இவ்வாண்டு விஷ்ணுபுரம் இலக்கிய விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக மலேசியாவின் இலக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான எஸ்.எம்.ஷாகீர் கலந்துகொள்கிறார். இவ்வாண்டு முதல் விஷ்ணுபுரம் இலக்கிய விழாக்களில் ஓர் இந்திய எழுத்தாளருடன் ஓர் அயல்நாட்டுப்படைப்பாளியும் கலந்துகொள்வார். எங்கள் முதன்மையிலக்காக இருப்பது நம்மைப்போன்ற கீழைநாட்டுப் படைப்பாளிகளை அழைப்பதும், அவர்களை அறிந்துகொள்வதும்தான்.
ஏனென்றால் நமக்கு இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் உட்பட நம்மைச்சூழ்ந்துள்ள நாடுகளில் என்ன நிகழ்கிறதென்றே தெரியாது. நம்மை அவர்களுக்கும் தெரியாது. இன்று நான் பரவலாக இலக்கியவிழாக்களில் கலந்துகொள்வதனால் இவர்களுடன் ஓர் அறிமுகம் உருவாகிறது. இவர்களுக்கு தமிழிலக்கியம் என ஒன்று உள்ளது என்று தெரிவிக்க முடிகிறது. விருதுபெறும் படைப்பாளியை அந்த தேசத்திற்கு அறிமுகம் செய்யவும் முடிகிறது.
இவ்வாறு அழைப்பது சாதாரணமான ஒரு நிகழ்வு அல்ல. அந்தந்த மொழிகளில் அந்நிகழ்வு கவனிக்கப்படுகிறது. மேற்கண்ட அறிவிப்பு பேனா என்னும் மலேசிய இலக்கிய அமைப்பினர் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு ஷாகீர் வருவதை வாழ்த்தி வெளியிட்ட அறிவிப்பு. இந்த அறிவிப்பே கூட முக்கியமான ஒரு நிகழ்வுதான்.
எஸ்.எம்.ஷாகீரின் கதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு வல்லினம் இதழில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இதுவும் ஒரு முக்கியமான நிகழ்வு. விஷ்ணுபுரம் விழாவுக்கு அழைக்கப்பட்ட இந்தியப்படைப்பாளிகளான ஜனிஸ் பரியத், மமங் தய், ஜானவி பருவா, சின்னவீரபத்ருடு உள்ளிட்ட இந்தியப்படைப்பாளிகளும் தமிழ்ச்சூழலுக்கு அவ்வருகை வழியாக இதேபோல விரிவாக அறிமுகம் செய்யப்பட்டனர்.
உலகுடன் ஓர் இலக்கிய உரையாடல்- எங்கள் எல்லைக்குள் முடிந்தவரை தீவிரமாக. இதுவே எங்கள் எண்ணம். இப்படி ஒரு நிகழ்வு இத்தனை தொடர்ச்சியாக இதற்கு முன் தமிழில் நிகழ்ந்ததில்லை
எஸ்.எம்.ஷாகீர்: தமிழ் விக்கி
எஸ்.எம்.ஷாகீர் தமிழில் கதைகள்