மயக்கழகு

பேரியாற்றுக் குமிழிகள்
மாமலர்வு
எரிந்தமைதல்
அடியடைவு

அன்புள்ள ஜெ

காசி கட்டுரை சிறப்பாக இருந்தது. அவற்றிலுள்ள புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பல படங்கள் மங்கலாக, குறைவான ஒளியில், சற்று அவுட் ஆஃப் போகஸ் ஆக எடுக்கப்பட்டிருந்தன. அவை ஒரு இம்பிரஷனிஸ ஓவியத்தின் சாயலை அளித்தன. அவற்றை திட்டமிட்டு எடுத்தீர்களா? அந்தப்புரிதல் உங்களுக்கு உண்டா?

ஆர்.சந்தோஷ்.

அன்புள்ள சந்தோஷ்,

என்னுடையது ஆப்பிள் ஐஃபோன். முன்பு ஒரு ரெட்மி வைத்திருந்தேன். இது  சென்ற பெப்ருவரியில் நண்பர்கள் அரங்கசாமி, ஓசூர் பாலாஜி, ராம்குமார் நன்கொடையாக அளித்தது. இது மிக அழகான படங்களை எடுக்கும் கருவி.

ஆப்பிள் செல்பேசி ஓர் அற்புதமான புகைப்படக் கருவி. அதைக்கொண்டு திரைப்படமே எடுக்கலாம். சில துணைக்கருவிகள் இருந்தால்போதும். உண்மையில் அப்படிச் சில முயற்சிகளை தொடங்கலாமா என்றுகூட தோன்றுகிறது (நான் எடுப்பது அல்ல. எடுப்பதற்கு சில இளைஞர்களைப் பயிற்றுவிப்பதுதான் நோக்கம்)

நான் புகைப்படக்கலைஞன் அல்ல. ஓவியனுமல்ல. அவற்றை ரசிப்பவன். அவற்றிலுள்ள கலைக்கொள்கைகளை ஓரளவுக்கு அறிந்தவன். ஆனால் தொழில்நுட்பம் சார்ந்து என்னை மேம்படுத்திக்கொள்ள மனமில்லை. என் உலகம் அதுவல்ல. ஆகவே என் படங்கள் பற்றி எனப்புப் பெரிய மதிப்பெல்லாம் இல்லை. 

எனக்கு இம்பிஷரனிசம் மேல் பெரும் ஈடுபாடு உண்டு. செவ்வியல்தன்மை கொண்ட நிலக்காட்சி, படச்சட்டம். ஆனால் செவ்வியல்போல எல்லாவற்றையும் காட்டாமல் மிகக்குறைவாகவே காட்டி கற்பனையில் காட்சியை விரியவிடும் தன்மை அதற்குண்டு. அதனாலேயே அதன்மேல் ஈடுபாடு.

அத்துடன் எனக்கு காட்சிப்பரப்பு, திரையமைப்பு (plane, texture) மேல் ஈடுபாடுண்டு. புகைப்படத்தின் படச்சட்டகம் ஓர் ஓவியத்திரைச்சீலை போல் ஆகவேண்டும் என்றால் புகைப்படம் மங்கலாக வேண்டும்.புகை, தூசி, பனி, இளவெயில் போன்றவை அழகான திரையமைப்பை உருவாக்குகின்றன. அதியண்மைக்காட்சிகூட நல்ல திரையமைப்பை அளிக்கும்.

புகைப்படம் துல்லியமாக இருந்தால் அது நீண்ட தூரத்தை காட்டி அந்தக் காட்சிப்பரப்பை ஒரு காட்சிக்களமாக ஆக்கிவிடும். அது சிலவகை புகைப்படங்களுக்குத் தேவை, குறிப்பாக ஒரு மொத்தவாழ்க்கைப் பரப்பையும் காட்டமுயல்கையில். சக்திவாய்ந்த காமிராக்கள் அதற்கு உதவும். பறவைப்புகைப்படம், கானியல் புகைப்படம் போன்ற இயற்கையறிவியல் படங்களுக்கு அதிதுல்லியம் அவசியம்.

மங்குதல் அற்புதமான விளைவுகளை அளிப்பது. ஒளி மிகக்குறைவாக இருந்தால் புகைப்படம் சிலசமயம் நீர்வண்ண ஓவியங்கள் போலவே ஆகிவிடும். மிகமிகக் குறைவான ஒளியில் ஓரிரு ஒளிப்புள்ளிகள் மட்டுமிருந்தால் காட்சி ஒரு ‘சர்ரியல்’ ஓவியம்போல அமையும்.சற்று அசைத்தால், அல்லது மெல்லிய அதிர்வை அளித்தால் தூரிகைத் தீற்றலைக்கூட கொண்டுவந்துவிடலாம்.

மங்கலாக்கும்போது இன்னொன்றும் நிகழும். இயற்கையிலுள்ள ஒரே வண்ணத்தின் மெல்லிய வேறுபாட்டால் நாம் காட்சிகளை அமைக்க முடியும். அவை திரைச்சீலை ஓவியம் போலவே ஆகிவிடும்.  திரையின் நூல்பின்னல்பரப்பே தெரிவதுபோலிருக்கும். இயற்கை என்பது வண்ணங்களாலும் வடிவங்களாலும் மட்டும் ஆனது அல்ல. வண்ண மயக்கம், வடிவ மயக்கம் ஆகியவற்றாலுமானது. அந்த மயங்குதலை மங்கல் வழியாக தொடமுயலலாம்

ஆனால் எனக்கு புகைப்படம் எடுத்தபின் அதை ஓவியமாக்கும் மென்பொருட்களில் ஆர்வமில்லை. அவை வெறும் விளையாட்டுகள். புகைப்படங்களை மேம்படுத்துவதுகூட அவ்வளவாக பிடிக்காது. நாம் புகைப்படம் வழியாக இயற்கையை எதிர்கொள்கிறோம். வண்ணங்களை, வடிவங்களை கொண்டு இயற்கை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. நாம் அவற்றில் ஒரு துளியை அள்ளி ஒன்றை நமக்கெனப் படைத்துக்கொள்கிறோம். அது கலையின் விளையாட்டு. 

மங்கல் என்பது இலக்கியத்தில் பொருள்மயக்கம் (Ambiguity) போல. அதற்கு முயல்வேன். ஆனால் மீண்டும் சொல்கிறேன். என் புகைப்படங்கள் சரியாக எடுக்கப்பட்டவை அல்ல. இவற்றுக்கு எந்தக் கலைமதிப்பும் இல்லை. கலை என்பது கலைஞர்களால் செய்யப்படவேண்டியது. நான் புகைப்படக்கலைஞன் அல்ல. ரசிகன் மட்டுமே. இவை நான் இயற்கையை ரசிக்கும் ஒரு வழிமுறை. அவ்வளவுதான்.

ஜெ 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:எஸ்.எம்.ஷாகீர்
அடுத்த கட்டுரைதன்மீட்சி நூல்கொடை இயக்கம் துவக்க நிகழ்வு