பெண்கள் ஏன் இல்லை?

வணக்கம் ஜெ.மோ.

நலமா?.
“இவர்கள் இருக்கிறார்கள்”வாசித்தேன். அதைப்பற்றிய வாசிப்பு அனுபவம்..
இவர்கள் இருந்தார்கள், இவர்களும் இருக்கிறார்கள்.

ஜெயமோகன் அவரே சொல்வதுபோலஇலட்சியவாதம் வழியாக வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டவர்கள். “ என்பதில் சந்தேகமில்லை

இச்சந்திப்பு கட்டுரைகள் இன்னாரை இந்த இடத்தில் சந்தித்தேன் என்ற தகவலாகவோ  எங்கள் சந்திப்புகளில் நாங்கள் இதை எல்லாம் பேசிக்கொண்டோம் என்றோ எழுதப்படும்  வெறும் செய்தி சந்திப்புகளாக  இல்லை . இக்குறிப்புகளைத் தாண்டி, ஒவ்வொரு சந்திப்பும் அக்குறிப்பிட்ட ஆளுமையின் வெளிப்பாடாக மட்டுமின்றி அந்த ஆளுமைஇந்த ஜெயமோகன் என்ற ஆளுமையைஎப்படி எல்லாம் பாதித்திருக்கிறது, எதை எல்லாம் அவர் தன் சந்திப்புகளின் ஊடாக கண்டார் என்பதை இப்புத்தகம் ஆவணப்படுத்தி இருப்பது இக்கட்டுரைகளின் தனிச்சிறப்பு.

சந்திப்புகளும்சந்திப்புகளின்பாதிப்புகளும்ஒவ்வொருகட்டுரையிலும்நேரடியாகவும்மறைமுகமாகவும்வெளிப்படுகின்றன, ஒரு தேர்ந்த வாசகன் அதை மிகச் சரியாக வாசிக்கவும் முடிகிறது. சில கட்டுரைகளின் ஜெ.மோ அதை தன் சுயவெளியாக அதை முன்வைக்கவும் தயங்கவில்லை. ‘கலகர்கட்டுரையில் பி.கெ. பாலகிருஷ்ணனின் எழுத்துமுறையை தன் எழுத்தில் காண்பதை வெளிப்படுத்துகிறார்

எழுத்தாளனின் அரசியல் என்று நான் இன்று சொல்லும் வரியை பாலகிருஷ்ணனின் ஆளுமையிலிருந்தே உருவாக்கிக் கொண்டேன்.” (பக் 104)

இன்னும் எழுத்தாளன் + அரசியல் குறித்த சர்ச்சைக்குரிய எழுத்தை பி.கெ. பாலகிருஷ்ணனின் உரையாடலில் இருந்தே முன்மொழிகிறார்

சுந்தர ராமசாமி அரசியல் பேசவில்லை என்பதில் பால கிருஷ்ணனுக்கு வருத்தம்அரசியலை பேசாமலிருக்கும் எழுத்தாளன் தன் எழுத்துகளை விமர்சனங்களிலுருந்து பாதுகாக்க விரும்புகிறான். அது ஒரு கோழைத்தனமேஎன்பார். எழுத்தாளன் அரசியல்  நிபுணனோ செயல்வீரனோ அல்ல. ஆனால் பிறர் சொல்லமுடியாத ஒன்றை அவன் சொல்லிவிட முடியும். அவன் பேசாவிட்டால் அந்த இடம் காலியாக இருக்கும் என்பது பாலகிருஷ்ணனின் தரப்பு. (பக் 105)

எழுத்தாளர்க. நா. சுவை சந்திக்கிறார். அவர் எதிர்கொண்ட விமர்சனங்கள், அந்த விமர்சனங்களை அவர் எதிர்கொண்ட விதம் எல்லாமும் சேர்ந்து ஜெ.மோ என்ற இளைஞனை என்ன செய்திருக்கும்

என்னுள் இருந்த சுய அடையாளம் தேடி பரிதவித்த அந்த இளைஞன் மன எழுச்சி தாளாமல் கண்ணீர் மல்கினான்ஞானம் மட்டுமே தன் சுயமாகக் கொண்டு இப்படித் தலை நிமிர்ந்து நடக்க முடிந்தால், இந்த உலகின் பணம், அதிகாரம், அற்ப வேட்கைகள் அனைத்தையும் இப்படிக் காலடிவைத்து இலகுவாகத் தாண்ட முடிந்தால் மட்டுமே நான் வாழ்ந்தவன், வென்றவன் என்று எண்ணிக் கொண்டேன்”  (பக் 71) ஜெ.மோ என்ற சுயம் தன் பயணத்தில் எதை எல்லாம் தாண்ட வேண்டும் என்பதற்கான வெளிச்சம் கிடைக்கிறது

லாரி பேக்கரின்பேக்கர் பாணிவீடுகள் பிரபலமானவை. பேக்கர் காந்தியைப் பற்றி சொல்லி இருப்பது நாம் கவனிக்க வேண்டியதும் காந்தியைப் புரிந்து கொள்ள இன்னொரு பக்கத்தை திறப்பதாகவும் இருக்கிறதுநான் நேருவையும் படேலையும் கூட சந்தித்திருக்கிறேன். ஒரு மேலை நாட்டானுக்கு மிக நெருக்கமாக ஆகக்கூடிய  நுண்ணிய பழக்கங்கள் கொண்டவர் காந்திதான்பேக்கர் சிரித்துக்கொண்டே சொன்னார் என்று போகிற போக்கில் ஒரு டார்ச் லைட் வெளிச்சத்தைக் காட்டுகிறார்பாலியும்பிராகிருதமும் தெரிந்த ஒருதமிழர் ஜெகன்னாதராஜாஇராசபாளையம் .. எனக்குப் புதியத்தகவல்

தன் நூல்வெளியீட்டு விழாவுக்கு லா..ரா வரவில்லை என்பதை ஒரு சிறுகதை போல யாருக்கும் வலிக்காமல் சொல்லிவிடுகிறார் ஜெ.மோ. வாசகனுக்கும் சில சாய்வு நாற்காலிகள் ஆடுகின்றனசோதிப்பிரகாசம் குறித்து ஜெ.மோ எழுத்து இன்னும் சமூகவியல் அரசியல் பக்கங்களில் ஆய்வுக்குரியது. நிலப்பிரபுத்துவ யுகத்தின் விழுமியங்கள் எதுவும் முதலாளித்துவ யுகத்தில் இல்லை’  என்றார் சோதிப்பிரகாசம். (பக் 182)  

நிலப்பிரபுத்துவ அடிமைகள் கூட மிருகங்களாக நடத்தப்பட்டாலும் மிருகங்கள் உயிருள்ளவை. இயற்கையின் கூறுகள் கொண்டவை. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாளி எந்திரத்தின் ஒரு பகுதி ..! எந்திரங்களின் பாகங்களிடம் உயிரிகளின் எந்த குணாதிசயங்களையும் எதிர்ப்பார்க்க முடியாது. முதலாளித்துவ சமூகத்தில் மனிதம் எப்படி மரணித்த து, மனிதனாக வாழ வேண்டியவன் எப்படி ஒரு நுகர்ப்பொருள் எந்திரமாக மாறி இருக்கிறான் என்பதை இந்தப் பக்கங்களிலிருந்து எடுத்துச் செல்ல முடியும்அழகியராவணன்மலையாள நாடக மேடைகளில் வலம் வரும் ராவணன் கதை. கலா மண்டலம் கிருஷ்ணன் நாயர் முதலிய மகா நடிகர்களால் மகத்துவமாக்கப்பட்ட கதாபாத்திரம்  என்பார் ஜெ.மோ

கடலடியில் கட்டுரை முன்வைக்கும் சில வரலாற்றுத் தகவல்களுடன் முரண்படுகிறேன். ‘இந்திய வரலாற்றில் அரசியலிலும் பொதுவாழ்க்கையிலும் பெண்களுக்கு கெளரவமான ஒரு நுழைவாயிலை திறந்த து காந்திய இயக்கம்தான் “ (பக் 16) என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பின்னர் உருவான கம்யூனிச இயக்கமும் திராவிட இயக்கமும் பெண்களுக்கான இடத்தை  மிகமிகக் குறைவாகவே அளித்தன. அந்த தரப்புகளிலிருந்து பெண் ஆளுமைகளை மிக அரிதாகவே காணமுடியும்” (பக் 17)  –என்பது வரலாற்றின் இன்னொரு பக்கத்தை குறைத்து மதிப்பிடுவதாகவே அமைகிறது. சமுக அரசியலில் இந்த இரு இயக்கங்கள் பெண்களின் ஏற்படுத்திய பாதிப்புகளும் அதன் விளைவுகளும் காந்திய பெண் வெளிக்கு நிகரானவை. இக்கருத்து விவாதத்திற்குரியதுதான் ஜெ.மோ

பல ஆளுமைகளின் சந்திப்புகளைக் கொண்ட இத்தொகுப்பில் பெண்கள்?! ஓ இருக்கிறார்களேஅறைக்குள் ஒருபெண் ஆக சுகந்தி . ஆனால் சுகந்தி என்ற  கவிஞரைச் சந்திக்க செல்லவில்லை ஜெ.மோ. என்ன செய்வது ? எழுத்துலகம் ஆளுமைகள் எல்லாமே ஆண்களுக்கானதுதான். ஜெ. மோ மட்டும் விதிவிலக்கா என்ன! திருப்பத்தூரில் சுப்ர பாரதி மணியனும் ஜெ.மோவும் தபால்துறை ஊழியர்களாக இருந்த காரணத்தால் ஜெ.மோ. அவர்கள் சுகந்தி என்ற பெண்ணை , சுப்ர பாரதிமணியனின் மனைவியாக அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் அவளும் ஜெ.மோ.வின் இவர்களும் பக்கத்தில் இடம்பிடித்தவள் ஆகிறாள்

இரண்டாவதாக  இன்னொரு பெண் எழுத்தையும் ஜெ.மோ குறிப்பிடுகிறார். அப்பெண்ணும்  கீதா ஹிரண்யன் ஜெ.மோவின் குரு நாதர் ஆற்றூர் ரவிவர்மா அறிமுகப்படுத்திய கீதா என்பது இன்னொரு கூடுதல் தகவலாக மட்டும் வாசித்துக் கடந்து செல்ல முடியாது.

ஆண் எழுத்துகள் ஆண்  ஆளுமைகள் ஜெ.மோ சந்தித்த அவரைப் பாதித்த  ஆளுமைகள் என்பதை இக்கட்டுரைகள் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுத்துகின்றன. சந்திப்புகளின்வெளி ஆண்களுக்கானது ஜெ.மோ. அந்த வெளி இன்னும் பெண்களுக்கானதாக திறக்கப்படவில்லை. ஒரு பெண்ணின் அறிமுகம் கூட அவள் தனிப்பட்ட எழுத்துமுகமாக இச்சமூகத்தில் நிகழவே இல்லை. அப்படி நிகழ்வதில் எதோ ஒரு மனத்தடை தொடர்ந்து செயல்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் என் போன்றவர்களுக்கு சந்திப்புகள் என்பது கனவு. அக்கனவை வசப்படுத்த பல ஆண்டுகள் காத்திருப்பும்  விருப்பங்களை காலத்தை வென்று வெளிப்படுத்தும் போதும்நேரமில்லைஎன்று அப்பெண்ணின் ஆதர்ச எழுத்தாளர் நிராகரிப்பதும் எங்களுக்கு பழகிவிட்டது.

இவர்கள் இருந்தார்கள்என்ற சந்திப்பு வெளி பெண்களுக்கு இல்லை என்பதை எதோ ஒரு வகையில் இப்புத்தக வாசிப்பு ஏற்படுத்திய இன்னொரு பாதிப்பாக சொல்லத்தான் வேண்டும். சொல்ல வேண்டியவைகளை சொல்லாமல் எப்படி கடந்துச் செல்வது?! இவர்களும் இருக்கிறார்கள் ஜெ.மோ.

அன்புடன்

புதியமாதவி

மும்பை.

அன்புள்ள புதியமாதவி,

இவர்கள் இருந்தார்கள் என்னும் நூல் பற்றிய உங்கள் கருத்துக்களைக் கண்டேன். உங்கள் எண்ணங்களை, மாற்று எண்ணங்களை எழுதியிருந்தீர்கள். உங்கள் பார்வை மேல் மதிப்புள்ளவன், அவற்றைப் பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

ஏன் பெண்கள் அத்தொகுதியில் அதிகமாக இல்லை என்ற கேள்வியை எழுப்பியிருந்தீர்கள். அத்தொகுதி பெரும்பாலும் அஞ்சலிக்கட்டுரைகளின் தொகுப்பு. மறைந்தவர்கள் பற்றி மட்டுமே அதில் உள்ளது. நான் அணுகியறிந்தவர்களில் மறைந்த இலக்கியசிந்தனைக்கள ஆளுமைகளை பற்றி அவ்வப்போது எழுதியவற்றை அதில் தொகுத்துள்ளேன். 

ஆனால் வெறுமே புகழ்மொழிகள், சம்பிரதாய இரங்கல்கள் என எழுதுவது என் வழக்கம் அல்ல.அவ்வாறு எழுத்தாளன் எழுதலாகாது. வாசகனுக்கு அதில் அறிய, உணர ஒன்றுமில்லை. ஆகவே அனுபவக்குறிப்புகளாக, புனைவுக்கு அருகே வரும் மொழியில் எழுதினேன். ஆகவேதான் காலம் கடந்தும் ஆளுமைச்சித்திரங்களாக மதிப்புள்ளவையாக அக்கட்டுரைகள் நிலைகொள்கின்றன. 

மறைந்தவர்கள் பற்றி எழுதப்பட்டவை என்பதனால் இயல்பாகவே ஒரு தற்செயல்தன்மை அத்தொகுதியில் உள்ளது. அதில் ஒரு சமபங்குத் தன்மையை நான் உருவாக்கிக்கொள்ள முடியாது அல்லவா?

ஆனால் உண்மையிலேயே ஒரு சிக்கல் உண்டு. நான் அறிந்த பெண்படைப்பாளிகள், பெண் முன்னோடிகள் மிகச்சிலரே. அதற்கான காரணத்தை என் இயல்பில் தேடுவதும் குற்றம்சாட்டுவதும் மிக எளிது. அதைக் கடந்து நோக்கினால் உண்மைகள் பல புலப்படக்கூடும்.

ஒன்று, தமிழில் நவீன இலக்கிய முன்னோடிகளின் வரிசையில் ஐயமற முன்வைக்கத்தக்க பெண் படைப்பாளிகள் எவர்? மிக விரிவாக யோசித்தால்கூட ஆர்.சூடாமணி ஒருவர்தான். அடுத்த தலைமுறையில் அம்பை. ஆர்.சூடாமணியுடன் எனக்குக் கடிதத் தொடர்பு இருந்தது. அவருடைய ஒரு நூலிலேயே என் கடிதமொன்று இடம்பெற்றதாக நினைவு. ஆனால் நேரில் சந்தித்ததில்லை. அக்கட்டுரைகளை எழுதும்போது அவர் உயிருடனிருந்தார்.

அம்பையை இருமுறை சந்தித்துள்ளேன். எனக்கு அம்பையின் சிறுகதைகள் சில பிடிக்கும். ஆளுமை என்ற வகையில் நான் சந்தித்தபோது முதிர்ச்சியற்ற, முன்முடிவுகளும் கசப்புகளும் மண்டிய ஒருவராகவே எனக்கு தோன்றினார். எழுத ஏதுமில்லை.

இந்திய இலக்கியத்தின் பெரும் பெண்படைப்பாளிகள் என நான் நினைப்பவர்கள் குர்ரதுலைன் ஹைதர், ஆஷாபூர்ணா தேவி. ஆஷாபூர்ணா தேவியைச் சந்திக்க பலமுறை முயன்றேன். அவர் நோயுற்றிருந்தமையால் இயலவில்லை. 

குர்ரதுலைன் ஹைதரை சந்தித்தே ஆகவேண்டும் என விரும்பினேன். 1993ல் எனக்கு சன்ஸ்கிருதி சம்மான் விருது கிடைத்தபோது எவர் அதை அளிக்க விரும்புகிறீர்கள் என என்னிடம் ஜெயின் அமைப்பு கேட்டது. நான் இன்னொரு பெயரைச் சொல்லவில்லை. குர்ரதுல்ஐன் ஹைதர் அப்போது நோயுற்றிருந்தார். எனக்காக அவரை வரவழைத்தனர். ஆனால் அரைமணிநேரம் உடனிருக்க முடிந்தது. அவ்வளவுதான் நினைவு.ஓர் அஞ்சலிக்குறிப்பு எழுதினேன். 

எனக்கு அணுக்கமாக இருந்தவர் மாதவிக்குட்டி (கமலா தாஸ்) தமிழில் அவருடைய முதல் தொகுதி என் முயற்சியால், என் முன்னுரையுடன் வெளிவந்தது. பின்னர் ஒரு தனிப்பட்ட பிரச்சினையால் அவருடன் பூசல் உருவானது. 

அணுக்கமான இன்னொருவர் சுகதகுமாரி. வெண்முரசு நூல்களில் ஒன்று அவருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது. நேரில் சந்தித்துக்கொண்டும் இருந்தேன். அவருடைய சகோதரி கவிஞர் சுஜாதாவும் எனக்கு அணுக்கமானவர். ஆனால் இக்கட்டுரைகள் எழுதும் காலத்தில் அவர்கள் உயிருடனிருந்தனர். இன்றைய மலையாள எழுத்தாளர்களில் அணுக்கமானவர், மதிப்புக்குரியவர் சாறா ஜோசப்.  

ஆனால் நீங்கள் சொல்வதுபோல ஓர் இளம் ஆண் எழுத்தாளன் தேடிப்போய்ச் சந்திக்குமிடத்தில் பெண் எழுத்தாளர்கள் இல்லை. இயல்பாக அச்சந்திப்பு நிகழமுடியாது. 1992ல் அஷிதா என்னும் மலையாளப் பெண் எழுத்தாளரை திருவனந்தபுரத்தில் தேடிச்சென்று சந்தித்தேன். அவர் என்னிடம் இரண்டு நிமிடங்களுக்கு மேல் பேச விரும்பவில்லை. 

பின்னர் அறிந்தேன், அவர் எல்லா ஆண் வாசகர்கள், சக எழுத்தாளர்களிடமும் அந்த தொலைவைப் பேணினார் என. காரணம், மிக எளிதில் அவதூறுகள் உருவாகும் என அஞ்சினார். அது இன்றும்கூட ஓரளவு உண்மையான சூழல்தான். அதன்பின் அறுபது வயதுக்குக் குறைவான எந்தப் பெண் எழுத்தாளரையும் சந்திக்க முயலக்கூடாது என எனக்கே ஆணையிட்டுக்கொண்டேன்.

ஆனால் இன்னொன்றை நான் கேட்டுக்கொள்வேன். சரி, ஆண்களுக்கு பெண் எழுத்தாளர்களை அணுகுவதில் இத்தனை சிக்கல் உள்ளது. பெண்களுக்கு என்ன? ஏன் தமிழிலுள்ள பெண் எழுத்தாளர்களை பெண் வாசகர்கள், அடுத்த தலைமுறை பெண் எழுத்தாளர்கள் தேடிச்சென்று சந்திக்கலாகாது? ஏன் அவர்களை பேட்டி எடுக்கக்கூடாது? அனுபவங்களை ஆவணப்படுத்தக்கூடாது?  அறியப்படாத, ஏற்கப்படாத பெண் ஆளுமைகள் உண்டு என்றால் ஏன் அவர்களைப் பற்றி விரிவான ஆய்வுக்கட்டுரைகளை எழுதி நிறுவக்கூடாது? ஏன் எவரும் அதை செய்யவில்லை?

ஜெ  

 

முந்தைய கட்டுரைவீரபத்திரர்
அடுத்த கட்டுரைசுயமுன்னேற்றமா?