ஒரு கவிதைச்சாதனை

கடந்த சில வருடங்களில் தமிழில் எழுதப்பட்ட கவிதைகளிலேயே மிகச்சிறந்த கவிதை இவ்வாரத் திண்ணை இதழில் ருத்ரா என்ற புதிய கவிஞர் எழுதியதுதான் என்று சொல்லமுடியும்

பல சிறப்பம்சங்கள்.

1. படிமங்களே இல்லை.  நேரடியாகவே அனுபவம் கூறப்பட்டுள்ளது. எந்தவிதமான சுற்றிவளைத்தல்களும் இல்லை. படிமங்களைக் கண்டு அஞ்சி நவீனக்கவிதையை புரிந்துகொள்ளாமல் ஓடுபவர்கள் இக்கவிதையை வாசித்துப்பார்க்கலாம். அனுபவம் நேர்மையாக, அப்பட்டமாகப் பதிவாகியிருக்கிறது

2. வர்ணனைகள் மற்றும் அடைமொழிகள் நாம் அன்றாடம் நம்மைச்சுற்றிப் புழங்கும் மொழியில் இருந்து நாம் அன்றாடம் கேட்பவைபோலவே உள்ளன. ஆகவே நாம் கவிதைக்குள் இயல்பாகச் செல்லமுடிகிறது. எந்தத் தடையும் இல்லை.

3 . சிக்கலான உணர்வுகளைச் சொல்கிறேன் பேர்வழி என்று கவிதையையும் சிக்கலாக்கிவிடும் இன்றைய கவிஞர்களின் நடுவே நேர்மையாகவும் நேரடியாகவும் உணர்வெழுச்சியைப் பதிவுசெய்திருக்கிறார்

4. க.நா.சு- சுந்தர ராமசாமி மரபு,கவிதையில் இருந்து உணர்ச்சிகளை வெளியேற்றியது.  அதன் பின் கவிதைகள் வெறும் சக்கைகளாகவே வெளியே வந்தன. இக்கவிதையின் உணர்ச்சி உண்மையானது. தமிழ்நாட்டில் பல லட்சம்பேர் இதன் உணர்வெழுச்சியுடன் ஒன்றுவார்கள் என எவரும் சொல்லமுடியும்.

5. கவிதையை நவீனத்துவம் தனிமனிதனை நோக்கிக் குவியச்செய்தது.  விளைவாகக் கவிதையில் சமூகப்பிரக்ஞையே இல்லாமலாகியது. இக்கவிதை நேரடியாகத் தமிழ்ச்சமூகத்தை நோக்கிப்பேசுகிறது.

நவீனக்கவிதையைப் பகடி செய்யும் பா.ராகவன் போன்றவர்கள் இக்கவிதையை மனநிறைவுடன் விரும்புவார்கள் என நினைக்கிறேன்.

ருத்ரா,தமிழ்க்கவிதையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்திருக்கிறார். இதுவரை வெளிவந்த தமிழ்க்கவிதைகளின் நெடியே இல்லாமல், சொல்லப்போனால் உலகமொழிகளி எழுதப்பட்ட எந்த கவிதையின் சாயலும் இல்லாமல்,  புத்தம்புதிதாக வெளிவந்திருக்கிறார் என்பதை ஒரு சாதனையாகவே சொல்வேன்.

 

ருத்ரா தொடர்ந்து எழுதவேண்டும்.  வெளியிட்ட திண்ணை இதழுக்கும் அதன் ஆசிரியர்குழுவுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

 

 

ருத்ராவின் கவிதையைப்படிக்க

 

முந்தைய கட்டுரைஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7
அடுத்த கட்டுரைலயா