பெருமதிப்பிற்கும்,பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.
‘வெளிநடப்பு‘ என்பது புறச் சூழ்நிலையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல், நாமாக முன்வந்து அச்சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதன் மூலம் நமது எதிர்ப்பைக் காட்டுவது. ‘வெளியேற்றம்‘ என்பது புறச்சூழ்நிலையின் அழுத்தம், நமது விருப்பமில்லாமலேயே நம்மை வெளியே தள்ளுவது. யுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்‘ அப்படி வெளியேற்றப்பட்டவர்களைப் பற்றிய கதை.
நாவலின் ஆரம்பத்தில் திருமணத்தின் மூலம் நெருக்கடியில் சிக்கிக் கொள்ளவிருந்த வேதமூர்த்தியை வெளியேற்றிக் காப்பாற்றித் தன்னுடன் அழைத்துச் சென்று மெய்ம்மையை நோக்கிய பயணத்தில் ஈடுபடுத்துகிறார் வேதமூர்த்தியின் குரு. இரண்டு ஆண்டுகள் கழித்து குரு தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் தன் குருநாதர்கள், அவர்களுடன் தன் அனுபவங்களைப் பற்றிக் கூறிவிட்டு, தன் குருநாதரான பைராகி தான் விரும்பிய போது மரணத்தை வரவழைத்துக் கொண்ட ஸித்தியை தான் அடையாமல் போனதைக் கூறி, வேதமூர்த்தி அந்நிலையை கட்டாயம் அடைய வேண்டும் என்றும், மேலும் தான் எப்படி ‘ஆரா‘ வின் மூலம் அவரை அடையாளம் கண்டு கொண்டாரோ அதே முறையில் வேதமூர்த்தியும் அவரது சிஷ்யர்களை அடையாளம் கண்டு குரு–சிஷ்ய பரம்பரையை தொடர வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறார்.
அதன்படி, ஆகஸ்ட் 1960 லிருந்து ஜூலை 1987 வரையிலான காலக்கட்டத்தில் – ஒரு வறுமை, ஒரு இறப்பால் ஏற்படும் வெறுமை, ஒரு தீராப்பெரும்பசி,ஒரு பகை, ஒரு நோய்,ஒரு உடற்குறை – எப்படி சில மனிதர்களை அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையை விட்டு வெளியேற்றுகின்றன என்பதையும், அப்படி வெளியேற்றப்படுபவர்கள் வேதமூர்த்தியால் வழிநடத்தப்படுவதையும் விவரிக்கிறது. திருவண்ணாமலைக்கு ஒரு திருமணத்திற்கு செல்லும் சந்தானம் அவர் தங்கியிருக்கும் விடுதியில் பார்க்கும் ஒருவரின் வித்தியாசமான நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அவருடன் உரையாடுகிறார்.
அவ்வுரையாடலில் தன் குடும்பத்தைப் பாதுகாத்து வரும் ஒரு அபூர்வ மனிதரையும், அவருடைய அற்புதங்களையும்,அவர் இன்னும் பதினாறு நாட்களில் சமாதியாக இருப்பதையும் அறிகிறார். அவரை நேரில் சந்திப்பதற்கான இருவரின் முயற்சிகளும் தோல்வி அடைகின்றன. வேதமூர்த்தியைப் பற்றி மேலும் அறியும் ஆவலால் அவர் வழிநடத்தும் மனிதர்களை ஒவ்வொருவராக தேடிச் சென்று சந்திக்க ஆரம்பிக்கிறார் சந்தானம். தன் குடும்பத்தையே மறந்து வத்தலக்குண்டு, மாயவரம், திருவண்ணாமலை, சென்னை, திருத்தணி, நாகர்கோவில், திருநெல்வேலி, பழனி எனப் பல ஊர்களுக்குச் சென்று அவரால் வழி நடத்தப்படுபவர்களைச் சந்தித்து வேதமூர்த்தி உடனான அவர்களின் அனுபவங்களையும், அவருடைய சந்திப்பிற்குப் பிறகு எப்படியெல்லாம் அவர்களுடைய வாழ்க்கை மாற்றமடைந்தது எனக் கேட்டறிகிறார்.
இறுதியில்,காசியில் வேதமூர்த்தி ஜீவசமாதி அடைவதையும், அவருக்குப் பின்னான பொறுப்பை ஹரிஹரசுப்பிரமணியத்திடம் ஒப்படைப்பதையும் சந்தானம் பார்க்கிறார். வாழையடி வாழையென வேதமூர்த்தியின் பரம்பரை தொடர்கிறது. தானும், தனது இந்தப் பயணங்களுக்கெல்லாம் ஆரம்பப்புள்ளியாக இருந்த கணபதியும், திருவண்ணாமலையில் பாதாளலிங்கக்கோவில் அர்ச்சகராகப் பார்த்தவர் தான் வேதமூர்த்தி என நினைவு கூர்வதுடன் நாவல் நிறைவடைகிறது.
யுவன் சந்திரசேகர் இந்தக்கதையில் பின்பற்றியிருப்பது கல்வி நிலையங்களில் பயன்படுத்தப்படும் Matching Board உத்தியை. ( இடது பக்கம் இருக்கும் கேள்விகளுக்கு, வலது பக்கம் வரிசை மாறியிருக்கும் விடைகளைக் கண்டறிய சரியான கயிற்றை இழுக்க வேண்டும்.) வழக்கம்போலவே, கதைமாந்தர்களின் உரையாடல்களை மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சிவகங்கை வட்டாரப்பேச்சுவழக்கு நுணுக்கங்களுடனும்,வேற்று மொழி பேசுபவர்களுடனான உரையாடல்களை மொழிபெயர்ப்பு நடையிலும்,எண்ணவோட்டங்களைத் தனிப்பட்ட அகமொழியிலும் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார் யுவன்.
முடிவில் இக்கதை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
1) மெய்ம்மைக்கான ஞானத்தேடலில் மாற்றுப்பாதையில் செல்வதற்கான குறைந்த பட்சத்தகுதி அக மற்றும் புறச்சிக்கல்கள் கொண்டவர்களாக இருப்பது மட்டும் தானா? ( நடந்தது என்ன என அறியும் ஆர்வத்துடன் இருக்கும் சந்தானத்திற்கும்,நன்றி சொல்ல விரும்பும் கணபதிக்கும் வெறும் தரிசனம் மட்டுமே கிடைக்கிறது.இருவருக்குமே தனிப்பட்ட அளவில் பெரிய அளவில் சிக்கல்கள் இல்லை என்பதாலா?)
2) குருவின் சாந்நித்தியத்தில் மகிழ்ந்திருப்பவர்களின் அனைத்துத் தேவைகளையும் குரு பார்த்துக் கொள்கிறாரெனில் சிவராமன் மகனின் இறப்பை ஏன் அவர் தடுக்கவில்லை? இராமலிங்கம் – விஜயா தம்பதியினருக்கு ஏன் குழந்தைப்பேறு கிடைப்பதில்லை?
3) ஜய்ராம் குருவோடு கருத்து வேறுபாடு கொள்கிறார்.குருபக்தி என்னும் அடிபணிதலைத் தவிர மாற்றுக்கருத்துகளுக்கும் அப்பாதையில் இடமுண்டா?
4) நாம் வாழும் இந்த பூமி அறிவியல் விதிகளின் அடிப்படையில் இயங்குவது. குருநாதர்களின் அற்புதங்கள் நிகழ்த்தும் ஸித்திகள் இந்த அறிவியல் விதிகளை உடைத்துச் செல்கின்றன. அப்படி எனில் அவர்கள் பெறும் ஞானம் இதுவரை இந்த உலகில் அடையப்பட்ட எல்லா அறிவையும் விட உயர்ந்ததா? 5) அப்படிப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான புறவயமான அளவுகோல்கள் ஏதேனும் உள்ளனவா? 6) சராசரியாக ஐம்பது கிலோ மீட்டர்களுக்கு குறைந்த பட்சம் ஒரு சித்தரின் சமாதி ஆலயமும், வருடம் முழுவதும் குருபூஜைகளும் நடைபெறும் தமிழ்நாட்டில் போலி சாமியார்களால் நடைபெறும் குற்றங்களும் ஏன் அதிகம் பதிவாகின்றன?
ஆனால் பின்னுரையில் யுவன் குறிப்பிடுவதைப் போல, “நடைமுறை வாழ்வின் வெளித்தெரியாத பரிமாணமொன்றைக் கீறிக் காட்டுவதுடன் ஓர் இலக்கியப் படைப்பின் வேலை முடிந்து விடுகிறது.” ஆம்…கேள்விகளும், பதில்களும் வாசகனுடையவை மட்டுமே. “வெளியேற்றம்” – ஒரு மாறுபட்ட ஆன்மீகத்தேடல் அனுபவம். நன்றி யுவன் சார்…
அன்புடன் சி.செந்தில்குமரன்.