அன்பாா்ந்த ஜெயமோகன் அவர்களுக்கு .
ஒரு வெறுமையிலிருந்து வெளிவந்த நிறைவுடன் எழுதுகிறேன். நவம்பர் 17,18,19 தேதியில் வெள்ளிமலையில் குருஜி செளந்தா் வழிகாட்டலில் நடந்த யோகமுகாமிற்குப் பிறகு, “இதோ தெரிகிறது வெளிச்சம், பிடித்துக் கொள்” என்கிற எழுச்சியுடன் எழுதுகிறேன்.
இந்த முகாமிற்குப் பதிவு செய்யும் முன் ஏதோ ஒரு சலிப்பு , ஆழ்ந்த ஏமாற்றம் எது செய்யவும் விழையாத அயர்வு என்று நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன். உங்களுடைய “ஆலம்” தந்த புத்துயிர் அவ்வப்போழுது அணைந்து விட்டது. எதற்கும் ஒரு செயலற்ற நிலையில் யோக முகாமிற்குப் பிறகு எல்லாம் சாிசெய்து கொள்ளலாம் Let us leave it என்று தான் இங்கிருந்து கிளம்பினேன். கிளம்பும் முன் அந்தியூா் நண்பர் மணி அவர்களின் அறிவுரைகள் படித்து ஐந்து மணிக்கு முன் வெள்ளிமலை சென்றடைய வேண்டும் என்ற பதைப்பில் கோயம்புத்தூர்லிருந்து நண்பகல் 12 மணிக்கு கிளம்பி 2.30 மணி அளவில் அந்தியூா் வந்தடைந்தேன். முன்பே சொல்லியபடி நண்பா் கண்ணன் சேர்ந்து கொண்டாா். கூகுள் வரைபடத்தின் துணை கொண்டு யாத்திரை துவங்கியது. நல்ல ரோடு முடிந்து காட்டு பாதை தொடங்கும் பொழுது ,அந்த ரோடு, வளைவுகள், சுற்றிலும் இருட்டை மேலும் தீவிரமாக்கும் மரங்கள், அளவற்ற மெளனம் ஒரு மாதிாியாக வயிற்றைக் கலக்க, பேசாமல் இருப்பதுதான் சிறந்தது என்று “‘சாியாகத்தான் போகிறோமா கண்ணன்” என்று தொண தொணத்துக் கொண்டேயிருந்த நான் வாயை முடி கொண்டு வந்தேன். ஒரு அழகிய கிராமம், அதன் பள்ளி, மாணவர்களுக்கே உரித்தான உற்சாகம், சில வீடுகள், அலுவலகங்கள் கண்ட பிறகு தான் நிம்மதியாயிற்று. இப்படி அநியாயத்துக்கு build_up கொடுத்த நண்பர் மணி அவர்கள் ஏதாவது ஒரு மசாலா தமிழ் படத்திற்கு திரைக்கதை எழுதப் போகலாம் .
என்ன ஒரு அழகான இடம். வசதியுடன் ஆனால் எளியமான இதமான அமைப்புடன் வெகுநாள் தங்கிப் பழகிய வீடு போல சட் என்று ஒரு உாிமையுடன் நெகிழ்ந்து போனேன். அன்றிரவே குருஜீ செளந்தா், நண் பா்கள் வேலவன் ,கண்ணன், அருணாசலம்,ரெங்கஸ்வாமி வந்திருந்தனர். இரவு சாப்பிட்ட பிறகு நண்பர் மணி அவர்கள் சைவசித்தாந்த தொடக்கம் எப்படி புாியாத புதிராக இருக்கிறது என்று விளக்கிக் கொண்டே வரும் பொழுது , எப்படி பக்தி தான் நம் தேடல்களுக்கு வழி காண்பிக்கும் என்று சொல்லி திருவாசகத்தில், பக்தி என்பது என்ன என்று போற்றிதிருஅகவலில் வரும் பாடலை விளக்கங்களுடன் சொல்லிக் கொண்டே வந்தார். கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அந்த தமிழும், தெளிவும், எளிமையும் கடவுள் சன்னிதியில் இருப்பது போல பரவசமானேன். முகாமின் சாியான தொடா்ச்சி இது என்று பட்டது.
அடுத்த நாள் ஒவொவொருவராக நண்பர்கள் வந்தனர். நான், பிரவீணா ,அம்ருதா லலிதா அனைவரும் ஒரு அறையில் தங்கினோம்.வெகு காலம் கூடி இருந்த உறவுகள் மீண்டும் சந்திப்பதுபோல உடனே நெருங்கிவிட்டோம். புத்தரையும் சரஸ்வதி தேவியையும் வணங்கிய பிறகு வகுப்புகள் தொடங்கின. வகுப்பு தொடங்கும் முன் உலகத்தில் அமைதியும் வளமும் நிலவ குருஜி மந்திரம் கணீர் என்று உரக்கக் சொல்லும் பொழுதே தொிந்த விட்டது கடுமையான பயிற்சி காத்திருக்கிறது என்று. மிகவும் தெளிவாக மரபு சார்ந்த யோக முறையைப் பற்றி விளக்கினார் . ஒரு உடற்கூறு அல்லது ஒரு நோய்க்கு என்று இல்லாது,நாம் இயங்கும் ஐந்து தளங்களான அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் எல்லாவற்றிலும் செயல் படக்கூடியது நம் யோகா மரபு.. மரபுவழி யோக பயிற்சி உடல், உறுப்பு, மனம், ஆன்மம் எல்லாம் ஒருங்கிணைந்து நம்முடைய நோய் , குழப்பங்கள் , எல்லாவற்கும் தீர்வு காணக்கூடியது என்று உரைத்தார். இது ஒரு சித்திகள் பெறுவதற்கோ, சாதனைகள் படைப்பதற்கோ ஆன பயிற்சி அல்ல அதற்கும் மேல், அனைவரையும் தாக்கும் தசை அழுத்தங்கள், உள் மனதின் அழுத்தங்கள், உணர்வு சார்ந்த அழுத்தங்கள் (Muscular,Mental,Emotional) எப்படி கையாள வேண்டும், எந்த ஆசனங்கள் செய்வதால் எந்த சுரப்பிகள் சாியாக இயக்கப்படுகின்றன என்று நிறைய உதாரணங்களை எடுத்துக்காட்டி சொல்லிக் கொண்டே இருந்தாா்.
வகுப்புகள் இடைவெளிகள் விட்டு சரியாக பிரிக்கப்பட்டு இருந்தன. பயிற்சி செய்யும் பொழுது நிதானமாக ஒவ்வொரு ஆசனத்தையும் விளக்கி தான் ஒரு முறை செய்து காட்டி எங்களையும் திரும்பதிரும்ப செய்ய வைத்தாா். வகுப்புகள் முடிந்த பிறகு எங்களிடமிருந்து தள்ளி நில்லாமல் தோள் மேல் கைப் போட்டு கூட்டி சென்று பேசுவதும் கேலி செய்வதும் என்று தோழனாய் நின்றா்.சிறிது நேரம் கிடைத்தாலும் எல்லாரும் கேள்விகள் கேட்டு தெளிவுகள் பெற்றனர்.செயல் பயிற்சியின் பொழுது தவறுகளை சரி செய்து கொண்டே இருந்தார் . தூங்காதீர்கள் என்று யோகநித்திரை பயிற்சியின் பொழுது கதறி கதறி சொன்னாலும் ஆனந்தமான குறட்டை ஒலிகள் வந்தது வேற விஷயம்.
அறிவியலின் இன்றைய மருத்துவ கண்டுபிடிப்புகள் நியதிகளோடு ஒன்று சேரும் யோக மரபு, நம்முடைய ஐந்து உயிற்ஆற்ற செயல் களையும்(,பிராணம்,அபானம் ,சமானம் ,உதானம் ,வ்யானம்) அதன் வழி வெளிப்படும் குணாதிசயங்களையும் ஆற்றுப்படுத்தும் விதத்தை விளக்கினா்.
மரபு வழி யோகம் கற்பிக்கும் மரபு முறைகளை சிறந்தது என்று அளவிட வேண்டும் எனில் அவை பாரம்பரியம் மிக்கதா,அறிவியலோடு இசைந்து போகிறதா, ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டதா அவர்களின் வெளியீடுகள் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்று நோக்கவேண்டும்.நம் நாட்டில் நான்கு நிறுவனங்களில் இருந்து உலகம் முழுவதும் நம் யோகா மரபினை கொண்டு சென்ற நமது ஆசிரியர்கள் சுவாமிகள் குவலயானந்தா , , சிவானந்தா, சத்யானந்தா , பி.கே.ஸ்.ஐயங்கார் பற்றி கூறினார் . கடும் பயிற்சிகளும் வாழ்நாள் முழுவதும் அதற்கு அர்ப்பணிப்பும் தேவை என்று விளக்கி எல்லோருடைய கேள்விகளுக்கும் சிலசமயம் விளையாட்டாக சிலசமயம் மிகவும் கவனத்துவுடன் பதில் கூறினார். இந்த சாதகம் எதற்கு? நாம் ஆரோக்கியமாக இருப்பதுதான் நம்மை தாங்கும் பூமிக்கும் இயற்கையின் அன்பளிக்கும் நாம் செய்யும் கைம்மாறு. நம்மை சுற்றி இருக்கும் சமுகம், நம் மூதாதையர், நம் பிரபஞ்சம் எல்லாவற்றிலும் நாம் ஒரு அங்கம் நம் கடமை அதை அறிவது உணர்ந்து நடப்பது என்ற முடிக்கும் பொழுதுதான் புரிந்தது . எவ்வளவு பெரிய மரபின் திரண்ட தெளிவாக வைத்துள்ள முறைகளை வெறும் உடற்பயிற்சி என்று நினைக்கிறோம்!
இரண்டு மாயாஜல வித்தைகளைப் பற்றி கூறத்தான் வேண்டும். வெறுப்போ சலிப்போ சார்ந்த திரும்ப திரும்ப எழும் எண்ண ஒட்டங்களை நிறுத்த அந்தா் மோனா என்ற பயிற்சி. பதினைந்து நிமிடத்திற்கு குருஜியின் குரல் மட்டுமே கேட்டுக் கண்ணை முடி அக்கண்ணின் முன்னுள்ள திரையில் உங்கள் எண்ண ஒட்டங்களை பாருங்கள் என்று குருஜி கூறிய பொழுது, நம்பினால் நம்புங்கள் அங்கிருந்த அனைவருக்கும் பிம்பம் இல்லாத வெற்று திரைத் தான் தெரிந்தது . அதையே தொடர்ந்து உங்களுக்கு மிகவும் நடக்க வேண்டும் என்பதை நினைத்துபாருங்கள் என்ற பொழுது ரோகித்சர்மா உலகக்கோப்பையை கையில் பிடித்து இருப்பது போல நினைத்துப் பார்த்தால் அதற்கு கூட விடை வெற்றுத்திரைதான் விடை .(அப்பொழுதே தெரியும் வரப்போகும் துக்கம்) இதுபோல் எண்ணஓட்டம் ஒன்றும் இல்லாமலிருந்ததே வாழ்க்கையில் முதல் முறை. அற்புதமான தருணம் . நம் கண்முன் கருநீலத்திரை மட்டுமே அத்தருணம். விடாமல் முயற்சி செய்தால் யோக சாதகம் கைக்கூடும் என்று நினைத்தேன் .அதேப்போல கண்திறந்து செய்யும் தியானப் பயிற்சியும் உண்டு என்று பதினைந்து நிமிடம் மெளனமாக யாருடனும் தொடர்பு இல்லாது அரங்கில் வெளியே கண்ணைத்திறந்து நிற்கச் சொன்னா். நிஜமாகவே மாறி விட்டேன். திரும்பிவரும் பயணம் பற்றியோ சற்று நேரத்தில் தொடங்க ப்போகும் உலககோப்பை போட்டியைப் பற்றியோ எந்த நினைவும் இல்லை. வெளி நீலவானில் இறகு போல அடுக்குக்காக மேகங்கள் பொிய மேகத்துண்டிலிருந்து வந்து கொண்டிருந்தது. படிப்படியாக குறைந்து போன மேகம் நீலவானத்தை தொடும் இடம் ஒரு கடற்கரைப் போல தோற்றம். அலையின் ஒலி, உப்புக்காற்றின் மணம், ஒடிவரும் பறவைகள் ஒரு கணத்தில் எங்கோ இருப்பது போல மனம் நிறைவுடன் அமைதியாக இது போதும் இது தான் மகிழ்ச்சி என்று நினைத்தேன்
முன்று நாட்களிலும் பழகி விட்ட நண்பா்கள். ஒரு சிறு இடைவேளை கிடைத்தாலும் ஜெ, ஜெ, ஜெ என்று உங்கள் கதை , தாங்கள் கூறியது, உங்களுடைய கருத்து என்று பேசிக்கொண்டே இருந்தோம். எல்லோருக்கும் ஒரு தேடல் இருக்கிறது. அதற்காக முயல வேண்டும் என்று தெரிகிறது. பேசி பேசி இதற்கு ஒரு வடிவம் கொடுத்த முயல்கிறோமா/.
சுவையான உணவு, நல்ல தங்குமிடம் சண்டை சச்சரவு கூக்குரல் இல்லாமல் அரசியல் சினிமா என்ற அக்கப்போா் ஒண்ணுமில்லாமல் கனவு வாழ்க்கை போல் இருக்கிறது. வேளா வேளைக்கு உணவு படைத்து அன்புடன் எது கேட்டாலும் செய்து கொடுத்த சரஸ்வதி அம்மாவும் அவருடைய உதவியாட்களும் எத்தனை நன்றி சொன்னாலும் போதது. நண்பர் மணி அவர்களைப் பற்றி என்ன கூறுவது எப்படி இத்தனை போ்களுக்கும் எல்லா வசதிகள் செய்து கொடுத்து அவ்வப் பொழுது எங்களிடமும் பேசிக்கொண்டிருக்க முடிகிறது. பிரபந்தகளின் விளக்க முகாம் நடப்பது போல் சைவத்திருமுறைக்காகவும் முகாம் நடத்த நீங்கள் முயலுங்கள் என்று வேண்டிக்கொண்டேன். நண்பர் மணி அவர்களிடம் ஒரு விண்ணப்பம். இத்தனை செய்த கடினமான முழு பயிற்சிகள் முடிந்தபிறகு இரவு மனம்விட்டு எல்லாரும் பாடும்பொழுது எல்லாரையும் பார்த்துக்கொண்டிருந்தேன் .குருஜி, மணி அவர்கள், நண்பர்கள்.பாடல்களின் வரிகள் , இசை எல்லாவற்றிலும் அமிழ்ந்து ஒரு யோக நிலை அடைந்தது போல் இருந்தது .
இறுதியில் போட்டோக்கள் எடுத்து விடைபெறும்பொழுது அழக்கூடாது என்று பிரவீணா கூறிய பிறகும் விசும்பலை அடக்கமுடியவில்லை.
முகாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பி இன்று பயிற்சியைத் செய்யும் பொழுது குருஜியின் ஒலி . ‘அரங்கத்தின் வெளியே மிகத்தொலைவிலிருந்து வரும் சப்தங்களை கேளுங்கள்” என்று ஒலிக்கும் பொழுது நம் வெள்ளிமலையில் செம்போத்து, புறா, சிவப்புமூக்கு ஆள்காட்டி, பின் இரண்டாவது படிவமாக மைனா, சிலம்பன் விதம் விதமாக ஆனால் ஒரு பேரமைதியோட கேட்கும் அந்த சத்ததிற்கு ஏங்கியது மனது. காா்,ஸ்கூட்டா்,கிளம்பும் சத்தம் கேட்காதிருக்க நான் கற்று கொண்டு விடுவேன். ஏனெனில் என் உள்நினைவில் வெள்ளிமடையின் எழில்தான் நிற்கிறது.
நாம் Superman ஆக வேண்டாம் சகமனிதனை நேசிக்கும் நல்ல ஒரு ஆரோக்கியமான உடம்பும் நல்லெண்ணமும் கொண்டால் போதும் என்று தெளிவு தந்த குருஜிக்கு என் பணிவாா்ந்த வணக்கங்கள். இது போல் இடமும் சூழ்நிலையும் உருவாக்கி தந்த உங்களுக்கும் மணி அண்ணாவிற்கும் நன்றியும் வணக்கமும்.
இப்படி
வ .க. மாலதி
கோவை