பேரியாற்றுக் குமிழிகள்

காசியில் உலவுவது முகங்கள் வழியாக இந்திய தேசத்தை அறிவதுதான். பலருக்கு தெரியாத ஒன்றுண்டு, காசிக்கு வருபவர்களில் முக்கால்பங்கினர் தென்னிந்தியர்களே. வட இந்தியர்கள் ராமேஸ்வரம் வருவதுபோல. மனிதர்களுக்கு ராமேஸ்வர் என்ற பெயர் தெற்கே அனேகமாக இல்லை, வடக்கே அது சாதாரணம், வடக்கே காசி என்ற பெயர் அரிது. தெற்கே எப்படியும் நம்மருகே ஒரு காசியோ விஸ்வநாதனோ இருப்பார்கள். 

காசியில் முகங்களை பார்த்துக்கொண்டே செல்வேன். இந்திய மக்களின் விந்தையான முக அமைப்புகளை, அவற்றின் முடிவில்லா நுண்வேறுபாடுகளை நாற்பதாண்டுகளுக்கு முன்னரே கவனித்திருந்தேன். இன்று உலகம் சுற்றி வந்தபின் தெரிகிறது, அவை உலக இனங்களின் முகங்கள். ஆப்ரிக்கக் கலவை முகங்கள், தென்னிந்திய முகங்கள், துருக்கிய முகங்கள், ஆப்கானிய முகங்கள், ஐரோப்பிய வெள்ளைக்கார முகங்களைக்கூட இந்தியக்குடிகளில் காணமுடியும். தென்னகத்தில் பலசமயம் ஒரே குடும்பத்தில் கணவர் கரிய தென்னிந்திய தோற்றமும் மனைவி பூனைக்கண்களுடன் ஐரோப்பியச் சாயலும் கொண்டிருப்பதுண்டு.

ஆனால் விந்தையாக இம்முறை கண்டது நம் குருதியிலுள்ள மங்கோலியக் கலப்பு. வடக்கே அஸாம், வங்கம், ஒரிசா பகுதியிலுள்ளவர்கள் தெளிவான மங்கோலியச் சாயல் கொண்டவர்கள். வடகிழக்கு அப்படியே சீனமுகம்தான். ஆனால் பிகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே கூட சீனத்து மஞ்சள் நிறமும், உருண்டை முகமும், சிறிய கண்களும் ஏராளமாக உள்ளன.

காசிக்கு வந்துகொண்டே இருப்பவர்கள் பல வகையினர். பெரிய குடும்பங்களில் பெண்கள் அதிகாரமாகவும் கொண்டாட்டமாகவும் திகழ்கிறார்கள். ஆண்கள் அடங்கிய தளர்நடையுடன் செல்கிறார்கள். பெரிய குடும்பக்குழுக்களைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம். எவர் என்ன உறவு, என்ன படிநிலை என்பதை வெறுமே பார்த்தே சொல்லிவிட முடியும். கணிசமான மூத்த குடும்பத்தலைவிகள் தளர்ந்து, ‘அவ்ளவுதான், காசியையும் பாத்தாச்சு’ என்னும் நடையுடன் இருப்பார்கள்.

ஆனால் இளம்பெண்கள் கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள். நெற்றியில் மஞ்சள்குங்கும பூச்சு அணிந்து அதை கண்ணாடியில் பார்த்து ரசிப்பதாகட்டும், அதை உடனே செல்ஃபி எடுத்து அனுப்புவதாகட்டும், தோழிகளை அழைத்து ‘வீடியோ சேட்’ செய்வதாகட்டும். ஆனால் இன்னும் வட இந்தியாவில் நம்முடைய ‘ரீல்ஸ்’ கலாச்சாரம் ஊடுருவவில்லை. எவரும் எங்கும் செல்போன் காமிரா முன் நடனமாடி நான் பார்க்கவில்லை.

பெரிய பயணக்குழுக்களில் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்வதற்கே முதற்கவனம் செலுத்துகிறார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தபடி அழைத்தபடி. உடன்பிறந்தார் சேர்ந்து மறைந்தவர்களுக்காக நீர்க்கடன் செலுத்த வருகிறார்கள். வளர்ந்துவிட்டால் உடன்பிறந்தார் வேறுவேறு மனிதர்களாக ஆகிவிடுகிறார்கள். இந்தவகையான ஒரு பயணம் அவர்களை மீண்டும் சிறுவயதுபோல் கைகோக்கச் செய்கிறது.

படித்துறைகளெங்கும் நீர்க்கடன் சடங்குகள். இச்சடங்குகள் ஒவ்வொரு பகுதிக்கும் சிறுசிறு மாறுதல்கள் கொண்டவை. காசியில் ஒரு பொதுவான சடங்குமுறையை அவர்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பத்தே நிமிடத்தில் புயல்வேகமாகச் செய்து முடிப்பவர்கள் உண்டு. மிகமிகக் குறைந்த செலவில் செய்ய விரும்பி ஒரு கைகழுவுவதுபோலச் செய்து முடிப்பவர்களும் பலர். எங்கும் பேரம்பேசுதல், சிணுங்கல், சண்டை… எல்லாம் முடிந்து அதிருப்தியுடன் கிளம்புபவர்களும் உண்டு.

காசிக்கோ வேறெங்கோ கிளம்பும்போதே உலகியலாளர்களாகிய நம் சுற்றம் நமக்கு அளிப்பவை ஓர் ஆலோசனை, ஓர் எச்சரிக்கை மட்டுமே. இன்னின்ன இடங்களில் இன்னின்ன பொருட்களைச் சாப்பிடுங்கள், நன்றாக இருக்கும் என்பது முதலில் சொல்லப்படும். இப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள், ஜாக்ரதையாக இருங்கள் என்பது இரண்டாவதாக. திரும்பத் திரும்ப இவைதான். இன்னின்னவற்றை பாருங்கள், இன்னின்ன ஆலயங்களில் வழிபடுங்கள், இப்படியெல்லாம் அங்குள்ள மனநிலை இருக்கும் என ஒரு வரி காதில் விழாது.

ஆகவே வருபவர்கள் முதற்கணம் முதல் மிகமிக எச்சரிக்கையாகிவிடுகிறார்கள். வாழ்நாளெல்லாம்  எங்கெங்கோ எவ்வளவோ கோட்டைவிட்டவர்கள் ஐந்துரூபாய் பத்துரூபாய்க்குக் கணக்கு பார்க்கிறார்கள். என்னை ஏமாற்றமுடியாது என கொக்கரிக்கிறார்கள். ஏமாற்றிவிட்டான் என்று பொருமுகிறார்கள். மொத்த காசியையே அப்படியே கடந்துவிடுகிறார்கள். பெரும் பணம் செலவிட்டு அங்கே வந்து காசி என்னும் அனுபவத்தை இழப்பதை அறிவதே இல்லை. ஏமாற்றப்பட்டால்கூட என்ன பெரிதாகப் போய்விடப்போகிறது என எண்ணிவிட்டால் பெரிய இழப்பு வருவதில்லை.

சடங்குகள் முடிந்ததும் இலகுவாகிறார்கள். வெற்றிகரமாக முடித்தாகிவிட்டது. “ஏமாத்த ப்பாத்தான், யார்ட்ட?” என்னும் பாவனையுடன் அடுத்த கடமை. தேடித்தேடிச் சாப்பிடுவது. “தசாஸ்வமேத கட்டுக்குமேலே சூடா வடாபாவ் போடுவான். மிஸ் பண்ணிராதீங்க” என்று எவரோ சொன்னதற்காக தேடி கண்டுபிடித்து “ஏய் இங்கதாண்டீ… பன்னாலால் போஜனாலய்… இதான் சுப்ரமணி சொன்ன இடம்” என்று நெருக்கியடித்து வாங்கி சாப்பிட்டால் சொரேர் என்றாகி “நல்லாத்தான் இருக்கு… ஆனா கடுகெண்ணை போடுறான்” என சமாளித்து அப்படியே பொடிநடையாக திரும்பிச் செல்லுதல்.

காசி அதிகாலையிலேயே விழித்தெழுகிறது. காலையில் கங்கையில் குளித்துவிட்டு விஸ்வநாதரை தொழும்பொருட்டுச் செல்பவர்களின் கூட்டம். ஈர ஆடை அணிந்த பெண்கள். வெயில்படாத முதுகுடன் ஆண்கள். தூக்கக்கலக்கத்தில் பிரமை பிடித்ததுபோல குழந்தைகள். கங்கைமேல் சூரியன் உதிப்பதற்குள்ளாகவே நீர்வெளி ஒளிகொண்டுவிடும். படகுகளில் வண்ண ஆடைகளுடன், பஜனை பாடியபடி மறுகரைகளுக்குச் செல்லும் கூட்டம். மலர்கள் வண்டுகளால் ரீங்கரிப்பதுபோல கங்கை ஓசையிடுகிறது.

மணிகர்ணிகா கட்டமும், ஹரிச்சந்திரா கட்டமும் உறங்குவதில்லை. அதிகாலையிலேயே சிதைகள் கொழுந்தாடி சுழல்கின்றன. ஆலயங்களின் சங்கொலிகள் எழுகின்றன. சின்னச்சின்ன கோயில்கள். கோயில்கள் கூட இல்லாத இறைப்பதிட்டைகள். எங்கும் எவரோ ஒருவர் பூஜை செய்கிறார். எவருமே இல்லை என்றாலும் அது நிகழ்ந்தபடியே இருக்கிறது.

பொதுவாக ஒரு கூற்று உண்டு, இங்கே பூசை செய்பவர்கள் எல்லாருமே வெறுந்தொழிலாகச் செய்கிறார்கள், உண்மையாக எவருமில்லை என. அப்படி எண்ணினால் அப்படித்தான் கண்ணில்படும். காசி லட்சம் ஆலயங்கள் கொண்ட ஊர் என்பார்கள். சத்திரங்கள், அரண்மனைகள், பஜனைமடங்கள், சமாதிகள் என எங்கெங்கோ சிறு கோயில்கள் உண்டு. பல கோயில்கள் கைவிடப்பட்டவை. ஆனால் எல்லா இடங்களிலும் பூஜைகள் நிகழ்கின்றன. பல சிறு ஆலயங்களில் எவருமே இல்லாமல் மந்திரம் சொல்லி பூஜை செய்யும் இளைஞர்களைக் காணமுடிந்தது.

காலையில் எழுந்து வந்து மீன்களுக்கு உணவிட்டுக்கொண்டிருந்தார் ஒருவர். அரிச்சந்திரா கட்டத்தில் நீர்க்கடன் முடிந்தபின் குடுமியுடன் மழிக்கப்பட்ட தலைமின்ன ஒருவர் அமர்ந்திருந்தார். சிதையருகே பீடி பிடித்தபடி பலர் நெருப்பை நோக்கிக்கொண்டிருந்தனர்.

ஆனால் பல சாமியார்கள் காலையில் எழுவதில்லை. பெரிய கம்பிளிப்பொட்டலமாக கங்கைக்கரையிலேயே தூங்குகிறார்கள். கம்பிளிக்குமேல் நாய் படுத்து எல்லையை காவல் காக்கிறது. கூடாரங்களில் எழுத்து கம்பிளி போர்த்திக்கொண்டு ஹூக்காவுடன் அமர்ந்திருக்கிறார்கள். அனல் அருகே புகைந்து ஒலித்து சுடர்கொண்டிருந்தது. சிலர் சேர்ந்தமர்ந்து போதைக்குள் நுழைந்துகொண்டிருந்தனர். அவர்களின் கண்கள். வேறொரு உலகத்தில் இருந்து ஒரு மர்மச்சாளரம் வழியாக நம்மைப் பார்ப்பவர்கள் என்று தோன்றும்.

நாடோடிகளும் இன்னொரு உலகைச் சேர்ந்தவர்களே. அவர்கள் தனித்து அமர்ந்திருந்தனர். தனித்து நடந்தனர். நம் கண்களை சந்தித்ததும் நோக்கை விலக்கிக் கொண்டனர். எங்கிருந்து வருகிறார்கள்? ஏன்? முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்பு நானும் அப்படித்தான் வந்தேன். அன்று இருந்த உலகம் வேறு, அன்றிருந்த சிக்கல்களே வேறு. ஆனால் அன்றிருந்த தனிமை அப்படியே மானுடருள் வாழ்கிறது.

காசியை சாமானியர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. பலர் ஒருவகை திகைப்புடனேயே அங்குள்ள சாமியார்களை, போதையடிமைகளை, சோம்பேறிகளை பார்க்கிறார்கள். “இவாள்லாம் என்னாம் ஜோலி செய்யப்படாதோ?” என்று ஒரு பாலக்காட்டுக்காரர் என்னிடம் ஒருமுறை கேட்டார். “ஜோலி பாக்கணமானா ஏன் இங்க வரணம்?” என்று நான் சொன்னேன். மேலும் திகைத்துவிட்டார்.

கலைஞர்கள் ஒருமுறையேனும் காசியை பார்க்கவேண்டும் என நான் நினைக்கிறேன். கலைநெஞ்சின் விலக்கமும் தனிமையும் கொண்டவர்களுக்கு மட்டுமே காசி எவ்வகையிலேனும் பிடிபடும். அவர்கள் அங்குள்ள சாமியார்களில், சோம்பேறிகளில், கஞ்சாக்கோஷ்டியில் ஒருவராக மானசீகமாக அமர்ந்துகொள்ள முடியும். காலாதீதமான ஓர் இந்தியாவுடன் தன்னை அவர்கள் இணைத்துக்கொள்ள முடியும்.

காசியில் இருக்கையில் உண்மையில் எனக்கு நினைவுக்கு வந்தவர்கள் கவிஞர் தேவதேவனும் மனுஷ்யபுத்திரனும். அவர்கள் மிக ஆழமாக காசியை உணரமுடியும் என்று தோன்றியது. மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு வரி குறுஞ்செய்தி அனுப்பினேன். “காசியில் இருக்கிறேன்” என்று மட்டும். “ஒருமுறை அங்கே செல்லவேண்டும் என்பது என் எண்ணம்” என்று மறுமொழியிட்டிருந்தார்.

அப்பால் மோடியும் யோகியும் உருவாக்கிய காசிப்படிக்கட்டு, சுற்றுலாமையம். அங்கே ஒருமுறை சென்றேன். அங்கே எனக்கு உணர்வதற்கு ஒன்றுமில்லை. இங்குதான் ஏதோ இருக்கிறது. இங்குள்ள குப்பைகள், சாக்கடைகள், நாய்கள், சேறு, உடைசல்கள் நடுவே. இங்குள்ள சிறுசிறு தெய்வங்கள், பெயரறியாதன எவரெவரோ சமாதியான அடையாளங்களினூடாக. இந்தியா ஒரு மூளை என்றால் காசி அதில் பித்து ஊறவைக்கும் ஒரு சிறு சுரப்பி.

பல சிறு சுவரொட்டிகளை காசி முழுக்க காணமுடிந்தது. காணாமல் போனவர்களை கண்டறிந்து சொன்னால் பரிசளிப்பதான அறிவிப்புகள். ஒரு குஜராத்தி காணாமலான அவர் தந்தையை கண்டறிந்து சொல்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என போஸ்டர் ஒட்டியிருந்தார். அகமதாபாத்காரர். ஒரு மலையாள அறிவிப்பு. காணாமலாகிப்போன ஒருவருக்கான தேடல். எல்லாம் பெருந்தொகைகள். கிளம்பிவிட்டவர் எழுபது கடந்த முதியவர்.

ஒருவர் வீட்டை விட்டு கிளம்பியபின் அவருடைய இடத்தை மதிப்பிட முடிகிறதா என்ன? அதைத்தான் பணத்தால் சமன்செய்து இந்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்களா?  அல்லது கிளம்பிவிட்ட ஒருவரை தொடர்ந்து வரும் குடும்பத்தின் ஆற்றலின் மதிப்பா அந்த தொகை?

முந்தைய கட்டுரைசௌந்தரேஸ்வரர் கோயில்
அடுத்த கட்டுரைநிகழ்வுகள், சந்திப்புகள்- ஒரு கடிதம்