கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’

Giriraj-Goa

 

ஒரு ராஜபுத்திரர் எப்படி இருப்பார்? ராஜபுத்திரர்களின் பொதுவான வரலாறு நாமறிந்ததே. அவர்கள் இந்திய சமூகத்தின் போர்வாட்களாக இருந்தனர். அக்பர் அவர்களை தன் அன்பால் அரவணைத்து தன் வீரர்களாக ஆக்கிக்கொண்டார். அதன் பின்னர் அவர்கள் பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு வெளியேறும்வரை பிரிட்டிஷ் ராஜ்ஜின் தூண்கலாக விளங்கிவந்தனர். மொகலாயர் காலத்தில் அவர்களுக்கு ஜமீன் பதவி கிடைத்தது.குறுநில மன்னர்கள் போல தங்கள் பகுதியை அவர்கள் அடக்கி ஆண்டனர். பிரிட்டிஷார் வெளியேரிய காலகட்டத்தில் மெல்லமெல்ல சிதைந்து அழிந்தனர்.

ராஜபுத்திரர்களின் வீரம் இந்திய வரலாற்றில் விதந்து ஓதப்பட்டது. ராஜபுத்திரர்களின் வீரம் மூலமே முதல் உலகப்போரை பிரிட்டிஷார் வென்றனர் என்றும் சொல்லப்படுவதுண்டு. அவர்களின் தன்முனைப்பு, தலைவணங்காமை, சொல் நேர்மை, குலப்பெருமை, கோபங்கள், குதிரைமீதான அன்பு, தீராத குடிபப்கைகள் என நம் வரலாற்றில் இருந்து பற்பல கதைகளை கேட்கிறோம். ஆயினும் வரலாறு என்பது தகவல்களின் நிரை. இலக்கியமே அப்பண்புகளைச் சுமந்த மனிதர்களையும் அப்பண்புகள் மூலம் உருப்பெறும் உளமோதல்களையும் நமக்குக் காட்டும் தளம்.

இந்தி, உருது, பஞ்சாபி, குஜராத்தி இலக்கியங்களில் ராஜபுத்திர வீரம் மிக விரிவாகவே பேசப்படுகிறது. கெ.எம்.முன்ஷி எழுதிய ‘ஜய சோம்நாத்’ இவ்வகையில் நமக்குக் கிடைக்கும் முன்னோடி நூல். கிரிராஜ் கிஷோர் எழுதிய ‘சதுரங்கக் குதிரைகள் ‘ அவ்வகைப்பட்ட நாவல்தான். ஆனால் இது பிரிட்டிஷ் ராஜ் காலத்தில் ராஜபுத்திர ஆட்சியின் கடைசித்தலைமுறையின் படிப்படியான சரிவை சொல்கிறது. நமக்குக் கிடைக்கும் ராஜபுத்திரக் கதாபாத்திரச் சித்தரிப்புகளில் இந்நாவலின் ‘ரகுவர் ராய்’ முதன்மையானவர் என்பது என் எண்ணம்.

சதுரங்கக் குதிரைகள் இப்படித்தொடங்குகிறது ‘என் பெயர் பாஸ்கர் ராய். மேற்கு ஐக்கிய மாகாணத்தைச்சேர்ந்த பழம்பெருமை வாய்ந்த ஒரு ராய் வம்சத்தில் கடைசி ராய் நான். எனக்குப்பின் என் வம்சத்தில் ராய் என்று எவரும் இருக்க மாட்டார்கள்…” இந்த தன்னுணர்வில் இருந்துதான் இந்நாவலின் கதைசொல்லல் தொடங்குகிறது. அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது என்ற எண்ணம். அதிலிருந்து எழும் ஆழமான பெருமூச்சு. பின் நோக்கிய நினைவுகளாக கதை குதிரைபோலத் தாவிச்செல்கிறது. தோற்றவனின் நினைவு வழியாகச்செல்லும் தோற்றுக்கொண்டிருப்பவனின் கதை இது. அல்லது தோற்க மறுத்துப் போராடுவனை தோல்வியை ஏற்றுக்கொண்டவன் நினைவுகூரும் கதை.

ரகுவர் ராயின் குணச்சித்திரமே இந்நாவலின் மையச்சரடு. பழைய நிலப்பிரபுத்துவகால மதிப்பீடுகளின் தொகை அது. தான் சார்ந்த விழுமியங்கள் தன் உயிரைவிட மேலானவை என்று நம்புகிறவர் ரகுவர் ராய். விசுவாசம், நட்பு, சொல்தவறாமை, எந்நிலையிலும் நிதானமிழக்காத தன்மை, ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் ராய் குலத்தின் மேன்மையை நிலைநிறுத்தும் மிடுக்கு, உறவுகளில் எந்நிலையிலும் மாறாத பெருந்தன்மை என அவரது நற்குணங்கள் நம்மை கவர்கின்றன.

அதேசமயம் அவர் மனிதர்கள் சமம் என்பதை எந்நிலையிலும் ஏற்காதவர். ஒருபோதும் தன் ஜாதிநெறிகளை மீற துணியாதவர். தன்னை ஆளும் வெள்ளையன் அளிக்கும் விருந்தில் கூட பிராமணன் சமைத்த தனி உணவை மட்டுமே உண்ணும் பிடிவாதமுள்ளவர். தன் ஜமீனை சொந்த நிலமாகவே எண்ணி தன் குடும்ப நலன்களுக்காக , தன் ஆடம்பரங்களுக்காக எந்தவிதமான மனத்தடையும் இல்லாது பயன்படுத்துகிறார். வரிகொடுக்க மறுக்கும் குடியானவர்களை திவான் அடித்து , வாயில் மூத்திரம்பெய்து தண்டிக்கும்போது அது தனக்கு சம்பந்தமே இல்லாதது போல் தன் தனியறையில் இருக்கிறார்.

எளிய வாசிப்புக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ள நம் முற்போக்கு வாசகர்கள் ஒரு நிலப்பிரபுத்துவ ஆதிக்கசாதியினன் மேன்மைபப்டுத்தப் பட்டுள்ளதாகவோ அல்லது நிலப்பிரபுத்துவ முறைகள் நியாயப்படுத்தப்பட்டுள்ளதாகவோ தான் இந்நாவலைப்படித்தால் நினைப்பான். தமிழில் பல நாவல்கள் அவ்வண்ணமே படிக்கப்பட்டுள்ளன. கிரி ராஜ் கிஷோர் அவ்வணம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.நம்மை விடமேலான ஒரு வாசிப்புச்சூழல் அங்கே உருவாகியிருக்கக் கூடும். மனிதர்கள் அவர்கள் வாழும் சூழலின் ஆக்கங்கள். அச்சூழலின் மேன்மையும் சிறுமையும் அவர்களிலும் வெளிப்படுகிறது என்பதே அவரது கோணமாக இருக்கிறது. ராய் குடும்பத்து வேலையாட்களுக்கு பெரியராய் கண்கண்ட தெய்வம். அனைத்து நற்குணங்களுக்கும் சின்னம். அவர் அடிபப்துகூட அவர்கள் கண்ணில் அருளாகவே படும். இந்த ஆதிக்கத்தையும் ஏற்பையும் பற்றினிறி சொல்லிச் செல்வதனாலேயே இந்நாவல் மிகுந்த நம்பகத்தன்மை உடையதாக ஆகிறது.

பாஸ்கர் ராயின் தன் நினைவுகள் வழியாக நீல்கிறது நாவல். அவர் ஜமீன் வீட்டு உதவாக்கரை பையன்.”உனக்கென்ன , படிப்பே தேவையில்லை”என்ற நக்கலை பாராட்டாக ஏற்றுக் கொண்டு தற்குறியாக வளர்கிறார். ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறார். அதை கண்டிக்கும் சக மாணவனை குத்துகிறார். கலக்டர் மனைவி மீது குதிரையால் முட்டுகிறார். ஒவ்வொரு தடவையும் அவரை பலவிதமான சிபாரிசுகள் மூலம் காப்பாற்ற ரகுவர் ராய் தயங்கவில்லை. அவரைப்பொறுத்தவரை தவறும்சரியும் எல்லாம் இரண்டுதான். ராய் குலத்தோன்றல் எதையும் செய்யும் உரிமை உள்ளவன் அவ்வளவுதான்.

ரகுவர் ராயின் இரு தம்பிகளின் கதை இந்நாவலில் படிபப்டியாக விரிகிறது. அவரது இரு தம்பிகளும் அவருக்கு அடங்கி அவரது நிழல்பட்ட செடிகளாக வளர்கின்றனர். இரண்டாமவர் படிப்பை முடிக்காமல் திரும்பவர அவரை தாசில்தார் ஆக மாற்றுகிறார் ரகுவர் ராய் . ஊழலில் திளைத்து கெட்டபெயர் வாங்கி அவர் மீண்டும் ஜமீனுக்கு அவந்து சேர்கிறார். ஒவ்வொரு தருணத்திலும் அண்ணனை அவர் தவறாக எடுத்துக்கொள்கிறார், நுட்பமாக அவமதிக்கிறார். அண்ணனுக்குத் தெரியாமல் சாதிவிட்டு மணம்செய்துகொள்கிறார். சாதி தெரியாத குழந்தையை தத்து எடுத்துக் கொள்கிறார். அண்ணனை அவமதித்து சொத்தை பங்கிட்டு தனியாகச்செல்கிறார். அண்ணனிடம் போட்டியிட்டு அவரது ஊழியர்களை அவமதிக்கிறார். நாவலின் கடைசி வரை அவருக்குள் இருக்கும் ஒரு நெருப்பு கனன்று கனன்று சிவப்பதையே நாம் காண்கிறோம். அபாரமான பொறுமையுடனும் நிதானத்துடனும் ரகுவர் ராய் அவரை மீண்டும் மீண்டும் காப்பாற்றுகிறார். மன்னித்து அடைக்கலம் அளிக்கிறார்.ஆனால் அந்த தழல் மேலும்மேலும் எரிந்து எழுகிறது

இரண்டாவது தம்பி சிறுவயதில் சுதந்திரப்போராட்டத்தால் கவரப்பட்டு அதில் இணைந்துகொள்ள விழைகிறார். ஆனால் ஜமீந்தார் ரகுவர் ராயின் தம்பி ஒருபோதும் அப்படிசெய்ய முடியாது. அண்ணனுக்குப் பயந்து அவர் தன் கனவை விழுங்கிக்கொள்கிறார். உதாவாக்கரை தம்பியாகவே வாழ்கிறார். தன் வாழ்க்கையை அண்ணனின் ஆணை சிறுமைப்படுத்திவிட்டதாக அவ்வப்போது மனம் கலங்குகிறார். இரு தம்பிகளுக்குமே குழந்தை இல்லை. ரகுவர் ராய் ஆணையின் படி பாஸ்கர் ராயின் மகன் அருண் ராயை அவர் சுவீகாரம்செய்துகொள்கிறார். அப்படி ஒரு மகன் வந்ததுமே அவரது நோக்கும் போக்கும் மாற்றம் அடைகின்றன. தன் சொத்து தன் குடும்பம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ரகுவர் ராய் தன்னுடைய சொத்தை சூறையாடுகிறார் என்ற எண்ணத்தை அருண் மனதில் உறுதியாக உருவாக்க அவரால் முடிகிறது. இங்கிலாந்து சென்று படித்து வரும் அருண் தன் குடும்பத்தை வெறுத்து சுவீகார தந்தையுடன் வெளியேறுகிறான்.

இரு இளைய சகோதரர்களிடமும் எரிவது ஒரே தணல் தான். அண்ணனின் ஆளுமையால் அழுத்தபப்ட்டவர்கள் அவர்கள். அவர்களின் ஆளுமைவளர்ச்சி என்பது அண்ணனை எதிர்த்தே வளர வேண்டியுள்ளது. நேர்மையை மூச்சாக எண்ணிய ரகுவர் ராய்யின் தம்பி கிருஷ்ணராய் ஊழலில் திளைப்பது அத்தகைய மீறலே. சாதியை உயிராக எண்ணிய அவரை நிராகரிக்கவே அவர் சாதி விட்டு சாதி போய் மணம்செய்கிறார். மற்றபடி அவருக்கு எந்தவிதமான முற்போக்கு நோக்கும் இருப்பதாக நாவல் காட்டவில்லை. இளைய சகோதரனின் காந்திய ஈடுபாடும் கூட அத்தகைய மீறலே. காரணம் அண்ணன் பிரிட்டிஷ் விசுவாசி. ஆனால் மூத்தவனைப்போல இளையவனுக்கு அண்ணைனை வெளிப்படையாக மீற தைரியமில்லை. ஆகவே அப்படி மீறுபவனாக தன் தத்து மகனை தயாரிக்கிறான்.அவன் அதுவரை அவர் காட்டிவந்த காந்திய ஈடுபாடுகளுக்கு நேர் எதிராக உருவாகும்போதும் அவருக்கு மகிழ்ச்சியே.

ரகுவர் ராயின் வீழ்ச்சி ஒரு வகையில் இன்றியமையாத ஒன்று என்பதை காட்டும் இரு கூறுகள் இவை. அவரது வீட்டில் உள்ள ஒவ்வொரு ஆணும் அவரிடமிருந்து தப்பி அவரை மீறிச்சென்று மட்டுமே தன்னைக் கண்டடையவேண்டியுள்ளது. ஆகவே அவர்கள் எவருக்கும் இயல்பான வளர்ச்சியே சாத்தியமில்லை. இரு சகோதரர்களும் கோணலாக வளர்கிறார்கள். மகன் பாஸ்கர் ராய் வளர்ச்சியை நிறுத்திக் கொள்கிரான். பேரன் ரகுவர் ராய் அவரை துறக்க முடியாமல் துறந்தாகவேண்டிய கட்டாயத்தைச் சுமந்தபடி தத்தளிக்கும்போது நாவல் முழுமைபெறுகிறது. நமது ‘தந்தை வழிபாட்டின்’ மூர்க்கமான சித்திரத்தை அளிக்கிறது இந்நாவல். இந்த அம்சமே இந்நாவலை இந்திய நாவல்களில் முக்கியமான ஒன்றாக ஆக்குகிறது.

இந்நாவலின் இன்னொரு முக்கியமான தளம் அந்த பெரிய அரண்மனைக்குள் வாழும் பெண்களின் உலகம். அங்கே மகிழ்ச்சி என்பதே இருப்பதாகத்தெரியவில்லை. இருளில் தாவரங்கள் வெளிறி சோர்ந்து அழிவதைப்பொல பெண்கள் அழிந்தபடியே இருக்கிறார்கள். ரகுவர் ராய்யின் இரு சகோதரர்களின் மனைவிகளின் கதைகள் இந்நாவலின் ஆழமான பகுதிகள். அடக்கப்பட்ட மனத்தின் விசித்திரமான ஆழங்களுக்குள் செல்பவை. இருவருக்குமே குழந்தைகள் இல்லை. ஒரு ராஜபுத்திர பிரபுக்குடும்பத்தில் பெண் என்பவள் காமக்கருவிகூட இல்லை, அதற்கு அவர்களுக்கு எத்தனையோ பெண்கள். அவள் கருப்பை மட்டுமே. கருவுறாத பெண் வெறும் சதைப்பிண்டம். அவள் வாழ்வுக்குப் பொருளே இல்லை. இரு பெண்களும் அந்நிலையை எதிர்கொள்வதில் உள்ள இருவேறுபட்ட முறைகள் அவர்களின் மன ஆழங்களைக் காட்டுகின்றன.

மூத்தவரின் மனைவி கணவனை கட்டாயபடுத்தி பெண்மருத்துவரிடம் காட்டுகிறாள். அவளிடம் குறையில்லை, குறை அவரிடம் இருக்கலாம் என்று மருத்துவர் கூறும்போது அவனுள் உறையும் ராஜபுத்திர ஆணவம் உசுப்பபடுகிறது. உங்களையும் டாக்டரிடம் காட்டலாமே என்று தம்பி சொல்லும்போது வெறிகொண்டு வேட்டியை அவிழ்த்துக் காட்டி சீறும் அண்ணனில் ஒளிந்திருப்பது ஆண்மை என்பது வெற்றிகொள்வது என்று புரிந்துகொண்டிருக்கும் புராதன போர்க்குலத்தின் அகங்காரமே. அண்ணன் தன் மனைவியை பின் ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறான். கணவனின் கருணைக்காக ஏங்கி அழுது மெல்லமெல்ல அழிந்து தற்கொலை செய்துகொள்ளும்முன் பாட்டு கற்பிக்க வந்தவனிடம் மூன்றுமாத கர்ப்பத்தை பெற்றுக்கொண்டு தன் ஆங்காரத்தை நிறுவி விட்டு செல்கிறாள் அவள். சின்னவரின் மனைவி தத்துபுத்திரன் இருந்தும் தனக்குள் சுருங்கி மடியும் ஆசாரமுமாக மாறி மெல்ல அழிகிறாள். மடியும் ஆசாரமும் மானுடவெறுப்புக்கான வழிமுறைகளாக ஆவதை நாம் இந்நாவலில் காண்கிறோம்.

பாஸ்கர் ராயின் முதல்மனைவி முற்றிய காசநோயை ஒளித்து அவனுக்கு திருமணம்செய்விக்கப்பட்டு அவன் தன்னை தொட்டபோது குமுறி அழுது மறுநாளே பிறந்தகம் திரும்பி மாய்கிறாள். நடுத்தர வீட்டு சுதந்திரத்தை பிறந்தகத்தில் அனுபவித்த இரண்டாமவள் அந்த உயர்குடிச் சிறைக்குள் அகப்பட்டு வருந்தி மரணம் மூலம் தன் விடுதலையை அடைகிறாள். மூன்றாம் மானைவிக்கோ இரண்டாம் மனைவியின் குழந்தைகளுடனான உறவு கசந்து அகத்தளம் நரகமாகிறது. பாஸ்கர் ராயின் மகள் அந்த இருண்ட அறைகளில் சித்தியுடன் போராடி தம்பியை நேசித்து அவனது அன்பு கிடைக்காமல் உழன்று இன்னொரு ராஜபுத்திர பிரபுவுக்கு மணம் முடிக்கபப்ட்டு ஒருசில மாதங்களிலேயே கைவிடப்படுகிறாள். ராய்குல சிறையிலிருந்து தப்பி படித்து வேலைக்குச் சென்று தன் வாழ்க்கையை தானே சுமக்க அவள் தகுதி பெறுகிறாள். ஆனாலும் அவள் மானம் விடுதலை பெறவில்லை. கன்னிவாழ்க்கை வாழ்ந்து மூத்த தன் வயோதிகத்தில் அவளை விட்டுச்சென்ற கணவன் நோயாளியாக திரும்பிவரும்போது அழுதபடி அவன் காலில் விழவே அவள் கற்பிக்கப்பட்டிருக்கிறாள். ராய்குலப் பெண்டிரின் கதைகளை மட்டும் எடுத்து ஆராயும்போது எழும் துன்பியல் சித்திரமே இந்நாவலில் சொல்லப்படமால் ஊடாடிச்செல்லும் மிக ஆழமான வாழ்க்கை நோக்கை வெளிபப்டுத்துகிறது. வாழ்தல் என்பதை கட்டுப்படுதல் என்றே புரிந்துகொண்ட ஒரு யுகம் அது.

பெரிய நாவல்கள் நிலைபெறுவது உதிரி கதாபாத்திரங்கள் மூலமேயாகும்.சதுரங்கக் குதிரைகள் அவ்வகையில் மிக செறிவான ஒரு ஆக்கம். பல உதிரிக்கதாபாத்திரங்கள் இந்நாவலில் விரிவாக வர்ணிக்கபடுவதேயில்லை. வேலைக்காரன் பவானி ஓர் உதாரணம். மிகக் குறைவாகவே அவன் சித்தரிக்கப்பட்டாலும் அவனது அர்ப்பண உணர்வும் உணர்ச்சிகரமான அன்பும் நிலப்பிரபுத்துவகால ஆண்டான் அடிமை வாழ்க்கையின் உளவியலை தெளிவாகவே காட்டுகின்றன. கூர்ந்து அவதானிக்கபப்ட வேண்டிய மூன்று கதாபாத்திரங்கள் கிஷன் பாய், ரகமத்துல்லா, பௌவல்ஸ் ஆகியோர். திடீரென்று பெரும் செல்வத்துக்கு உடைமையாளனாக ஆகி அதை முழுக்க சீரழித்து அதன் மூலமே வாழ்க்கையின் நுண்ணிய விவேகத்தை அடையும் கிஷன்பாய் பலவிதமான சிந்தனைகளுக்கு நம்மை தள்ளுகிறார். எவ்வித அழுத்தமும் இல்லாத பாமரத்தனமான அவரது பேச்சுகள் மூலம் நிலப்பிரபுத்துவத்தின் தேடலான செல்வம் அதிகாரம் நுகர்வு என்பவற்றின் உச்ச எல்லையைச் சுட்டிக்காட்டி அங்கிருக்கும் வெறுமையை இந்நாவல் காட்டுகிறது. அதன் நேர் எதிர்பக்கம் என ரஹமத்துல்லாவைச் சொல்லலாம். கிட்டத்தட்ட எதுவுமே தனக்கென இல்லாதவன். அதைவிட முக்கியமாக எதையுமே எதிர்பாராதவன். அந்நிலையில் அவனில் கூடும் நிறைவும் அமைதியும்தான் இந்நாவலின் மையச்செய்தி. தான் வாழ்க்கையளித்த பரத்தைக்கு ரஹமத்துல்லா அளித்தது அந்த அன்பையும் அமைதியையும் தான். ரஹமத்துல்லாவின் மனைவி அடைந்த இனிய வாழ்க்கையை இந்நாவலில் ராய்குலப்பெண்டிர் எவருமே அடையவில்லை.

‘பிரிட்டிஷ்ராஜ்’ஜின் சித்திரம் தமிழ் நாவலில் விரிவாக எழுதப்படவில்லை என்பதே உண்மை. புதுமைப்பித்தன் அவரது அன்னையிட்ட தீ நாவலில் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அது நிறைவேறவில்லை. சதுரங்கக் குதிரைகள் பிரிட்டிஷ் அரசின் ஆட்சியின் பல்வேரு முகங்களை மிகவிரிவாகச் சித்தரிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் ஊழல் இல்லை என்ற சித்திரம் நம் பாமர மனதில் உண்டு. லண்டனில் அதிகபட்சம் மெட்ரிகுலேஷன் படித்த ஓர் ஆங்கிலேயன் இந்தியப் பகுதி ஒன்றில் காவல் உயரதிகாரியாகவோ கலெக்டராகவோ வருகிறான். வெயிலும் புரியாத மொழியும் நோய்களும் விரோதம் கொண்ட மக்களும் அவனை வாட்டுகின்றன. அதையும் மீறி கூட்டம்கூட்டமாக அவர்கள் வந்தது பிரிட்டிஷ் ராஜில் ஒருபதவி என்பது பொன் முட்டையிடுவது என்பதனால்தான். பிரிட்டிஷ் ஆட்சியின் ஒட்டுமொத்தமான சுரண்டலையும் அதிகாரிகளின் ஊழலையும் பாரபட்சத்தையும் நுட்பமாக காட்சிப்படுத்துகிறது சதுரங்கக் குதிரைகள்.

குறிப்பாக ஒரு காட்சி. கவர்னர் பதவி வகிக்கும் நவாபுக்கு நொடித்துப்போன ரகுவர் ராய் தன் சொத்துக்களை விற்று வைக்கும் பெருவிருந்து. அதில் அவர் அனைவரையும் உபசரிக்கிறார். ஆனால் கவர்னருடன் அமர்ந்து உணவுண்ணவில்லை. மிலேச்சனுடன் அமர்ந்து உண்ண அவரது மத ஆசாரம் அனுமதிக்காது. நவாப் பழிவாங்குகிறார். உணவு தொடங்கும் முன் அறைக்கு கைகழுவ நீர் கொண்டுவரும் முஸ்லீம் ஏவலனை அழைத்து தன்னருகே ராய்க்கு போடப்பட்ட ஆசனத்தில் அமரச்செய்கிறார். அவனது அழுக்கு உடலும் சொறிபடர்ந்த கைகளும் கண்டு விருந்தினர் குமட்டுகிறார்கள். விருந்து தாறுமாறாகிறது. அந்நிகழ்ச்சியை ராய் சமாளிக்கும் விதமும் நாவலில் நுட்பமாக காட்டபட்டுள்ளது. வெள்ளைய அதிகாரிகளின் ஆணவம் நடுவே வெள்ளைய ஆட்சியின் சுரண்டலை கண்டிக்கும் மிஸ்டர் பௌல்ஸ் போன்ற ஆசிரியரும் சரி, வெள்ளையப்பெண்ணை தவறாக கொன்றுவிட்ட தன் மாணவர்களை காக்கும் வெள்ளைய கல்லூரி முதல்வரும் சரி தனித்து நிற்கிறார்கள். கதாபாத்திரங்களின் நிறபேதங்கள் மூலம் ஒரு விரிவான உலகை உருவாக்கிக் காட்டுகிறது இந்நாவல்

இரு உச்ச அவலங்கள் மூலம் ரகுவர் ராயின் வீழ்ச்சி காட்டப்படுகிறது. தன் பேத்தி திருமணத்துக்காக தன் மீசையையே அடகுவைத்து பணம்பெறுகிறார் அவர். அவர் உயிரினும் மேலாக வளர்த்த ஜார்ஜ் என்னும் குதிரை அவரிடமிருந்து பறிபோகிறது. ஜார்ஜ்ஜின் சாபத்தால் அவரது லாயமே காலியாகிறது. மீசையும் குதிரையும் இழக்கப்பெற்ற ராஜபுத்திரன் ஏற்கனவே இறந்தவனே. ஆகவேதான் போலும் ரகுவர் ராயின் மரணம் சாதாரணமாகவே இந்நாவலில் சொல்லப்படுகிறது.

பலவகையிலும் மாக்ஸீம் கோர்க்கியின் ‘அர்தமோனவ்கள்’ என்ற மூன்று தலைமுறை நாவலுக்கு சமானமானது கிரிராஜ் கிஷோர் எழுதிய இந்நாவல். உலக இலக்கியத்தில் நாம் ஒன்றைக்காணலாம். வீழ்ச்சியைச்சொல்லும் எல்லா நாவல்களும் குறைந்தபட்ச வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்கின்றன. ஏன்? வீழ்ச்சியையே பண்டைய இலக்கண மரபு அவலம் என்று சுட்டியது. ஒரு படைப்பு பெரும் கால அளவில் ஏராளமான மனிதர்களைப்பற்றி பேசத்தொடங்கும்போதே அது அவலத்தை நோக்கி நகரத்தொடங்குகிறது. தத்துவார்த்தமாகப்பார்த்தால் முதுமை எய்தி மரணத்தில் முடியும் எல்லா மானுடவாழ்வும் அவலங்களே. நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியைக் காட்டுகிறது இந்நாவல்.ஒரு நோயுற்ற மூத்த மனிதனின் மரணம்போல மிக இயல்பானது, இன்றியமையாதது அது. ஆயினும் அது மனத்தை கனக்கச் செய்கிறது. வாழ்க்கையின் நிலையாமையைப்பற்றி சிந்திக்கச்செய்கிறது. ஓயாது மனிதன் கட்டி எழுப்புகின்றவற்றுக்கெல்லாம் என்ன பொருள் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.’அர்தமோனவ்கள்’ எழுப்புவதும் அதே உணர்வுகளைத்தான்.

1990ல் எழுதப்பட்ட இந்நாவலை பொதுவாக இந்தி நாவல் இலக்கியத்தின் ஒரு சாதனை என்கிறார்கள். ஆசிரியர் கிரிராஜ் கிஷோர் ஏற்கனவே இதே பின்னணியில் ஜுகல்பந்தி என்ற நாவலை எழுதி புகழ்பெற்றவர். கான்பூர் ஐ.ஐ.டியில் ஆசிரியராக வேலைபார்க்கிறார்.பொதுவாக மொழிபெயர்ப்பில் காணப்படும் எந்தச்சிக்கல்களும் இல்லாமல் மிகச்சிறப்பாக இந்நாவல் தமிழாக்கம்செய்யப்பட்டுள்ளது. திரு ஞானம் பாராட்டுக்குரியவர்.

[சதுரங்கக் குதிரைகள். கிரிராஜ் கிஷோர். இந்தி மூலம் தாய் கர். தமிழாக்கம் மு.ஞானம். சாகித்ய அக்காதமி வெளியீடு ]

முதற்பிரசுரம்  Mar 29, 2007

முந்தைய கட்டுரைதாண்டவராயன் கதை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18