தீவும் தோணியும்- கடிதம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபப் பெருவிழாவின் ஏழாவது நாள். தேர் உலா. திருவண்ணாமலையில் ஐந்து தேர்கள். விநாயகர், முருகர், சந்திரசேகர், பராசக்தி, பிச்சாண்டவர் ஆகியோருக்காக. அந்த வரிசையில் ஒவ்வொரு தேராக மாட வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தபின் அடுத்த தேர் கிளம்பி உலா வரும். காலையில் விநாயகர் தேரும் மதியம் முருகர் தேரும் உலா வந்து சேர்ந்த பின் மாலை சந்திரசேகரருக்கான பெரிய தேர் உலாவைப் பார்க்கத் சென்றிருந்தோம். 4 மணி தொடங்கி ஒருங்கிணைப்புகள் முடிந்து 5 மணிக்கு தேர் கிளம்ப ஆயத்தமானது.

தேர் நடத்துனர் ஆணைகளை வழங்கலானார். ‘கட்டை போடும் நண்பர்கள் கட்டை போடவும். வாத்தியம் இசைப்பவர்கள் இசைக்கவும். வடம் பிடிக்கும் அன்பர்கள் வடத்தை கையில் எடுத்து கொள்ளவும். இரு பக்கமும் உள்ள அன்பர்கள் அரோகரா கோஷமிட்டு வடம் பிடிக்கும் அன்பர்களை உற்சாகப்படுத்தவும்.’ திருஉடல், பிரம்ம தாளம், எக்காளம், கொம்பு முதலான கைலாய வாத்தியங்கள் ஆர்பரிக்க, அதை விஞ்சி கூடியிருந்த பெரும் கூட்டம் ‘அண்ணாமலையானுக்கு…. அரோகரா’ கோஷமிட வடங்கள் இழுபட்டன. தேர் சற்றும் நகரவில்லை. சிறு அமைதிக்குப் பின் மீண்டும் ஆணைகள், வாத்திய ஒலி, அரோகரா பேரோசை, வட இழுப்பு. தேர் அசையவில்லை. மீண்டும்…. மீண்டும்….. திடீரென்று ஒரு கணத்தில் உச்சம் பெற்ற வாத்திய, அரோகரா முழக்கங்களுக்கு இடையே சட்டென அதிர்ந்து குலுங்கி ஓராண்டாக அசையாது நின்ற இடம் விட்டு நகர்ந்தது 83 அடி உயர திருவண்ணாமலை பெரிய தேர். அந்தக் கணம் உளம் பொங்கி வழிந்த ஒரு பேரனுபவம்.

தேர் தூரத்தில் செல்லும் போது தோன் றி யது ‘ இது உருண்டு போகவில்லை. மக்கள் வெள்ளத்தில் மிதந்து போகிறது’ என்று. இந்தப் பக்கம் அந்தப் பக்கம் குலுங்கி ஆடி, இரு புறமும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, ஒரு மூலையில் திரும்ப மாட்டேன் என்று அடம் பிடித்து கற்பூர தீபம் காட்டி சமாதானப்படுத்திய பின் கிளம்பி, அந்த காலத்தில் நடனம் எல்லாம் இருக்கும் என்று ஏங்கி, மாட வீதிகளைச் சுற்றி மீண்டும் நிலைக்கு வந்தது தேர்.

பெரிய தேர் கிளம்பிய அந்த அற்புதத் தருணத்தை தன்னுள் புதைத்து வைத்த சிப்பி மூன்று நாள் கழித்து  ஒளியாலானது நூலில் இருந்துக் கிடைத்தது.  

அசையும்போது தோணி 

அசையாதபோதே தீவு 

தோணிக்கும் தீவுக்குமிடையே 

மின்னற்பொழுதே தூரம்” 

தேவதேவன்

இதுவரை வாழ்வில் அறிந்திராத ஒருசொல் அல்லது ஒரு செய்தி முதல் முறையாக அறிய வரும் போது அதுவே சில நாட்களுக்குள் மீண்டும் குறுக்கிடுவது விந்தை.(இணைய விளம்பரங்களைச் சொல்லவில்லை). தேவதேவனின் மேற்படி கவிதையை ஒளியாலானது நூலில் உங்கள் எழுத்தில் வாசித்த அதே நாள் மாலை அதே கவிதையை உங்கள் குரலில் கேட்டேன். (கூட்டத்தில் தனித்திருத்தல் உரை). அந்த கவிதைக்கு தேரை எடுத்துக்காட்டாகச் சுட்டி இருந்தீர்கள். நகராமல் இருக்கும் போது மண்டபம், நகரும் போது தேர். மண்டபம் தேராகும் மின்னற் பொழுது.

வண்ணதாசனின் ‘நிலை’ சிறுகதையில் நிலைக்கு வந்துவிட்ட தேரை மட்டுமே  பார்க்கக் கிடைக்கும் கோமுவின் ஏக்கம் புரிகிறது.

பா ராஜேந்திரன்

திருவண்ணாமலை

முந்தைய கட்டுரையா தேவி, மருத்துவ ஆய்வுக்கட்டுரையில்
அடுத்த கட்டுரைதிரிவிக்ரமன் தம்பி