துறத்தல், ஒரு கடிதம்

அன்பு மிகு ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்! கிட்டத்தட்ட 22 வருடங்கள் முன்பு காசிக்கு சென்றேன். தீபாவளி அன்று சொர்ண அன்னபூரணியை தரிசிக்கவும், லட்டு தேரை பார்ப்பதற்கும். கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட ஒரு குழு, விடாது பெய்யும் மழை, வழி நெடுக நீரில் கரைந்து ஓடும் மாட்டு சாணம், குறுகிய வழிகள், சிறிய மண் பானைகளில் சூடான தேநீர், அதீத குளிர், காலையிலேயே சுட சுட ரசகுல்லா சாப்பிடும் மக்கள், 10 சப்பாத்திகளும் 1 சிறிய கிண்ணம் சோறும் கொண்ட உணவு முறைகள் என எல்லாமே ஒரு வித்தியாசமான எண்ண கலவைகளை என்னுள் தோற்றுவித்த படி இருந்தன

இவை அனைத்தையும் விட கொண்டாட்டமான இறப்புகளும், இறப்பதற்காக அங்கு வந்து சிறிய அறைகளில் பல ஆண்டுகளாக வசிக்கும் முதியவர்களும் எனக்கு பெரும் திடுக்கிடலை தந்தார்கள். மேலும் மணிகர்ணிகா காட் சென்றவுடன் என் மன சமநிலையை முற்றிலும் இழந்தேன். உடனேயே அந்த ஊரில் இருந்து ஓடி வந்து விட வேண்டும் என்ற எண்ணம் என் பிடரியில் அறைந்த படி இருந்தது. அப்படி செய்ய முடியாதபடி குழுவுடன் சென்றது வேறு தாங்க முடியாத கனமாக நெஞ்சில்.

5 நாட்கள் அங்கு தங்கும்படி இருந்தது. நான் கங்கையில் குளிக்கவே இல்லை. அதில் மிதந்து வரும் உடல்கள் மிக பெரிய மன அதிர்வை எனக்கு தந்துவிட்டன. நிலைகொள்ளாமல் தவிக்க ஆரம்பித்து விட்டேன்.

ஊருக்கு வந்த பின்பும் 3 – 4 மாதங்களுக்கு சரியான உறக்கம் இல்லை, மன அமைதியும் இல்லை. அப்போது ஒரு உறுதி மொழி மனதில் எடுத்தேன். என் வாழ்நாளில் இனி ஒரு முறை கூட எதற்காகவும் காசிக்கு மட்டும் செல்லக்கூடாது என்று.

ஏனோ தெரியவில்லை. கடந்த ஒரு வருடமாக காசிக்கு செல்லும் எண்ணம் வலு பெற்றுக் கொண்டே இருக்கிறது. அடியடைவு படித்த பின் மீண்டும் மிக நெருக்கமாக காசியை உணருகிறேன்

எந்த அலைபாயும் எண்ணங்களும், அதிர்வுகளும் இல்லாமல், நிச்சலனமாக இருக்கிறது

இன்றைய மனது. “போஎன்ற ஒற்றை சொல் ஒலித்து கொண்டே இருக்கிறது. போக தான் வேண்டும். ஆம்! போக தான் வேண்டும்

அன்புடன்

லலிதா ராகவன்

ஆலயம் எவருடையது? வாங்க

அன்புள்ள லலிதா,

காசி ஒரு சுற்றுலாப்பயணத்துக்கான ஊர் அல்ல. நெரிசல், அதற்குரிய அழுக்குகள். நீண்ட வரிசைகள். பிச்சைக்காரர்கள், சாமியார்கள் எனசட்டமிலமனிதர்கள். காசிக்குச் செல்ல ஒரு மனநிலை வேண்டியிருக்கிறது. அது வருவது வரை காத்திருக்கலாம். அது உலகியலில் இருந்து ஒரு விலக்கம் வந்து அதை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் நிலைதான்.

அஜிதன் காசி போனபோது நிகழ்ந்த ஒன்றைச் சொன்னான். நாட்டுக்கோட்டை சத்திரத்தில் ஒருவர் புலம்பினார். மனைவியுடன் காசி வந்துவிட்டிருக்கிறார், எஞ்சிய வாழ்க்கையை அங்கே கழிப்பதற்காக. சொத்தெல்லாம் பிரித்துக்கொடுத்து தன் பங்கை வங்கியில் போட்டுவிட்டார். “பிள்ளைங்க சரி கெடையாது சார்என்றார் சலிப்பா.

ஆனால் காசி அவர் நினைத்ததுபோல இல்லை. குறிப்பாக சாப்பாடு. “கடுகெண்ணை நாத்தம் தாங்க முடியலை சார். இட்லிக்கு அலைஞ்சு இங்க வந்தேன். இங்கேயும் இட்லி நல்லால்ல. அதான் ஊருக்கே கெளம்பிட்டோம். டிக்கெட் போட்டாச்சு. நாளைக்கு சாயங்காலம் ஏளுமணிக்கு ரயில் சார்காசி போரும்னு ஆயிடுச்சு

எவ்ளவு வருசமாச்சு வந்து?”

வருசமா? போன விசாளக்கிளமை வந்ததுதான் சார். இப்ப அஞ்சுநாள் ஆகுது

ஜெ

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க 

முந்தைய கட்டுரைகதைக்கொண்டாட்டம், கடிதம்
அடுத்த கட்டுரைஆனந்த குமாரசாமியை அறிதல்