எஞ்சும் ஒளி

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

தங்களின் தளத்தில் சமீபத்தில் வந்த மூன்று பதிவுகளை ஒட்டி இந்த கேள்வி .

1.எழுத்தாளர்களின் ஆவணப்பட விழா

2.சுந்தர ராமசாமி இணையதள அறிமுகம்

3.பெருமாள் முருகனுக்கு ஜேசிபி விருது

இவை மூன்றையும் தங்களின் தளத்தில் பார்த்தது உன்னதமான  ஒன்றை தெளிவாக உணர்த்தியது.

ஆனாலும் சிறு துளியளவேனும் கசப்போ வெறுப்போ மனதில்  எழுந்து மறையாதா உங்களுக்கு.

இதைவடையை எண்ணாமல் பொத்தலை எண்ணும்வகையறா கேள்வியாகவோ , ‘வீடு பத்தி எரியும் போது பீடிக்கு நெருப்புஎன்னும் வகைமையிலோ அடக்க வேண்டாம்.

உறவினர் வீட்டு திருமண பத்திரிகையில் பெயர் வரிசையில் சரியாக இல்லாவிட்டாலே கொந்தளிக்கும் நம்மில் இந்த மூன்று பதிவுகள் சொல்லாமல் சொல்லியது பல.

அங்கெல்லாம் பிரதிநிதித்துவம் எதிர்பார்க்கும் நிலையில் நீங்களோ உங்கள் எழுத்தோ இல்லை என்பதை நான் அல்ல , நடுநிலையுடன் தங்களின் ஒரு பதிவை வாசித்த எவரும் சொல்வர் என்று தெரியும்.

இருந்தாலும் இந்த நேரத்தில் இதை கேட்டு வசைகளையும், வழி சொல்லும் வாக்குகளையும் தங்களிடமிருந்து பெற பணிவுடன்  விரும்புகிறேன் .

பி.கு :அறியா சிறு வயதில் ஊரில் யார் பத்திரிக்கை வைத்தாலும் என் அப்பா பெயர் இடம் பெற்றிருக்கிறதா எனப் பார்ப்பேன் . இப்போது எந்த பெரு நிகழ்வு இலக்கியத்தில் நிகழ்ந்தாலும் உங்கள் பெயரை தேடுகிறேன்.

இரண்டும் தவறு தான்  

அன்புடன்

கே.எம்.ஆர். விக்னேஸ்

அன்புள்ள விக்னேஸ்,

அடிக்கடி இவ்வகை கடிதங்கள் வருவதுண்டு.  அவர்கள் பொதுவெளிப் பேச்சுக்களிலிருந்து ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். என் எழுத்துக்கள், மற்றும் எனக்கு அணுக்கமானவர்களாக ஆனபின் அந்த வினா எழுவதில்லை

சிலர் முகநூல் போன்றவற்றில் இந்தவகையிலான எழுத்துக்களை படித்து அவற்றை சிலர் எனக்கு நகலெடுத்து அனுப்புவதுண்டு. பல குறிப்புகளில் நான்பொறாமைத்தீயில் பொசுங்கிப்போயிருப்பதாகஎழுதுவார்கள். ‘வன்மத்தை கொட்டியிருக்கிறார்என்று எழுதுபவர்கள் பலர். எனக்கு இன்னின்னார் மேல் ஒவ்வாமை என பெரும் பட்டியலே போட்டிருக்கிறார்கள். 

அவர்கள் தங்களைக் கொண்டே பிறரை மதிப்பிடுகிறார்கள். பொதுவாக மானுட உள்ளத்தின் அமைப்பும் அதுவே. அதில் பிழையும் இல்லை. ஆனால் அது அனைவரின் இயல்பும் அல்ல. இதை நீங்கள் கொஞ்சம் கவனித்தாலே அறிய முடியும். 

இரண்டு சாராருக்கு அந்த வகை உணர்வுகள் இருப்பதில்லை. முதல்சாரார் வாழ்க்கையின் இறுதியை எட்டிய முதியவர்கள். இனியொன்றுமில்லை என்றும், இவ்வளவுதான் என்றும் அறிந்துவிட்டவர்கள். அதன்பின் அவர்களிடம் தங்கள் புலனுணர்வுகள் சார்ந்த இன்பங்கள் மேல் நாட்டம் மட்டுமே முதன்மையாக இருக்கும். முக்கியமாக நாச்சுவை. சிலரில் செவிச்சுவை, அதாவது இசைரசனை.  

(அத்துடன் சாவுபயம். அது ஒருபக்கம் நோய் குறித்த பதற்றமாகவும் இன்னொரு பக்கம் மருத்துவ ஆர்வமாகவும் திகழும். அது முற்றி பக்திக்குக் கொண்டுசென்று விடுவதும் சாதாரணம்)

இரண்டாவது சாரார், தங்கள் வாழ்க்கையை எண்ணியபடி நிகழ்த்திக்கொண்டவர்கள். தங்கள் உள்ளுறைந்த ஆற்றலை கூடுமானவரை முழுமையாக வெளிப்படுத்திவிட்டோம் என்றும், தங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கையை வாழ்ந்துவிட்டோம் என்றும் உணர்பவர்கள். அது ஒருவகை நிறைவு. அந்த நிறைவை அடைந்தவர்களுக்கு இன்னொருவர் மேல் பொறாமைகளோ கசப்புகளோ இருப்பதில்லை. எதன்மேலும் பொருமலும் நிறைவின்மையும் நீடிப்பதுமில்லை. செய்தவை, செய்யவேண்டியவை மட்டுமே எஞ்சியிருக்கும். நம்புங்கள், அப்படியொரு வாழ்க்கையும் உண்டு.

ஆனால் இங்கே மிகப்பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையை அவ்வண்ணம் நிறைவடையச் செய்யாதவர்களே. முதன்மையாக புறத்தே இருந்து வரும் நெருக்கடிகள். தங்கள் விருப்பப்படி வாழும்ஆடம்பரம்இங்கே மிகமிகச்சிலருக்கே அமைகிறது. குடும்பச்சூழல், பொருளியல் அழுத்தங்கள், வேலைச்சூழல் என எத்தனையோ கட்டுகள். அதற்குள் திமிறி மீறி தேடிக்கொண்ட கையளவு இடத்தில் நட்டுப்பயிரிட்டுக்கொண்டவை அவர்களின் ரசனைகள். ரகசியமாக கொய்துகொண்டவை  அவர்களின் இன்பங்கள். அது இங்கே பல்லாயிரத்திலொருவர் தவிர பிறரின் தீயூழ்.

இன்னொரு பக்கம், தானே தேர்வுசெய்துகொண்ட கூண்டுகள், தவறான வழிகள். பெரும்பாலானவர்கள்பாதுகாப்பு’ ‘உறுதிப்பாடுஆகியவற்றை தேடி தங்களை கூண்டிலடைத்துக் கொண்டவர்கள். ‘செட்டில்ஆகிவிட்டவர்கள். ஆகவே தேடலற்ற, எய்துதல் அற்ற வாழ்க்கையை அவர்களே அமைத்துக்கொண்டு அக்கூண்டுக்குள் கிடந்து பொருமிக்கொண்டிருக்கிறார்கள். 

மற்றொரு சாரார், தங்களை சரியாக புரிந்துகொள்ளாதவர்கள். தங்கள் ஆற்றலை மிகையாக அல்லது குறைவாக மதிப்பிட்டுக்கொண்டவர்கள் உண்டு. தங்களுக்கு உரியதல்லாத பாதைகளை அவர்கள் தேர்வுசெய்து உழன்று வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். தங்கள முன் அவ்வப்போது தெரியும் எல்லா வழிகளிலும் சென்று வீணாகிவிட்டவர்களும் பலர்.

உண்மையில் பலருக்கு ஒரு வழியை ஏன் தெரிவுசெய்கிறோம் என்று தெரிவதில்லை. சினிமாவுக்கு வர எண்ணும் பலர்பணம் சம்பாரிக்கணும் சார்என்று சொல்வதைக் கண்டதுண்டு. ‘நாலுபேர் மெச்சஒரு செயலை தெரிவுசெய்வார்கள். ‘எல்லாரும் செய்றதனாலேஒன்றை தேர்ந்தெடுப்பார்கள். 

எப்படியோ வாழ்வின் ஒரு கட்டத்தில் தங்களை முழுமையாக வெளிப்படாதவர்கள் என்று உணர்பவர்களே இங்கே மிகுதி. அதில் ஓர் உண்மை இருக்கும். ஆனால் பலசமயம் அவர் தன்னைப்பற்றிக் கொண்டுள்ள மிகையான எண்ணமும் இருக்கும். ‘நான் யார்னு காட்டறேன்  என்னை அவனுக்கு தெரியாது’ ‘நான்லாம் வேறமாதிரி ஆளுஇதெல்லாம்தானே நம் காதில் அன்றாடம் ஒலித்துக்கொண்டிருக்கும் குரல்கள்.

இவர்கள் தாங்கள் அடையவேண்டியதை அடையவில்லை என உணர்கிறார்கள். ஆனால் அதற்கான பொறுப்பை ஊழ்மேல் ஏற்றுவதில்லை. அவ்வாறு செய்தால் ஓர் அமைதி எஞ்சும். அப்பொறுப்பை தானும் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு ஆணவம் ஒப்புவதில்லை. ஆகவே பிறர்மேல் அப்பழியைச் சுமத்துகிறார்கள். அதன் வழியாக வன்மம் கசப்பு ஏளனம் என நிறைந்துவிடுகிறார்கள்.

பிறர்மேல் பழியை ஏற்றுவதிலேயே இரண்டு வகை. பிறர் செய்த சதிகளால், வஞ்சத்தால் தான் அடையவேண்டியதை அடையவில்லை என எண்ணிக்கொள்பவர்களே மிகுதி. சினிமாவில் தோற்றவர்களிடம் இதைப் பார்த்திருக்கிறேன். படம் ஓடாமலானபின் முதல் வாய்ப்பளித்த தயாரிப்பாளரை தூற்றிக்கொண்டே எஞ்சிய வாழ்க்கையை வாழ்பவர்களைக் கண்டதுண்டு. ‘சரியா விளம்பரம் பண்ணல சார் அந்தாளு

நம் சோதிடர்கள் இதை நன்கறிவார்கள். “நீங்க எல்லாரையும் நம்பறவர். ஏன்னா உங்க மனசிலே கல்மிஷம் இல்ல. ஆனா மத்தவங்க அப்டி இல்லை. அவங்க உங்களை ஏமாத்திட்டாங்கஎன்று சொல்லாத சோதிடர் இல்லை. அதை ஏற்றுக்கொள்ளாத சோதிடம் பார்ப்பவர்களும் இல்லை.

பிறர்மேல் பழி சுமத்துபவர்களில் இரண்டாவது வகையினர் அதிகமும் இலக்கியம் கலையில் காணக்கிடைப்பார்கள். ஏனென்றால் இங்கே அளவுகோல்கள் அத்தனை புறவயமானவை அல்ல. ஒருவர் பரம மொக்கையாக எழுதி வைத்துவிட்டு தான் உலக இலக்கியம் படைப்பதாகவும், அதன் மதிப்பு உணரப்படவில்லை என்றும் எண்ணிக்கொள்ள முடியும். ஏனென்றால் பல மெய்யான மேதைகள் அப்படி சமகாலத்தில் மதிக்கப்படாமல் இறந்ததும் உண்டு. 

இலக்கியம் இசை ஆகியவற்றில் எதையும் சாதிக்காதவர்கள் பலர் இந்த பாவனையை மேற்கொள்கிறார்கள். பலவகை சதிகளால் தாங்கள் அகற்றப்படுவதாகவும், காலம் வரும் என்றும், எங்கோ சிலர் இருக்கிறார்கள் என்றும் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் இது ஆறுதலை அளிப்பதில்லை. மாறாக நீங்காத பொருமலையே அளிக்கிறது. பெரும்பாலும் சமூகவலைத்தளங்களில் எரிந்தபடியே இருப்பவர்கள், எதிர்மறை மனநிலையை பரப்புபவர்கள் இவர்களே.

இந்தவகையானவர்கள் தங்கள் மனநிலையை பிறரும் கொண்டிருப்பார்கள் என நினைக்கிறார்கள். அப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.  அவர்களை ஒட்டி எளிய வாசகர்களும் அவ்வண்ணம் நினைக்கிறார்கள். பலர் வன்மத்துடன் அதை பயன்படுத்திக்கொள்வதுமுண்டு. எழுத்தாளர்களுக்கு அரசு இலல்ங்கள் வழங்கப்பட்டபோது ஒருவர் நான் பொருமுவதாக எண்ணி எழுதிக்கொண்டே இருந்தார். கடைசியில் நான் அவருக்கு எழுதினேன். ‘சென்னையில் ஒரு வீடு வாங்குவதாக இருந்தால் எனக்கு மூன்றுநாட்கள் ஆகும். ஒரு பைசா கடனில்லாமல் வாங்க’ .அவர் மேலும் எரிவார் என்று தெரியும்.  

நான் வெண்முரசு எழுதியதுமே என் நிறைவை உணர்ந்துவிட்டேன். அதற்குப்பின் வந்த எல்லா கதைகளிலும் அந்த பெருமனநிலை, அதன் நெகிழ்வும் சிரிப்பும் களிப்பும், திகழ்வதை நீங்கள் காணலாம். மெய்யாகவே நான் வருத்தமோ கோபமோ கொண்டுள்ள எவரும் இங்கே இன்றில்லை. என் பணிகளுக்கு இடையூறாக சிலர் அமையக்கூடும் என்றால் என் செயற்களத்தில் இருந்து அவர்களை அகற்றிவிடுவேன். எதிர்மறை மனநிலை பரப்புபவர்களிடமிருந்து நான் விலகிவிடுவேன். ஆனால் அவர்கள்மேல் எந்தக் கோபமும் இல்லை. அவர்கள் ஓர் இடரில் சிக்குவார்கள் என்றால் முதலில் சென்று உதவ உளத்தடையும் இல்லை. அவர்களின் வெற்றியில் மகிழ்ந்துகொண்டாட முந்துவதிலும் எந்த தயக்கமும் இல்லை.

ஜெ

முந்தைய கட்டுரைமைக்கல் ஜெயக்குமார்
அடுத்த கட்டுரைகானல்நதி- கடிதம்