவீனத்துவத்தின் தரிசனத்துக்கான லட்சிய கலைவடிவமாக மாறியது. அதேநேரத்தில் அந்த வடிவமே அதன் நிபந்தனை ஆகும்போது அதனால் பிற தரிசனங்களை சொல்ல முடியாமல் ஆகிறதா? என்ற கேள்வி தான் அது. அது என்னை பல வகையிலும் சிந்திக்க தூண்டியது. சிறுகதைகள் இருவகைகளில் இறுதித் திருப்பத்தை கையாளலாம். ஒன்று உடைவு அல்லது சமன்குலைவாக, அல்லது, எல்லாவற்றையும் ஒன்று திரட்டிக்கொண்டே சென்று கடைசியில் இடும் மிக மெல்லிய முடிச்சாக. அது பல சமயங்களில் வெறும் குறியீடே. இந்த தொகுப்பில் உள்ள கதைகளில் அவ்வாறான முடிச்சுகளை தான் நான் செய்திருக்கிறேன். “முடியாட்டமோ, ’ஒரு குழந்தையிறப்புப் பாடலோ அவ்வாறான முடிவுகளை கொண்டது தான். ஒரு வகையில் அவையும் குறுநாவல்களாக விரிய சாத்தியமுள்ள படைப்புகளே.   

இந்த வருடம் நான் மூன்று குறுநாவல்கள் எழுதியிருக்கிறேன். அவை மூன்றுமே தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த குறுநாவல்களின் வரிசையில் வைக்கத்தக்கவை என்று சொல்வேன். அதை வரப்போகும் எதிர்கால வாசகர்களும் கண்டடைவர் என்பதில் சந்தேகமில்லை. அந்த மூன்றில் இரண்டு இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இத்தொகுப்பின் பகுதியாக உத்தேசித்து எழுதப்பட்டஅல் கிஸாதனி நூலாக சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. 

ஒருசில பயணங்களையும் சில வகுப்புகளையும் தவிர்த்து முழுநேர எழுத்தாளராகவே இந்த ஆண்டு வாழ்ந்திருக்கிறேன். ஆனால் இப்போதும் என்னை கலைஞன் என்று சொல்லிக்கொள்வேனே தவிர எழுத்தாளராக சொல்லிக்கொள்ள தோன்றவில்லை. திரைத்துறை தான் என் இயல்பான வீடு, கைவசம் முதற்கலைகள் இல்லாதவர்களின் கூடம் அது. இந்த தொகுப்புடன் என் இலக்கிய பயணத்தை தற்காலிகமாக நிறைவு செய்ய விழைகிறேன். ஒரிரு திரைப்படங்கள் இயக்கும் எண்ணம் உள்ளது. அதுவரை எதுவும் பதிப்பிக்கும் எண்ணம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் எழுத ஹிந்துஸ்தானி இசையின்பட்டியாலா கரானாவை குறித்தான ஒரு நாவலும், வாக்னரின் இசைநாடகங்களை தழுவி ஒரு குறுநாவல் தொகுப்பும் என் எண்ணத்தில் இருப்பவை. அவற்றுக்கான காலம் இன்னும் ஐந்து வருடங்களுக்குள் வரலாம் என நம்புகிறேன்

*.

என் எழுத்து பயணத்துக்கு துணை நின்ற மிகப்பெரும் ஊக்கம் என் நண்பர்கள். அதில் முதன்மையாக சுசித்ராவும், கடலூர் சீனுவும் எப்போதும் அணுக்கமானவர்கள். இந்நாட்களில் என் மனசாட்சியின் காவலனாக ஆகிவிட்ட நண்பன் ஜி.எஸ்.எஸ்.வி. நவீனும் அவனது மனைவியும் என் இனிய தோழியுமான கிருபாலக்‌ஷ்மியும் நன்றிக்குறியவர்கள். மேலும் என் கதைகள் வெளிவரும் முன் படித்துக்கூறும் நண்பர்கள் நிக்கிதா, ரம்யா, சக்திவேல், பார்கவி போன்றவர்களும், என் மிக முக்கியமான வாசகர்களாக நான் கருதும் தே.. பாரி, அழகிய மணவாளன், வேலாயுதம் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஜெகன், தன்யா போன்றவர்களும் என் அன்புக்கும் நன்றிக்கும் உரியவர்கள். இப்புத்தகத்தை வெளியிடும் எங்கள் பதிப்பகத்தாரான மீனாம்பிகை செந்தில் குமார் ஆகியோருக்கும் நன்றிகள்.

இறுதியாக இளம் படைப்பாளியான என் படைப்புகளை தொடர்ச்சியாக படித்து பாராட்டி ஊக்கமளித்த முன்னோடி எழுத்தாளர்களான அ. முத்துலிங்கம் சார், கவிஞர் அபி, வண்ணதாசன், எம். கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் எப்போதும் நான் கடமைப்பட்டுள்ளேன். 

என் வாழ்க்கையின் மிக சிக்கலான தருணத்தில் நான் சரியாக என் ஆசிரியரை கண்டடைந்தேன். கலையின் பாதையை முழுமுற்றாக தேர்ந்தெடுப்பது இந்த சமூகத்தில் மிகப்பெரும் முடிவு, ஆபத்தானதும் கூட. அச்சமயத்தில் அவர் எனக்கு ஒரே நேரம் ஒரு ஆதர்ச பிம்பமாகவும் கண்டிக்கும் ஆசிரியராகவும் இருந்துள்ளார். ஒரே நேரத்தில் என்னை புத்திசாலியாகவும் சோம்பேறியாகவும் அவர் உணரச் செய்தார். இன்று வரை இவை இரண்டுமே என் அடிப்படை குணாதிசங்களாக இருக்கின்றன. அதில் ஒன்றை தக்கவைத்து கொள்ளவும் ஒன்றை உதரவும் தான் முயன்றபடி உள்ளேன். இந்த வருடத்தில் நான் எழுதியவை ஓரளவுக்கு அவருக்கு நிறைவை அளிக்கும் என நம்புகிறேன். மணி சார் நான் என் வாழ்வில் கண்ட மகத்தான ஆளுமை. நெருங்கும்தோரும் வியப்பளிக்கும் ஒருவர். அவரது சிறு பாராட்டுக்கள் கூட என் மனதில் பதிந்துவிட்டவை, வாங்கிய ஏராளமான ஏசல்கள் பெரும்பாலும் மறந்துவிட்டன. அதிகபட்சமாக அவர் கூறும்நன்றுஎன்ற ஒற்றை வார்த்தை தரும் ஊக்கம் அபரிமிதமானது. ஒரே ஒருமுறை என் தோள்களில் தட்டியும் இருக்கிறார். 

அப்படியிருக்க, இந்த வருடம் ஆரம்பத்தில்மைத்ரிநாவலின் அறிமுக விழாவில், அவரது மாபெரும் திரைப்படத்தின் பின் தயாரிப்பு பணிகளுக்கு நடுவில் அவர் என் நாவலை படித்துவிட்டு வந்து வாழ்த்துரை வழங்கினார். வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று அது. அன்று அவர் முன்னிலையில் சொன்னதை போலவே இன்று இத்தொகுப்பை முடித்துவிட்டேன். முதல் புத்தகத்தை எழுதி முடித்து அப்பாவுக்கு சமர்ப்பணம் செய்த போதே, இரண்டாவது புத்தகம் மணி சாருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என எண்ணியிருந்தேன். நடுவில் எதிர்பாராமல்அல் கிஸாவெளிவந்தது. ’மருபூமிகுறுநாவல் எழுதும்வரை எனக்கும் இத்தொகுப்பு அவருக்கு சமர்ப்பிக்கும் தகுதி அடைந்ததா என்ற சந்தேகம் இருந்தது. இப்போது ஓரளவு நிறைவு கொள்கிறேன். 

அவர் எனக்கு மிகவும் பொறுமையுடன் கற்றுத் தந்தவைகளுக்கு எல்லாம் என் சிறிய கைமாறாக, அவர் பெருமைப்படக்கூடும் சிறு பரிசாக, இந்த தொகுப்பை எனது குரு திரு. மணிரத்னம் அவர்களுக்கு பணிவன்புடன் சமர்ப்பணம் செய்கிறேன். 

அஜிதன்

வெள்ளிமலை

17-11-23

  

   

முந்தைய கட்டுரைஅன்னையுடன் ஒரு நாள்
அடுத்த கட்டுரைகு.கதிரவேற்பிள்ளை