காசி விஸ்வநாதர் ஆலயத்தை நான் என் பத்தொன்பது வயது முதல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அங்கே எப்போதுமே பெருங்கூட்டம்தான். முகலாயர் ஆட்சிக்காலத்தில் இடிக்கப்பட்டு கற்குவியல்களாகக் கிடந்தபோதுகூட ஒருநாளுக்கு இரண்டாயிரம்பேர் வரை வந்து அக்குவியல்களுக்கு நடுவே இருந்த சிறிய லிங்கத்தை வழிபட்டுக்கொண்டுதான் இருந்தார்கள்.
நான் காசியில் இருந்த நாட்களில் எப்போது கூட்டம் மிகக்குறைவாக இருக்கும் என நன்கறிந்திருந்தேன். அப்போது உள்ளே சென்று பக்தர்களே தங்கள் கைகளால் லிங்கத்தை தொட்டு பூசை செய்யலாம். பலமுறை உள்ளே சென்று பார்த்து வெறுமே வணங்கிவிட்டு வந்துள்ளேன். நான் பூசனைகள் செய்வதில்லை. நித்யாவைச் சந்திப்பதற்கு முன்பிருந்தே. பக்தர்கள் வழிபட இப்போதும் அனுமதி உண்டு. ஆனால் பெருந்திரளால் அது இயல்வதாக இல்லை.
காசியின் சிவலிங்கம் சிறியது. தொன்மையான சிவலிங்கங்கள் எல்லாமே பெரும்பாலும் மிகச்சிறியவை. இயற்கையானவையும்கூட. இதுவும் கங்கையில் எடுக்கப்பட்ட ஒரு நீளுருளைக் கல்தான். முன்பிருந்த அதே தரைத்தளத்தில் ஆழமாகப் பதிக்கப்பட்டதாகையால் இப்போது மூன்றடி ஆழமான குழிக்குள் உள்ளது. சுற்றிலும் சுவர் கட்டி அதற்கு பித்தளை காப்பு கட்டியிருக்கிறார்கள். இடைவிடாத நீராட்டும் மலராட்டும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. உலகுபுரக்கும் பேராற்றல் இந்தச் சிறு கல்லில் என நம்பிக்கை. எந்தச் சிறுகல்லிலும்தான் என்னும் தரிசனத்தின் இன்னொரு வடிவம் அது.
இம்முறை விஸ்வநாதர் ஆலயத்துக்கு எளிதாகச் சென்றுவிட்டோம். நண்பர் நடராஜன் சொல்லி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரப்பொறுப்பாளரைச் சந்தித்தோம். காசி விஸ்வநாதருக்கு இரண்டுவேளை பூசனைக்கான தூபமும் விபூதியும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் உள்ள நகரேஸ்வரர் ஆலயத்தில் இருந்து செல்கிறது. அதற்கான ஊழியர்களும், சடங்குமுறைகளும் உள்ளன. பெருவெள்ளம் வந்து விஸ்வநாதர் ஆலயமே மூழ்கியிருந்தபோதுகூட படகில் சென்று செய்யவேண்டியவற்றைச் செய்ததாகச் சொன்னார்கள்.
காலை பத்தரை மணிக்கு தூபக்குற்றியுடன் ஒருவர் முன்னால் சென்றார். துறவிகளும் சடங்குசெய்பாவ்ர்களுமாக சிலர். தவில் மேளத்துடன் ஊர்வலமாக நகரத்தெருக்களில் நடந்தோம். நீண்ட வரிசைகளை ஊடுருவிக்கடந்து ஒரு வாசல் வழியாக நேராக விஸ்வநாதரின் கருவறைக்கு அருகே சென்றுவிட்டோம். அங்கே பெஞ்சு போட்டு அமர்ந்து அப்பால் மிக அருகே நிகழ்ந்த மதியவேளைப் பூசையை கண்டோம்.
எல்லா மலரணிகளும் நீக்கப்பட்டு லிங்கம் வெறுமை செய்யப்பட்டது. கங்கைநீர் குடம்குடமாக கொட்டப்பட்டது. கழுவி, மஞ்சள்நிற துணியால் துடைத்து தூய்மையாக்கப்பட்டது. அதன்பின் விபூதி, நெய், தேன், பால், மோர், நறுமணத்தைலங்கள் என முழுக்காட்டுகள். அன்னம் முழுக்காட்டப்பட்டபின் மீண்டும் நீராட்டு. அதன்பின் கரிய ஒளியுடன் ஒரு நீர்க்குமிழி என ஒளிவிட்ட லிங்கத்துக்கு மலர் அலங்காரம் செய்ய ஆரம்பித்தனர்.
அந்த மலர் அலங்காரம் ஒரு விந்தையான கலைநிகழ்வு போலிருந்தது. திரண்ட தோள்கள் கொண்ட, பெரிய மீசை வைத்த பூசகர். ஒருவகையான ‘வெறி’ மனநிலையில் இருந்தார். மந்திரங்களை உரக்கக் கூவியபடி தலையை வேகமாக குலுக்கி ஆட்டிக்கொண்டும், சைகைகளால் ஆணையிட்டுக் கொண்டும் இருந்தார். இருவர் அவருக்கு உதவினர். மலர்களால் லிங்கம் சுற்றிச்சுற்றிக் கட்டப்பட்டது. அதன் நடுவே மலர் நிறைக்கப்பட்டது. மிகமெல்ல, மிகமிக கவனமாக.
இரண்டுசாண் உயரமான லிங்கத்தின்மேல் மலர் லிங்கம் ஒன்று எழுந்தது. மூன்றடி ஆழமான குழியில் இருந்து மேலெழுந்து நின்றது. வெறும் மலர்கள். வேறொன்றும் இல்லை. லிங்கமே பூத்து நுரைத்து எழுந்துவிட்டதுபோல. அந்த மலர் லிங்கத்துக்கு மீண்டும் பூசைகள். நீர், தூபம், நறுமணத்தைலம், மலர், சுடர் என. பூசகர் நடுங்கிக்கொண்டும் தலையை ஆட்டிக்கொண்டும் மந்திரங்களைச் சொன்னார். பொன்னிறத்திரை போடப்பட்டது. உள்ளே சிறு பந்தம் ஒன்று கொளுத்தப்பட்டு ஒரு ரகசிய பூசை. அதன்பின் கற்பூரத்தட்டுடன் ஒருவர் வெளியே வந்தார். அச்சுடரை தொட்டு வணங்க முண்டியடித்தனர்.
மறுபடியும் வாதில் திறந்தபோது மொத்தமாக அந்த மலர் லிங்கம் அகற்றப்பட்டு உள்ளிருந்த கரிய சிறு லிங்கம் மட்டுமே எஞ்சியிருந்தது. சிறிய குமிழி போல காராமணி பயறுபோல விதை போல மலர்ந்து எழுந்து மீண்டும் விதையே எஞ்சுவது போல.
அந்த விந்தை மெய்யாகவே கண்முன் நிகழ்ந்ததா என்ற ஐயமே எஞ்சியது. ஒரு கரிய சிறுவிதை முளைத்து பெருமரமாகி, இலைத்தொகையாகி, மலர்மட்டுமே என பூத்துநிறைந்து, மீண்டும் விதையென்றாகிவிட்டதுபோல. விஸ்வநாதன். உலகத்தலைவன். உலகானவன். அவன் தன்னை பொலியச்செய்து இங்கனைத்துமென நிறைந்து மீண்டும் தான் என மீளும் ஓயா ஆடல் நிகழ்ந்து முடிந்ததுபோல.
இங்குள அனைத்தும் அவன் மங்கலங்களே. ஒவ்வொன்றும் பேரழகே. எல்லாமே மலர்களே. ஒரு பருப்பொருள் அடையத்தக்க உன்னதம் என்பது மலர்தலே. இப்புவி ஒரு மலர். இப்பிரபஞ்சம் மாமலர்.