யோகம், கடிதம்

அன்புள்ள ஜெ,

ஆலயக்கலை நண்பர்களுடன் அக்டோபர் மாத கடைசியில் நானும், நண்பர் பா. கா. முருகேசனும் மாமல்லபுரம் சென்றோம். முதல்நாள் அர்ஜுனன் தபசு எல்லாம் கண்டுவந்தபிறகு பௌர்ணமி நிலவில் ஜொலித்த கடற்கரையில் அமர்ந்தபடி மனிதனுக்கு அழகியலின் தேவை என்ன என்று எழுத்தாளர் சாம்ராஜ் பேசினார். அற்புதமான முக்கால் மணிநேர உரையில் தன் வாழ்க்கைச்சூழலை தான் எப்படித் திட்டமிட்டு அமைத்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். அடுத்த நாள் அறையில் பேசிக் கொண்டிருந்தபோது சாம்ராஜ், அழகியலில் ஆரோக்கிய உடலின் மனதின் அவசியத்தைச் சொல்லி எங்களிடம் நீங்கள் அடுத்த யோகா வகுப்புக்குச் செல்லுங்கள் என்றார். அறிவிப்பு வந்த அன்றே நான், பா.கா.முருகேசன், தமிழ் செல்வம் மூவரும் பதிவு செய்தோம்

யோகா குரு சௌந்தர் பற்றி நீங்களும், சாருவும் எழுதியதை படித்திருந்தேன். அவர் யோகா சொல்லித்தரும் சில Youtube வீடியோக்களும் பார்த்திருந்தேன். நேரில் சில விஷ்ணுபுரம் நிகழ்ச்சிகளில் பார்த்திருந்தாலும் பேசியதில்லை. அவர் ஒரு நல்ல இலக்கியவாசகர் என்பது அவர் உங்களுக்கு எழுதிய கட்டுரைகளில் இருந்து தெரிந்திருந்தது. சக்திவேல் அவரைப்பற்றி எழுதியிருந்தது மனதை நெகிழச் செய்தது. இவ்வளவு தான் அவரைப் பற்றிய என் முன்அறிதல்கள்

கோவையிலிருந்து நவம்பர் 17 காலை 6 மணிக்கு மூவரும் காரில் கிளம்பினோம். நித்யவனம் வருவதற்கு எந்த வழிக்குழப்பமும் இல்லை. கோவை புத்தகக் கண்காட்சியில் நண்பர் பா. கா. முருகேசன் உங்களுக்குப் பரிசளித்த நித்யவனம் பெயர்பலகை மாட்டவில்லை என்றால் மாட்டிக்கொடுத்துவிடுவோம் என்று சொல்லி அஜிதனிடம் கேட்டதற்கு அது நவீன் வீட்டிலேயே இருக்கிறது என்றார். முன்பே தெரிந்திருந்தால் நாமே எடுத்து வந்திருக்கலாமே என்று பேசிக்கொண்டோம்.   ஆலயக்கலை நண்பர்கள் பெங்களூர் அஷோக், ஈரோடு பிரபு வந்திருந்தனர். காலை உணவிற்குப் பின் காலை 10 மணியளவில் பிரார்த்தனையுடன் வகுப்பு தொடங்கியது. சுமார் 40 பேர் இருந்தோம். குரு சௌந்தர் முதலில் யோகம் என்பது என்ன, எதற்கு என்று ஐந்து வகை கோஷங்களைச் சொல்லி அதன்வழி விளக்கினார். அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்

Traditional Yoga, Non-Traditional Yoga இரண்டிற்குமான வேறுபாட்டை , ஏழு இலட்சம் யோக ஆசிரியர்களும் இரண்டு இலட்சம் யோகப்பள்ளிகளும் உள்ளதில் எந்த அலகுகளின் அடிப்படையில் ஒருவர் யோக அமைப்பை தெரிவு செய்வது என்று கூறினார்

1/ அதன் குருபரம்பரைக்குக் குறைந்தது 150ஆண்டு தொடர்ச்சியாவது இருக்க வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருத்தல்.

2/ சமகால அறிவியலில் நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளையும்  கருத்தில்கொண்டு அதற்கும் ஒரு இடம், உரையாடல் இருக்க வேண்டும்

3/ நவீன அறிவியலின் சோதனைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டு வெறும் நம்பிக்கைகளாக மட்டுமே அல்லாமல் தரவுகளையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் உலகின்முன் வைத்தல்

இந்த காலகட்டத்தின் பிரச்சினைகளான அதிகமான நுகர்வு, கவனகுவிப்பின்மை இவைகளை எதிர்கொள்ள சரியான செயல்திட்டம் உள்ளதா என்பதே அளவுகோல் என்றார். இந்த விதிகளின்படி பார்த்தால், உலகில் நான்கு மரபார்ந்த யோக அமைப்புகள் மட்டுமே உண்டு என்றும் அந்த நான்கும் இந்தியாவில் தான் உள்ளது என்றும் கூறினார். ரிஷிகேஷில் உள்ள சிவானந்தா குருகுலம், பீகாரில் உள்ள சத்யானந்தா குருகுலம், கைவல்யதாம் மற்றும் மைசூர் யோக பரம்பரை.

ஆலயக்கலை, யோகம் இந்த இரண்டு வகுப்புகளிலும் கவனித்தது, ஆசிரியர்கள் ஒரு பெரிய அவுட்லைனை சொல்லி, அதில் நாம் என்ன கற்றுக்கொள்ளப் போகிறோம், எதற்காக என்றெல்லாம் முதலிலேயே தெளிவாக விளக்கி விடுகிறார்கள். ஒரு திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் உலகம், இந்தியா, தமிழ்நாடு, கோவை என்று காட்டுவதைப் போல

தமிழ் தெரியாத சிலரும் வகுப்பில் இருந்ததால் ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி, பிராணாயாமம், யோக நித்ரா, அந்தர் மௌனா என்று எல்லாப் பயிற்சிகளையும் குரு சௌந்தர் இரு மொழிகளிலும் சொல்லித் தந்தார். ஆசனப்பயிற்சியின் போது மூச்சை உள்ளிழுப்பதும், வெளிவிடுவதும் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தியபோது மிக எளிமையாக, புவியூர்ப்பு விசைக்கு எதிரான அசைவின் போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். மண் பார்த்துச் செல்லும்போது மூச்சை விட்டுவிட வேண்டும் என்றார். நின்றபடி செய்யும் பயிற்சிகளைக் கண்களைத் திறந்து கொண்டும், படுத்தபடி செய்யும் பயிற்சிகளைக் கண்களை மூடிக்கொண்டும் செய்ய வேண்டும் என்றார். எந்த ஒரு விஷயமும் எப்படி Fun, Habit, Life Style என்று மாறுகிறது என்று உதாரணங்களுடன் விளக்கினார்

அமெரிக்காவிலிருந்து  மோகன் வந்திருந்தார். பூன் முகாமில் கலந்து கொண்ட தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். எப்போதும் புன்னகையுடன் இருந்தார். மீசையில் ஓரிரு வெள்ளை முடிகளே இருந்தன. வயதை சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. உங்களின் அமெரிக்கக் குழந்தைகள் கட்டுரை பற்றியும், இந்திய தாத்தாகளுக்கும், அமெரிக்கப் பேரன்களுக்குமான உறவு குறித்துப் பேசிக்கொண்டோம்

இரண்டாம் நாள் இரவில் அந்தாக்சரி நடந்தது. இரு குழுவாகப் பிரிந்து பாடினோம். பாண்டிசேரியிலிருந்து வந்திருந்த ஷங்கர் ஒரு பிரெஞ்ச் பாடலைப் பாடினார். அர்த்தம் புரியாவிட்டாலும் நன்றாக இருந்தது

வகுப்பில் குரு சௌந்தர் ஆயுர்வேதம் குறித்தும், தத்துவம் குறித்தும் எங்களிடம் உரையாடினார். ஒவ்வொரு மனித உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தும் உடலின் பாகங்கள் என்னனென்ன என்பதை மரபும் ஐந்து பிராணன் வழி (பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்), நவீன மருத்துவமும் சுரப்பி வழி(பிட்யூட்டரி, தாலமஸ், அட்ரினல்) எப்படி ஒன்றுபோலச் சொல்கின்றன என்றும், அதைக் கட்டுப்படுத்த யோகத்தின் பங்கு என்ன என்றும் விளக்கினார். பிரபஞ்ச இயக்கமென மகா ப்ராணத்தை விளக்கி, மனிதனின் ஐந்து கடமைகளென பூத யக்ஞம், நர யக்ஞம், பித்ரு யக்ஞம், ரிஷி யக்ஞம், தேவ யக்ஞம். முதல் நான்கு கடமைகளை நிறைவேற்றினால் தேவ யக்ஞம் தானே அமையும், நீங்களெல்லாம் யோக சாதகர்களாக மாறுவதையே நீங்கள் எனக்கு சொல்லும் நன்றி என்று எடுத்துக் கொள்வேன் என்றார்

உடன்வந்த நண்பர் தமிழ் செல்வம் குளிர்காலத்தில் நாளுக்கு மூன்று வேளைகளாக வறட்டு இருமலால் அவதிப்படுபவர். பெரிதாக நம்பிக்கை இல்லாமல் வகுப்புக்கு வந்தவருக்கு மூன்று நாட்களாக பெரிதாக இருமல் வரவில்லை. ஓரிரு நாட்களில் உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் மேஜிக் அல்ல யோகா என்று குரு சௌந்தர் கூறினாலும் எனக்கு ஏதோ நடந்திருக்கிறது என்றார் தமிழ் செல்வம்

வழக்கம்போல உணவும், அந்தியூர் மணியின் மேலாண்மையும் சிறப்பு. கொஞ்ச காலமாகவே மாற்று மருத்துவ முறைகள், ஆரோக்கிய வாழ்வியல் குறித்துத் தேடிக்கொண்டும் என் வாழ்வில் அதை பரிசீலித்துப் பார்த்துக்கொண்டும் இருக்கிறேன். சீக்கிரமாகவே என்னை நல்திசைக்குத் திருப்பிய சாம்ராஜ், மூன்று நாட்களும் தோழமையுடன், நகைச்சுவையுடன் உரையாடி யோக வாழ்வியல் கற்றுத்தந்த குரு சௌந்தர், மேலும் இதற்கெல்லாம் ஆதிகாரணமான உங்களுக்கும் நன்றி ஜெ

ரதீஷ் வேணுகோபால்

முந்தைய கட்டுரைவித்தைக்கார கதைஞன் – அழகுநிலா
அடுத்த கட்டுரைநம்பிக்கை, கடிதங்கள்