“எனக்கு என்னுடைய மொழியில்தான் சொல்ல வரும். கொஞ்சம் பாசாங்கு கலந்த மொழிதான். வேறு வழியில்லை. அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்யும்போது ஏற்படும் நிர்ப்பந்தங்கள் வேறு மாதிரியானவை”
யுவனின் சிறுகதைகள் குறித்த எனது வாசிப்பனுபவத்தை எழுத்தில் பதிவு செய்ய மேலே குறிப்பிட்டுள்ள யுவனின் வரிகளோடு தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். யுவன் சந்திரசேகர் சிறுகதைகள், நீர்ப்பறவைகளின் தியானம், கடலில் எறிந்தவை ஆகிய மூன்று தொகுப்புகளிலிருந்து நான் வாசித்த மொத்தம் அறுபது சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு எனது வாசகப்பார்வையை முன்வைக்கிறேன்.
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் மூன்று தொகுப்புகளிலும் அதிகமாக இடம் பெற்றுள்ள ஒரு சொல் ‘கதை’. நாடி நரம்பெல்லாம் கதை ஊறிப்போன படைப்பாளி என யுவனைச் சொல்லலாம். கதைக்குள் கதை, கதைக்குள் கதை என விரியும் அவரது சிறுகதை உலகத்தை அறுபது என்ற எண்ணுக்குள் சுருக்குவது சரியான அணுகுமுறையாக இருக்காது. அறுபது கதைகளுக்குள் தோராயமாக முன்னூறு கதைகள் இருக்கலாம். முன்னூறு கதைகளையும் ஒன்றாக்கி ஒரு நாவலாகவோ அல்லது சில குறுநாவல்களாகவோ வாசிக்கவும் ஒரு வாசகனுக்கு இடமிருக்கிறது.
மரபான சிறுகதை வாசிப்பிற்குப் பழக்கப்பட்ட ஒரு வாசகன் முதல் முதலாக யுவனின் சிறுகதைகளை எதிர்கொள்கையில் எரிச்சலையும் திகைப்பையும் ஒருசேர அடைய வாய்ப்பிருக்கிறது. எந்தவொரு மையமும் இல்லாமல், தொகுத்துக்கொள்ள இடமளிக்காத வகையில் எழுதப்பட்டுள்ள இக்கதைகள் நிச்சயமாக வாசகனை வாசிப்பிலிருந்து வெளித்தள்ளவே முயலும். ஆனால் அதையும் மீறி வாசகனிடம் ஒருவித திகைப்பை ஏற்படுத்தி தொடர் வாசிப்பைச் சாத்தியப்படுத்துபவையாக யுவனின் சுவாரஸ்யமான மொழியும் நுண்விவரணைகளும் இருக்கின்றன.
யுவனி்ன் கதைகளை நினைவு வைத்துக்கொள்வதென்பது இயலாத காரியமாகத்தான் தோன்றுகிறது, ஆனால் வாசிக்கையில் அவை தரும் அனுபவம் அலாதியானது. வடை சுட்ட பாட்டியோடு தொடங்கிய தனது குழந்தைப் பருவத்தையும் வேதாளத்தை முதுகில் சுமந்த விக்ரமாதித்தனோடு தொடர்ந்த தனது இளமைப்பருவத்தையும் மீட்டெடுத்து தரும் இக்கதைகளை வாசிக்க, வாசிக்க வாசகனுக்கு யுவனின் புனைவுலகம் மிகவும் நெருக்கமானதாகிவிடுகிறது.
தொடர்ச்சியாக அவரது கதை உலகிற்குள் உழல்கையில் வாழ்வே வெறும் புனைவுதானா என்ற கேள்வி எழும்புகிறது. யார் யாரோ எழுதிய, எழுதிக்கொண்டிருக்கிற, எழுதப்போகும் கதைகளில் நான் பலவிதமான கதாபாத்திரங்களாக இருக்கிறேன் என்பதற்கு மேல் இந்த வாழ்விற்கு பொருள் இல்லையோ என்ற அபத்த சிந்தனை ஒன்று ஓடி மறைகிறது. அறிதல்கள், அனுபவங்கள், அடையாளங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து தனது வாழ்வின் சாராம்சத்தைத் தொகுத்துக்கொள்ள முனையும் ஒருவனிடம் “நீ ஒரு கதாபாத்திரம், உன் வாழ்வு ஒரு புனைவு, இதற்கு மேல் அலட்டிக்கொள்ள எதுவுமில்லை” என்று சுட்டிக்காட்டி யுவன் தொந்தரவு செய்கிறார்
*
தான் கேட்ட, பார்த்த, படித்த, அனுபவித்த, கனவு கண்ட அனைத்தையும் குழந்தைகள் பில்டிங் பிளாக்ஸ் விளையாடுவது போல் அடுக்கியும் கலைத்தும் யுவன் விளையாட்டு காண்பிக்கிறார். அந்த விளையாட்டில் பங்கேற்க நம்மையும் அழைக்கிறார். அவர் அடுக்கியதைக் கலைத்து வேறொன்றாக அடுக்கி கொள்ள வாய்ப்பளிக்கிறார். இந்த விளையாட்டை விளையாட விருப்பமும் திராணியும் உள்ள வாசகனுக்கு அவரது கதைகளில் குழப்பமே ஏற்படுவதில்லை.
அவரது கதைகளைக் கொண்டு ஒரு வாசகியாக நான் ஆடிய விளையாட்டுகளை யுவனின் பாணியிலேயே பட்டியலிடலாமென்று எண்ணுகிறேன். இப்படி பட்டியலிடுவதற்கு காரணம் எனது வாசிப்பு மேதமையைக் காட்டுவதோ அல்லது எனது விளையாட்டுகள் மட்டுமே சரியானவை என்று நிறுவுவதோ கிடையாது. யுவனின் கதைகளை முதல் முதலாக எதிர்கொள்கையில் என்னைப் போலவே குழப்பமடைந்து புரி்ந்துகொள்ளத் தடுமாறும் பிற வாசகர்களுக்கு ஓரளவு இவை பயனளிக்கலாமென்ற நம்பிக்கையும் அவர்களும் என்னைப் போலவே விளையாட வேண்டுமென்ற விருப்பமும்தான் காரணங்களாகும்.
விளையாட்டு ஒன்று:
‘தாயம்மாப் பாட்டியின் நாற்பத்தோரு கதைகள்’ சிறுகதையில் பாட்டி சொன்னதாக கிருஷ்ணன் சொல்லும் ஏழாவது கதை இது:
“விசாலட்சியம்மன் கோயில் சந்நிதிக் கதவை அய்யா பட்டன் போய்த் திறக்கிறான், கதவிலே இருந்த மணிகளிலே ஒண்ணைக் காணோம். கோயில் ஆபிஸருக்கு என்ன பதில் சொல்றதுன்னு கைக் காசைப் போட்டு புது மணி வாங்கிக் கொண்டு வந்து மாட்டும்போது ஆபீஸர் பாத்துட்டான். இப்படித்தான் அம்மனோட நகையெல்லாம் மாத்தினியோன்னு பட்டனை வேலையை விட்டுத் தூக்கிட்டான் ஆபிஸர்”
பாட்டி சொன்னதாக கிருஷ்ணன் சொல்லும் இருபத்தோராவது கதை இது:
“ராத்திரிக் காத்தெடுத்தாப் போதும். சலங்கைச் சத்தம் கேட்க ஆரம்பிச்சிரும். எங்கேயிருந்து வருதுன்னு யாருக்கும் தெரியலே. குறளிப் பேய்ன்னான் ஒருத்தன். ராத்திரியில் ஒண்ணுக்கு எழுந்து வந்தப்போ சிவப்பா ரெண்டு கண்ணு மட்டும் தெரிஞ்சதுன்னான் ரைஸ்மில்காரன். மாடு நிலைகொள்ள மாட்டேங்குதுன்னான் முத்துக்கிருஷ்ணன். வாசல்ல வேப்பிலைக் கொத்தைக் கட்டி வையுங்கோன்னு எல்லாத் தெருவிலேயும் போய்ச் சொல்லிட்டு வந்தான் குப்பு சாஸ்திரி.
இப்படியே ஒரு மாசம் போலப் போயிருக்கும். ஒருநாள் அடைமழை. விசாலட்சியம்மன் கோயில் வெளிப் பிரகாரத்திலே இருந்த வில்வமரம் அப்படியே வேரோட சரிஞ்சாச்சு. மழை விட்டதும் மரத்தைச் சுத்தி ஜனங்கள். கோயில் காவக்கார இருளப்பன் மரக் கிளையை ஒண்ணொண்ணா வெட்டிப்போடும்போது ஒரு கிளையிலே சின்ன மணி ஒண்ணு கட்டியிருக்கு. கோயில் கதவிலே காணாமல் போன மணி”
ஒரு சிறுகதைக்குள் இருக்கும் இந்த இரண்டு குட்டிக் கதைகளும் தனித்தனியாக ஒரு வாசிப்பனுபவத்தையும் இணையும்போது வேறொரு வாசிப்பனுபவத்தையும் அளிக்கின்றன.
விளையாட்டு இரண்டு:
ஒரு சிறுகதைக்குள் இருக்கும் கதைகளை இணைப்பது போல் இரண்டு வெவ்வேறு சிறுகதைகளுக்குள் இருக்கும் கதைகளை இணைத்து வாசித்துப் பார்க்கலாம்.
உதாரணத்திற்கு ‘தாயம்மாப் பாட்டியின் நாற்பத்தோரு கதைகள்’ சிறுகதையில் பாட்டி சொன்னதாக கிருஷ்ணன் சொல்லும் எட்டாவது கதையில் தனது அப்பாவின் திவசத்தன்று வீட்டுக்குள் வந்துவிடும் காகத்தை கம்பால் அடித்து விரட்டும் ரங்கநாதனை ‘உள்ளோசை கேட்பவர்கள்’ சிறுகதையிலுள்ள காக்கைப் பழி சுமந்த குமாஸ்தாவோடு இணைக்கலாம். அப்படி வாசிக்கையில் ‘தலைமுறை சாபம்’ என்பதன் அடிப்படையில் ஒரு புதிய புனைகதையை வாசகன் உருவாக்க இயலும்.
விளையாட்டு மூன்று:
இது வேறு மாதிரியான விளையாட்டு. ‘காற்புள்ளி’ சிறுகதையில் வரும் சித்தப்பாவின் கதையையும் கதைக்குள் கதையாக சித்தப்பா சொல்லும் வேடன் கதையையும் காற்புள்ளியோடு நிறுத்தியிருக்கிறார் யுவன். காற்புள்ளியை முற்றுப்புள்ளியாக மாற்றும் விளையாட்டை வாசகன் தனது வாசிப்பில் நிகழ்த்திப் பார்க்கலாம்.
இதே போல் ‘தாயம்மாப் பாட்டியின் நாற்பத்தோரு கதைகள்’ சிறுகதையில் பாட்டி சொன்னதாக கிருஷ்ணன் நமக்குச் சொல்வது நாற்பது கதைகள்தான். பாட்டி சொல்லி கிருஷ்ணன் சொல்ல மறந்த அந்த நாற்பத்தோராவது கதையை நாம்தான் புனைய வேண்டும். சொல்லப்பட்ட நாற்பது கதைகளின் அடிப்படையில் கிருஷ்ணனின் புனைவு அம்சத்தை விலக்கி நாம் புனையும் அக்கதையில் தாயம்மா பாட்டி முற்றிலும் வேறொருத்தியாக இருக்கவும் வாயப்பிருக்கிறது.
விளையாட்டு நான்கு:
யுவன் தனது கதைகளில் கிருஷ்ணன் என்ற புனைவு ஆளுமையாகத் தன்னை முன்வைக்கிறார். வாழ்வில் தான் சந்திக்க நேர்ந்த மனிதர்களின் நினைவுகளை வரிசையாக கோர்க்காமல் ஞாபக அடுக்கிலிருந்து அவை எப்போதெல்லாம் எழுந்து வருகின்றனவோ அப்போதெல்லாம் கிருஷ்ணன் வழியாகப் பதிவு செய்கிறார். அந்த மனிதர்களின் புறத்தோற்றம், இயல்பு, குரல், மணம் ஆகியவை கிருஷ்ணனின் ஞாபக அடுக்குகளை கிளர்த்தக்கூடிய காரணிகளாக விளங்குகின்றன.
யுவனின் கதை உலகில் விரவியும் சிதறியும் கிடக்கும் இந்த மனிதர்களின் நினைவுகளை வாசகன் ஒன்றாகத் தொகுத்தால் தனிமனிதர்களின் கதைகளாக அவை உருமாறும். உதாரணத்திற்கு விக்கோ டர்மரிக் மணம் கிருஷ்ணனுக்குள் கிளர்த்திவிடும் அனுவின் நினைவுகளை ஒன்றாகக் கோர்த்தால் அவளைப் பற்றிய ஒரு தனிகதையை உருவாக்கிவிடலாம்.
விளையாட்டு ஐந்து:
“உளப் பிறழ்வு என்பது நரம்பியல் போதாமை என்று அறிவியல் கருதுகிறது. சூழலின் தாக்கமும், மரபணுக்களும் விளைவிக்கும் அகநிலையே அது என்பது சமூகவியலின் முடிவு. இவை இரண்டுமே கிடையாது. அது ஒரு ஆன்மிக சமாசாரம்”
யுவனின் கதைகளில் உளப் பிறழ்வு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதன் அடிப்படையில் கதைகளைத் தொகுத்தால் உளவியல் குறுநாவல் ஒன்று உருவாகலாம். ‘இடம் பெயர்தல்’ சிறுகதையில் கறுப்பு உருவத்தின் நடனத்தைக் கண்டு அலறி மருத்துவரின் அறைக்குள் பாயும் கதை சொல்லி, ‘புலம் பெயர்ந்தவர்’ சிறுகதையில் தான் எழுத மறந்த காவிய நாயகி கூடலழகியைப் பார்த்த பிறகு அறையில் அடைக்கப்படும் கதை சொல்லி, ‘உள்ளோசை கேட்பவர்கள்’ சிறுகதையில் புறவுலகம் ஒருபோதும் கேட்கவியலாத குரல்களைக் கேட்கும் பிரமநாயகம் பிள்ளை ஆகியோரது உளவியலை தொகுத்துப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
விளையாட்டு ஆறு:
மரபார்ந்த சிறுகதை வாசிப்பைப் போல கதை தலைப்பின் வழியாக கதையை மேலதிகமாக உள்வாங்க இடமிருக்கிறது. உதாரணத்திற்கு ‘இரண்டே அறைகள் கொண்ட வீடு’ சிறுகதையைச் சொல்லலாம். இத்தலைப்பு பாண்டித்துரையின் வீட்டைக் குறிப்பதற்காக சொல்லப்பட்டிருந்தாலும் இரண்டு அறைகளிலும் ஒரே நேரத்தில் ஒரு மனிதனால் இருக்க முடியாதது போல பாண்டித்துரையின் தாயாரால் ஒரே நேரத்தில் இரண்டு காதல்களில் இருக்க முடியாத துயரத்தைச் சொல்வதாகப் புரிந்துகொள்ளலாம். வாழ்வும் இரண்டு அறைகள் கொண்ட வீடாகத்தான் இருக்கிறது. இதுவா அதுவா என்று கேட்கும் அதனிடம் என்ன பதில் சொல்வது என்று குழம்பித் தவிக்கும் மனிதர்களை அவர்களது தேர்வின் வழியாக ஒரு கணத்தில் புரட்டிப்போடுகிறது. இப்படியான ஓர் அர்த்தமும் அளிக்கலாம்.
விளையாட்டு ஏழு:
மரபார்ந்த சிறுகதை வாசிப்பைப் போல கதைகளுக்குள் வரும் குறிப்புகளைக் கொண்டு மேலதிகமாக கதையை நெருங்கலாம். ‘சுவர்ப்பேய்’ சிறுகதையில் செம்மண் குழைத்து வலுவாக கட்டப்பட்டாலும் தொடர்ந்து உடைந்து விழும் சுவரில் இருக்கும் பேயை அடக்க ஔவையாரின் பாட்டு தேவையாக இருப்பது போல் ராசு வாத்தியார் மனைவியின் உடலில் இருக்கும் பேயை அடக்கவும், மனதில் இருக்கும் பள்ளத்தை நிரப்பவும் ஒரு திருடனின் பலாத்காரம் தேவையாக இருக்கிறதென்று சொல்லலாம்.
இப்படியாக எண்ணற்ற விளையாட்டுகளை வாசகன் யுவனின் கதை உலகில் நிகழ்த்திப் பார்க்க இயலும். இதன் மூலம் சக விளையாட்டுக்காரரான யுவனின் தோள் மீது கைபோட்டுக்கொள்ள முடியும்.
யுவன் தனது புனைவுலகை ‘மாற்றுமெய்மை’ என்ற கருதுகோளோடு புரிந்துகொள்ள வேண்டுமென்கிறார். இந்தக் கருதுகோளை அவர் தனது கதைகளில் தொடர்ந்து முன்வைக்கிறார்.
“நிஜமாகவே நம்மை உந்துவது எது என்று யார்தான் சொல்லமுடியும்? மனித செயல்பாடுகள் அனைத்துக்கும் வயிறுதான் காரணம் என்று ஒருத்தர் சொல்கிறார். இல்லை பிறப்புறுப்புதான் காரணம் என்கிறார் இன்னொருவர். இவை இரண்டும் இருப்பதில் பிரச்சனை இல்லை. இவற்றின் ஆசைதான் காரணம் என்கிறார் மற்றொருவர். அன்புதான் காரணம் என்று அடித்துச்சொல்கிறார் வேறு ஒருத்தர். எந்தவிதத்திலும் நிர்ணயம் செய்ய முடியாத உள்ளுணர்வுதான் காரணம் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.”
மேலே சொன்ன வரியின் வழியாக மாற்றுமெய்மையை சரியாக அறிய உதவும் கருவியாக விளங்கும் உள்ளுணர்வின் முக்கியத்துவத்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.
“புலன்கள் ஊனமுறாத காரணத்தால் அன்பின் கூர்மையை இழந்தவர்கள்”
யுவனின் சிறுகதைகளை வாசித்த சமயத்தில் சிங்கப்பூரில் வின்சென்ட் வான்காவின் ஓவியக் கண்காட்சியைப் பார்க்க வாய்ப்பு கிட்டியது. அங்கு வான்காவின் நிறக்குருடு பற்றி அறிய நேர்ந்தபோது மேலே உள்ள யுவனின் வரிதான் நினைவுக்கு வந்தது. புலன்கள் ஊனமுற்றால் அன்பு மட்டுமல்ல கலையும் கூர்மை அடையுமெனப் புரிந்துகொண்டேன்.
“வாத்துக்காலின் சவ்வு விரல்களை இணைப்பதாகவும் இணையவிடாமல் தடுப்பதாகவும் இருப்பது போல் புலன்களின் வழி அர்த்தமாகும் அனுபவமும் புறவுலகுடனான உறவை ஸ்தாபிப்பதாகவும், சிதைப்பதாகவும் இருப்பதை அறிந்தேன்”
“நமக்கு பார்க்க கிடைக்கிற உலகத்தில் நம்மை மாதிரி சாதாரண மனிதர்கள் பார்க்க இயலாத பல அடுக்குகள் படிந்திருக்கின்றன. ஒரு உலகத்தின் தர்க்கங்கள் அனைத்தும் இன்னொரு உலகத்தில் செல்லுபடியாவதில்லை”
மேலே உள்ள வரிகள் மூலம் புலன்கள் வழியாக நமக்கு கிடைக்கும் அறிதல்களின் சேகரத்திலிருந்து நாம் உருவாக்கிக்கொள்ளும் தர்க்கத்திற்கு உள்ள எல்லையைச் சுட்டிக்காட்டுகிறார்.
“செயல் என்பதே நாம் உண்டாக்கிக்கொள்ளும் பிம்பம் என்றும், தற்செயல் என்பதே இயல்பு, நகர்வு என்றும் சந்தேகப்பட வேண்டி வரும்”
யுவனின் கதைகளை வாசிக்கும் வாசகனுக்குள் மெல்ல உருவாகும் மேலே குறிப்பிட்டுள்ள சந்தேகம் வாசித்து முடிக்கையில் உறுதியாகி யுவனின் மாற்றுமெய்மையை மறுதலிக்கவோ புறக்கணிக்கவோ இயலாத வகையில் செய்துவிடுகிறது.
*
சிறுகதைகளின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலுமாக நம்மோடு கண்ணாமூச்சி ஆடும் யுவனின் கதைகளின் பலமாக நான் கருதுவது அவற்றின் கதை தன்மையைத்தான். சிதறியும் மரபான வடிவத்திலிருந்து திமிறியும் சொல்லப்படும் நினைவுக்குறிப்புகளும் தகவல்களும் அபுனைவாக மாறும் அபாயமிருப்பினும் கதை தன்மை என்கிற அந்த மாய இழையால் வாசிக்க உவப்பான, சுவாரஸ்யமான கதைக்கோர்வையாக உருமாறுகிறது. குட்டி பந்துகளை இரண்டு கைகளிலும் மாற்றி, மாற்றி தூக்கி போட்டு கீழே விழுந்து விடாமல் பிடித்து வித்தை (Ball Juggling) காட்டுபவர்களைப் போல் யுவன் கதைகளைக் கொண்டு நமக்கு வித்தை காட்டுகிறார்.
யுவனின் அறுபது இல்லை, இல்லை முன்னூறு கதைகளையும் வாசித்து முடித்தபோது எனக்குள் மாமல்லபுரத்திலுள்ள பகீரத தபசு புடைப்புச் சிற்பம்தான் எழுந்து வந்தது. அவரது கதைகளை வாசித்த சமயத்தில் சிற்ப படிமவியல் தொடர்பான இணைய வகுப்பில் நான் கலந்துகொண்டது இந்த தொடர்புறுத்தலுக்கான காரணமாக இருக்கலாம். மூன்று வகைகளில் தொடர்புறுத்தலைச் செய்யலாமென தோன்றுகிறது.
பகீரத தபசு புடைப்புச் சிற்பத்தை சிற்பம் என்று சொல்வது சரியாக இருக்காது. அது சிற்பத்தொகுதி. யுவனின் சிறுகதைகளையும் கதை என்று சொல்ல முடியாது. அவை கதைத்தொகுதிகள்.
பகீரத தபசு சிற்பத்தொகுதி குறித்து கதை எழுதுங்கள் என்று படைப்பாளிகளிடம் சொன்னால் பெரும்பாலானவர்கள் தொகுதியிலுள்ள அனைத்துச் சிற்பங்களையும் பகீரதன் என்ற மையக் கதாபாத்திரத்தை நோக்கி இழுத்து வர முயற்சிப்பார்கள். ஆனால் யுவன் மற்றவர்களிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்டு ஒவ்வொரு சிற்பத்திற்கும் தனிக்கதை ஒன்றை உருவாக்குவார். எப்படி இந்தச் சிற்பத்தொகுதிக்குள் நுழைந்தோம் என்று சிற்பங்களே சொல்வது போல் எழுதுவார். தான் பார்த்த மனிதர்களின் சாயல்களை சிற்பங்களின் மீது ஏற்றி புனைவாக்குவார். சிற்பங்கள் ஒவ்வொன்றும் அவரது கனவில் நிகழ்த்தும் மாயத்தை கதையாக்குவார். பெண் சிற்பத்தின் நிறைவேறாத காம விழைவைப் பேசுபோருளாகக் கொண்டு புதிய கதை ஒன்றைச் சொல்வார். தலையில்லாமல் முண்டமாக இருக்கும் சிற்பத்தைக் கொண்டு புராணத்தில் இல்லாத புராண கதை போன்ற ஒன்றைப் படைப்பார். விலங்குகளைக் கொண்டு குழந்தைகளுக்குப் பாட்டி சொல்வது போல் கதை எழுதுவார். துறவிகளின் சிற்பத்தைக் கொண்டு தற்காலச் சாமியார்களின் கதையை முன்வைப்பார். பூத கணங்கள் போலிருக்கும் குள்ள மனிதர்களின் சிற்பங்களை விக்கிரமாதித்யன் கதையில் வரும் பதுமைகள் போல் கதை சொல்ல வைப்பார். முனிவரின் சிற்பத்தை சங்ககாலப் புலவராக மாற்றி விளையாடுவார். இப்படியாக யுவன் எழுதும் கதைகளுக்கும் பகீரதனுக்கும் தொடர்பு இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். அது குறித்தெல்லாம் யுவன் கவலைப்படுவதில்லை. யுவன் எழுதக்கூடிய சாத்தியங்களாக என்னால் யூகித்த முடிந்தவை குறைவுதான். ஆனால் யுவன் இத்தொகுதியைக் கொண்டு ஆயிரக்கணக்கான கதைகளை எழுதும் வல்லமை கொண்ட தனித்துவமான ஒரே படைப்பாளி என்று உறுதியாகச் சொல்லலாம்.
தமிழ் நவீன இலக்கிய உலகில் பலவித எதிர்மறை விமர்சனங்களுக்கு மத்தியில் தொடர்ந்து வடிவமற்ற வடிவமாய் தனது புனைவுகளை முன்வைத்துக் கொண்டே இருக்கும் யுவனின் பகீரத பிரயத்தனத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
*
யுவனின் சிறுகதைகள் குறித்த எனது வாசிப்பனுபவக் கட்டுரையை கல்யாண்ஜியின் இந்தக் கவிதையோடுதான் முடிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
“நீ இருக்கும் திசைக்கு
முகம் காட்டி
உன் சதுரமான
எதிர்பார்ப்பின் மேல்
பூக்காது தொட்டிப்பூ
பூப்பூத்தல் அது இஷ்டம்
போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்”
தன் இஷ்டத்துக்கு பூத்துக்கொண்டிருக்கும் யுவனுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருப்பதில் ஒரு வாசகியாக பெரும் உவகை அடைகிறேன். ஆர்.சந்திரசேகரன், alias யுவன் சந்திரசேகர், alias எம்.யுவன், alias ஆடிக் கிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
அழகுநிலா சிங்கப்பூர்