செயல் எழும் நாட்கள்

பேரன்பிற்குரிய ஜெ,

செயல் எழல் நிகழ்வின் கேள்வி பதில் அமர்வின் தொடர்ச்சியாக இந்த கேள்வியை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது

மதிய உணவு இடைவேளையின் போது ஒரு சிறுவனின் தலையில் கை வைத்து கோதி அவனிடம் புன்னகையை உதிர்த்து சென்றதை நீங்கள் நினைவில் கொண்டிருப்பீர்களா என்று தெரியவில்லை. அச்சிறு செயல் அடுத்த தலைமுறைக்கு ஒரு விதையை விதைத்துள்ளதாக உணர்கிறேன். அந்தச் சிறுவனின் பெயர் ஜித்தேஷ்ஒன்பது வயது (என் அண்ணன் மகன்). அதில் அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. அவன் இரண்டு கேள்விகள் அவன் அம்மா மூலம் கேட்டான்.

1. இவரு எப்போ எழுத ஆரம்பிச்சாரு?

2. இவளோ நேரம் இங்க நின்னு பேசராறே, எதுக்காக

உங்கள் வாசகர்கள் இதற்கான விடையை சுலபமாக கூறி விடலாம், இதில் இரண்டாவது கேள்வியை கவனித்த போது எனக்கு எழுந்த எண்ணம். பொதுவாக எழுத்தாளன் என்பவன் தலைமுறைகளை கடந்து என்றோ பிறக்கப் போகும் ஓர் உயிரை மிக அணுக்கமாக அடையும் தன்மை கொண்டவன் என்று. அப்படி டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி, போன்ற அறிய எழுத்தாளர்களை நூற்றாண்டுகள் தாண்டி இன்று நாம் கொண்டாடுகிறோம், அணுக்கமாக உணர்கிறோம். ஆனால் அவர்களிடம் இன்றைய வாசகன் கேட்க விரும்பும் கேள்விகளை நேரடியாக கேட்க முடியாது.

உங்கள் எழுத்துக்கள் அடுத்த நூற்றாண்டின் மனிதகுளத்தில் நிச்சயம் ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை, அப்படி இருக்க என்றோ எங்கோ எப்போதோ பிறக்கப்போகும் உயிர்களின் பிரதிநிதியாக நான் கேட்க விரும்புவது,

ஜெயமோகன் என்ற எழுத்தாளன் இலக்கியம் மற்றும் கலை மனிதனுக்கு இப்புவியில் அளிக்கும் இடம் என்ன, விடுதலை என்ன என்பதைப் பற்றி தாங்கள் மட்டுமே அணுக்கமாக உரையாடப்போகும் அந்த உயிர்களுக்கு விவரிக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன்.

பேரன்புடன்

இரா. மகேஷ்
*

அன்புள்ள மகேஷ்

செயல் எழல் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இடைவேளைக்குப்பின் என் பிரியத்திற்குரிய நண்பர்களான பவா செல்லத்துரை, எஸ்.கே.பி.கருணா இருவரையும் சந்தித்தேன். மிகுந்த மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாகச் சென்றது அவர்களுடன் இருந்த பொழுது.

முந்தைய நாள் எஸ்.கே.பி. கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே கல்வியின் வெவ்வேறு அடுக்குகள் பற்றி உரையாற்றினேன். அனைத்து மாணவர்களுக்கும் அது சென்று சேர்ந்திருக்குமா என தெரியவில்லை. நான் அதைப்பற்றி எண்ணுவதில்லை. என்னால் முடிந்தவரை ஒரு பொருளுள்ள, தீவிரமான உரையையே ஆற்றுவேன். அதில்தான் என் உள்ளம் ஈடுபட முடியும். 

ஆனால் அண்மைக்காலமாக மேடையில் மிக இயல்பாகப் பேச ஆரம்பித்துவிட்டேன். ஆகவே அது சுவாரசியமானதாகவும், முழுக்கமுழுக்க நேர்நிலை அணுகுமுறை கொண்டதாகவுமே இருக்கும். (தமிழில் இன்று உரையாற்றுபவர்களில் எவரும் என்னைவிடச்  சிறந்த பேச்சாளர்கள் என நான் எண்ணவில்லை. மலையாளத்தில் கல்பற்றா நாராயணன், சுனில் பி இளயிடம் ஆகிய இருவரும் நான் வியந்து நோக்கும் பேச்சாளர்கள்)

அங்கே இருந்த 300 மாணவர்களில் எங்கோ சிலரின் அகத்தை அது சென்று தொடும். அவர்களில் என் சொற்கள் முளைக்கும் என்று நம்புகிறேன். இன்று என்னைத்தேடி வரும் பலர் அவ்வாறு மிகப்பல ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக என் சொற்களைக் கேட்டவர்கள்தான். அவர்கள் என்னைத்தேடிவர மீண்டும் பத்தாண்டுகள் ஆகியிருக்கின்றன. இன்று கேட்கும் இவர்கள் என்னைத் தேடிவருகையில் நான் இல்லாமல் என் எழுத்துக்கள் மட்டும் இங்கே இருக்கலாம். சிறப்பு.

மறுநாள் செயல் எழல் நிகழ்வு. தமிழகம் மட்டுமல்ல, கர்நாடகம் ஆந்திரத்தில் இருந்தும், சட்டிஸ்கரில் இருந்தும் களப்பணியாற்றுபவர்கள் வந்திருந்தார்கள். சிவகுருநாதனின் நூற்பு நிறுவனம் அன்றைய உடையை அன்பளிப்பாக அளித்தது. வழக்கம்போல வேட்டி, வெண்ணிறச் சட்டை (நூற்பு கைத்தறி ஆடைகள்) பிரியத்துக்குரிய சிவராஜ், மதுமஞ்சரி, பொன்மணி, என ஏராளமான நண்பர்கள்.

களப்பணியாற்றுபவர்களுக்கு இருக்கும் அன்றாடச்சிக்கல்கள், சோர்வுகள், ஐயங்கள் ஆகியவற்றைக் களைவதற்கான அரங்கு. அவர்களின் வினாக்களுக்கான விடைகள் தேடும் உரையாடல் அது. காலை 10 முதல் மாலை 7.30 வரை உரையும் விவாதமும். அரங்கு மிகச்சிறப்பாக இருந்தது என்று பங்குகொண்டவர்கள் சொன்னார்கள்.

உரை நிகழ்ந்துகொண்டிருக்கையிலேயே ஒரு நற்செய்தி வந்தது. சென்ற செப்டெம்பரில் சிவராஜின்  நண்பரான வேணுகோபால் தாமரக்கரை சோளகர் பகுதியில் அமைத்த சூரிய சக்தி அரவை இயந்திரம் பற்றிய செய்தியை என் தளம் வழியாக அறிந்த ஓர் அரசதிகாரி வழியாக தமிழக முதல்வர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அதைப்போன்ற அரவை இயந்திரங்களை பழங்குடிகளின் மலைப்பகுதிகளில் தொடர்ந்து அமைப்பதற்கான ஒரு திட்டம் பற்றி ஆலோசிக்கும்பொருட்டு அவ்வழைப்பு. (வேணுகோபால் பற்றி.)

நான் மேடையில் சொன்னது போல இன்று நான் இவை என் சொற்கள் என்று நினைக்கவில்லை. இச்சொற்கள் இங்கு எப்போதுமே இருந்துகொண்டிருக்கின்றன. இன்னும் இருந்துகொண்டிருக்கும். இன்று இவற்றைச் சொல்லும் உள்ளம் என்னுடையது. இவற்றை என் சிறந்த அகவையில் என் ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். அனலின் மிகச்சிறந்த இயல்பு அதன் தொற்றிக்கொள்ளும் தன்மை, பெருகிச்செல்லும் விழைவுதான். அனல் ஒரு கணமும் ஓயாமல் தாவிச்செல்ல, பரவ விழைந்துகொண்டே இருக்கிறது. கருத்துக்களும் அவ்வாறே. இலட்சியவாதமும் அவ்வாறுதான். நான் ஓர் ஊடகமாக, ஒரு பாதையாக மட்டுமே இன்று என்னை பார்க்கிறேன்.

ஆகவே, வருந்தலைமுறைகள்என்னைவந்தடையவேண்டும் என இன்று நான் எண்ணவில்லை. என்றுமுள்ள இவை அன்றும் இவ்வாறே எவர் சொல்லில் இருந்தோ திகழவேண்டும் என்றே விழைகிறேன். திகழுமென நம்புகிறேன். ஆகவேதான் ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறார்கள். ஆர்வத்தையும் அணுக்கத்தையும் உருவாக்குகிறார்கள். 

வாழ்க்கை இரண்டுவகை என பிரித்துக்கொள்ளலாம். இன்றில் வாழ்வது ஒரு வகை. நேற்று இன்று நாளையில் வாழ்வது இன்னொரு வகை. மிகப்பெரும்பாலானவர்களுக்கு இன்று மட்டுமே. அந்த இன்றையே கொஞ்சம் விரித்து இறந்தகாலம் எதிர்காலம் என மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதில் தான் மட்டுமே வாழ்கிறார்கள். அதை கொஞ்சம் விரித்து தங்கள் குடும்பம், சுற்றம் என ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு வகையினர் மூன்றுகாலத்திலும் வாழ்பவர்கள். இன்றுவரை என்ன நிகழ்ந்தது என்பது அவர்களுக்கு முக்கியம்  அவை இந்தக்காலத்தை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பது முக்கியம். இந்தக்காலம் எப்படிச் செயல்படுகிறது என்பது முக்கியம். இனி வரும்காலம் எப்படி இருக்கப்போகிறது என்னும் அக்கறை அவர்களுக்குண்டு. அதைச் சார்ந்த கனவுகளும் அதற்கான செயல்திட்டங்களும் உண்டு. ஆகவே அவர்கள் ஒரே சமயம் மூன்று காலங்களிலும் வாழ்கிறார்கள்.

அறிஞர், சான்றோரின் இயல்பு மூன்று காலங்களிலும் வாழ்தல். திரிகால ஞானி, திரிகால சஞ்சாரி  என பழைய நூல்களில் முனிவர்கள் சொல்லப்பட்டிருப்பது இந்தப் பொருளிலேயே. அது சோதிட ஞானமோ மாயமந்திரமோ ஒன்றுமல்ல. எல்லா ஞானியரும், எல்லா அறிஞர்களும், எல்லா கலைஞர்களும் முக்காலத்திலும் உள்ளம் திகழ்பவர்கள் மட்டுமே.

அந்த  திரிகால வாழ்க்கையே மேலான வாழ்க்கை. ஒரு சமூகத்தில் எத்தனை சதவீதம்பேர் முக்கால வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதே அந்தச் சமூகம் வாழ்வதா, வெல்வதா, வீழ்வதா என்பதை தீர்மானிக்கிறது. கலையிலக்கியம், சேவை, தத்துவம், தியானம் என நான்கும்  அத்தகைய மனிதர்களை உருவாக்கும் முயற்சிதான். இவை நான்குமே நான்குவகைகளில் செய்யப்படும் யோகம் என்று பகவத்கீதை கற்பிக்கிறது. 

இன்றில் மட்டும் இருத்தல் கொண்டவர்கள் வாழும்  வாழ்க்கையை வெறுமே இருத்தல் என்றே சொல்லவேண்டும். ஆங்கிலத்தில் survival  என்று சொல்லலாம். தேடிச் சோறுநிதம் தின்று (முகநூலில்) பல சின்னஞ் சிறுகதைகள் பேசி  மனம்வாடித் துன்பமிக உழன்று சாகும் வேடிக்கை மனிதர் என பாரதி சொல்வது அவர்களையே. 

வாழ்தல் (Living) என்பது வேறு. அது இருத்தலை அர்த்தப்படுத்திக் கொள்வது.  நிறைவுசெய்துகொள்வது. வாழ்வு அவர்களுக்கு ஒரு பாதை. மாற்றம் நிகழும் எந்தக்களமும் நாம் பயணம் செய்யும் பாதைதான். மாற்றமே உயிர்ப்பு எனப்படுகிறது. ஒருவரின் வாழ்க்கை அது தொடங்கிய இடத்தில் இருந்து எப்படி எவ்வளவு மாறியுள்ளது என்பதே அது வெறும் இருத்தலா வாழ்வா என்பதற்கான ஆதாரம். 

ஒரே காலத்தில் இருப்பவர்கள் உடலால் மட்டுமே இருத்தல் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உள்ளம் என்பது உடல் செயல்படுவதற்கு அவசியமான ஒரு மென்பொருள் (சாஃப்ட்வேர்) அல்லது செயலி (புரோக்ராம்) மட்டுமே. அது வாழ்க்கை அல்ல. வாழ்க்கை என்பது உள்ளத்தால் இருத்தல். அவர்களுக்கு உடல் என்பது உள்ளம் திகழும் பீடம் மட்டுமே. வைரமும் கூழாங்கல்லும் ஒரே அளவானவை. ஆனால் வைரத்துக்குள் ஒளி பல்லாயிரம் காதம் பயணம் செய்கிறது. அகம் சுடர வைரம் ஒளிர்கிறது. கூழாங்கல்லுக்கு இருப்பது புற இருப்பு மட்டுமே. 

அந்த வாழ்தலை அளிப்பவை நான்குவகை அகச்செயல்பாடுகளே. அவை ஒன்றுடனொன்று தொடர்புகொண்டவை. கலையிலக்கியம், தத்துவம், சேவை, ஊழ்கம் ஆகியவற்றில் எதை எடுத்துக்கொண்டாலும் அதில் பிற மூன்றும் கொஞ்சமேனும் இருக்கும். அதில் ஒன்றை, இலக்கியக்கலையை முன்வைப்பவன், பயிற்றுவிப்பவன் நான்.

இலக்கியம், தத்துவம் வழியாக நான் இங்கே செய்வது எளிய மனிதர்களில் இருந்து தகுதியுடையோரை தொட்டெழுப்புவது. இன்னும் மேலான நிறைவாழ்க்கை ஒன்றுக்காக அவர்களை ஆற்றுப்படுத்துவது. இங்கு வந்தமைந்த வாழ்க்கையை நிறைவுடன் வாழ்வதே விடுதலை. விடுதலை என்பது ஆற்றி, நிறைந்து, கடந்துசெல்லுதல் மட்டுமே. ஒரு நூலை வாசித்து, அறிந்ததுமே அதை கடந்து செல்கிறோம். அதைப்போல

இலக்கியத்தால் அதைச் செய்ய முடியுமென என் வாழ்க்கையால் நான் அறிவேன். வரலாற்றை, பண்பாட்டை கருத்தில்கொண்டு அதை உறுதிசெய்துகொள்கிறேன். ஆகவே அதை முன்வைக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைபிரயோக விவேகம்
அடுத்த கட்டுரைவித்தைக்கார கதைஞன் – அழகுநிலா