அடியடைவு
அன்புள்ள ஜே,
இந்த ஆண்டு பூன் இலக்கியகூடுகைக்கு வரமுடியாமல் போன வருத்தத்தை தங்களுடன் பழனி ஜோதி இல்லத்தில் நடந்த சந்திப்பு கொஞ்சம் ஈடு செய்தது. நான் உங்களை முதல் முதலில் நேரில் சந்தித்தது 2019 செப்டெம்பரில் மார்க் ட்வைன் இல்லத்தில். அங்கிருந்து ராஜன், பழனி ஜோதி மற்றும் பாலாவுடன் நியூ ஹாம்ப்ஷயர் பயணத்தில் கலந்து கொண்டேன். அந்த பயணத்தில் நான் உணர்த்து ஒன்று உண்டு. இன்று அடியடைவு வாசித்தவுடன் அந்த நினைவு மேலெழுந்து வந்தது.
நியூ ஹாம்ப்ஷயர் சென்று சேர்ந்து அடுத்தநாள் காலையில் நாம் இலைகளின் நிறமாற்றத்தை காண சென்றுகொண்டிருந்தோம். நான் உங்களை பார்த்து கொண்டிருந்தேன். ஒரு கணத்தில் தங்களுடன் வேறு ஒருவர் இருப்பதாக உணர்தேன். என் மனதில் தங்கள் அம்மாவின் உருவம் தோன்றியது.
அடுத்த 1 மணி நேரம் அவர்கள் உங்களுடன் இருப்பதாக உணர்தேன். அப்பொழுது நீங்கள் வெண்முரசில் நீர்ச்சுடர் எழுதிக்கொண்டிருந்தீர்கள்.
அதன் பிறகு நான் மூன்று முறை தங்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன். மூன்று முறையும் அருண்மொழி அவர்கள் உடன் இருந்தார்கள். நீர்ச்சுடர் எழுதியும் முடித்து விட்டிருந்தீர்கள். நான் நியூ ஹாம்ப்ஷயரில் உணர்ந்தது போல எதையும் உணரவில்லை.
நீங்கள் உங்கள் அம்மா உங்களுடன் இருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா ?
அன்புடன்
கிஷோர்
*
அன்புள்ள கிஷோர்,
நான் என் 21 ஆவது வயதில் வாள்வச்சகோஷ்டம் என்னும் ஊருக்குச் சென்றிருந்தேன். அன்று அங்கிருந்த வயதான பூசகர் (மாத்வ பிராமணர், நாங்கள் போற்றி என்போம்) ‘நீ நட்டாலம் விசாலாக்ஷி மகனாடா?’ என்றார். ”எப்படித்தெரியும்?” என்றேன். “உன் அம்மாவை சின்ன வயசில் பார்த்திருக்கிறேன்…” என்றார். அவர் நட்டாலம் ஆலயத்தில் பணியாற்றியவர். “பாத்தாலே தெரியுதே…. நல்ல குழந்தை. சொப்பனம் காணுற பொண்ணு”. அம்மா என்னுள் இருந்து எப்போதும் கனவுகண்டுகொண்டிருக்கிறார் என்றே உணர்கிறேன்.
உலகியல் சார்ந்து அம்மாவுடன் இணைந்துள்ள பலவும் இன்றில்லை. இன்று அருண்மொழிதான் அந்த இடத்தில். அதட்டி, உருட்டி வேலைவாங்குவது வரை. ஆனால் எஞ்சியுள்ள அந்த மெல்லிய பித்து அம்மாவுடையதுதான் என உணர்கிறேன். அது என்றுமிருக்கும்
ஜெ