கனவுகளைத் தக்கவைத்துகொள்ள உதவும் எழுத்து

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம்.

ஒரு எழுத்தாளரின் கதையை முதன் முதலில் வாசித்தது என் நினைவில் பசுமையாக இருக்கும். அவர் சொல்லும் கதையோ, கதையின் பாத்திரமோ, நடையோ ஏதோ ஒன்று கவர்ந்து, உடம்பில் ஒட்டிக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சும் அட்டையைப் போல, இந்த எழுத்தாளரின் எல்லா படைப்புகளையும் வாசித்துவிடவேண்டும் என்று ஒரு வாசகவெறி எனக்கு வரும். கே.வி. ஷைலஜா அவர்கள் தொகுத்து ‘வம்சி’ வெளியிட்ட ‘தென்னிந்தியச் சிறுகதைகள்’  நூலில் இடம்பெற்ற ஐந்து தமிழ்க் கதைகளில் ஒன்று சந்திராவின், ‘காட்டின் பெருங்கனவு’. அதைப் படித்ததும்,அந்த வாசகவெறி வந்ததை என்னால் மறக்கமுடியாது.  “உண்ணியைப் போன்றவனின் சாயலில் ஒருவனைப் பார்த்ததும், வேகமாக வந்து கொண்டிருக்கும் ரயிலில் பறந்துபோய் விழுந்து உடல் சிதறியதை போல உயிர் கலங்கி நின்றேன்”, என்று காதலின் வலி சொல்லும், சந்திராவின் “காட்டின் பெருங்கனவு” பற்றிக்  குறித்து வைத்தேன். கண்ணெதிரே தெரியும் மேற்கு மலைத் தொடர்ச்சி மலையின் பின்னனியில் இருக்கும் பெரியப்பாவின் வீட்டிற்கு விடுமுறையில் தங்கையுடன் சென்றவள், அங்கே சந்தித்த உண்ணியின் பிரிவைச் சொல்லும் வரிகள்.  அவனை வர்ணிக்கிறாளா, காட்டை வர்ணிக்கிறாளா என்று பிரித்தறியமுடியாத வரிகள்.  இயற்கையை நேசிக்கும் அவனுக்குப் பிடித்த தன்னை நீரருவியாக, மலையாக, காடாக மாறிக்கொண்டவள் ஒருவளாக எழுதிய சந்திராவின் வரிகள் என்னுள் அப்படியே படிந்துவிட்டன.

அது குரலாக வருடக்கணக்கில் என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது, என்பதையும் அறியும் நாள் ஒன்றும் வந்தது. , 2022-ல்,  ‘மொழி’ நடத்திய ஆங்கில மொழியாக்கத்திற்கான முதல் பரிசு வாங்கிய கதையின் சில வரிகளை , ப்ரியம்வதா அவர்கள் ஆங்கிலத்தில் வாசித்தார். அது சந்திராவின் கதை என உடனே இனம் கண்டேன்.. ‘பூனைகள் இல்லாத வீடு’ கதையை சொல்லும் சிறுவனாக, வளர்ந்தவனாக இந்தக் கதையில் ‘சந்திரா’.

முற்றங்கள் அற்ற வீடுகள்.  நடமாடும் சிகப்பிகள் போன்ற பூனைகளும், கண்ணெதிரே தெரியும் மலையும், ஓடும் அருவியும் அன்றாடத்தின் கனவுகள் என்றாகிவிட்டன. அவற்றைப் புனைவில் வடித்துக்கொடுத்து நினைவென தக்கவைத்துக்கொள்ள உதவும், எழுத்தாளர் சந்திரா அவர்களை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இந்த வருடம் அழைத்துச் சிறப்பிப்பதை அறிந்து மகிழ்கிறேன். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்.

விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்

விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா

விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்

விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்

விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி

விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா

விஷ்ணுபுரம் விருந்தினர்: லதா அருணாசலம்

முந்தைய கட்டுரைஅச்சுதம் கேசவம் – வரலாற்றின் இழை
அடுத்த கட்டுரைசுபா செந்தில்குமார்