கானல்நதி- கடிதம்

பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.                               

மரபார்ந்த கதை கூறும் முறைகளில் இருந்து மாறுபட்டு, புதிய உத்திகளை கையாண்டு வரும் யுவன்சந்திரசேகர் தனது கானல்நதி நூலில் கட்டமைத்திருப்பதும் அதே போன்று ஒரு புதிய வழிமுறை தான். நாவலை படிப்பவர்களுக்கு முதலில் இந்த நூல் மொழிபெயர்ப்பாளர் சாரங்கன், குஜராத்தி வாராந்தரியான ஆர் பார் இதழில் இசை ஆர்வலரும்,ரசிகரும்,விமர்சகருமான கேசவ்சிங் சோலங்கி ஹிந்துஸ்தானி இசைப்பாடகர் ஒருவரின் வாழ்க்கை கதையை எழுதியதின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம் என்றே தோன்றும்.ஆனால் இதுவும் யுவனின் ஒரு கதை சொல்லும் முறையே.    

 வங்காளத்தின் மாமுட்பூரில் வசிக்கும் கிரிதரமுகர்ஜி தன் இளைய மகனான தனஞ்சய்முகர்ஜியின் இசைத்திறமையை இனம்கண்டு, விஷ்ணுகாந்த் சாஸ்திரி என்னும் உள்ளூர் இசையாசிரியரிடம் சேர்த்து விடுகிறார்.தன் பிறவிமேதைமையை அடிப்படையாகக் கொண்டு சாதகத்தின் மூலம் இசையில் தனஞ்சய்முகர்ஜி முன்னேற முன்னேற நடைமுறை உலகிலிருந்து விலகிக் கொண்டே போகிறான். குருவினுடனான நெருக்கம் அவனை தந்தையுடனிருந்தும், தாய்தந்தை இருவருக்கிடையேயான நெருக்கம் அன்னையுடனிருந்தும் அன்னியப்படுத்துகிறது. அன்னை தனஞ்சய்முகர்ஜியிடம் மட்டும் விசேஷ அன்பு செலுத்துகிறார் என்று எண்ணும் அண்ணன் சுப்ரதோவும் விலகி விடுகிறான். அவன் மீது அன்பு காட்டும் அத்தையும் தற்கொலை செய்து கொள்கிறாள்.

ஸரயுவுடனான தனஞ்சய்யின் காதலை அறியும் குரு தனது சீடனின் முழுக்கவனமும் இசையிலேயே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவனை கல்கத்தாவுக்கு அனுப்புகிறார்.அங்கு கிடைக்கும் தபலா இசைக்கலைஞன் குருசரண்தாஸின் நட்பும்,ஆதரவும் அவனை ஒருமுகப்படுத்தினாலும்,புதிதாகத் தொற்றிக்கொள்ளும் குடிப்பழக்கம் அவனது முன்னுரிமைகளை மாற்ற ஆரம்பிக்கிறது.சங்கர்ராய்பாபு தன் மகளான ஸரயுவை அவனுக்குத் திருமணம் செய்து தர மறுப்பதும்,அண்ணி ஸ்வப்னாவின் மீதான காமமும்,ஸாரங்கி நிபுணி காஞ்சனாதேவியுடனான உறவின் முறிவும் தனஞ்சய்யின் ஆழ்மனதில் உறங்கிக்கொண்டிருக்கும் மிருகங்களை எழுப்பி விடுகின்றன.குருசரண்தாஸூடன் சண்டையிட்டு நீங்கி முழுநேரப்போதையில் நாடோடியாகிறான்.அவ்வாழ்க்கையில் கன்னியாஸ்திரியாகி விட்ட தங்கை அபர்ணாவையும்,விபச்சாரியாக மாறி நிற்கும் ஸரயுவையும் சந்திக்கிறான்.

குருசரண்தாஸூடனும்,காஞ்சனா தேவியுடனும் உறவை புதுப்பிக்க அவன் மேற்கொள்ளும் முயற்சிகளும் தோல்வியடைகின்றன.இறுதியில் ஒரு இரயில்நிலைய வாசலில் செருப்பு தைக்கும் அஸ்லாம்கானின் அடைக்கலத்தில் சில நாட்கள் வாழ்ந்து அங்கேயே இறந்தும் போகிறான்.பொங்கிப் பிரவாகித்து செல்லும் வழியெல்லாம் இனிமையையும், குளுமையையும் ,நிறைவையும், வாரிவாரிக் கொடுத்திருக்க வேண்டிய தனஞ்சய்முகர்ஜி என்னும் இசைப்பேராறு காதல் தோல்வியாலும், குடிப்பழக்கத்தாலும்,சக மனிதர்களுடைய உறவைக் கையாளத் தெரியாததாலும் கானல்நதியாய் சுருங்கிப் போகிறான். 

படைப்பூக்கச் செயலில் ஈடுபடுபவர்கள் அதிலும் குறிப்பாக இசைக்கலைஞர்கள் பெரும்பாலும் போதை அடிமைகளாகவும்,இயல்புக்கு மாறான காமவிழைவு கொண்டவர்களாகவும் இருப்பது ஏன்? மனிதனின் படைப்புகளிலேயே முழுக்க முழுக்க கற்பனையின் அடிப்படையில் நின்று உருவாக்குவது இசை மட்டும் தான்.அவர்கள் படைப்பூக்கத்தின் உச்சத்திலிருந்து இறங்கி வருகையில், முகத்தில் அறையும் நடைமுறை உலகின் நிதர்சனத்தின் வெம்மையை தாங்க முடியாமல் தவிக்கும் போது அவர்களை ஆற்றுப்படுத்தி,அன்பு காட்டவும், நிபந்தனைகள் இன்றி நேசிக்கவும் உறவுகளும்,நண்பர்களும்,பற்றிக்கொள்வதற்கு ஏதேனும் ஒரு ஆன்மீக நம்பிக்கையும், வழிநடத்த ஒரு குருவும் வேண்டும் என்றே தோன்றியது.(.ஆர்.ரகுமான் , இளையராஜாவிடம் பணியாற்றுகையில், போதைப் பழக்கம் உட்பட எந்தச்சலனங்களுக்கும் ஆட்படாமல்  எப்படிப் பணியாற்றுவது என்ற தெளிவை அவரிடமிருந்து தான் அடைந்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் என நினைவு.) 

யுவனின் நாவல்களில் வரும் உரையாடல்கள் அந்தந்த வட்டார வழக்கு நடையிலேயே இருக்கும். ஆனால் இந்த நூலில் அப்படி எங்குமே இல்லை. ஏனென்றால் கதை குஜராத்தியில் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதன் தமிழாக்கம் ஆயிற்றே! மனதின் உணர்வுகளுக்கேற்ற ராகங்கள், இசைக்கலைஞர்களை பற்றிய குறிப்புகள், நாவலின் நடுவில் வரும் நாட்குறிப்பில் காட்டப்படும் அகமொழி என யுவன் ஒரு தனி ஆலாபனையையே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். நமக்கு அறிமுகம் இல்லாத அன்னிய நிலப்பகுதி,இசைமுறை, வாழ்க்கைமுறை என்று எங்குமே தோன்றாத அளவிற்கு இயல்பான,சரளமான மொழிநடை. கானல் நதி ஒரு முழுமையான ஹிந்துஸ்தானி இசை அனுபவம். நன்றி யுவன் சார்

அன்புடன்,சி.செந்தில்குமரன்.

முந்தைய கட்டுரைஎஞ்சும் ஒளி
அடுத்த கட்டுரைஅச்சுதம் கேசவம் – வரலாற்றின் இழை