நமது சந்திப்பு முடிந்து வாழப்பாடி நண்பர்களுடன் ஊர் திரும்பியது மேலும் இனிய அனுபவமாக அமைந்தது. நண்பர் விசு உள்ளிட்ட வாழப்பாடி நண்பர்களை முன்பே அறிவேன் எனினும் அவர்கள் நெடுநாள் விருப்பப்படி அவர்களுடன் இலக்கியம் உரையாடியபடி பயணித்து, அவர்களுடன் இரவு உணவு முடித்து விடை பெறுவது இதுவே முதல் முறை.
நண்பர்கள் தங்கள் கடும் லெளகீக வணிக பணிகள் இடையே உங்கள் எழுத்துகளை கண்டு கொண்டதே பெரிய ஆசுவாசம் என்று சொல்வார்கள். அதிலிருந்து அவர்கள் பெற்றவை பல.தங்கள் விசேஷங்களுக்கு செல்லும் போது கூட புத்தகங்களை பரிசளிப்பது உள்ளிட்ட பல மாற்றங்கள் அவர்கள் வசம். விஷ்ணுபுரம் விழாவுக்கு இயன்ற தொகையை நன்கொடை அளிப்பதும் அதில் ஒன்று. இம்முறை விருதுத் தொகை கூடிவிட்டதால் தங்கள் கொடையையும் இரட்டிப்பாக்கி விட்டனர். (விக்கி அண்ணாச்சிக்கு குடுத்தப்பவே விருது தொகையை உயர்த்தி இருக்கலாம் என்றார் ஒரு நண்பர்). இப்படிப் பலரை அறிவேன்.
உதாரணத்துக்கு திருப்பூரை சேர்ந்த பிரவீணா என்ற வாசகி. தனது லெளகீக உலகம் அன்றி தீவிர இலக்கியம் உட்பட வேறு எதுவும் அறியாதவர். எப்படியோ தயக்கத்தை உதறி தளத்தின் எண் வழியே என்னை தொடர்பு கொண்டு மகாபாரத நாவல் குறித்த சந்தேகம் கேட்டார்.
அங்கே துவங்கி என்னையே தினசரி இலக்கிய சந்தேக நிவர்த்தி வழிகாட்டி எனக் கொண்டு மொத்த வெண் முரசு தொகுதிகளையும் இணையத்தில் வைத்தே வாசித்து முடித்தார். இத்தனை பெரிய விஷயம் முற்றிலும் இலவசம் என்பதை அவரால் நம்பவே இயல வில்லை. மனது பொறாமல் பண்டிகை விழாக்களுக்கு உணவு உடை என்று தான் செய்யும் தனது செலவை நிறுத்தி அந்த தொகையை விஷ்ணுபுரம் விழாவுக்கு நன்கொடை செய்தார்.
அவர் கணவருக்கு சில உடல் நல சிக்கல் மீது ஆலோசனை கேட்டார். நான் யோகா குருஜி எண் தந்தேன். அவர் ஆலோசனையை தொடர்ந்து கணவருடன் யோக வகுப்பில் கலந்து கொண்டார். 3 நாள் வகுப்பு முடித்த அவர் கணவருக்கு ஆறவே இல்லை. இத்தனை குறைவான தொகைக்கு இவ்வளவு பெரிய விஷயமா என்பதை அவரால் நம்பவே முடிய இல்லை. மேலும் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று அவரே முன் வந்து, விஷ்ணுபுரம் விழாவுக்கு ஒரு தொகை கொடை அளித்திருக்கிறார். மேலும் முகாமில் நண்பர்கள் வழியே அமைந்த இந்த சூழல் கண்டு, விஷ்ணுபுரம் விழாவுக்கு தனியே சென்று வா என்று தன் பாரியாளுக்கு அனுமதியும் தந்து விட்டார். (பிரவீணா தொலைபேசியில் அழைத்து அய்யோ அய்யோ எனக்கு சந்தோசத்தில என்ன பண்றதுண்னே தெரியலையே என்று புலம்பினார்).
இப்படிப் பலரை நான் அறிவேன். ஆக இந்த வருடத்து விருது தொகை என்பது இலக்கிய வாசகர்கள் மட்டுமே அளிப்பது அல்ல. இங்கே இவ்விதம் நிகழும் ஒன்றில் பெரு மதிப்பு கொண்டு, நமது உழைப்பின் செல்வமும் ஒரு துளி அதில் சேர வேண்டும் என எண்ணி நல்கிய மனங்கள் பல. இது ஒரு பண்பாட்டு நிகழ்வு. பரஸ்பரம் இத்தகு செயல்களுக்கு இதில் நன்றி தெரிவிக்க ஏதும் இல்லை. ஆனால் உயர் பணி ஒன்றுடன் தோளோடு தோள் நிற்கும் இத்தகு நண்பர்களுக்கும், இன்னும் முகமாறியா இத்தகு கொடை மனங்களுக்கும் ஒரு வாசகனாக என்றென்றும் என் அன்பு :).
கடலூர் சீனு