யுவனிடம் கேட்பதற்கு வேறொன்றும் இல்லை- ஆஸ்டின் சௌந்தர்

அக்டோபர் முழுவதும் உல்லாசச் சுற்றுலா இலக்கிய கூட்டங்கள் என்று ஓடி விட்டதுஎன்னை அழைத்த நண்பர்களுக்கும், குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கும் உடனுக்குடன் பதில் சொல்லாமல் விடுபட்ட நாட்கள்கைபேசிஅழைத்த நண்பர்களின் பெயர்களை சிவப்பு வண்ணத்தில் பக்கம் பக்கமாக காண்பித்தது.. இவ்வளவு பேரா என்னைத் தொடர்பு கொள்கிறார்கள் என்ற ஆச்சரியத்தில் ‘Contacts’ –ல்  அடுக்கி வைத்திருக்கும் பெயர்களைப் பார்த்தேன். மொத்தம் 585 என்றது

‘Advocate Sivakumar’ – பத்தாம் வகுப்பு படிக்கும்பொழுதே க.நா.சு, சுந்தரராமசாமி, கி. ராஜ நாராயணன் என பேசி, இலக்கிய எழுத்துக்கும், வணிக எழுத்துக்கும் அடிப்படை வித்தியாசங்களை சொல்லி பாடம் எடுத்தவன். ‘Advocate Selvarani’ – கே. என். சுந்தரேசன் (எழுத்தாளர் வித்யாவின் அப்பா) புத்தகம் ஒன்று திருச்சிக்கு அருகில் உள்ள காட்டூரில் உருமு தனலட்சுமி கல்லூரியில் ராஜகோபாலன் என்னும் நண்பர் 2009-ல் கொடுத்தாராம். அது ஒரு பிரதிதான் உள்ளதாம். விசாரித்துச் சொல்லமுடியுமா என்று கேட்டுக்கொண்டதற்கு, பதில் சொல்ல அழைத்திருக்கலாம்.

ரவி சுப்பிரமணியன்போன வருடம் இதே நாட்களில் அ. முத்துலிங்கம் படைப்புகளை பற்றிய நூலைக் கொண்டுவர சேர்ந்து உழைத்தோம். இவர் கூப்பிட்டால், அது புத்தக சம்பந்தமாகத்தான் இருக்கும். யுவனின்தொடரும்கதையில்சாப்பாடு ரெடி வரேளா, சித்தே போகட்டுமாஎன்று கிருஷ்ணனைக் கல்யாணி அழைப்பதுபோல, ராதா சாப்பிட அழைக்க சுய நினைவுக்கு வந்து மற்ற நண்பர்களைப் பற்றி மனதில் தொகுப்பது தடைபட்டது. அந்தக் கதையில்கிருஷ்ணன் பத்திரிகையில் வந்த ராஜாங்க அமைச்சர்களின் மூன்று போட்டோக்களில் ஒன்று அவரது ஏதாவது ஒரு நண்பரை நினைவுறுத்துவதாக கதைக்குள் கதைகள் விரியும். ஒரு வேளை யுவனை வாசித்துத்தான் எனக்கு இப்படிப்பழக்கம் ஒட்டிக்கொண்டதாஇல்லை  ,’பட்டிக்காடா பட்டணமாபார்த்து விட்டு வந்து நாள் முழுக்க கதை சொன்ன என் சித்தப்பாவிடமிருந்து ஒட்டிக்கொண்டதா

கதை கதையா கேட்கிறது, சொல்றது வேணும்னா குடும்பம் கொடுத்த சொத்தா இருக்கட்டும். யுவன் பாணி பிடித்திருக்கிறது என வைத்துக்கொள்ளலாம். அப்புறம் இந்த அமானுஷ்யம்கிற விஷயம்.  ‘யாரோ எங்கோ ஒரு பெண் கர்ப்பமா இருக்க, இன்னொருத்தரு வீட்டுத் திண்ணையில குழந்தை தவழ்ற  ‘குள்ளச் சித்தன் சரித்திரம்கதையெல்லாம்எப்படி ஏற்றுக்கொள்கிறேன்? இதற்கு யுவன் நேர்முகம் ஒன்றில் சொன்ன பதிலையே எடுத்துக்கொள்கிறேன். ‘அவருக்கு அமானுஷ்யம் என்கிற விஷயம் அவரது பேரனுக்கு இல்லை.’ என்றார்

பக்கத்து வீட்டில் சட்டி வைத்து தோசை சுட மாவை ஊற்றினால், எங்கள் வீட்டுச் சட்டியில் வெந்த தோசை இருக்கும் ‘  சொல்லும் /செய்யும் தாத்தாக்களை  நான் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அந்த தாத்தாவிடம், ‘நான் அமெரிக்காவில் இருந்துகொண்டு, நேர்முகத்தின்போது கேட்ட ப்ரொக்ரோம் கேள்விகளுக்குபுனேயில் இருக்கும் ஒருவர்  Google Doc-ல் பதிலை தட்டச்சு செய்ய செய்ய நான் பார்த்தேன்என்றால், அதை அவர் அமானுஷ்யம் என்பார்யுவன் கதையின்  பாத்திரங்கள் சொல்லும் / செய்யும் அமானுஷ்ய விஷயங்களை  தர்க்கத்துக்கு எடுத்துச் செல்லாமல், ஒரு வாசகனாக, பாத்திரங்கள் முன் வைக்கும் கேள்விகளும் , அவர்களது விவாதங்களும், சந்திக்கும் சம்பவங்களும் சிந்திக்க வைக்கின்றன, அனுபவத்தைக் கொடுக்கின்றன என்ற வகையிலும் ஒன்ற முடிகிறது. ‘குள்ளச் சித்தன் சரித்திரம்நாவலில் வரும்  சிகப்பி , ராம பழனியப்பன் இருவரும், நிஜ வாழ்வுத் தம்பதிகள் போல, இரு வேறு துருவங்கள். இருவரது அடிப்படை நம்பிக்கைகளும் வேறுபட்டவை. ‘எனக்கு மட்டும் ஏன் இப்படிஎன்று கேள்வி கேட்கும் பழனியப்பன். ‘படைச்ச சாமி பார்த்துக்கும்என்று குழந்தை பிறக்க அறிவியல் முறைகள் எதையும் நாடாத சிகப்பி. அவர்களது இருவரது கால்களிலும் நின்று நாவலை வாசித்து அனுபவிக்க முடிகிறது. குழந்தை இல்லாத பெற்றோர்களின் வலியை சிகப்பி கேட்கும் கேள்வியில் உணரமுடிகிறது .

// வேறு எந்த ஜீவராசிக்காவது இனப்பெருக்கம் இத்தனை பெரிய மனச்சுமையாக இருக்குமா ? //

பழனியப்பனும்  வாழ்க்கையில்  நான் சந்திக்காத புதியவராகத் தெரியவில்லைநீங்களும் அப்படி நினைக்க வாய்ப்புண்டு.

// படிப்பு பாதியில் நின்று விடுகிறது. தகப்பன் கைவிட்டுப் போகிறான். சொத்தெழுதி வைக்கிறேன் என்றவன் முந்தின நாள் ராத்திரி செத்துப் போகிறான். அவன் சொத்து அத்தனையும் களவானிப் பயலிடம் சென்று மாட்டுகிறது. அற்புதமான மாமனாருக்கு அடாவடியான இரண்டாம்தாரம் வாய்க்கிறாள். செய்வினை வைக்கிறாள். பெண்டாட்டி பாதிராத்திரியில் படுக்கையில் உட்கார்ந்து மணிக்கணக்காக அழுகிறாள்.. //

சிகப்பி , பழனியப்பன் என்று இரு தம்பதிகள் மட்டும் வரும்  நாவலா, ‘குள்ளச் சித்தன் சரித்திரம்என்று இஸ்மாயில் போல் தர்க்கம் செய்தால், எனக்கு கிடைத்த அனுபவத்தை சுருக்கமாக சொல்ல இவர்களை எடுத்துக்கொண்டேன் என்பதே எனது பதில். அவர்கள் இருவரும், கதை தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ஒரு வெளி முடிச்சுஉள் முடிச்சுகளாக, சுழல் சுழலாக, பல ஜென்மங்களுக்குள் செல்லும் நாவல் குள்ளச்சித்தன் சரித்தரம்

யுவனின் பாத்திரங்கள் பல கதைகளை ஒரே கதையில் சொல்வதால் பல அனுபவங்களை கொடுக்கின்றன. பற்றாததிற்கு, நாம் வாசித்த கதைகளையும் பாத்திரங்கள் பேசுவதால், மேலும் மேலும்  அனுபவங்கள். ‘புகைவழிப் பாதைகதையில் கிருஷ்ணன், கு.. ராஜகோபலனின்சிறிது வெளிச்சம்கதையை , அவன் வசித்த ஸ்டோர் குடித்தன வீடுகளில் ஒன்றில் குடியிருந்த அநுசூயாவிற்கு சொல்கிறான்சாவித்திரிக்கும் கதைசொல்லிக்கும் என்ன நடந்தது என்ற நாற்பது வருடங்களாக புரியாத புதிர் இப்பொழுது படித்தாலாவது புரிகிறதா என்று இன்னொருமுறை வாசிக்கவேண்டியதாகிவிட்டது. சாவித்திரியை நினைத்து மீண்டும் பாவமாய், திருமணத்திற்குப் பிறகு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் அநுசூயாவை நினைத்து அதி பாவமுமாய் ஆனதுதான் இலாபம், வாசிப்பனுபவம் பன்மடங்காகிறது.

யுவனின் புனைவு உலகில், ஒரே விஷயத்தை இருவர் அல்லது பலரின் பார்வையில் சொல்லிச் செல்லும் கதைகள். அப்பாவுடனான உறவின் அனுபவத்தை இரு வேறுபட்ட மனநிலையில் பகிரும் பாத்திரங்கள் வரும் கதையான – ‘மூன்று ஜாமங்கள் கொண்ட உறவுஒரு உதாரணம். சிறு வயதிலேயே அப்பா இறந்துவிட, புது மனைவியிடம் அவரது நினைவாக புலம்புவது, இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பானாகிய பிறகும் அப்பாவின் நினைவில் வாடும் கிருஷ்ணன், ஒரு புறம். அம்மா இறந்ததும், இரண்டாம் மணம் செய்துகொண்ட அப்பாவை வெறுத்து ஓடும் சுகவனம் மறுபுறம்.. 

மாயங்கள் நிறைந்த சம்பவங்கள் நிகழும் யுவனின் புனைவுகளில் சரித்திரத்தில் நடந்த நிகழ்வுகளும், அன்றாடங்களும் இணைந்து பயணிப்பதால், உண்மைக்கு அருகில் இருக்கும் உணர்வைக் கொடுக்கின்றன

குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலில், தாயாரம்மா (இவரது மகள்,கல்யாணம் ஆகாமல் கர்ப்பம் ஆகிவிடுகிறாள்குழந்தை பிறந்த பின்  மீண்டும் கன்னிப்பெண்ணின்  உடல்வாகு பெறுகிறாள்) சொல்வதாக வருகிறது. // மாசிமகம் அன்றைக்கு. எந்த வருஷம் தெரியுமா? வடக்கே ஏதோ ஒரு ஊரிலே ஜனங்களை வெள்ளைக்காரன் கூட்டங் கூட்டமாகக் கொன்று கிணற்றிலே போட்டானாமே, அந்த வருஷம் என்ன அப்படிப் பார்க்கிறீர்கள். நான் தற்குறி. படிக்காதவள். // ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றித் தெரிந்த வாசகன் தாயாரம்மாவின் வயதை ஊகிக்க வாய்ப்புள்ளது.

இரண்டே அறைகள் வீடு கொண்ட கதையில்குருவிக்கறையில், கிழவர் ஒருவர் சன்னமான குரலில் பாடுவதை , கிருஷ்ணன் கேட்கிறான்ஒரு வாத்தியம் தெரிந்தவனுக்கு பாடுவதில்தான் அப்படி ஒரு பிடி கிடைக்கும் என்று நினைக்கிறான். அவனுடன் உடன் நடக்கும் பாண்டித்துரை, ‘குருவித்துறை சகோதர்கள்’  கேள்விப்பட்டத்தில்லையா, தில்லானா மோகனாம்பாள் படத்துக்கு மதுரை சேதுராமன் பொன்னுச்சாமி சகோதரர்களை ஏற்பாடு செய்வதற்கு முன்னால், .பிநாகராஜன், இவர்களைத்தான் அணுகினாராம். படிக்கும் வாசகனுக்கு உடனே Google-ல் தேடும் எல்லைக்கு இது இழுத்துவிட்டுகிறது

பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்புகளில், எங்களுக்கு கணக்குப் பாடம் எடுத்த வாத்தியார் வெள்ளைவேட்டி, முழங்கை வரை மடித்துவிட்ட முழுக்கைச் சட்டை போட்டுக்கொண்டு தினமும் குளித்தலையிலிருந்து வந்து போவார். இரண்டு சட்டை இரண்டு வேட்டி , மாற்றி மாற்றி துவைத்துக் கட்டிக்கொண்டு வருவார்நீதிபோதனை வகுப்பிற்கும் அவரே வந்து கதைகள் சொல்வார். புதுமைப்பித்தன், சாண்டில்யன் , ஜெயகாந்தன் கதைகள் எல்லாம் அவற்றில் அடங்கும். பனிரெண்டாம் வகுப்பு ஆங்கிலப் பரிச்சையில் தேர்வாவதற்கு நல்ல இலக்கணம் சொல்லித்தரும் சனிக்கிழமை வாத்தியாராகவும் இருந்தார்அவரிடம் இன்னொரு வித்தையும் இருப்பதை பன்னிரெண்டாம் வகுப்பில் அரைப் பரீச்சைக்கு முன்னர் பார்க்க நேர்ந்தது. கணக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தவர், சாக்பீஸை டேபிளில் வைத்துவிட்டு, வகுப்பில் இருந்த ஒரு பெண்ணை எழுந்து நிற்கச் சொன்னார். ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு, உன் ஊரில் ஒரு சிறுவன் காணாமல் போய்விட்டானா, அவனைத் தேடிக்கொண்டுள்ளார்களா என்று அவளிடம் கேட்டார்.  ‘அவன் வீட்டாரை அவர்களது கம்மங்காட்டிற்குள் போய்ப் பார்க்கச் சொல்என்றார். அவன் என்ன நிலையில் இருந்தான் என்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. வகுப்பில் அவர் அதைச் சொல்லவில்லை

. ‘முன்னுணர்தல்கதையில்,  2021-ஆம் வருடத்தில், எழுபது வயதான மாதவ ராவ் தாத்தாவிற்கும் எல்லாமே முன்னரே உணரமுடிகிறது. . நாற்பத்தி சொச்சம் வயதில், பீடிப்பு நிலையில் இருக்கும் பொழுது ராவ் சொன்னதாகஅவர் மனைவி கதை சொல்லியிடம் சொல்கிறார்.   “ஸார் வேணாம் ஸார். இந்த எலக்ஸன் போனாப் போவது ஸார். இன்னும் எவ்வளவு காலம் இருக்கு. பாத்துக்கலாம் ஸார். சுத்திலும் கொலைக்காரங்களா நிக்கிறாங்க ஸார். அந்தப் பிள்ளயக் கிட்ட விடாதீங்க ஸார்மறு நாள் காலை தினசரியில் வந்த செய்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரச் செய்கிறது

குள்ளச் சித்தன் சரித்திரம்நாவலில் 1948-ம் வருஷம் ஜனவரி 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஸ்ரீ முத்துச்சாமி கண்களை மூடி அமர்ந்திருக்கிறார். கண் திறந்தவர், தனக்குத்தானே பேசிக்கொள்பவர்போல, அடேடே , கிளம்பிட்டாரே என்கிறார். ஹலாஸ்யத்தை அருகே கூப்பிட்டு, ‘காந்தியைச் சுட்டுவிட்டார்கள்என்கிறார்

எனது நேர்பேச்சில் ஒரு முறை கி.ராஜ நாராயணன் அவர்கள், மரங்கள் பேசும், மாடுகள் பேசும். நமக்கு அவைகள் பேசுவது புரியாததால், அவைகளுக்கு பாஷை இல்லை என்று சொல்லிவிடுகிறோம் என்றார். ஜெயமோகன் , சமீபத்திய அமெரிக்கப் பயணத்தில் ஃப்ளோரிடாவில் அவர் கண்ணோடு கண்ணாக பார்த்துக்கொண்ட அணில் பற்றி , ‘அந்தச் சந்திப்பில் நான்  கொல்பவனல்ல என்று அதுவும், அது இனியது என நானும் உணர்ந்தோம்’  என்கிறார். தேவ தேவனிடம் குருவிஉனக்குப் பறக்கத் தெரியுமா?” எனக் கேட்கிறது. அதற்கு அவர், “பறக்கத் தெரிந்தவன்தானே எழுத முடியும்என்கிறார். குருவியும் விடாமல், ‘அப்படியா ரொம்ப சந்தோஷம். அதுதான் உன்னைப் பார்த்தவுடனேயே எனக்கு உன்மேல் ஒரு பிரியம் ஏற்பட்டது போலிருக்கிறது. சரி இப்போது என்னோடு வருகிறாயா ஒரு ரவுண்டு போய்வருவோம்என்கிறது. எல்லா உயரினங்களோடும் அணுக்கமாகவும் உரையாடிக்கொண்டும் இருக்கும் இந்தக் கலைஞர்களோடு, கதைசொல்லி யுவனும் இணைந்து கொள்கிறார்.  

 ‘விருந்தாளிகதையில் காக்கா கதைகதையாக சொல்கிறது. அதன் மருமகனுக்கு கப்பலில் வேலை என்கிறது. தனது மனைவி ஆலமரத்தெருவரை சொந்தக்காரப் பையன் தற்கொலை செய்துகொண்டதால், துக்கம் விசாரிக்கப் போயிருப்பதாக சொல்கிறது. அந்த உயிரனங்களின் பாஷையில் மனிதர்களின் தற்பெருமையை கேலி செய்கிறார் , ‘உங்கள் இனத்தில் கம்ப்யூட்டர் உண்டோ?’ என்ற கேள்விக்கு,  ‘என் சொந்தக்காரப் பெண் ஒருத்தியை சைபீரியாவில் ஒரு நாரைக்கு கட்டிக் கொடுத்திருக்கிறது. வருடம் தவறாமல் குடும்பத்தோடு இங்கே வந்து போகிறார்கள். நானும் குடும்பத்தோடு போய் அவர்களுடன் சில நாள் தங்கிவிட்டு வருவேன். தகவல் தொடர்பு இல்லாமலா இதெல்லாம் நடக்கிறதுஎன்று பதில் சொல்கிறது

திரும்பவும் கி.ராஜ நாராயணன் சொன்ன கூற்றுக்கே வருகிறேன். ‘குள்ளச் சித்தன் கதையில்’  ‘மௌன்ட் பேட்டனுக்கு,’ ஒரு பைராகியின் தயவில் அவரது முன் ஜன்மத்தில் பெங்குயினாக, கழுகாக, புலியாக இருந்ததெல்லாம் தெரிய வருகிறது. ‘நீ மனிதனாக கேட்டதால், மனித பாஷையில் சொல்கிறேன். நான் பெங்குயின் ஆக இருந்தபோது, சக பெங்குயின் கேட்டிருந்தால் பெங்குயின் பாஷையில் சொல்லியிருப்பேன். அவ்வளவுதான்’ . இதைச் சொல்லச் சொல்லவே, தேவ தேவனின் காகங்கள் கவிதைகளும் ஞாபகத்தில் வருகிறதுஇந்தப் பதிவு யுவனுக்கானது என்பதால், வேறு என்ன அவரது எழுத்தின் இரகசியங்கள் எனப்  பார்க்க நகர்கிறேன்.

புனைவுகள் வாசித்து முடித்த பிறகும், நம்மோடு நிழலாக உழல்பவர்கள் பாத்திரங்கள்.   யுவனோ, அவர் சார்பாக கதைசொல்பவர்களோ சுவாரஷ்யமாகவும், புதுபுது உத்திகளுடனும் சொல்லும் வக்கனையான விவரணைகளால் பாத்திரங்களை என் நினைவில் விட்டுச்சென்றிருக்கிறார்கள்.. ஆயிரக்கணக்கான கதைகளைச் சொல்லியிருக்கும் யுவனின் பாத்திரங்கள் பல்லாயிரக்கணக்கானவர்களாக இருக்கும். என்னால், குறைந்தது ஐம்பதாவது நினைவிலிருந்து சொல்லமுடியும். கட்டுரையின் நீளம் கருதி , நான், தோற்ற இசை வல்லுனனின் கதை சொல்லும் நாவலான கானல் நதியையும் வாசித்திருக்கிறேன் என்று பதிவு செய்தாக வேண்டும் என்ற  நியதியும்  இருப்பதால், சில உதாரணங்கள் மட்டும்.. 

 ‘குள்ளச் சித்தன் சரித்திரம்நாவலில், ‘சிகப்பி நல்ல கருப்பி’  என்று அறிமுகப்படுத்துகிறார். இன்னொரு இடத்தில் அவளைப் பற்றிய முழு விவரணை உள்ளது. //கருவறையிலிருந்து வந்த விக்கிரகம்போல் இருப்பாள். தீர்க்கமான மூக்கு. பருத்த உதடுகள். மிகப்பெரிய கண்கள். நடக்கும்போது கால்கள் ஒன்றையொன்று பின்னுவது போல நடப்பாள். பேச்சில் வெகுளித்தனம் வழியும். வீங்கின குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும் அவளை.// 

கானல் நதி நாவலில், கேசவ் சிங் சோலங்கி (யுவன்), ஹிந்துஸ்தானி சங்கீதம் தெரிந்தவர்களுக்குப் பரிச்சியம் ஆனவர்நாவலின் கதா நாயகன் , தனஞ்சய் முகர்ஜிக்கு சங்கீதம் கற்றுக்கொடுத்த விஷ்ணுகாந்த் சாஸ்திரியை இப்படி அறிமுகப்படுத்துகிறார். //முக்கால்வாசி நரைத்த தலை. மூங்கில் சுழி போல ஒல்லியான உடம்பு. ஒட்டிய வயிறு. பஞ்சகச்சமும், குர்த்தாவும், அணிந்து , வலது கையில் மணிப் பிரம்பு வைத்திருக்கிறார். விறுவிறுவென வேகமான காலை நடை ஆனாலும் புழுதி எழாமல் பாந்தமாக நடக்கிறார். சன்னமாக ஒரு ராகத்தை முனகிக்கொண்டு போகிறார். //

தனஞ்சயின் தந்தை, கிரிதா முகர்ஜி பற்றிய அறிமுகம் ஒரு வரியில், ‘பெரியவரின் முகத்தில் தாடியும் கவலையும் மண்டியிருக்கிறது’. சிறுவயதில் கைம்பெண்ணாகி அவர்கள் வீட்டில் தங்கிவிட்ட, கிரிதா முகர்ஜியின் அத்தையை, ‘நம்மைப் போல இல்லை அவள். பேசுவதகு எதிராளி தேவைப்படாதவள்’  என்கிறார்

நிலக்காட்சிகள், விவரிப்புகள் என்று வரும்பொழுது,   நான் வாசித்த வரையில், ‘அவரவர் கதை’-யில் வரும் கரட்டுப்பட்டியைத்தான், கிருஷ்ணன் ஊர் என்று மனதில் இறுத்தி வைத்துள்ளேன். //கரட்டுப்பட்டிக்கு அந்தப் பெயர் வரக் காரணமாய் அமைந்த வெள்ளைக் காடு. பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை  நோக்கிச் செல்லும் சாலையில் இடதுபுறம் உள்ளொடுங்கி இருக்கிறது. தொலைவிலிருந்து பார்க்கும்போது, ஒங்கி நிற்கும் வெள்ளை யானையைப் போல் இருக்கும். ஒரு பக்க வயிறு அதுங்கிய வெள்ளை யானை. மழைக்காலங்களில் பால் நிறமாய் மினுங்கும் யானை, காற்றுக் காலங்களில் ஒருவித பழுப்பு நிறம் பூணும். // 

கானல் நதி நாவல், கல்கத்தாவில் ஹூக்ளியாக ஒடும் கங்கை நதியை  ட்ரோனாக  மேலேயிருந்து பார்த்து இரண்டாகப் பிரித்து கிழக்குப் பகுதியை ஹௌரா என்றும், மேற்குப் பகுதியை கல்கத்தா என்றும் அறிமுகப்படுத்துகிறது

வேப்பமரங்கள் உள்ள இன்னொரு இந்திய மாநிலம் வங்கம் என்று கானல் நதி நாவலில் தெரிய வருகிறது. // தலைவிரித்துத் தனியாக நின்றிருந்தது வேப்பமரம். தனஞ்சயன் ஒட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். இரவில் தூங்க வைப்பதற்காக, தலையை அம்மா கோதிவிடுவது மாதிரி, காற்று அவ்வப்போது வேம்பின் தலையைக் கோதிவிட்டுப் போனது. சந்தோஷமாகத் தலையாட்டியது மரம். //

யுவன் தனித்தளம் வைத்து கட்டுரைகள் எழுதி, வாசகர்களுக்கு இலக்கிய வழிகாட்டவில்லை என்பதை கிருஷ்ணன் பூர்த்தி செய்து விடுகிறான்சொன்னால் நம்பமாட்டீர்கள்கதையில் அவன் தன்னை இப்படி அறிமுகம் செய்து கொள்கிறான். “தெருவில் நடைமுறையாகப் பார்க்கும் எவருமே எனக்குப் பிடித்த எழுத்தாளர் எவருடையவாவது கதாப்பாத்திரமாகத்தான் மனதுக்குத் தெரிவார்கள். உதாரணமாக, வாய் நிறைய வெற்றிலை குதப்பிக்கொண்டு வருகிறவர் தி. ஜானகிராமனின் நாவலிலிருந்து இறங்கி வந்தவராக. சுருக்கமான வார்த்தைகளில் பேசுகிறவர் அசோகமித்திரன் பாத்திரம். எடக்கு மடக்காகப் பேசுகிறவர். புதுமைப்பித்தனிடமிருந்து. புதுசாகக் கல்யாணமான ஜோடி என்றால் கு..ராவிடமிருந்து.  ‘நூற்றிச் சொச்சம் நண்பர்கள்கதையில் மொழி , தேச, கால பேதம் எதுவும் இல்லாமல் கிடைத்த நண்பர்கள் என தி. ஜானகிராமன், ஜி. நாகராஜன், ராபர்ட் பிர்ஸிக், ரச்சர்ட் ஃப்பெயின்மேன், கார்லோஸ் கேஸ்டெனெடா, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி  எழுத்தாளர்களை  குறிப்பிட்டு ஆசுவாசப்பட்டுக்கொள்கிறான்அதே கதையில் ப.சிங்காரமும், .நா.சுவின் மயன் கவிதைகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன

தமிழ் புராணங்களில், காவியங்களில், புனைவுகளில்  LGBTQIA பதிவாகியுள்ளதா என கேட்கும் நண்பர்கள் உண்டு. கனடாவில், ஜெயமோகன், ‘தமிழ் இலக்கியத்தில் அறம்என்று ஆற்றிய உரை முடிந்து ஒரு கேள்விக்கான பதிலில், இன்றைய சமூகத்தில் LGBTIQIA-வை மதிக்கவில்லையென்றால் அறம் தவறுகிறோம் என்ற நிலையை அடைந்திருக்கிறோம் என்றார். தேவ தேவனின் சுயகுறிப்புகள் கவிதையில் //ஆணா பெண்ணா ? அர்த்த நாரீஸ்வரன் // என்று வெளிப்படுத்திக்கொள்கிறார்யுவனின்நூற்றிச் சொச்சம் நண்பர்கள்கதையில், கதைசொல்லி அவனது அப்பாவிடம், ‘ஆம்பளையும் இல்லே பொம்பளையும் இல்லேன்னா, அவா மனுஷாளே கிடையாதா?’ என்று கேட்கிறான். அப்பாவின் பதில் சேரக்கூடாதவர் என யாரும் இல்லையென இந்த பதிலையும் ஒரு பாடலையும் சொல்லித் தருகிறார்.. //அப்படியெல்லாம் பேசக்கூடாது ராஜா. அவாளும் மனுஷாதான். பார்வையில்லாமே, காதுகேக்காமே, காலோ கையோ இல்லாமே மனுஷா இருக்காளா இல்லையா? அது மாதிரிதான் இவாளும். இவாளுக்கு ஆம்பளை பொம்பளைங்கிற அடையாளம் இல்லை. அவ்வளவுதான். மத்தபடி நமக்கும் அவாளுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. //

யுவனின் படைப்புகளில் ஒரு முப்பது சதம் வாசித்திருப்பேன். மீதம் இருக்கும் அவரது படைப்புகளை முழுதாக வாசித்துகிருஷ்ணன்  கோடிட்டு காட்டும் நூல்களையும் வாசித்து அனுபவிக்க காலமும் அவகாசமும் இருந்தால் போதும். யுவனிடம் கேட்பதற்கு  வேறொன்றுமில்லை, எனக்கு. இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது பெரும் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் காலையில் நண்பர் ஒருவர் இன்றே பிறந்த  அவரது  குழந்தையின் படம், பெயர், நேரம் என அனுப்பியிருந்தார். குழந்தையின் பெயர், யுவன் !

ஆஸ்டின் சௌந்தர் 

முந்தைய கட்டுரைஇரவு வாசிப்புகள்
அடுத்த கட்டுரைசௌந்தரேஸ்வரர் கோயில்