பரவசமளிக்கும் படைப்பாளி – கா.சிவா

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் கதைக்குள் கதை வைத்து அதற்குள் இன்னொரு கதை சொல்பவர் என பொதுவாகக் கூறப்படுகிறது. இக்கூற்றிற்கு மிகப்பொருத்தமாக அமைவது அவரது சிறுகதைகளே. ஆனால் இவரின் நாவல்களுக்கு இக்கூற்று முழுமையாக பொருந்தாது என்றே தோன்றுகிறது.  

எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் முக்கியமான நாவல்கள் என நான் கருதுபவை மணற்கேணி, பகடையாட்டம் மற்றும் நினைவுதிர்க் காலம். இம்மூன்று நாவல்களும் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவை. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கதைக்களங்கள். மூன்றுமே ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டவை என்பதற்கான சான்றே இல்லாமல்தான் அமைந்துள்ளன. இன்னொன்றை இங்கே சொல்லவேண்டும். மூன்று நாவல்கள் என்று சொன்னாலும் மணற்கேணி நூலில் குறுங்கதைகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அக்கதைகளை ஒன்றாக இணைத்துக்கொண்டு நாவலெனவே நான் கொள்கிறேன்.

இம்மூன்று நாவல்களுக்குமிடையே உள்ள வேறுபாடுகளைப் பற்றிக் கூறுவதன்மூலம் யுவன் சந்திரசேகரின் படைப்பாளுமையை உணரமுடியுமெனத் தோன்றுகிறது. எனவே இங்கே வேற்றுமைகளையும் ஒற்றுமையென ஏதாவது உள்ளதாவெனவும் ஆராயலாம்

கதைக்களம்  

மணற்கேணி நாவல் வங்கியில் பணிபுரியும் ஒருவன் தன் மனதைத் துலாவி அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களை நினைவு கூர்வதை களமாகக் கொண்டுள்ளது.

பகடையாட்டம் நாவல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அமைந்துள்ள கற்பனை தேசத்தில் நடக்கும் அதிகாரப் போட்டிக்கான காய் நகர்த்தல்களையும் அதன் விளைவுகளையும் காட்டுகிறது.

நினைவுதிக் காலம் நாவல், எண்பது வயதான வயலின் இசைமேதை ஹரிசங்கர் தீட்சத் தன் வாழ்க்கையை அவர் சொற்களில் விவரிப்பதாக அமைந்துள்ளது.

வடிவம் 

நாவலாசிரியரால் படர்க்கையில் சொல்லப்படுவதாக ஒரு நாவல் அமைந்துள்ளது.கதைசொல்லியே தன்மையில் கூறுவதாக ஒரு நாவல் எழுதப்பட்டுள்ளது.

ஒரு பெண், எண்பது வயதான இசைமேதை ஒருவரை நேர்க்காணல் செய்வதாக இன்னொரு நாவல் அமைக்கப்பட்டுள்ளது

வெவ்வேறு குணாம்சங்களும் பண்பாடுகளும் கொண்ட பாத்திரங்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தியபடியே வந்து பின் ஒரு புள்ளியில் இணைந்து வாசிப்பவரை திகைக்கவைக்கிறது ஒரு நாவல்.

ஒன்றுக்கொன்று தொடர்ச்சியில்லாத தனித்தனி நிகழ்வுகளை அடுக்கியபடி சென்றாலும் வாசகர் மனதில் எப்படியோ ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்துகொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டது ஒரு நாவல்.

தனித்தனி வினாக்களுக்கான பதில்களாக கூறப்படும் உதிரியுதிரியான வாழ்க்கைச் சம்பவங்களை இணைத்துக்கொள்வதன் வாயிலாக முழு வாழ்க்கைச் சித்திரத்தை வாசகனுக்கு அளிக்கிறது அடுத்த நாவல்

மன்னர்கள் இருபத்தியாறு பேருக்கு பதினெட்டு ஈனோங்தான் பணி புரிந்துள்ளோம்என்று கூறுவதன் வாயிலாக ஈனோங்கின் கைப்பிடிக்குள் கிடக்கும் ஒரு நாட்டின் பலநூறு ஆண்டுகால சரித்திரத்தை ஒரு வாக்கியத்தில் கூறுகிறது ஒன்று.  

இப்போது முதன்முதலாக தோன்றுகிறதுஅண்ணனுடைய ஆழ்மனதில் என்மீது இருந்த பிரியம்தான் என்னை விலக்க வைத்ததோ என்று. ஆமாம், ஆலமரத்தின் கீழ் உள்ள செடி ஓங்கி வளராது அல்லவா..” அண்ணனின் பொறாமையால் விலக்கப்பட்டவராக நாவல் முழுக்க தோன்றியதை ஒரு வாக்கியத்தில் அப்படியே  நேர்மறையாக மாற்றிவிடுகிறது மற்றொன்று.

ஊருக்கே லாடம் அடித்துத்தரும், பீமனாக அடையாளம் காட்டப்படும் கூளு ஆசாரி ஊருக்கு ட்ராக்டர் வந்ததால் தன் பிழைப்பு போய்விட்டதாக எண்ணி உயிரை விடுகிறார். ஆனால் அவர் மகன் ட்ராக்டருக்கான உதிரி பாகங்களை விற்கும் தொழில் செய்து நல்லபடியாக வாழ்கிறார் என்பதான வாழ்வின் முரண்களைக் காட்டிக்கொண்டேயிருக்கிறது மூன்றாவது.

புனைவு உத்தி 

ஒரு நாட்டில் உள்ளும் புறமும் நிகழ்வனவற்றை வெவ்வேறு வண்ணத்தில் ஒளியுமிழும் விளக்குகள் போன்ற வேறுவேறு குணாம்சமும் வாழ்க்கை முறையும் கொண்ட பாத்திரங்களின் பார்வையில் விவரிக்கிறது பகடையாட்டம்.

ஒரு  இசைமேதையின் ஒரே மாதிரியான இசை வாழ்வில் நிகழ்ந்த, நினைவில் நிற்கும் முதன்மையான சம்பவங்களையும் ஒன்றைப்பற்றி நினைவுகூரும்போது அதோடு இணைந்து எழுந்துவரும் சம்பவங்களையும் உரையாடல் போலவே காட்டுகிறது நினைவுதிர் காலம்.

விழுந்து சிதறிய கண்ணாடித் துண்டுகள் ஒவ்வொன்றும் சிறுசிறு பிம்பத்தை காட்டுவதுபோல கிருஷ்ணனின் வாழ்வில் நடந்த ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நிகழ்வுகளைக் காட்டுவதான பாவனை சூடிக்கொண்டிருக்கிறது மணற்கேணி.

ஒரு நூலைப் பற்றி குறிப்பு எழுதும்போது அதன் கதையை கூறக்கூடாது என்பது எனக்கு நானே விதித்துக்கொண்ட முக்கியமான கட்டுப்பாடு. நூலைப் பற்றி எழுதுவதே அந்நூலைப் பலரும் படித்து இன்புறவேண்டும் என்ற ஆவலால்தான். அக்குறிப்பில் கதையை கூறிவிடுவதன் மூலம் அந்த நூலை வாசித்து அறியும் இன்பத்தை வாசிப்பவருக்கு நீர்த்துப்போக செய்துவிடலாகாது என்பதே என் எண்ணம். எனவேதான் மூன்று நூல்களின் கதையை கூறாமல் அவற்றைப் பற்றி கூற முனைகிறேன்

யுவனின் ஒரு கதையை சுட்டி வாசித்திருக்கிறீர்களா என ஒருவரிடம் கேட்கும்போது, அவர் முகம் வட்டமான சூடமிட்டாயை வாயில் அடக்கியதுபோல சுர்ரென்ற பரவசத்தை அடைந்தால் அவர் அக்கதையை வாசித்திருக்கிறார் என உணரலாம். நான் பலரை கவனித்திருக்கிறேன். வாசிப்பவரை அப்படி பரவசம் கொள்ளச் செய்யுமளவிற்கு யுவன் சந்திரசேகரின் படைப்புகளில் இருப்பதென்ன. இக்கேள்விக்கு விடை காண்பதன் மூலம் யுவனின் படைப்புகளைப் புரிந்துகொள்ளமுடியும் எனத் தோன்றுகிறது

ஒரு நேர்காணலில்ஒரு நிகழ்வின் பல்வேறு சாத்தியங்களை எழுதிப்பார்க்க எனக்குப் பிடித்திருப்பதால் எழுதுகிறேன்என யுவன் கூறியுள்ளார். அதன்படியேதான் அவரது படைப்புலகம் உள்ளது. ஒரு கருத்தையோ நீதியையோ வலியுறுத்துவத்துவதில்லை என்பதோடு அடிக்கோடுகூட இடுவதில்லை. கணித சூத்திரங்களின் புதுப்புது சாத்தியங்களை எழுதி கண்டடையும்போது கிடைக்கும் இன்பத்திற்கு நிகராகவே இவரது கதைகள் உள்ளன. யுவன் எழுதி அடையும் இன்பத்தை வாசகன் வாசித்து அடைகிறான். கதையின் சம்பவங்கள் வெறுமனே மாயம்போல நிகழ்வதில்லை. அவை நிகழ்வதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ளன என்பதே வாசகனை பரவசத்திற்குள்ளாக்குகிறது என எனக்குத் தோன்றுகிறது.

மற்றொன்று யுவன் சந்திரசேகரின் மொழி. இவர் புரியாத வார்த்தைகளையும் சிடுக்கான வாக்கியங்களையும் கொண்டு மாயங்களை நிகழ்த்துவதில்லை. வாழ்க்கையில் இயல்பாகவே அமைந்து பிறர் கவனிக்காமல் எளிதாக தவறவிடுபவற்றையே சுட்டுபவையாக உள்ளன. வாசிக்கும்போது இது என் பெரியப்பாவிற்கு நடந்ததல்லவா இதைப்போலவொன்றை பக்கத்துவீட்டுக்காரர் கூறினாரே எனத் தோன்றிக்கொண்டேயிருக்கும். உதாரணமாக மணற்கேணியில் விவரிக்கப்படும் ஒரு சம்பவம். அப்பா மிகவும் ஆசையோடு பராமரித்துவந்த பசு லஷ்மியை உள்ளூரிலேயே வேறொருவருக்கு விற்றபின்னும் இவர்கள் வீட்டிற்கு வந்து செல்வதும் அதனை அடித்தபோது அம்மா மூர்ச்சையாகி விழுவதும். இதேபோன்ற சம்பவத்தை என் அம்மா கூற நான் கேட்டுள்ளேன்.

யுவன் சந்திரசேகரின் கதைகள் இன்பம் அளிப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. வார்த்தை விளையாட்டுகளோ ஒன்றை ஒளித்துவைத்து அதைக் கண்டுபிடிக்கக்கோரும் கதைப்பின்னலோ இன்றி தெளிந்த நீரோடை போன்ற நடையில் எழுதப்படுவதால்  கட்டுரை எழுதும் நிர்பந்தமில்லாத பள்ளிச்சுற்றுலா செல்லும் பிள்ளையின் விடுதலையுணர்வுடன் இவற்றை வாசிக்கமுடியும். எந்த கடமையுணர்வுமின்றி புதுப்புது மனிதர்களை, தருணங்களை, வாழ்க்கை முறைகளை சிறுசிறு பகடியுடனும் பெரும் விலகளுடனும் காண்பதை பேரின்பம் என்பதையன்றி வேறெப்படி குறிப்பது.

நான் மேலே குறிப்பிட்ட மூன்று நாவல்களிலும் வாசிப்பின்பம் எப்படி தொழிற்படுகிறது என்பதைக் காணலாம்.

பகடையாட்டம்; முதல் பத்து அத்தியாயங்களில் தென்தமிழகத்தில் வசிக்கும் வாத்தியார் செல்லச்சாமி, இந்திய எல்லையில் பணியாற்றும் மேஜர் கிருஷ்உலகின் எல்லா மலைகளிலும் ஏறும் லுமும்பா, நாஜியான வெய்ஸ்முல்லர், வாங்கோ பிரபு, மலைப்பாதையில் கடை வைத்துள்ள பகதூர்சிங் மற்றும் அவன் மனைவி ரூப்மதி என  வேறுவேறு பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. அவை தன்னளவில் முழுமை கொண்டுள்ளன. நடுநடுவே ஆதிகிரந்தம் என்ற அத்தியாயங்களும் இடம் பெறுகின்றன. ஆனால் முந்திய அத்தியாத்திலோ அல்லது அடுத்த அத்தியாயத்திலோ கூறப்படும் பாத்திரத்துடன் எந்தத் தொடர்புமற்று உள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் தெளிவாக உள்ளதால் நாவலை வாசிப்பதில் எந்த சிரமமும் ஏற்படுவதில்லை. ஆனால் இந்த தனித்தனி நபர்களை எப்படி இணைக்கப்போகிறார் என ஆர்வம் மேலோங்குகிறது. அவற்றை ஸோமிட்ஸியா நாடு என்னும் நூல் கொண்டு ஆசிரியர் இணைக்கும்போது மனதில் ஏற்படும் பேருவகையை சொற்களால் கூறுவது கடினம், அதை உணர்ந்துதான் அறியவேண்டும்.

மணற்கேணி  

கிருஷ்ணன் என்ற கதாபாத்திரம் தன்னிலையில் கூறுவதான தனித்தனி சம்பவங்கள். ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கலாகாது என்று பிரக்ஞைபூர்வமாகவே எழுதப்பட்டதாகவே தோன்றும் சிறுசிறு அத்தியாயங்கள். ஆனால் வாசிக்கும்போது மனம் ஒவ்வொரு சம்பவங்களையும் முன் வாசித்த ஏதோவொரு சம்பவத்துடன் இணைத்துக்கொள்ளவே விழைகிறது. அதுவே வாசிப்பை மிகவும் சுவாரசியமாக்குகிறது. எப்போதாவது அப்படி ஒன்று கிடைக்கும்போது பெரும் குதூகலம் தோன்றுகிறது.

நினைவுதிர் காலம் 

வாசிக்கத் தொடங்கும்போது, ஒரு நேர்காணல் வடிவிலான கூறல் முறையில் எப்படி ஒருவரின் வாழ்க்கையை கூறிவிடமுடியும் என்ற அவநம்பிக்கை இயல்பாகத் தோன்றும். ஆனால், சில கேள்விகளுக்கு பதில் கிடைத்தவுடனேயே நம்பிக்கை தோன்றிவிடுகிறது. எண்பது வயது முதியவர் கூறுவதை நேரில் கண்டு கேட்பதான உணர்வு ஏற்படும்போது உண்டாகும் மகிழ்ச்சி அளவிடற்கரியது. அதுவும் இறுதிக்கட்டத்தில் அண்ணன் எதனால் தன்னை முற்றிலும் விலக்கினார் என்பதற்கு ஹரிசங்கர் தீட்சத் கூறும் அனுமானம் மொத்த நாவலையுமே வேறு பார்வைக்கு மாற்றிவிடுகிறது. அப்போது ஏற்படுகிறது என்னவொரு புனைவு என்ற பரவசம்.

ஒட்டுமொத்தமாக யுவன் சந்திரசேகரின் படைப்புகள் எண்ணும்போதே மகிழ்ச்சியை பரவசத்தை விடுதலையுணர்வை புத்தறிவை அளிக்கும் வாசிப்பின்பத்தை தரக்கூடியவை எனக்கூறலாம். ஆம் வாசிப்பின்பமே இவரின் படைப்புகளின் ஆகச்சிறந்த பயன்மதிப்பு எனத் தோன்றுகிறது. முப்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருந்தாலும் என்றும் இளமையான உள்ளத்துடன் புதுமை மிளிரும் படைப்புகளை தந்துகொண்டிருக்கும் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது 2023 அளிக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கா. சிவா

முந்தைய கட்டுரைகுகாவை அறிதல்
அடுத்த கட்டுரைஅல் கிஸா – தன்யா