முதற்காலடியின் எடை

செயல் எழும் நாட்கள்

ஜெ,

செயல் எழுகலட்சியவாத முகாமில் தங்கள் ஆற்றலை விதைத்தமைக்கு நன்றி.

தெளிவான ஒரு லட்சியமோ, பெரிய வாசிப்பு அனுபவமோ இல்லாத எனக்கு இந்த முகாமில் பங்குபெறும் பொருட்டு ஒரு தயக்கம் இருந்தது. தயக்கம் ஒரு தொடக்கத்திற்கு தடையாக இருந்து விடக்கூடாது என எண்ணி பங்குபெறத் துணிந்தேன்.

இப்படி ஒரு நிகழ்விற்கான சிந்தனை முதல் நிறைவேற்றம் வரை அனைத்திலும் குக்கூ குழுவினரின் செயல்பாடு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். நீங்களும் அதை முழுமையாக பாராட்டியது உங்கள் வருகை முதலே வெளிப்பட்டதுஅரங்கிற்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த எழுத்தாளர்கள் படங்களையும் வரிகளையும் நீங்கள் ஒவ்வொன்றாக நின்று கவனித்தபடி வந்தது அமைப்பாளர்களுக்கு எவ்வளவு நிறைவை அளித்திருக்கும் என்று உணர முடிந்தது.

உங்கள் உரையில் லட்சியவாதத்துக்கு தேவையான மனநிலையை நீங்கள் ஐந்தாக வகுத்து கூறியது எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக இருந்தது. குறிப்பாக லட்சியம்குடும்பம் இடையேயானா சமநிலை பற்றி உங்கள் சொந்த வாழ்க்கையில் இருந்து பகிர்ந்தது என்னைக் கவர்ந்தது. பொதுவாக பெரும் வெற்றியாளர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு வாறாக கைவிட்டவர்களாக இருப்பார்கள். அவ்வாறான சாதனையாளர்களுடன் என்னை நானே ஒப்பிட்டு அவர்களெல்லாம் குடும்பத்தை கோட்டை விட்டவர்கள் என என்னை நானே தேற்றிக்கொள்வேன். இனி அந்த சாக்கு இல்லை.

உரைக்கு பின் நடந்த உரையாடலில் நீங்கள் கேள்விகளை பொறுமையுடனும் மிகுந்த கவனத்துடனும் உள்வாங்கி பதில் அளித்ததற்கு நன்றி. அனைவரின் கேள்வியும் தங்கள் லட்சியங்களை அடைவதில் உள்ள சிக்கல்கள் பற்றியதாக இருந்தது. எனக்கு லட்சியத்தை தேர்ந்தெடுப்பதிலேயே சிக்கல். எனவே தயங்கி, காத்திருந்து கடைசி கேள்வியாக அதை முன்வைத்தேன். நீங்கள் அளித்த பதில் என்னில் நிறைந்தது.

நிகழ்வின் நிறைவில் பலர் உங்களைச் சூழ்ந்து உரையாடினர். மீண்டும் தயக்கம். ஒரு மாபெரும் எழுத்தாளரிடம் வாசிப்பு இல்லாத நான் பேச என்ன இருக்கிறது? கிட்ட தட்ட உங்கள் முதுகில் அமர்ந்து தைலம்  தடவிய குட்டி அஜிதனைப் போல உணர்ந்தேன். பிறகு உங்களிடம் வந்து பேச வெகு சாதாரண ஒன்றை எடுத்தேன் – ‘நான் பிறந்த ஊர், நாகர்கோயில்‘. நீங்கள் என் தோளில் கைபோட்டு கண்ணோடு கண் பார்த்து பேச தொடங்கியதும் சட்டென வேறொரு உணர்வை அடைந்தேன். இமைக்கும் நொடியில் எழுத்தாளர் தொலைந்து அன்பு நிறைந்த ஒரு மனிதர் மட்டும் என் முன்னே. மூவினிமையில் வரும் வலிய கேசவன் குழந்தைகளை தன் மீது ஏறி விளையாட அனுமதிப்பது போல.

ஒரு நிமிடம் எனக்காக அளித்தீர்கள்அதில் அறுபது வினாடிகளும் முழுமையாக அளிக்கப்பட்டதாய் உணர்ந்தேன். கண் முன் இருக்கும் மனிதருக்கு முழுமையாக தன்னை அளிக்கும் மாண்பை உணர்ந்தேன். பிறகு எனது பேச்சு ஒரு சராசரி குடும்பஸ்தனுடையது. ஒரு தகப்பனுடையது. ஒரு மகனுடையது. அஜிதன் பற்றியும் பெற்றோர்களை காசிக்கு அழைத்துச்செல்வது பற்றியும். இந்த ஒரு நிமிட நிகழ்வை பல படங்களாக அன்பர் ஒருவர் பிடித்திருந்தார். அதில் ஒன்றில் கூட நான் சரியாக கேமராவைப் பார்க்கவில்லை. அவரிடம் Phone கொடுத்தது கூட மறந்துவிட்டது. என்னை அழைத்து திருப்பி கொடுத்தார். தன்னை மறக்கும் ஒரு நிமிடம் அரிது. அதனினும் அரிது Phone-ஐ மறப்பது :). அத்தகைய அரிய நொடிகளை அளித்தமைக்கு நன்றி.

எல்லோர்க்கும் தங்கள் தலையைக்  கொடுக்கும் துணிவும், கொடுக்க ஒரு தெய்வமும் அமையுமாக !

நன்றி

பாபநாச கார்த்திக்

அம்பாசமுத்திரம்பாண்டிச்சேரி (தற்போது

அன்புள்ள கார்த்திக்,

ஒரு பெருஞ்செயல் தொடங்குவதில், கிளம்பிச் செல்வதில்தான் அதன் உச்ச தருணத்தை கொண்டிருக்கிறது. பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் வீரபத்ர பிள்ளை கம்யூனிஸ்டுக் கட்சியில் சேரும்பொருட்டுச் செல்லும் நாளை சித்தரிக்கும் இடம் அந்த உச்சத்தை கொண்டது. பெரும்பாலான சாதனையாளர்கள் பின்னாளில் நினைவுகூர்கையில் உச்சம் என்று சொல்வது அந்த நாளைத்தான். அதன்பின் அந்த நாளின் உள எழுச்சியை, தீவிரத்தை எவ்வளவு காலம் நீட்டிக்கொள்ள முடிகிறது என்பதே அவர்களின் வெற்றியை தீர்மானிக்கிறது. பல அரிய தருணங்கள் இருக்கலாம். ஆனால் உச்சம் என பின்னர் அவர்கள் அறிவது ஒட்டுமொத்தமாக அனைத்தையும் நினைவுகூரும் நாட்களைத்தான்.

அந்த தொடக்கத்தை, அந்த கிளம்பிச்செல்லுதலை தவறவிடுபவர்கள் உண்டு. பலவகையான தயக்கங்கள். முக்கியமான காரணம், தாழ்வுணர்ச்சி. அதைக்கொண்டவர்கள் ‘எதையாவது சாதித்தபின்’ ‘ஒரு ஆளுமையாக ஆனபின்’ தொடங்கவேண்டும் என்றும் சென்று சந்திக்கவேண்டும் என்றும் நினைப்பார்கள். தொடங்கி, சென்று சந்தித்தபின்னரே சாதனையும், ஆளுமை மலர்வும் நிகழமுடியும் என்பதை  அவர்கள் உணர்வதில்லை.

ஒருவர் தான் எவராக இருக்கிறாரோ அவராகவே வெளிப்பட முடியும். பூமிமேல் ஒருவர் தன் மெய்யான எடையையே செலுத்தமுடியும். கூட்டவும் முடியாது, குறைக்கவும் முடியாது. தாழ்வுணர்ச்சியை உயர்வுணர்ச்சியாக கற்பனை செய்துகொள்பவர்கள் உண்டு. ‘என்னால் எவர் முன்னாலும் தணிய முடியாது’ என்று அவர்கள் சொல்வார்கள். எங்கே தணியவேண்டுமோ அங்கே தணிபவர்களே எங்கே நிமிரமுடியுமோ அங்கே நிமிர்வார்கள்.

இரண்டாவது காரணம், சோம்பல். அதையே தமோகுணம் என்கின்றன தொல்நூல்கள். ஒவ்வொரு பொருளிலும் அந்த குணம் உள்ளது. அது இயற்கையின் விதிகளில் ஒன்று. ஒரு கல் மாறாமல் அங்கேயே கிடக்கவே விரும்புகிறது. நிலைத்தன்மை, மாறாமை என்பது ஓர் அடிப்படையான பொருண்மைப் பண்பு.

தமஸ் என்றால் இருட்டு. தமோகுணம் என்பது ஒருவகை இருட்டே. பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருப்பது இருட்டுதான். நம் தெய்வங்களில் தமோகுணம் கொண்ட தெய்வங்களும் பல உண்டு. காளி, சனீஸ்வரன், காலபைரவன் போல. அது ‘தீயது’ அல்ல. அது பிரபஞ்ச நிலைகளில் ஒன்று, அடிப்படையானது. தமிழில் அதை அமைதல் என்று மரபு சொல்கிறது. அமைவதனால் அது ஆமை. ஆமைகளின் மேல்தான் மொத்த பிரபஞ்சமே அமைந்துள்ளது என்னும் மகத்தான கவியுருவகம் நமக்குண்டு.

அந்த விசைக்கு எதிரான விசையே பிரபஞ்சத்தை இயக்குகிறது.  மாற்றம், வளர்ச்சி, விசை என்பவை அமைவியல்பு  நேர் எதிரான பொருண்மைப் பண்புகள். எல்லா பொருளிலும், எல்லா உயிரிலும் அது உண்டு. அதை ரஜோகுணம் என்கின்றன. செயல்தன்மை. ஆற்றும்தன்மை. அதுவே ஆற்றல் என்கின்றது தமிழ் மொழி. ஆற்றலியல்பே இங்குள்ள ஒவ்வொன்றையும் உயிர்ப்பும் அசைவும் வளர்ச்சியும் மலர்ச்சியும் கொண்டதாக ஆக்குகிறது. ஒவ்வொரு பொருளும் இன்னொரு பொருளை தாக்கிச் செயல்படச்செய்கிறது. இன்னொரு பொருளை மாற்றியமைக்கிறது. இன்னொரு பொருள்மேல் ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. ஒவ்வொரு உயிரிலும் அந்த ஆற்றலியல்பு திகழ்கிறது.

ஆற்றலியல்பு கொண்டவன் அரசன். ரஜோகுணம் கொண்டவன் அரசன். ரஜதம் என்றால் ஒளி. வெள்ளிக்கும் அப்பெயர் உண்டு. சூரியன், இந்திரன் என இரண்டு தெய்வங்களும் தூய ஆற்றலியல்புக்கான உருவகங்களாக மரபில் சொல்லப்படுகின்றன. இரு தெய்வங்களுமே ராஜா என்னும் சொல்லால் மட்டும் குறிப்பிடப்படுபவர்கள். மின்னலின் வெள்ளி. ஒளியின் வெள்ளி. (தமிழில் வேந்தன் என்னும் சொல்லால் பெரும்பாலும் இந்திரன் குறிப்பிடப்படுகிறான்) நம் தெய்வங்களில் படை வீட்டு முருகன், துர்க்கை போன்ற பல செயலுருக்கொண்ட தெய்வங்கள் ரஜோ குணம் கொண்டவை.

இரண்டு எதிரெதிர் விசைகளுக்கும் நடுவே அமைந்த நிகர்நிலைப் புள்ளி என ஒன்றை மரபு வகுத்துரைக்கிறது. அதுவே சத்வகுணம் எனப்படுகிறது. செவ்வியல்பு என அதைச் சொல்லலாம். செம்மை அதன் பண்பு. நம் மரபின் முழுமுதல் தெய்வங்களின் இயல்பு அது. அது தன்னியல்பாகத் திகழமுடியாது. மற்ற இரு விசைகளுக்கும் நடுவே ஒரு சமநிலைப்புள்ளியாக மட்டுமே அது உருவாகவும் நிலைகொள்ளவும் முடியும்.

ஓர் ஐநூறாண்டுகாலமாக நம் மரபு தன்னை  தக்கவைத்துக்கொள்ள போராடும் நிலையிலேயே இருந்தது. எல்லாமே அழிந்துவிடும் என்னும் அச்சம் நிலவியமையால் ‘மாற்றமின்மையை’ அது வலியுறுத்தியது. அது நிலைகொண்டது, கடந்து வந்தது, ஆனால் கூடவே எந்த தளத்திலும் வளர்ச்சி இல்லாமலாயிற்று. காலம் உருவாக்கிய கட்டாயத்தால் நிகழும் எளிய மாற்றங்களே நிகழலாயின. சென்ற இருநூறாண்டுகளாக விவேகானந்தர் முதல் வள்ளலார், நாராயணகுரு வரையிலான ஞானிகள் இதை மீளமீளச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

நோற்றல் என்றால் தமிழில் பொறுத்திருத்தல், காத்திருத்தல்.  நோற்றல் என்பது தவம் என்னும் சொல்லுக்கும் ஆகிவந்தது. நம் பண்பாடு நோன்பு என்னும் சொல்லை தவம் என்றும் பொறுத்திருத்தல் என்றும் ஒரே சமயம் பயன்படுத்தியது. விளைவாக நம் உள்ளத்தில் ஒரேவகையான மாறாத வாழ்க்கை என்பது ஒருவகை தவம் என்று பதிந்து விட்டது. நம்மிடையே பெரும்பாலானவர்கள் ஏங்குவது சீரான மாறாத ஒரு வாழ்க்கையை. அப்படி வாழ்வது உயர்ந்த, இனிய வாழ்க்கை என நாம் நம்புகிறோம். ‘செட்டில்’ ஆகிவிடுவது என்பதே வாழ்க்கையின் இறுதி இலக்கு என நினைக்கிறோம் (நான் ஒரு பகடிக்கட்டுரை எழுதியிருக்கிறேன் இதைப்பற்றி. ‘ஏன் சார்?’)

தவம் செய்பவர்களுக்கு மாறாநெறி என்பது அவசியமே. ஏனென்றால் அவர்களின் அந்த மாறாநிலை என்பது புறத்தே நிகழ்வது. உடலிலும் அன்றாட வாழ்விலும் மட்டும். அகத்தே அவர்கள் வால்விண்மீன் போல பல்லாயிரக்கோடிக் காதம் பயணம் செய்பவர்கள். உலகியலாளர்களுக்கு மாறாத வாழ்க்கை என்பது அமைவியல்பின் வெளிப்பாடு. தமோகுணத்தில் ஆழ்ந்திருத்தல் அது. ஒருவகை தன்னழிவு, ஆன்மச்சாவு அது. 

நம் சூழலில் தமோநிலையில் அழுந்தியிருப்பதை ‘சீரான வாழ்க்கை’ என்றும் அதுவே ‘சத்வ குணம்’ என்றும் நம்பும் போக்கு உள்ளது. மாற்றமில்லாமல் வாழ்பவர் ஆசாரமானவர், ஆசாரமே சீரான வாழ்க்கை, ஆசாரவாழ்க்கையை நீண்டநாள் பிடிவாதமாக வாழ்பவர் கனிந்தவர் என்றும் நம்புகிறோம். இந்தியச் சூழலிலுள்ள முதற்பெரும் மடமை இதுவே. திரும்பத் திரும்ப ஞானிகளால் சுட்டிக்காட்டப்பட்டிருப்பது இந்த மடமை.

சத்வகுணம் கொண்டவர் சாது. தமிழில் இன்று நாம் சாது என்று செயலற்றவரை, ஆற்றலற்றவரைச் சுட்ட பயன்படுத்துகிறோம். உண்மையில் செயலாற்றி நிறையும் நிலையே சத்வகுணம். அங்கே அமைந்தவரே சாது எனப்படுகிறார். காந்தி ஒரு சாது. விவேகானந்தர் ஒரு சாது. மேலும் உயர்நிலையில் ராமகிருஷ்ண பரமஹம்சர் சாது. முடுக்கிவிடப்பட்ட இயந்திரங்கள், ஒரே புள்ளியில் ஆடும் பெண்டுலங்கள் சாதுக்கள் அல்ல.

தமோகுணத்தில் உறைபவர்களால் எதையும் தொடங்க முடியாது. தொடங்குவது என்பதே அவர்களின் மிகமிகப்பெரிய சவால். நம்பி ஏற்ற ஒன்றை தொடங்குவதற்கு சாக்குபோக்குகளை இயல்பாகச் சொல்லிக்கொள்கிறீர்கள் என்றால் உறுதிகொள்க, நீங்கள் இருப்பது இருண்ட அமைவுநிலையில்.

அதை எளிதாகச் சோம்பல் என்று சொல்லிவிட முடியாது. சோம்பல் அனைவருக்கும் உண்டு, அவ்வப்போது சோம்பியிருப்பது இனிதும்கூட. அது அகம் விழித்திருக்கும் நிலை. ஆனால் இந்த தயக்கம் ஒருவகை உளைச்சேற்றில் முழுக்க மூழ்கி அசைவழிதல். இருட்டில் கரிய உருவமாக இருந்துகொண்டிருத்தல். தமஸ். அதை அறுத்து மீண்டு தன்னை நகர்த்திக்கொள்ளுதல் எளிதல்ல. தானாகவே அதற்கு முயலவேண்டும். தன் முழு ஆற்றலாலும் மீறிச்செல்லவேண்டும். அதற்கு தான் இருட்சேற்றில் சிக்கியிருப்பதை தானே உணரவேண்டும்.

ஒவ்வொருநாளும் இவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தன் வாழ்க்கையின் மிகமிக முக்கியமான ஒன்றை, தான் அகத்தே ஏங்கிக்கொண்டிருக்கும் ஒன்றைச் செய்வதற்கு வாய்ப்பு அமையும்போதுகூட ‘அவ்ளவுதூரம் வரணுமா?’ என்று கேட்பவர்கள்.  ‘ஆன் லைனிலே உண்டா?’ என விசாரிப்பவர்கள். ஆன்லைனில் உண்டு என்றால் உடனே நேரமில்லை என்பார்கள். எதையுமே தொடங்கமுடியாது. எதையுமே புதியதாகக் கற்க முடியாது.

அந்த இருள் அச்சுறுத்துவது. முதியவர்கள் என்றால் ‘சரி, இன்னும் கொஞ்சநாளில் போய்ச்சேரப் போகிறவர்கள், இப்பிறவி அவர்களுக்கு இவ்வளவுதான்’ என ஆறுதல் கொள்ளலாம். பலசமயம் இளைஞர்கள் அவ்வாறு இருக்கிறார்கள். ஆகவே அவர்களை மட்டும் திரும்பத் திரும்ப இடித்துரைக்க வேண்டியுள்ளது.

அந்த இரு தடைகளையும் கடந்து முதல்காலடியை வைப்பவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். அவர்கள் ஒன்றை தொடங்கிவிட்டனர். நன்று நிகழ்க.

ஜெ 

முந்தைய கட்டுரைஷங்கர் ராமசுப்ரமணியன் 
அடுத்த கட்டுரைதேவிபாரதிக்கு விருது, விளக்கம்