ஆப்பிரிக்க இலக்கியம் – லதாவுடன் ஓர் கலந்துரையாடல்

வெகு நாட்களுக்குப் பின் காதுகளில் இனித்த இலங்கைத் தமிழ்நிகழ்வின் ஆரம்பத்திலேயே சுவை கூட்டியிருந்தது. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் இணைய நிகழ்வில் சிறப்பு விருந்தினராக லதா அருணாசலம் பங்கு கொண்டு ஆப்பிரிக்க இலக்கியம் பற்றி கலந்துரையாடினார். லதா, நைஜீரியாவின் அபுபக்கர் ஆடம் இப்ராஹிமின் “Season of Crimson Blossom”-தீக்கொன்றை மலரும் பருவமாக மொழிபெயர்த்தவர்.

நிகழ்வில் எழுத்தாளர் முருகபூபதியைச் சந்தித்தது மிகுந்த சந்தோஷமாக இருந்தது (ஜெ, 2009-ல் ஆஸ்திரேலியா சென்றபோது பூபதியின் வீட்டில் தங்கியிருக்கிறார்). எழுத்தாளர் ஆசி. கந்தராசாவும் (”கள்ளக் கணக்குசிறுகதைத் தொகுப்புஅனோஜன் இதற்கொரு விமர்சனம் எழுதியிருக்கிறார்) நிகழ்வில் இணைந்திருந்தார் என்றுதான் நினைக்கிறேன். மற்றும் சிட்னியிலிருந்து விஷ்ணுபுரம் வட்ட நண்பர் கார்த்தியும், டான்சானியாவிலிருந்து நண்பர் பாலாவும் இணைந்திருந்தார்கள்நிகழ்வை தெய்வீகன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்

நீண்ட உரையும், கொஞ்சமாய் கேள்வி பதில்களுமாக அல்லாது நிகழ்வு முழுவதுமே முற்றிலும் கேள்வி பதில்களாக அமைந்திருந்தது சிறப்பாயிருந்தது. லதா ஆப்பிரிக்க இலக்கியம் பற்றி ஆரம்பத்தில் ஒரு விரிவான கோட்டுச் சித்திரத்தை அளித்தார். இதுவரை தமிழில் வெளியான ஆப்பிரிக்க இலக்கிய மொழிபெயர்ப்புகள்அவரின் தீக்கொன்றை மலரும் பருவம் நூலின் மொழிபெயர்ப்பு அனுபவங்கள், நைஜீரியா, கென்யா, கானா, உகாண்டா, டான்சானியா, எகிப்து, செனகல் போன்ற ஆப்பிரிக்க நாடுகளின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆப்பிரிக்க இலக்கியத்தின் ஆரம்ப காலப் போக்கும், சமகால இலக்கியச் சூழலும்ஆகியன உள்ளிட்ட அவரின் பதில்கள் செறிவானவையாயிருந்தன.

லதா நைஜீரியாவில் வசிப்பதால் (நைஜீரிய பள்ளி ஒன்றில் அவர் வேலை செய்திருக்கிறார்) எனக்கு அவரிடம் கேட்பதற்கு, ஆப்பிரிக்க இலக்கியம் சார்ந்தல்லாது அம்மக்களின் வாழ்வியல் தொடர்பாகவும் சில கேள்விகள் இருந்தன. நிகழ்வில் கேள்வியை தொகுத்துக்கொண்டு சுருக்கமாக கேட்க என்னால் முடியாமலிருந்தது என்றுதான் நினைக்கிறேன். என்னுள்ளிருந்த கேள்விகள் அனைத்தும் இந்த ஒன்பது வருட கென்ய வாழ்வில் இம்மக்களையும், அவர்களின் பண்பாட்டு கலாச்சாரங்களையும் அருகிருந்து அவதானித்தவன் என்ற முறையில் உருத்திரண்டு வந்தவை. தமிழ்நாட்டின் கலாச்சாரத்திலிருந்து வந்த ஒருவன், இவ்வாப்பிரிக்க மண்ணில் அடைந்த ஆச்சர்யங்களையும், இன்னும் இப்பண்பாட்டை முழுதும் அறிந்துகொள்ள முடியாத தவிப்பையும், அவதானிப்பின் நுட்பங்கள் பிடிபடாமல் அயற்சியுறுவதையும் எப்படி கேள்விகளாக மாற்றுவது?.

லதாவிடம் முக்கியமாய் ஒன்று கேட்க நினைத்தேன். இம்மக்களின் வாழ்வின் பற்றுக்கோடு என்ன? இந்த நூற்றாண்டில் இவர்கள் காலூன்றி நிற்கும் இந்நிலம் எதனால், எவற்றால், இறந்த அல்லது எதிர்காலத்தின் எந்த நம்பிக்கைகளால் ஆனது?. தொன்மங்களும், மாயங்களும் இன்னும் மிச்சமிருக்கும், கட்டுக்கோப்பான முழு குடும்ப அமைப்பு என்ற ஒன்றில்லாத (அல்லது நெகிழ்வான குடும்ப அமைப்புள்ள) இச்சமூகம் கிழக்கை விட, மேற்கை அண்ணாந்து பார்த்து வளர வேட்கை கொள்கிறதா?. 

ஆப்பிரிக்க இலக்கியம்காலனி ஆதிக்கம் வரும்வரை வாய்மொழி இலக்கியமாகவே இருந்தது. கென்யாவின் பிரதான மொழி ஸ்வாஹிலி என்றாலும், கிட்டத்தட்ட பத்து/பதினைந்திற்கும் மேற்பட்ட மொழிகள் இங்கு புழங்குகின்றன. எதற்கும் தனி எழுத்துரு கிடையாது. ஆங்கில எழுத்துருக்கள்தான். நாற்பதுக்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் இருப்பதால் ஒவ்வொரு இனக்குழுவிற்கும் அவர்களுக்கென்று தனியான சிற்சில வேறுபாடுகளுடனான பேசுமொழி உண்டு. அதிக மக்கள்தொகை கொண்ட இனக்குழு கிகுயு. அவர்களின் மொழி கிகுயு. 1963-ல் சுதந்திரம் பெற்றபிறகு, கென்யாவின் முதல் ஜனாதிபதியான ஜோமோ கென்யாட்டா கிகுயு இனத்தவர். அவரின் மகன் உகுரு கென்யாட்டாதான் முந்தைய ஜனாதிபதி.தற்போது ரூடோ. ஸ்வாஹிலி கற்பதற்கு எளிது. ஆனால் கிகுயு போன்ற மற்ற மொழிகள் கொஞ்சம் கடினமானவை. இங்கிருக்கும் குஜராத்திகள் சரளமாக ஸ்வாஹிலி பேசுவார்கள்.

இப்பின்னணியில் பார்த்தால், ஆப்பிரிக்க இலக்கியங்கள் பெரும்பாலானவை (கிட்டத்தட்ட 99%) ஆங்கிலத்தில் எழுதப்பட்டவைதான். லதா, இன்னும் சில ஆப்பிரிக்க இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் இருப்பதாகச் சொன்னார்.  

13 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 22 எழுத்தாளர்களின் (இதில் நால்வர் பெண்கள்) முப்பது சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியான ரிஷான் ஷெரிஃபின்எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்நூலுக்கு எழுதிய முன்னுரையில் அ. முத்துலிங்கம் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

#கென்யா நாட்டின் கூகி வா  தியாங்கோவை உலகம் அறியும். பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக கடமையாற்றியவர். இவருடைய அரசியல் நிலைப்பாடு காரணமாக நாடு கடத்தப்பட்டவர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பென் ஒக்ரி எழுதிய The Famished Road நாவல்  புக்கர் பரிசு பெற்றது. எகிப்து நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட அரபு எழுத்தாளர் நஜீப் மஹ்ஃபூஸ் இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1988ல் பெற்றார். டொங்காலா இன்னொரு புகழ்பெற்ற எழுத்தாளர். இவர் எழுதியமனிதன்சிறுகதை உலகத்தின் கவனத்தை பெற்றது.  சினுவா ஆச்சிபியை ஆப்பிரிக்க இலக்கியத்தின் பிதாமகர் என்று கூறுவார்கள். இவரிடமிருந்துதான் ஆப்பிரிக்க இலக்கியம் தொடங்கியது. நைஜீரியாவின் தேசிய விருதைப் பெற்ற இவர் எழுதிய Things Fall Apart நாவல் 2007ல் மான்புக்கர் சர்வதேச விருதை வென்றதுடன் 45 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பெண் எழுத்தாளர்களில் கிறேஸ் ஒகொட் முக்கியமானவர். ஆங்கிலத்தில் முதலில் வெளிவந்தது இவருடைய தொகுப்புத்தான்#

சொல்வனத்தில் பணிபுரியும் நண்பர் மைத்ரேயன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்த போது கேட்டார்வெங்கி, அங்கு யாராவது சமகால எழுத்தாளர்களைச் சந்தித்தீர்களா?” என்று. இல்லையென்று வருத்தத்துடன் சொன்னேன். 36 வயதாகும் ”கின்யான்ஜூ கொம்பானி” நைரோபியின் ஒரு சேரிப்பகுதியில் தன் சகோதரர்களுடன் வசிப்பதாக அறிந்தேன். 83-ல் பிறந்தபால் கிப்சும்பா” கென்யாவின் சமகால எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர். அயோவா பல்கலையில் இலக்கிய விருதுபெற்ற ”மேஜா ம்வாங்கிசினிமாத் துறையிலும் பணியாற்றுகிறார். கேன் விருது வாங்கிய ”பின்யவாங்கா வாய்னய்னா” நைரோபியில்தான் இருந்திருக்கிறார் (சென்ற வருடம் தனது 48-வது வயதில் இறந்துபோனார்).

நிகழ்வில் லதாவிடம் ஒரு சுவாரஸ்யமான கேள்வி வைக்கப்பட்டது. “ஆப்பிரிக்க இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்கும் ஆர்வத்தில்/பணியில் இருக்கிறீர்கள் நல்லது. நம் தமிழ் நாவல் ஒன்றை மொழிபெயர்த்து ஆப்பிரிக்க இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்றால் நம்மின் எந்த எழுத்தாளரை தேர்வு செய்வீர்கள்?” என்று. லதா புன்னகைத்துவிட்டு சொன்னார் “தி.ஜா”. அந்த தேர்வைக் கண்டு எனக்கும் சட்டென்று புன்னகை வந்தது.

மரப்பசு அம்மணியும், உயிர்த்தேன் அனுசுயாவும் இந்த மண்ணிலும் உலவிக் கொண்டிருப்பார்களோ?

வெங்கி   

விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்

விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா

விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்

விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்

விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி

விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா

விஷ்ணுபுரம் விருந்தினர்: லதா அருணாசலம்

முந்தைய கட்டுரைதிருவனந்தபுரத்தில் ஒரு மலையாள உரை
அடுத்த கட்டுரைபகடையாட்டம்,கடிதம்